பிரிவு வாரியான பதிவுகள்: பதிவுகள்

அநீதியின் வீழ்ச்சியும் அறத்தின் வெற்றியும் இதுதானா? – தேசத்தின் குரல்

இரண்டாம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் தில்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று காங்கிரசார் வாதிட முற்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டதே காங்கிரசாட்சியில்தான் என்பதை நினைவுபடுத்தினால், அப்போதைய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் மீது பழி போட்டுத் தப்ப முயல்கின்றனர.

கடந்த 2012ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையமைச்சராகவும் ஆ.ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகவும் இருந்த போது செய்யப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டை நீக்கம் செய்து இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்போதும் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை மறக்க வேண்டாம். அதாவது முறைகேடு நடைபெற்றது உண்மை. ஆனால் கையூட்டுப் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததாக மெய்ப்பிக்க முறையான சான்றுகளை நடுவண் புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ) முன்னிறுத்த முடியவில்லை என்று பொருள். இதுதான் இப்போது வந்துள்ள தீர்ப்பின் சாரம்.

இதில் காங்கிரசுக் கட்சி மகிழ்ந்து கொண்டாட எதுவுமில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்தும் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிந்தே நடைபெற்றன என்று ஆ.ராசா கூறியிருப்பதை மறுக்க முடியாது.
ஆகவே அலைக்கற்றை முறைகேட்டுக்கு முதல் பொறுப்பாளி காங்கிரசுதான். இப்போது ஆ.ராசா, கனிமொழி விடுதலையைக் காங்கிரசு கொண்டாடுவது ஊரிலே கல்யாணம் மாரிலே சநதனம் என்பது போலத்தான் உள்ளது. தலைமைக் கணக்குத் தணிக்கையர் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு என்று ஒரு தொகையை ஊகமாகத் தெரிவித்தார். அரசுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி அதனால் ஆ.ராசாவும் மற்றவர்களும் அடைந்த ஆதாயத்தைப புலனாய்வு செய்தது சி.பி.ஐ.தான்!

அலைகற்றை ஒதுக்கீட்டுக் கொள்கை முடிவு தவறு, ஆனால் அதை வைத்து ஊழல் நடைபெறவில்லை என்றால் இந்த வழக்குத் தொடர்ந்திருக்கவே கூடாது. ஊழல் நடைபெற்றது உண்மை என்றால் அதற்கான ஐயந்திரிபற்ற சான்றுகளைத் திரட்டியிருக்க வேண்டும். இரண்டில் எது உண்மையானாலும் காங்கிரசுத் தலைமைதான் அறப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த வழக்கில் தொடக்கத்தில் காட்டிய அக்கறையை சி.பி.ஐ. தொட்ர்ந்து காட்டவில்லை என்று நீதிபதி சைனி கூறியிருப்பது மன்மோகன் சிங் அரசு மீது மட்டுமல்லாமல் மோதி அரசின் மீதும் ஐயங்கொள்ளச் செய்கிறது. வேறு எதுவும் இல்லாவிட்டாலும், வழக்குப் போட்ட காலத்தில் காங்கிரசுத் தலைமையிலான ஆட்சி, விடுதலைத் தீர்ப்பு வந்திருக்கும் போது பா.ச.க தலைமையிலான ஆட்சி என்பது தி.மு.க. புறந்தள்ள முடியாத உண்மையாகவே இருக்கும். உடனே இல்லாவிட்டாலும் காலப்போக்கில் இந்த உண்மை என்ன அரசியல்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.

இன்னும் மேல்முறையீடு இருக்கிறது என்று அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். கணக்கு குமாரசாமி தீர்ப்பு வந்த போது இதைச் சொல்லி ஜெயா பதவியேற்பை நிறுத்தி வைத்திருக்கலாமே? ஜெயா பெயரைச் சொல்லும் யாருக்கும் ஊழல் பற்றிப் பேசத் தகுதியே இல்லை.

வழக்குத் தீர்ப்பு குறித்து ராசா, கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆ.ராசா ஒரு தேர்ந்த வழக்கறிஞராகத் தம்மை மெய்ப்பித்துக் கொண்டுள்ளார் என்பதும் சரி. ஆனால் இது நீதியின் வெற்றி என்றெல்லாம் கூரைமீதேறிக் கூவுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. தீர்ப்பு எப்படி வந்திருந்தாலும் ஆ.ராசாவும் கனிமொழியும் ஊழல் குற்றவாளிகளே என்று வாதிடுவது நம் நோக்கமில்லை. ஆனால் இந்த ஒரு தீர்ப்புக்காக மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மாற்றி “சைனி தீர்ப்பே மக்கள் தீர்ப்பு” என்று குதூகலிக்க வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் ஊழல் வழக்கில் ஒருவரைத் தண்டிப்பது எவ்வளவு கடினம் என்பதை திமுக தலைவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா? ஊழல் குற்றச்சாட்டின் இருமுனைகளிலும் நின்று வழக்காடிய அனுபவம் அவர்களுக்கு உண்டு. டான்சி உள்ளிட்ட எத்தனையோ வழக்குகளில் நீதிமன்றங்களால் ஜெயா விடுவிக்கப்பட்டரே, அப்போதும் கூட நீதிதான் வென்றதா? சொத்துக் குவிப்பு வழக்கிலேயே கூட மேல்முறையீட்டில் பெங்களூரு உயர் நீதி மன்றம் ஜெயாவை விடுவித்ததே, அப்போதும் நீதிதான் வென்றதா?

ஊழல் வழக்கு இல்லையென்றாலும் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை வாங்கினாரே, அப்போதும் நீதிதான் வென்றதா?

இந்திய சனநாயகம் பணநாயகமாகச் சீரழிந்து கிடக்கும் நிலையில் இந்தப் பணநாயகத்தின் உயிரூட்டமாக இருப்பது ஊழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை ஒருசில வழக்குகள் வாயிலாகவே நடத்தி விட முடியும் என்பது தூண்டில் போட்டுத் திமிங்கலம் பிடிக்கும் முயற்சியே.

தமிழக அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க வாய்ப்புத் தந்து, அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மிரட்டலாகவும் ஊழல் வழக்குகளை இந்திய அரசு பயன்படுத்தி வருவதும் சிதம்பர இரகசியமில்லை.

ஊழலை எதிர்ப்பதில் சமரசத்துக்கு இடமில்லை. சமரசம் செய்து கொள்வதற்கு இந்துத்துவ எதிர்ப்பு, சமூக நீதிக் காப்பு, பாசிச எதிர்ப்பு என்று எத்தனையோ காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. கறைபடிந்த அரசியல்வாதிகளின் துணைகொண்டுதான் இந்துத்துவ ஆளும் வர்க்கத்தை எதிர்க்க முடியும் என்ற மாயை வளர்க்கப்படுகிறது. இது தற்கொலைக்கு நிகரான உத்தியே தவிர வேறல்ல. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வாயிலாகவே வகுப்புவாதத்துக்கும் பாசிசத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் உண்மையான எதிர்ப்பை வளர்க்க முடியும் என்ற வரலாற்றுப் படிப்பினையை மறக்க வேண்டாம்.

இரண்டாம் அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி தவிர மு.க ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட திமுக தலைமையும் இந்த வழக்கின் தீர்ப்பை மகிழ்ந்து வரவேற்றுள்ளது. அப்படியானால் இரண்டாம் அலைகற்றை ஒதுக்கீட்டை நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த (2012) தீர்ப்பு குறித்து அது விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. குற்றவியல் வகையில் இல்லாவிட்டாலும் அரசியல் வகையில் அந்த ஒதுக்கீட்டு முடிவுக்கு ஆ.ராசாவும் பொறுப்பேற்க வேண்டும். அவரை அமைச்சராக்கிய திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். அல்லது இந்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களின் கொள்கை முடிவுகளில் கழகத்துக்குத் தொடர்பில்லை என்று அறிவிக்க வேண்டும். ஆ,ராசா ஆனாலும், மு.க. அழகிரி ஆனாலும், ஏன், முரசொலி மாறனே ஆனாலும், தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச்செய்யவும் அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுக்கவும்தான் கழகம்! பிறகு அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கெல்லாம் காங்கிரசு அல்லது பாசக. அப்படித்தானா?

இந்த வழக்கு பற்றிக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்று அன்றே எழுதியதாக திமுக நண்பர்கள் எடுத்துக்காட்டி மகிழ்கிறார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம், நீட் என்று அடுக்கடுக்காகத் தமிழினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் வீழ்வது எப்போது? அறம் வெல்வது எப்போது?

இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்கள் ஈடுசெய் நீதி கோரித் தாயகத்திலும் உலகெங்கிலும் போராடி வருகிறார்களே, அவர்களுக்கு அநீதிகள் வீழ்வதும் அறம் வெல்வதும் எப்போது? அவர்கள் வாழ்வில் நீதி மலரவும் அறம் வெல்லவும் என்ன செய்யப் போகிறோம்?

உடன்பிறப்புகள் இந்த வினாக்களுக்கும் விடைதேடுவார்கள் என நம்புவோம்.

ஹாதியாவின் நீதிப் போரும் சனநாயக உரிமையும்!

மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்றாக நடவாத ஒன்றை நடப்பது போல் காட்டி அதைத் தடுக்கிறேன் என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர முனைகிறது. அது நம் அடிப்படை உரிமைகளையே மறுப்பதாக இருப்பது குறித்துச் சட்டத்தின் ஆட்சியாளர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டம் பகுதி III ல் சுதந்திற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, மத சுதந்திரத்திற்கான உரிமை இவை நம் அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகளையே மறுக்கும் வகையில் எந்த அடிப்படை ஆதாரங்களும் அற்ற காதல் ஜிகாத் என்ற குற்றசாட்டின் பேரில் 2009 இல் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராசகப் போக்கின் இறுதியில் அண்ணல் அம்பேத்கர் போராடிப் பெற்றுதந்த மதம் சாதி பாகுபாடற்ற திருமணங்களுக்கான உரிமைப் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஹாதியா வழக்கு நாம் அனைவரும் கூர்ந்து நோக்கிய ஒன்றே! 2009 இல் எவ்வித ஆதாரங்கள் இன்றியும் இன்று வரை ஆதாரங்கள் திரட்ட முடியாததுமான காதல் ஜிகாத் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஹாதியா வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாக்கப்பட்டுள்ளது. 2016 தொடக்கத்தில் ஹாதிகாவின் தந்தையால் ஹாதிகா தொலைந்துவிட்டதாக காவல்துறையில் புகார் தரபட்டது. பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 24 வயது நிரம்பிய ஹோமியோபதி மருத்துவ மாணவிக்கு அறிவு முடக்கம் செய்யப்பட்டுத் திருமணம் நடந்தது என தேசியப் புலனாய்வு ஆணையும் (NIA) அளித்த அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு மே 2017 இல் கேரள உயர்நீதிமன்றம் இத்திருமணத்தை ரத்து செய்தது. இதில் குறிப்பிடத்தக்கது தேசியப் புலனாய்வு ஆணையம் வழங்கிய அறிக்கைக்கு இன்று வரை எந்த அடிப்படைச் சான்றுகளும் இல்லை என்பதே!

இவ்வறிக்கை காதல் ஜிஹாத் என்ற பெயரில் இசுலாமிய ஆண்கள் தங்கள் மதம் அல்லாத மற்ற மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் குறி வைத்துக் காதல் என்ற பெயரில் வலையில் சிக்க வைத்து மதமாற்றம் செய்கிறார்கள். இதற்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரங்களும் இல்லை. 2009 இல் கேரளா மற்றும் மங்களூரில் நடந்த மதமாற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள். நவம்பர் 2009 இல், DGP ஜாகப் புன்னூஸ், தனக்கு தரப்பட்ட 18 வழக்குகளில் மூன்றில் மட்டுமே இந்தப் போக்கு காணப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதை ஏற்கமறுத்துவிட்டது கேரள உயர்நீதிமன்றம். சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டும் அதற்குட்பட்டும் இயங்குகிற இசுலாமிய அமைப்புகளைக் குறிப்பிட்டு, அவை இசுலாமிய இளைஞர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட தூண்டிவதாகக் குற்றம்சாட்டுகிறது.

ஹாதியா தன் வீட்டில் இருந்தபடி கொடுத்த காணொளி முக்கியமான ஒன்று. அதில் “இங்கிருந்து என்னை வெளியில் அழைத்துச் செல்லுங்கள்; இல்லையென்றால் என் தந்தை என்னைக் கொன்றுவிடுவார் எனக் கூறுகிறார். ஆனால் இதே காலங்களில் ஹாதியாவின் நிலையை ஆராயச் சென்ற தேசியப் பெண்கள் ஆணையம் அவர் சாப்பிடுகிறார் சிரிக்கிறார் என அறிக்கை தருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் ஹாதியாவின் தந்தையால் வைக்கப்படும் வாதம் அவள் சுயமாக இம்முடிவை எடுக்கவில்லை; அவள் அறிவும் மழுங்கியுள்ளது. இதுவே அவளின் மதமாற்றத்திற்கும் திருமணத்திற்கும் காரணம் என்பதே! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், சாதாரணமாக எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களும் அற்ற காதல் ஜிகாத் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் மீறப்படுகிறது. இங்கு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கேள்வியை எழுப்புகிறது:

“எதன் அடிப்படையில் மூன்றாம் நபர் குற்றசாட்டின் பேரில் கேரள உயர்நீதிமன்றம் உரிய வயதுடைய இரண்டு பேருக்கிடையே நடந்த திருமணம் செல்லாது என முடிவெடுத்தது?”
உச்சநீதி மன்றம் சொல்வது, ஹாதியாவின் தந்தையால் வைக்கப்படும் எந்த வாதமும் உரிய வயதடைந்த இரண்டு பேரின் திருமணத்தை ரத்து செய்ய உதவாது. உயர்நீதி மன்றம் இது போன்ற வழக்கை எடுத்திருக்கக் கூடாது. மேலும் இந்தத் திருமணத்தை ரத்து செய்யும் அதிகாரம் உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது.

திருமணமானவர்களில் ஒருவர் உரிய வயதடைந்தவராக இல்லாமல் இருந்தால், ஒருவருக்கேனும் மனப்பிரச்சனை ஏதேனும் இருந்தால், அல்லது இவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே வேறு ஒரு திருமணம் நடந்திருந்தால் குறிப்பிட்ட திருமணம் ரத்து செய்யப்படலாம். மேலும் கேரள உயர் நீதிமன்றத்தில் ஹாதியாவின் தந்தையால் பதிவிடப்பட்ட வழக்கு ஆட்கொணர்வு மனுவே தவிர திருமண ரத்திற்கானது அன்று. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றம் திருமணத்தை ரத்து செய்து அதற்குக் கூறப்படும் காரணங்கள்:

 

  1. மதமாற்றத்தில் உள்ள சந்தேகம் – எந்த ஆதாரமும் அற்ற தேசியப் புலனாய்வு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் இச்சந்தேகம் எழுப்பப்படுகிறது,
  2. ஹாதியாவின் கணவர் சாபான் மீது ஏற்கனவே உள்ள வழக்குகள் முன்வைக்கப்படுவது – அப்படியே ஆனாலும் குற்றவாளிகள் திருமணம் செய்ய இந்திய சட்டங்களில் எதிலும் தடை ஏதுமில்லையே!
  3. சாபான் குறிப்பிட்ட இசுலாமிய இயக்கங்களைச் சார்ந்திருப்பது – தடைவிதிக்கப்படாத ஒரு இசுலாமிய இயக்கத்தில் சாபான் ஒரு உறுப்பினராக இருப்பதே எவ்வகையில் குற்றமாகும்!
  4. பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் நடந்தது – இது ஆபத்துக்குரிய வாதமாகவே இருக்கிறது. உரிய வயதடைந்த இருவர் திருமணம் செய்துகொள்வதில் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் அராசகமாகும்.
  5. ஹாதியாவின் நலன் – மருத்தவப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் 26 வயதடைந்த பெண்ணுக்கு தன்நலன் குறித்துச் சிந்திக்கத் தெரியாது என கண்டறிந்தது யார்? அதற்கேற்ற மருத்துவச் சான்று எதுவும் அளிக்கப்பட்டதா என்றால் ஒன்றும் இல்லை!

இவற்றில் எவையேனும் திருமணத்தை ரத்து செய்ய உகந்த காரணங்களா?
ஹாதியாவைக் காவலில் வைத்திருப்பதும், திருமண ரத்தையும் குறித்ததுதான் மேல்முறையீடு. இதில் தேசியப் புலனாய்வு ஆணைய ஆய்வு அறிக்கை ஹாதியாவின் காவல் குறித்த இடைக்கால உத்தரவு எதையும் வழங்கவில்லை.

உண்மையில் கவலைக்குரியது என்னவென்றால், இது போன்ற வழக்குகளில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்காததன் மூலம் உச்ச நீதிமன்றமே தவறான முன்னோடியாக அமைகிறது. சாபின் ஜகன் தன் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் இவ்வழக்கு குறித்து:
“இது அரசியலமைப்புக்கு எதிராகவும், பொருந்தா வாதமாகவும், பகுத்தறிவற்றதாகவும் உள்ளது” எனக் கூறுகிறார்.

உச்சநீதிமன்றமும் தேசியப் புலனாய்வு ஆணையத்தின் ஆய்வை மேலாய்வு செய்யக் கூறுவதின் மூலம் இவ்வழக்கை ஏற்றுக் கொள்கிறது. இது ஆய்வைக் கோருவதே ஆனாலும், இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கி இருக்கலாம், அதுவும் மறுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகக் காதல் ஜிகாத்துக்கு எதிராக என இந்துமத அமைப்புகள் களமிறங்கி காதலிக்கிறார்கள் என அவர்கள் சந்தேகிக்கும் நபர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்கி வருகின்றன. இராஜஸ்தானில் முஹமத் அப்ரகுல் என்னும் ஐம்பது வயது நிரம்பியவரை காதல் ஜிஹாத் என்னும் பெயரில் என்னும் பெயரில் மாற்று மதத்தவரை காதலிப்பதாகச் சந்தேகித்து உயிருடன் தீக்கிரையாக்கி அந்தக் காணொளியை வெளியிட்டு காதலர்களைப் அச்சுறுத்த முற்படுகிறார்கள் இந்துத்துவ அரக்கர்கள்.

தான் கொண்ட காதலுக்காகவும் சாதியத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி சட்டரீதியான முதல் வெற்றியாக, உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் ஏழு பேருக்கான தண்டனை வாங்கித் தந்து, அடுத்த மூவருக்கான விடுதலைக்கெதிராக மேல்முறையீடு செய்யக் காத்திருப்பவர் தோழர் கௌசல்யா. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கியிருக்கும் நேரத்தில் தனிமனித உரிமையை மீறும் வகையில் காதல் ஜிகாத் என்ற பெயரில் காதல் திருமணங்களுக்கே தடை என்பது சட்டமாகப்படுவதற்குள், நாம் இதற்கு எதிரான குரலை ஒன்றுபட்டு எழுப்பியாக வேண்டும். பெண்ணை ஒரு உடமையாக மட்டும் பார்க்கும் சமூகத்தில் இப்போதுதான் அங்கும் இங்குமான தளர்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தளர்வுகளின் முக்கிய அங்கம் காதலுக்கும் காதல் திருமணங்களுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை. அண்ணல் அம்பேத்கரால் போராடிப் பெற்ற நமக்கான தனிமனித உரிமைகள் கண்ணுக்குத் தெரியாமல் மீறப்படப் போகிறது. சாதி ஒழிப்புக்கு எதிராகவும் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும் எழுப்பப்பட்டுள்ள காதல் ஜிகாதை முளையிலே தீயிட்டு கொளித்தி சாம்பலாக்குவோம்.

“சாதியம் களையக் கிடைத்த நீதி”, சங்கர் – கௌசல்யா சட்டம் படைக்கும் ! – ஆ. சத்தியபிரபு.

சமூகமெங்கும் பரவிக்கிடக்கும் சாதிய வெறியால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அதிலும் குறிப்பாக சாதிய கௌரவக் கொலைகள் சாதியம் தோற்றுவித்திருக்கிற தனிக் குற்றவகை. வெளித் தெரிந்தவை ஒருசிலவே. மூடிமறைக்கப்பட்டவைகளுக்கு எவ்விதக் கணக்கும் இல்லை. அவற்றில் ஒன்றுதான் உடுமலை சங்கர் படுகொலை. 13.03.2016 படுகொலை நிகழ்ந்த அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 21 மாதங்களாக திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியில் சென்ற 12.12.2017 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப் படையைச் சேர்ந்த செகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன் மற்றும் மதன் (எ) மைக்கேல் ஆகிய 6 குற்றவாளிகளுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அலமேலு நடராசன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மொத்தத்தில் 11,65000 ரூபாயை குற்றவாளிகள் குற்றங்களுக்கு ஈடு செய்யும் வகையில் கௌசல்யாவுக்கும் சங்கர் தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாக அனைவராலும் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகிய குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலையும் செய்துள்ளது.
மூவரின் விடுதலை நமக்கு அதிர்ச்சியே என்றாலும் அவர்கள் என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள தீர்ப்பின் முழுமையான ஆவணம் இதுவரை கௌசல்யா தரப்பிற்குக் கிட்டவில்லை. ஆனால் ஒன்றை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா இம்மூவரும் எந்த அடிப்படையில் இந்த வழக்கிற்குள் சேர்க்கப்பட்டார்களோ அந்த அடிப்படை இப்போது வரை மாறாமல் உயிருடன்தான் உள்ளது. அதாவது அன்னலட்சுமி, சின்னச்சாமிக்கு நிகராகக் கொலைக்கு முதன்மைக் காரணியாகச் செயல்பட்டவர்; பாண்டித்துரை கொலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தவர்; பிரசன்னா சங்கர் – கௌசல்யா இருவரையும் பின்தொடர்ந்து கொலையாளிகளுக்குத் தகவல் கொடுத்தவர். கௌசல்யா சொன்ன இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர்கள் இவ்வழக்குக்குள் சேர்க்கப்பட்டார்கள். கொலைக்கு முன்னால் கௌசல்யா சந்தித்த கடத்தல், வீட்டுச் சிறை, கொலை மிரட்டல், வன்முறை என அத்துணை அடக்குமுறைகளையும் உடனிருந்து செயல்படுத்தியவர்கள் அன்னலட்சுமியும் பாண்டித்துரையும். இதை உடனிருந்து கண்ட சாட்சி கௌசல்யா. இந்த அடக்குமுறைகளின் தொடர்ச்சிதான் சங்கர் கொலையும் கௌசல்யா மீதான கொலை முயற்சியும். அவரின் கூற்றே மறுக்கப்படுமானால் அதன் நீட்சியாக இந்த வழக்கிற்கான அடிப்படையே செத்துப் போகும். இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உரிய சான்றுகள் நீதிமன்றத்திற்குக் கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால் அதற்குரிய அடிப்படைக் காரணிகளை யாராலும் மறுக்க முடியாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். நம்மைப் பொருத்தவரை மூவரும் குறிப்பாக அன்னலட்சுமியும் பாண்டித்துரையும் இரத்தக்கறை படிந்தவர்களே ! சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இவர்கள் கொடிய குற்றவாளிகளே !

எத்தனையோ சாதியக் கொலைகளில் சாதிய கௌரவக் கொலைகளில் நீதிக் குரலை மௌனித்து இரத்த உறவுகள் பக்கம் பலரும் நின்றிருக்கிறார்கள். அதனாலேயே முக்கியமான சாட்சியின்மையால் பல
வழக்குகள் முடிந்தேறியுள்ளன. ஆனால் தோழர் கௌசல்யாவின் உறுதி போற்றத்தக்கது. தன் சங்கர் சிந்திய இரத்தத்திற்கு விடையெடுத்தே ஆகவேண்டும் என்று பயணித்து நீதியை வென்றெடுத்துள்ளார். தூக்கி வளர்த்த பெற்றோர்களின் அன்பைக் கூட தூசி போல் தூக்கியெரிந்து தான் அடைந்த பெருவலியை இனி எந்தவொரு காதல் இணையர்களும் அடைந்துவிடக் கூடாதென நின்றதன் வழி கிடைத்த நீதிதான் இந்த எட்டு பேருக்குக் கிடைத்துள்ள தண்டனை !

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து வெவ்வேறு கருத்துகள் உலவிக்கொண்டுள்ளன. பட்டப் பகலில் பெற்ற மகளையும் கொல்லத் துணிந்து அவள் கரம் பிடித்தவனையும் படுகொலை செய்தவர்களை எப்படி உயிருடன் விடமுடியும் என்ற அறச்சீற்றம் நியாயமானதே. அதே நேரம் தூக்கில் ஏற்றப்பட்டால் இந்தக் குற்றம் நின்றுபோகும் அல்லது பெருமளவு குறையும் என்று யாராலும் உறுதிதர முடியாது. உறுதி தருவதற்கான சான்றுகளையும் தரமுடியாது. போதையில் செய்யப்படுகின்ற கொலை, உணர்ச்சிவயத்தில் செய்யப்படுகின்ற கொலை, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகச் செய்யப்படுகின்ற கொலை – இந்த எந்தக் கொலையையும் தூக்குத் தண்டனை அச்சுறுத்தி விடாது. அதுபோல்தான் சாதிவெறி தலைக்கேறி பறிபோன சாதிய கௌரவத்தால் நிதானமிழந்து தூக்கமிழந்து சீரான மனநிலை இழந்து செய்யப்படுகின்ற கொலையையும் தூக்குத் தண்டனை தடுத்துவிடாது. எப்படிப் பார்த்தாலும் கொலை என்பது தண்டனையாகாது. பழிக்குப் பழிதீர்த்தலை தனிமனிதன் செய்தாலும் ஒரு அரசே செய்தாலும் குற்றம் குற்றமே ! சாதிய கௌரவக் கொலைக்கு எதிரான தனிச் சட்டமும் முடிவில் சாதி ஒழிப்புமே இவற்றுக்குத் தீர்வு ! தூக்குத் தண்டனை அல்ல! இந்த வழக்கைப் பொருத்தவரைக்கும் விடுதலை செய்யப்பட்ட மூவருள்ளிட்ட அனைவரும் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்பட வேண்டும். அப்படிக் கண்ணுக்கெதிரே அவர்கள் சாகும் வரைக்கும் தண்டனையை அனுபவிக்கச் செய்ய வேண்டும். இதுவரைக்கும் குற்றவாளிகள் சாதி உணர்விலிருந்து மீளவில்லை என்பதை அறிகிறோம். வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்படுவதன் மூலம் தினம் தினம் அவர்களுக்குள் இருக்கும் சாதிய உணர்வு கேள்விக்குள்ளாக வேண்டும். இன்னும் சொன்னால் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்ளும் கண்ணாடிதான் சிறை. இதை மீறி அவர்கள் தூக்கில் ஏற்றப்பட்டால் சாதிய உணர்வோடுதான் சாவார்கள். அதன் மூலம் சாதிவெறியர்களுக்கு அவர்கள் கதாநாயகர்கள் ஆவார்கள். சிலையும் கூட வைக்கப்படலாம். இதையா நாம் விரும்புகிறோம் ?

சாதிமறுப்புத் திருமணங்களினால் ஏற்படும் இதுபோன்ற படுகொலைகளை தடுக்க வேண்டுமானால் அதற்குச் சாதிய படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் வேண்டும். இந்திய அரசியமைப்புச் சட்டம் 21 வயது நிரம்பிய ஆணும் 18 வயது நிரம்பிய பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த அடிப்படைச் சட்ட உரிமைக்கு நேர் எதிரானவை சாதிய கௌரவக் கொலைகள். அடிப்படை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற திருமண உரிமையை கேள்விக்குள்ளாக்கும் சாதியக் கௌரவக் கொலை சாத்தியம் உருவாக்கியுள்ள தனிக் குற்றவகை என்பதை முதலில் அறிந்தேற்க வேண்டும். அதை இனிமேலும் சாதாரண பொதுவான சட்டங்கனைக் கொண்டு கையாள்வது ஏற்கவே முடியாத முரண்பாடு. அடிப்படை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற ஒன்றை நிலை நிறுத்துவதற்குத்தான் நாம் சாதிய கௌரவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் கேட்கிறோம். இதை இந்தத் தீர்ப்பை ஒட்டி தமிழக அரசே அதற்குரிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோருகிறோம். அந்தச் சட்டத்திற்கு சங்கர் – கௌசல்யா சட்டம் என்ற பெயரே பொருத்தமானதாக இருக்கும்.

தோழர் கௌசல்யா சாதி ஒழிப்பிற்காகவும் பெண் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் மக்களோடு மக்களாய் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உறுதியும் துணிவும் எத்தனையோ பேரை சமூகநீதி களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. களத்தில் நிற்கும் தூய உள்ளங்களை மட்டுமல்ல பொதுவான அனைத்துத் தரப்பு நல்லுள்ளங்களையும் கௌசல்யா தன்னையே அறியாமல் தன் பக்கம் வென்றெடுத்திருக்கிறார். தோழரின் உறுதிமிக்க களப்பயணம் சங்கர் – கௌசல்யா சட்டத்தை வென்றெடுக்கும். பெரியாரின் பேத்தியாக உருவெடுத்துள்ள தோழர் கௌசல்யாவின் போராட்டப் பயணத்திற்கு தோள் கொடுப்போம். இந்தத் தனிச்சட்டத்திற்காக தமிழர் ஓர்மை கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்படி ஒன்று எழுப்பபட்டால் அதுவே நாம் அடைய விரும்பும் சமூகநீதித் தமிழ்த் தேசம்!

உப்புக் காற்றில் உலர்ந்து போன கதறல்கள்! – செல்வி

ஒக்கி பெரும்புயல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட மீனவர்களின் உயிரையும் உடைமையையும் குமரி மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தையும் அடித்துப் போட்டுங்கூட, இந்திய, தமிழக அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை.
சமவெளி மக்களுக்கு மீனவர் துயரங்கள் புரிவதில்லை. எனவே சில கேள்விகள் கேட்டு அவர்களுக்குப் புரிய வைக்க முயல்வோம்.

ஒக்கி புயல் குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா? இல்லையா?

இல்லை. இந்திய வானியல் ஆய்வகம் முறையான முன்னெச்சரிக்கை வழங்கவில்லை. நவம்பர் 29 அன்று சுமார் 70 கிமீ வேகத்தில் புயல் வீசக் கூடும் என்பதே அவர்கள் அறிவித்த செய்தி. ஆனால் அன்று வீசியதோ 130 கிமீ வேகத்தை விஞ்சிய பெரும்புயல். ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான் புயல் புயல் வருகையை காலை 09.30 மணிக்குக் கணித்து விட்டார். குமரி, கேரள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனும் எச்சரிக்கைச் செய்தி ஒன்றைப் பதிவிட்டார். இந்தச் செய்தி வானிலை ஆய்வு மையம் வாயிலாகவும் விரைவில் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் புயல் கோர தாண்டவம் ஆடி முடிந்த பிறகுதான் ஆய்வு மையம் ஆற அமர 30ஆம் தேதி காலை 11 மணியளவில் வாய் திறந்தது. சுமார் 08.30 மணிக்கு ஒகி புயல் வீசத் தொடங்கியதாகப் பின்கணித்தது! தனியொருவராக பிரதீப் ஜானால் செய்ய முடிந்த இந்த முன்னெச்சரிக்கையை ஏன் இந்திய வானியல் ஆய்வகத்தால் செய்ய முடியவில்லை?

மாண்ட, காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர்?

இது வரை அரசு இது குறித்தான முறையான கணக்கினை அளிக்கவில்லை. கடலுக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? மாண்டவர்கள் எத்தனை பேர்? காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? எந்தக் கணக்கீடும் அரசு இது வரை தரவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் காணாமல் போன மீனவர் நிலை குறித்து அரசு தகவல் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.
மறுபுறம், இந்தப் புயலில் சிக்கிய மீனவர்களின் உடல்கள் பல கேரளாவிலும் ஒதுங்கின. அந்த உடல்கள் யாருக்குச் சொந்தமானவை எனத் தெரிந்து கொள்ள அந்தக் குடும்பத்தினரின் இரத்த மாதிரிகள் தேவை. இதற்குத் தொலைதூரத் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாகச் கேரளாவுக்குச் செல்கின்றனர். இதற்கு மாற்றாக, அரசே அந்தக் குடும்பத்தவரின் இரத்த மாதிரிகள் எடுத்து அதனைக் கேரளாவில் பாதுகாக்கப்படும் உடல்களுடன் பொருத்திப் பார்க்கலாம். இந்த மனிதாபிரமான உதவிகளைச் செய்யக் கூட அரசுகள் அணியமாக இல்லை.

அப்படியா? அரசுகள் உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லையா?

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன் வந்து எட்டி பார்க்கக் கூட இல்லை. அவர் அரசு சார்பாக ஈரான் சுற்றிப் பார்க்கச் சென்று விட்டார். மோடி குஜராத் தேர்தலிலும் எடப்பாடி ஆர். கே. நகர் தேர்தல் திருவிழாவிலும் எம்ஜிஆர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களிலும் மூழ்கிப் போயிருந்ததால் மூச்சடைத்து இறந்து போன மீனவர்கள் குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை. மக்களைச் சந்திக்க வந்த ஒன்றியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் துயரங்களில் பங்கேற்காமல் அதிகாரக் கொழுப்புடன் நடந்து கொண்டார். தமிழ்நாடு எங்கும் ஆய்வு நடத்தும் ஆளுனர் குமரியில் சுசீந்திரம் கோயில், விவேகானந்தர் பாறை என ஆன்மிகச் சுற்றுலா நடத்தினார். காலந்தாழ்ந்து வந்த மோடி பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லாமல், ஒளிப்படக் கண்காட்சியைக் கண்டு ரசித்து விட்டு சில மீனவ, விவசாயப் பிரநிதிநிகளை மட்டும் பேருக்குச் சந்தித்து விட்டு, ஊடகங்களுக்குப் பேட்டியளித்து விட்டு திரும்பிப் பறந்தார்.

தமிழக அரசு முதலில் இறந்து போன மீனவக் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்ததுடன் தன் கடமையை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் குமரி மீனவர்களும் பொதுமக்களும் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு, அதுவும் கேரளா மீனவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு அறித்த நிலையில், தமிழக அரசும் இழப்பீட்டை 20 லட்சமாக உயர்த்தியது.

ஊடகங்களின் பங்களிப்பு என்ன?

நவம்பர் 30ஆம் நாள் முதலில் நியூஸ் 18 ஊடகமும், அதன் பின்னர் புதிய தலைமுறை, நியூஸ் 7, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட ஊடகங்களும் ஒரு வாரக் காலத்துக்குப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நின்று அவர்களின் துயரை வெளிக்கொணர்ந்தன. ஆனால் அதற்குப் பின் ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அச்செய்திகளை ஒளிபரப்புவதைப் பெரும்பாலும் குறைத்துக் கொண்டதாக அருட்தந்தை சர்ச்சில் குறிப்பிட்டார். அதைப் போலவே முதலிரண்டு நாட்களுக்குள்ளாகவே வட இந்திய ஆங்கில ஊடகங்களும் அரசின் அழுத்தத்தின் காரணமாக ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டதாக வகீதியா கான்ஸ்டன்டைன் கூறுகிறார்.

பாதிப்புகள் மீனவர்களுக்கு மட்டுந்தானா?

ஒக்கி புயலால் குமரி மாவட்ட உழவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பல லட்சம் வாழை, ரப்பர், தேக்கு போன்ற மரங்கள் வேரொடு சாய்ந்து விட்டன. செங்கல் சூலைகள் தரைமட்டமாகி விட்டன. ஒரு வாரத்துக்கு மேல் மின்சாரத் தொடர்பின்றியும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் மக்கள் கடும் துயரடைந்திருந்தனர். மக்கள் நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டுகளைத் தேய்க்கும் எந்திரங்கள் பழுதடைந்ததைக் காரணம் காட்டி, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இன்றியமையாத பொருள்களைக் கூட தர மறுத்தனர்.

பாதிப்படைந்த மக்களின் கோரிக்கைகள் என்ன?

ஆழ்கடல் மீன்பிடியர்களுக்கு நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடலோரக் காவற்படை, கப்பற்படைகளில் மீனவ மக்களுக்கு உரிய பங்கு இருக்க வேண்டும். மீனவர்களுக்கான தனித் தொகுதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு ஒத்திசைந்தவாறு நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, நாடாளுமன்றத்தில் தனி மீனவ அமைச்சகம் வேண்டும்.

அப்படியானால் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மீனவர் சிக்கல்கள் தீர்ந்து விடுமா?

இல்லை, நம் மாநில உரிமைகள் சார்ந்தும் நாம் இந்தச் சிக்கலைப் பார்க்க வேண்டும். தமிழகக் கடற்பரப்பின் காவலும் அதிகாரமும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும். கடலும் கடற்கரையும் மீனவ மக்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும்.

சீனாவின் மஞ்சள் நதியும் கூடங்குளம் அணு மின் நிலையமும் – சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

மஞ்சள் நதி, ஆசியாவின் மூன்றாவது பெரிய நீளமான நதி. மேற்கு சீனாவில் குய்ங்க்கை மாகாணத்தில் உள்ள பயன் ஹர் மலைகளில் தோன்றி சுமார் 5,400 கி.மீ. பயணித்து ஷாண்டோங் மாகாணத்தில் பஹாய் கடலில் தன்னுடைய பயணத்தை இந்த நதி முடித்துக் கொள்கிறது. பண்டைய சீன நாகரீகத்தின் தோற்றுவாயாக மஞ்சள் நதி இருந்துள்ளது. செழிப்பிற்கும், வளத்திற்கும் பெயர் பெற்ற மஞ்சள் நதி இன்று சீனாவின் சோகம் (china’s sorrow) என்றும் அழைக்கப்படுகிறது. அடிக்கடி வெள்ளப்பெருக்காலும், நதிப் படுகை உயர்ந்ததால் தன்னுடைய போக்கை அடிக்கடி மாற்றுவதாலும் மிகப் பெரிய அளவில் சேதத்தை அந்த நதி விளைவித்தது.

இங்கு 1332-33 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மட்டும் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். தொடர்ச்சியாக 1887, 1931 ஆண்டுகள் எனப் பல காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளங்களில் ஒட்டுமொத்தமாகப் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதனாலேயே மஞ்சள் ஆறு சீனாவின் சோகம் என்று அழைக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலையம், இதுவரை வரலாறு காணாத வகையில் எண்ணிக்கையில் அடங்காத வகையில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அணுசக்திப் பயணத்தில் கூடங்குளம் அணு உலைகள் வைரக் கற்களாக பறைசாற்றப்பட்டு, பொதுப்புத்தியில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் குறியீடாகக் காட்டப்பட்டது. போராடிய மக்கள் கூடங்குளம் அணு உலைகளில் மூன்றாம் தர உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எனவே ஒரு போதும் ஒழுங்கான முறையில் மின்னுற்பத்திச் செய்ய முடியாது என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இந்தக் கடலும், மண்ணும் எங்களுக்குச் சொந்தம்; அவற்றைக் காப்பாற்ற எங்களுக்குத்தான் அதிகக் கடமை இருக்கிறது என்று அறைகூவல் விடுத்து, இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, குண்டுகள் வீசப்பட்டன, முப்படை தாக்குதல் நடப்பட்டது, சொல்லிலடங்கா அடக்குமுறையை மத்திய-மாநில அரசுகள் மக்கள் மீது ஏவின. 4 உயிர் பறி போனது. இன்றளவிற்கும் மக்கள் பல நூற்றுக்கணக்கான வழக்குகளால் அல்லல்படுகிறார்கள். இவ்வளவிற்குப் பிறகும் கூடங்குளம் அணு உலைகள் ஒழுங்காக உற்பத்தி செய்ததா என்றால் இல்லை.

உலகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளுக்காக உலைகள் நிறுத்தப்பட்டால், இரண்டு மாதங்களுக்குள் அவை மீண்டும் மின் உற்பத்தியை துவங்கிவிடும். அப்படி இல்லையென்றால் “அணு உலைகளில் பிரச்சனை இருக்கும்” என்கிறது சர்வதேச அணுசக்தி முகமையம். ஆனால் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் கூடங்குளம் அலகு ஒன்று நான்கு மாதங்களுக்குக் குறையாமல் எடுத்துக்கொள்ளும். மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்க. இதுவரை அலகு ஒன்று மட்டும் 40 முறைக்கு மேல் பழுதடைந்து நின்றுள்ளது. அலகு இரண்டு வர்த்தகரீதியிலான உற்பத்தியைத் துவக்கியதாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் 15 நாட்கள் வரை ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூட உற்பத்தி செய்யவில்லை. சென்ற மாதம் இரண்டாவது உலையைத் துவக்கிவிட்டோம் என்று அறிவித்த ஒன்பது நாட்களுக்குள் பழுதடைந்து நின்றது.

சில நாட்களுக்கு முன்னர்தான் கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்தும் 2000 மெ.வா உற்பத்தி செய்யப்பட்டதாக அணுசக்தித் துறை அறிவித்தது. 2000 மெ.வா உற்பத்தியை நிகழ்த்திய சில நாட்களில் மீண்டும் அலகு ஒன்றிலுள்ள “டர்பைனில்” கோளாறு ஏற்பட்டு மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலகு 2 பழுதடைந்த சமயத்தில் சொல்லப்பட்ட முக்கியமான காரணம் ஹைட்ரஜன் கசிவு. மின்னுற்பத்தி இயந்திரத்தில் ஹைட்ரஜன் வாயு குவிந்துள்ளதால்தான் மின்னுற்பத்தி நின்றதாக அறிவிக்கப்பட்டது. அணு உலைகளில் விபத்து ஏற்படுவதற்கு “ஹைட்ரஜன் வெடிப்பு” முக்கியக் காரணமாகும். புகுஷிமாவில் உள்ள மூன்று உலைகளிலும் “ஹைட்ரஜன் எக்ஸ்ப்ளோசன்” ஏற்பட்டதால்தான் விபத்து ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அணு உலையில் ஹைட்ரஜன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மக்களிடம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் குறைந்தபட்சம் அறுபது ஆண்டுகள் செயல்பட வேண்டிய உலைகள் ஆரம்ப நிலையில் இவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்தால் போகப் போக என்னவாகும். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக இது குறித்துப் பதிவு செய்து வருகிறார். கூடங்குளம் திட்டத்திற்கு உலைகளை வழங்கிய ரோசடோம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ-போடாஸ்க்கின் “கொள்முதல் பிரிவு” இயக்குனர் “செர்ஜி ஷுடோவ்” ரசியக் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவர், தரங்குறைந்த எஃகுவைத் தரம் உயர்ந்ததாகச் சான்றிதழ் வழங்கியதாகவும் அவை இந்தியா, சீனா, பல்கேரியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டன என்றும் பல சர்வதேச அமைப்புகளை மேற்கோள் காட்டி கோபாலகிருஷ்ணன் எடுத்துவைத்தார்.

கோபாலகிருஷ்ணனின் அறிக்கையை மேற்கோள்காட்டிக் கூடங்குளம் அணு உலைகளுக்கு வாங்கப்பட்ட உதிரிப்பாகங்கள் தரங்குறைந்தவை என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகு உச்ச நீதி மன்றம் 2013 மே மாதம் வழங்கிய தீர்ப்பில் கூடங்குளம் அணு உலையின் ஒவ்வொரு உதிரிப்பாகத்தையும் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகே அணு உலைகளை இயக்க முடியும் என்று சொன்னது. ஆனால் தீர்ப்பு வந்த இரண்டே மாதங்களில் சில அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தின் பதிவாளரிடம் தாக்கல் செய்துவிட்டு அணு உலையை இயக்க ஆரம்பித்தது தேசிய அணு மின் கழகம்.

உலகம் முழுவதும் புதிய அணு உலைகள் நிச்சயம் 80% திறனில் ஓடும். ஆனால் கூடங்குளம் அணு உலையின் அலகு ஒன்று 43% திறனில்தான் ஓடியது என்று தேசிய அணு மின் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் டர்பைனில் ஏற்பட்ட கோளாறு பல கோளாறுகளின் தொடர்ச்சிதான்.

நிச்சயம் கூடங்குளம் அணு உலைகள் “தென்னிந்தியாவின் சோகமாக” (Sorrow of south India) மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளுக்கு நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், முதல் இரண்டு அலகுகளை “தற்சார்பானக் குழுவை” கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். இவை மட்டுமே கூடங்குளம் அணு உலைகள் தென்னிந்தியாவின் சோகமாக மாறுவதைத் தடுக்க முடியும்.

வெண்மணி : வெறும் கூலிப் போராட்டம் அல்ல! – தோழர் தியாகு செவ்வி

வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாக, கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகு. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘வெண்மணியின் குழந்தை’. விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறைபட்டிருந்த ஆண்டுகளில் ‘மூலதனம்’ நூலை மொழிபெயர்த்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராகவும் ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ ஆசிரியராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தியாகு, வெண்மணி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

கீழத் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எப்போது தொடங்கியது?

அப்போது காவிரித் தீரம் என்பது முப்போகம் விளையக் கூடிய பகுதி. விவசாயத் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் தலித் மக்கள். வர்க்கச் சுரண்டலும் சாதிய ஒடுக்குமுறையும் கடுமையாக இருந்தன. சாணிப்பால், சவுக்கடி என்று மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் இருந்தன. இவற்றுக்கு எதிரான போராட்டங்களை ‘30-கள் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் நடத்தியிருக்கிறார்கள்.

வெண்மணி படுகொலைச் சம்பவம் பற்றிய ஆய்வின் போது இந்தப் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் எப்போது வந்தது என்று விசாரித்தேன். “எங்கள் ஊர்களில் ‘60-களில்தான் கட்சியைக் கொண்டுவந்தோம். ஆனால், வெண்மணியைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் எங்களுக்கு முன்பே கட்சி இருந்தது. எனக்கே அது முழுமையாகத் தெரியவில்லை” என்று என்னிடம் சொன்னார் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன். அந்தப் பகுதியில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த அவர், அதற்கு முன்பு திராவிட இயக்கத்தில் இருந்தவர்.

வெண்மணி வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த ராமையா என்ற பெரியவரிடமும் இதே கேள்வி யைக் கேட்டேன். இந்தப் பகுதியில் மணலூர் மணியம்மை ஊர் ஊராகச் சென்று இயக்கப் பணிகளைத் தொடங்கினார் என்று அவர் சொன்னார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த மணியம்மை, நிலச்சுவான்தாரர் களுக்குத் தெரியாமல் இரவோடு இரவாகச் சென்றுதான் அந்த வேலைகளைச் செய்திருக்கிறார். சின்னக்குத்தூசி யின் நண்பர் அவர். அப்போது சின்னக்குத்தூசி திராவிட இயக்கத்தில் இருந்தார். மணியம்மை பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றி செங்கொடிச் சங்கங்களை அமைத்தார். இரண்டு இயக்கமும் ஒரே காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் வளர்ந்தன.

திராவிட இயக்கத்தின் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்…

ஒரு பகுதி தலித் மக்கள் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் இயங்கினார்கள். ஏ.ஜி.கே., பாச்சா போன்ற தலைவர்கள் அந்தச் சங்கத்திலிருந்து உருவானவர்கள்தான்.

1967-க்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த காலகட்டத்தில், கூலி உயர்வால் பலனில்லை; தேவையில்லாத வன்முறைகள் நடக்கின்றன என்று சொல்லி இந்தப் போராட்டங்களைப் பெரியார் தவிர்த்தார். அப்போது பலர் அவரை விட்டு விலகி பொதுவுடைமை இயக்கத்துக்கு வந்துவிட்டார்கள். இப்போதும்கூட, அந்தப் பகுதியில் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ இயங்கிவருகிறது. ஏ.ஜி.கே. பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து மாநிலப் பொறுப்பாளரானார்.

முக்கியமாக, தலித் மக்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாக இருந்ததால், பொருளாதாரரீதியாக கூலி உயர்வுக்குப் போராடுவது மட்டுமே போதவில்லை. ஒன்றாகச் சேர்ந்தால் வலிமையாக இருக்கலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக அந்தப் பகுதியில் சாதியக் கொடுமைகள் தணிந்தன.

வெண்மணி பிரச்சினை எப்படித் தீவிரமானது?

1967 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்கள் மத்தியில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தின. மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. வெண்மணி சம்பவத்துக்கு முன்பாகவே விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்றே ‘கிஸான் போலீஸ்’ என்று ஒரு பிரிவைத் தொடங்கினார்கள். நாகப்பட்டினம் தாலுகாவின் பல கிராமங்களில், அந்த போலீஸார் முகாமிட்டிருந்தார்கள். நிலச்சுவான்தாரர்களின் இடங்களில்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டன.

கிராமங்களில் புகுந்து ஆடு, கோழிகளைத் திருடுவது, மக்களைத் தெருவில் மண்டிபோடச் சொல்வது, ‘பி.ராமமூர்த்தி ஒழிக’ என்று கோஷம் போடச் சொல்வது என்று அந்த போலீஸார் பல அக்கிரமங்களைச் செய்தனர். மறு பக்கம் நிலச்சுவான்தாரர்கள் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்க’த்தை ஏற்படுத்தி, எந்த ஊரிலும் செங்கொடி ஏற்றக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்கள். அவர்களது சங்கத்தின் வெள்ளைக் கொடியைத்தான் ஏற்ற வேண்டும், இல்லையென்றால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று நெருக்கடி தந்தார்கள்.

கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவருடைய மாமா பக்கிரிசாமி நாயுடுதான் அவரை ஆட்டிப் படைத்தவர் என்று சொல்வார்கள்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பூந்தழங்குடி பக்கிரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு நாள் இரவு ஏ.ஜி.கே.வை கொலைசெய்யக் காத்திருந்தவர்கள் அவருக்கு முன்பாக வந்த சிக்கல் பக்கிரியைக் கொன்றுவிட்டார்கள். நாகை வட்டம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. வெண்மணி உள்ளடங்கிய தேவூர் பகுதியில் நிலக்கிழார்களின் அடியாட்கள் குடிசைகளைக் கொளுத்தும் ஆபத்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரசுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1968 டிசம்பர் 25 முன்னிரவில் மிராசுதாரர்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என எல்லோரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரை விட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களே இருந்தார்கள்.

சம்பவ தினத்தன்று என்ன நடந்தது?

அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீல நிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டியும் போக முடியாது.

அங்கு பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என்றுதான் தொழிலாளர் குடும்பத்தினர் நினைத்திருப்பார்கள். குடிசையையே கொளுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, நான் அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

விவசாய சங்கத் தலைவர்கள் யாருமே அப்போது ஊரில் இல்லை. கேரளத்தில் சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்துகொண்டிருந்ததால், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள். ஏ.ஜி.கே. மீது ஒரு வழக்கு இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகுதான் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். பி.ராமமூர்த்தி வந்த பிறகுதான் காவல் துறை முற்றுகையை மீறி ஊருக்குள்ளேயே நுழைய முடிந்தது.

திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது?

அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் போலீஸை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிஸான் போலீஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் பகலில் மார்க்சிஸ்ட்டுகள், இரவில் நக்ஸலைட்டுகள்” என்றே சொல்லியிருக்கிறார். விவசாயத் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.ஜி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்களின் சார்பாக நின்று அந்தப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பது; மக்களிடம் நேரடியாகச் சென்று அந்தப் பிரச்சினையை அணுகுவது, போலீஸ் அடக்குமுறையைத் தவிர்ப்பது என்றெல்லாம் கொள்கை இல்லாமல், அதிகாரவர்க்கம் எடுத்த முடிவுகளுக்கு இடம்கொடுத்துவிட்டபோது அண்ணா மீது குற்றச்சாட்டு வரத்தானே செய்யும்! முதலமைச்சர் என்ற முறையில் வெண்மணிக்கு அண்ணாவை அரசியல் பொறுப்பாக்குவதில் தவறில்லை.

பெரியாரைப் பொறுத்தவரை கூலி உயர்வுப் போராட்டங்களின் மீதே அவருக்கு நம்பிக்கையில்லை. தன்னிடமிருந்து விலகிப்போனவர்கள் மீதான கோபமும் திமுக ஆட்சி மீதான பரிவும் சேர்ந்துகொண்டன. பெரியார் நிலைப்பாட்டை ஏற்க முடியாதுதான்!

அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

செவ்வாழை சிறுகதையில் நிலப் பிரபுக்களின் கொடுநெஞ்சை சித்திரித்த அண்ணாவால் இப்போது காலம்காலமாய் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபுத்துவத்தின் கோர முகத்தைக் காண முடியவில்லை. இந்தப் பிரச்சினையை மக்களுக்கு இடையிலான மோதலாகவோ அல்லது அமைதிக் குலைவாகவோதான் அவரது அரசால் பார்க்க முடிந்தது. ஆக, காங்கிரஸு அரசுக்கும் திமுக அரசுக்கும் வேறுபாடு இல்லாமல்போனது. அதே அதிகாரிகள்.. அதே போலீஸ் கொள்கை!

கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபோது தொழிலாளர் போராட்டத்தில் போலீஸ் தலையிடாது என்ற கொள்கையை எடுத்தார்கள். ஆனால், போலீஸ் கொள்கையில் திமுக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. வெண்மணியில் படுகொலைக்குக் காரணமானவர்கள், தொழிலாளர்கள் என்று இரு தரப்பினர் மீதும் வழக்கு போடப்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில அரசு கலைக்கப்படாமலிருந்த இடைக்காலத்தில் கட்சி சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வெண்மணி சம்பவத்துக்கு முன் நடந்த கொலை தொடர்பாகச் சிறையிலிருந்த தோழர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணைவிடுதலை பெற உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர்கள் விடுதலை பெற்று வெளியே சென்றார்கள். அதைப் போல வெண்மணி சம்பவத்துக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்குப் பிணையை நீக்கி சிறையிலடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அவரும் பாலு நாயுடுவும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திமுக ஆட்சி ‘டிஸ்மிஸ்’ ஆனபிறகுதான், அவர்களைப் பிணையில் வெளியே எடுக்க முடிந்தது.

வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன?

இது வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல. உதாரணமாக, தொழிற்சாலைகளில் முதலாளி உயர்ந்தவர், தொழிலாளர்கள் தாழ்ந்தவர்கள் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், விவசாயத் தொழிலாளிகள் அப்படிக் கிடையாது. கூனிக் குறுகி, அடிபணிந்து வாழ்ந்த மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஊட்ட வேண்டியிருந்தது. பண்ணைகளுக்குக் காரியக்காரர்களாக இருந்தவர்கள், விவசாயத் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கினார்கள். ஊருக்குள் என்ன பிரச்சினை என்றாலும், அது கணவன் – மனைவி சண்டையாகவே இருந்தாலும்கூட, அவர்களைக் கையைக் கட்டி பண்ணையார்களின் முன்பாக நிறுத்திவிடுவார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி இவற்றையெல்லாம் மாற்றியமைத்தது. மாதம் ஒருமுறை அமாவாசை அன்று வேலைக்குப் போகாமல் கூட்டம் நடத்துவார்கள். அங்கு அத்தனை பேரும் கூடிப் பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். தொழிலாளர்களிடம் தன்னம்பிக்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் உருவாகின.

பண்ணையார்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்ததா?

இப்படியான சூழல் உருவானதைத் தொடர்ந்து, கூலி ஒரு பிரச்சினையில்லை, முதலில் சங்கத்தைக் கலையுங்கள் என்று பண்ணையார்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில், வெண்மணி பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமே இதுதான்: ‘நெல் உற்பத்தியாளர் சங்க’க் கொடிகளை ஏற்ற வேண்டும் என்ற கட்டளையை ‘விவசாயத் தொழிலாளர் சங்க’ நிர்வாகிகள் மறுத்தார்கள். மறுப்பவர்களுக்கு அபராதம் போடப்பட்டது. அபராதத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் வெண்மணியில் தகராறு முற்றியது.

ஆக, சங்கம் வைக்கிற உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரச்சினையே. சங்கம் வைத்தால் என்ன கிடைக்கும் என்பதற்கு, கீழத் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று இயற்றப்பட்ட குறைந்தபட்சக் கூலிச் சட்டமே சான்று. விவசாயத் தொழிலாளர்கள் என்ற முறையில், பொதுவுடைமை இயக்கம் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, சிபிஎம் அந்தப் பகுதியில் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த மன்னை நாராயணசாமி போன்ற சிலரும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்தார்கள். பேச்சுவார்த்தையில் விவசாயத் தொழிலாளர்களின் சார்பில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இவற்றில் கிடைத்த பலன்களைப் பற்றிச் சொல்லுங்கள்…

நீ மனிதன், நீ இன்னொருவனுக்கு அடிமை கிடையாது என்ற உணர்வைத் தொழிலாளர்களிடம் ஊட்டி வளர்த்தெடுத்தது பொதுவுடைமை இயக்கம். அதுபோல், விவசாயத் தொழிலாளியின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க வேண்டும், போதிய ஓய்வு வேண்டும், வயலில் வேலை பார்க்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் உரிமை வேண்டும் என்ற உரிமைகளையெல்லாம் வென்றெடுத்தது.

கீழத் தஞ்சையில் வென்றெடுத்த முக்கியமான உரிமை ‘விழுந்த கூலி’. அதற்கு முன்னர் அற்றக் கூலிதான் கொடுக்கப்பட்டது. அற்றக் கூலியைப் பொறுத்தவரை, ஒரு நாள் உழைப்புக்குக் கூலியாக நெல்லோ பணமோ கொடுக்கப்பட்டது. அற்றக் கூலிக்கு விடிவதற்கு முன்பே வயலுக்குச் செல்ல வேண்டும், மாலை அந்தி சாய்ந்த பிறகுதான் கரையேற முடியும்.

விழுந்த கூலியின்படி, ஒரு கலத்துக்கு இத்தனை படி நெல் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, கலத்துக்கு இத்தனை படி, கலத்துக்குள்ளேயே அளப்பதா அல்லது வெளியே அளப்பதா என்ற பிரச்சினை வந்தது. அந்தப் போராட்டமும் வெற்றி பெற்றது. இன்றைக்கு வெண்மணியைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டன. வெண்மணி கிராமம் மட்டும் மாறவில்லை. இன்னும் அங்கு செங்கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரித் தண்ணீர் இல்லாமல் போனதால், பழைய வர்க்க உறவுகளே மாறிவிட்டன. வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இப்போது கூலி முக்கியமான பிரச்சினை இல்லை. கூலி உயர்வுக்காக இவ்வளவு தியாகங்கள் செய்து, போலீஸையும் அடியாட்களையும் எதிர்கொண்டு கொலைகளுக்கும் சாவுகளுக்கும் நடுவில் நின்று வெற்றிபெற்ற ஒரு இயக்கம், ஏன் காவிரி உரிமைகளை இழந்தபோது மெளனமாக இருந்தது? அந்த உரிமைகளை மீட்பதற்கு என்ன செய்தது? நிலம் இருப்பவன், இல்லாதவன் என எல்லோருக்குமான உயிர்நாடி காவிரிதானே.

நிலம் உள்ளவர்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளலாம். நிலமற்றவர்கள் அகதிகளாகத் திருப்பூருக்கும் கோவைக்கும் பெங்களூருக்கும் இடம்பெயர்ந்து போக வேண்டியிருக்கிறதே! கல்வி, வேலைவாய்ப்புகளுக்குப் பிறகு விவசாய வேலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இல்லை. எனவே, நடுத்தர வயதுள்ளவர்கள் மட்டும்தான் அந்த ஊர்களில் விவசாய வேலைகள் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்கள் என்ற உரிமையை வென்று கொடுத்து, சங்கங்களை உருவாக்கிய பொதுவுடைமை இயக்கம் தமிழர்களே என்று அவர்களை ஒருநாளும் அழைக்கவில்லை. தொழிலாளியாகக் கூலி உரிமையை இழக்கும்போது போராடிய இயக்கம், தமிழக உரிமைகள் சார்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கவே இல்லை. அகில இந்தியப் போராட்டத்தில் இவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவார்கள்.

ஆனால், இவர்களின் மாநில உரிமை என்னும் தேசிய இன உரிமை மறுக்கப்படும்போது இவர்களுக்காக யாரும் வர மாட்டார்கள். அந்த இடத்தில் ‘தமிழா இன உணர்வு கொள்’ என்று சொல்லும் திராவிட இயக்கம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன உணர்வு என்பதை தேசிய இன உணர்வாக முழுதாக அடையாளப்படுத்தவே இல்லை. அது அவர்களுக்குத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பொழுதுபோக்கு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில்… அடுத்து என்ன? (சென்ற இதழின் தொடர்ச்சி)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில்…
அடுத்து என்ன?
உருத்திரகுமாரன் விரிவான பேட்டி
கேள்வி: தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு அல்லது தீர்வுகள் வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தச் செயல்வழி ஒன்று தொடர்கிறது; இது தொடர்பாக உள்ளூர்த் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பான சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்; மிக அண்மையில் உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் குழுக்கள் மீளிணக்கம் நோக்கிய நேர்வகை முயற்சிகள் எடுத்து வருகின்றன – இவை உள்ளிட்ட இப்போதைய அரசியல் சூழலைக் கருதிப் பார்க்கையில், சிறிலங்கா தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலையிட்டுச் செய்திருப்பவை என்ன?

தமிழ் மக்களின் இறைமை அவர்களைச் சார்ந்ததே என்பதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு. 1972 மற்றும்/அல்லது 1978 அரசமைப்பு ஆக்கும் செயல்வழியில் தமிழ் மக்கள் பங்கேற்க வில்லை என்பதால், அவர்கள் தமது இறைமையை கொழும்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. ஆகவே, இன்று, எந்தவோர் அரசியல் தீர்வுக்கும் முன்னதாக, அந்த அரசியல் தீர்வுச் செயல்வழியில் தாங்கள் எவ்வடிவில் பங்கேற்க விரும்புகிறோம் என்பதைத் தமிழ்த் தேச மக்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். சிறிலங்காத் தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ்த் தேசிய இன மக்கள் தமது விருப்பத்தை வெளியிடுவதற்குரிய அமைதியான, சனநாயக வழிகளில், ஒரு பொதுவாக்கெடுப்பு ஊடாகத் தங்கள் அரசியல் வருங்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கமுதல் எடுத்து வரும் நிலைப்பாடு. நாம் எதிர்நோக்கும் பொதுவாக்கெடுப்பு சுதந்திரத் தனியரசுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் வாக்களிப்பதற்கானது அன்று. ஒற்றையாட்சி அரசு, கூட்டாட்சி அரசு, மாக்கூட்டாட்சி அரசு, சுதந்திரத் தனியரசு போன்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பாக அஃதமையும்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்ற ஆண்டு நியூயார்க் நகரில் நாங்கள் நடத்திய மாநாட்டில் அறிஞர்களும் செயற்பாட்டளர்களும் அடங்கிய “வேண்டும் பொதுவாக்கெடுப்பு” எனும் குழு அமைக்கப்பட்டது. ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அவர்கள் விரைவில் ஒரு செயல்திட்டம் வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.

கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்தியல் குழுக்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று வாதஎதிர்வாதம் செய்யக் கூடியவை என்னும் சூழலில், உள்நாட்டில், குறிப்பாக சிங்களரிடையே இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற எதிர்வகைப் பார்வை உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் பிரிவினைவாத ஈழக் கொள்கைக்கான சுடரேந்திகளாக அறியப்பட்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவான பிரிவினைவாத மற்றும்/அல்லது தேசிய இனவாதப் பார்வைகள் கொண்டதா?

என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்குப் பொதுவாக்கெடுப்பின் ஊடாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துப் புலம்பெயர் குழுக்களிடையிலும் பொதுக்கருத்து காணப்படுகிறது. எமது அரசியல் வருங்காலத்தை பொதுவாக்கெடுப்பின் ஊடாக முடிவு செய்து கொள்வது அடிப்படை மனித உரிமை ஆகும். ஆக, இது அரசியல் சிக்கல் மட்டுமன்று, இன்னுங்கூட முக்கியமாக மனித உரிமைச் சிக்கலும் ஆகும். பன்னாட்டு நடைமுறைகளும் இதற்கு ஏற்ற முறையிலேயே உள்ளன. தெற்கு சூடான் (மச்சாகோஸ் வகைமுறை) ஆனாலும், புனித வெள்ளி உடன்பாடு ஆனாலும், செர்பிய-மொண்டனிக்ரோ உடன்பாடு ஆனாலும், பாப்புவா நியூ கினி – பூகன்வில் அமைதி உடன்பாடு ஆனாலும், அனைத்தும் காட்டும் வழி தேசிய இனச் சிக்கல்களைப் பொது வாக்கெடுப்பின் ஊடாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே. இங்கு மேலும் ஒன்றை நான் உரைத்தாக வேண்டும்: பொதுவாக்கெடுப்பு என்று சொல்லும் போது நாடு முழுமைக்குமாகச் சொல்லவில்லை, குறிப்பிட்ட தேசிய இனத்துக்கான பொதுவாக்கெடுப்பையே சொல்கிறேன். எடுத்துக்காட்டாக, கனடிய உச்ச நீதிமன்றம் குவிபெக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தச் சொன்னதே தவிர, கனடா முழுக்க நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

அதேபோது சிறிலங்கா அரசு நெகிழ்வற்ற சிங்கள பௌத்த இனநாயகத் தன்மை கொண்டதாக இருப்பதால் சுதந்திரத்தின் ஊடாகத்தான் நாங்கள் இலங்கைத் தீவில் கண்ணியத்துடன் அமைதியாக வாழ முடியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

1958, 1977, 1983 ஆண்டுகளிலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டும் தமிழர்கள் பெருந்திரளாகக் கொலையுண்டதும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதும், சிறிலங்காப் படையினர் தமிழ்ப் பெண்களை வைத்துப் பாலியல் வல்லுறவு முகாம்கள் நடத்தி வருவதாக அண்மையில் வந்துள்ள செய்திகளும் இந்த எமது நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டுக்கும் சான்றுபகரக் கூடியவை ஆகும். காலஞ்சென்ற இதழியலர் தார்சி விட்டாச்சி எழுதிய ‘நெருக்கடிநிலை – 58’ என்ற நூலையும் கவனப்படுத்த விரும்புகிறேன். 1958ஆம் ஆண்டு தமிழர்கள் பெருந்திரளாகக் கொலை செய்யப்பட்ட உடனே இந்நூல் எழுதப்பட்டது. அப்போது விட்டாச்சி தமது நூலின் முடிவில் “சிங்களர்களும் தமிழர்களும் பிரிந்து விடும் நிலைக்கு வந்து விட்டார்களா?” என்று கேட்டார். தமிழர்கள் இந்தக் கேள்வியை 1958 முதற்கொண்டே கேட்டு வருகிறார்கள். 1977 பொதுத்தேர்தலில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப்படுவதைப் பெருவாரியாக ஆதரித்து வாக்களித்தார்கள். ஆனால் இப்போதே ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்: தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ கூட்டாட்சிக்கோ “கூட்டாட்சியல்லாத கூட்டாட்சிக்கோ” ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
கேள்வி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் தரும் விடை பிரிவினைக்கு ஆம் என்று இருக்குமானால், நாட்டின் சாலச் சிறந்த நலன்களுக்கும், நாட்டிற்குள் வாழும் அனைத்துச் சமுதாயங்களின் நலன்களுக்கும் அது முரணாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதவில்லையா?

சுதந்திரத் தமிழீழ அரசு என்பது சிறிலங்காத் தீவிற்குள் வாழும் அனைத்து சமுதாயங்களுக்கும் இடையே நட்புறவுக்குத் துணைசெய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் மக்களினங்களிடையே அமைதியும் நட்புறவும் மலரச் செய்வதுதான் நோக்கமே தவிர, நிகழமைப்பைக் காப்பதோ நடப்பு எல்லைகளைக் காப்பதோ அல்ல.

மேலும், சுதந்திரத் தனியரசு என்ற வடிவில் நிலைத்த தீர்வு காண்பதன் மூலம் — பேராசிரியர் டொனால்டு ஹொரொவிட்ஸ் தமது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பது போல் — சிங்கள அரசியல் சமூகத்திற்குள்ளான இனவாதக் கூக்குரலை நம்மால் அகற்றக் கூடும். சிங்களத் தலைவர்கள் சாமானியர்களின் அன்றாடச் சிக்கல்களில் முழுமையாகக் கவனம் செலுத்தலாம். அது சனநாயகத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படும்.

சிறிலங்காவுக்கும் தமிழீழத்துக்கும் இடையில் எப்போதும் பதற்றமாக இருக்கும் என்று சிலர் வாதிடக் கூடும். ஆனால் அப்படி இருக்கத் தேவையில்லை என நம்புகிறோம். நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையிலோ சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலோ பதற்றமேதும் இல்லை. கொஞ்சம் பதற்றம் இருக்கும் என்றே வைத்துக் கொண்டாலும், நாடுகளுக்கிடையிலான வன்முறையைக் கட்டுப்படுத்துவதை விடவும் பதற்றத்தை சமாளிப்பதற்கு மேலதிக பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளும் பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றும் இருக்கவே செய்கின்றன.
கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பிளவு அல்லது பிளவுகள் உண்டா?

முன்பே சொன்னேன், தமிழர்கள் ஒரு தேசிய இனம், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் தமது உள்ளார்ந்த உரிமையாகிய சுயநிர்ணய உரிமையை மெய்ப்படச் செய்திட வழிசெய்ய வேண்டும் என்பன போன்ற அடிப்படைச் சிக்கல்களில் கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இப்போதுள்ள எல்லைகளுக்குள்ளேயே மெய்ப்படச் செய்திட முடியுமென்று புலம்பெயர் தமிழர்களின் சில குழுக்கள் நம்புவதையும் நான் மறுக்கவில்லை.
கேள்வி: இலங்கையில் பிறவாது, இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்த இளையோர் உள்ளனர். தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் கண்கள், செவிகள் வழியே பட்டறிந்துள்ள போர் தொடர்பாகவும், நாட்டிலுள்ள நடப்பு நிலைமை தொடர்பாகவும், சிறிலங்காவை சீரமைப்பதில் தங்களுக்குள்ள எதிர்காலப் பங்குப்பணி குறித்தும் இந்த இளையோரின் கண்ணோட்டத்தை வடித்திட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதென்ன?

மனித உரிமை பற்றிய உரையாடல் வழியாகவும் பண்பாட்டுய் நிகழ்வுகளின் ஊடாகவும் இளைய தலைமுறையின் இதயத்திலும் மனத்திலும் அவர்களின் ஓர்மையையும் அடையாளத்தையும் விதைக்கிறோம். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு குறித்தும், தொடர்ந்துவரும் கட்டமைப்பியல் இனவழிப்பு குறித்தும், அவர்களின் உற்றார் உறவினர் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய அவர்களின் அறக் கடன் குறித்தும் உணர்வூட்டுகிறோம்.

இப்போது ஜெனிவாவிலும், தாயகத்திலும் கூட, எமது மக்களுக்கு நீதி கிட்டச் செய்வதில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கக் காண்கிறோம்.
ஆனால் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.
கேள்வி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ள (நிதி வகையிலும் அரசதந்திர வகையிலுமான) ஆதரவு திரட்டும் முயற்சிகள் என்ன?

எந்தவோர் அரசியல் நகர்வுக்கும் அதிகாரம் இன்றியமையாதது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. இப்போதைய பன்னாட்டு உறவுகளிலும் பன்னாட்டுச் சட்டத்திலும் அரசல்லாத செயலாண்மைகள் கணக்கில் கொள்ள வேண்டியதோர் அதிகாரமாகியிருக்கக் காண்கிறோம். இம்மாதம் ஃபாரின் அஃபர்ஸ் ஏடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை உலகத்தை முத்துருவ (மூன்று துருவ) உலகமாகக் குறிப்பிடுகிறது; குடியாண்மை (சனநாயக) அரசுகளும், வல்லாண்மை (எதேச்சாதிகார) அரசுகளும், அரசல்லாத செயலாண்மைகளும் இப்போது அதிகாரம் செலுத்துகின்றன. பன்னாட்டு அரசியல், நீதியியல் அரங்கில் அரசல்லாத செயலாண்மைகளால் தாமாகவே சில செயல்கள் நிகழ்த்த முடியும். இவ்வகையில் நாம் பன்னாட்டுச் சமுதாயத்தின் ஆதரவை அணிதிரட்டுவதில் ஈடுபட்டுள்ளோம். இது நோக்கி, சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டி 16 இலட்சம் (1.6 மிலியன்) கையொப்பம் திரட்டும் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இப்போது, அனைத்துலகக் காணமற்போனவர்கள் நாளில், அதாவது ஆகஸ்டு 30ஆம் நாள் மற்றுமொரு பன்னாட்டு இயக்கத்துக்குத் திட்டமிட்டு வருகிறோம். காணாமற்போகச் செய்தலால் பாதிப்புற்றவர்களுக்கு உண்மையும் நீதியும் வேண்டி, அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்விக் கழகங்கள் மற்றும் அனைத்து வகைக் கூட்டு அமைவுகளையும் அணிதிரட்டி இதனைச் செய்ய உள்ளோம்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் புத்தெழுச்சி பெறுவார்கள் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்போதும் நம்புகிறதா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைப்புச் சட்டம் அது தன் அரசியல் குறிக்கோள்களை அமைதி வழிகளின் ஊடாக அடையக் கட்டளையிடுகிறது. அயல்நாடுகள் எதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்குச் சட்டத் தடை ஏதுமில்லை. உண்மையில், பல்வேறு நாடுகளிலும் அரசதந்திரிகள் நேரடியாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
கேள்வி: சிறிலங்கா குறித்து பன்னாட்டுச் சமுதாயமும், மேற்குலகும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் அண்மையில் கடைசியாக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு புரிந்து கொள்கிறது?

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்தவுடனே, தமிழர்களுக்கு நீதி கிட்ட வேண்டும், பன்னாட்டுக் குற்றங்கள் செய்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது பன்னாட்டுச் சமுதாயத்தின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், முன்னாள் அதிபர் இராசபட்சேயும் வேறு சில தனியாட்களும்தான் இதைச் செய்தவர்கள் எனக் கருதினர். ஆகவே சிறிசேனா பொறுப்புக்கூறலையும் தமிழ்த் தேசிய இனச் சிக்கலையும் கவனித்துக் கொள்வார் என்று நம்பி அவரை ஆட்சியிலமர்த்தினர். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐநா தனி அறிக்கையாளர் சென்ற மாதம் அளித்துள்ள கடுமையான அறிக்கை இந்த மாயையைக் கலைப்பதாக உள்ளது. தண்டனைக் கவலையில்லாக் குற்ற நிலைக்கும் தமிழின அழிப்புக்கும் அரசே காரணம் என்பதைப் பன்னாட்டுச் சமுதாயம் உணரத் தொடங்கி விட்டது.
கேள்வி: சிறிலங்காவின் ஆயுதப் படைகள் செய்ததாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய புலனாய்வைப் பொறுத்த வரை, புலிகள் செய்த கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் எவ்வாறு அடையப்பெறும்? இவ்வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலையீடு எத்தகையதாக இருக்கும்?

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட்ட இனவழிப்புக்கு நீதி பெறுவோம் என்பது தமிழர்களின் உளமார்ந்த நம்பிக்கை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்கள் இந்தச் சிக்கலைக் குவிமையமாகக் கொண்டுள்ளன.
கேள்வி: இப்போதைய நாட்டு நிலைமையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு புரிந்து கொள்கிறது?

சிறிலங்காத் தீவு நாட்டில் தமிழர்களின் நிலைமையைப் பொறுத்த வரை, பெரும்படியாகப் பார்த்தால், கட்டமைப்பியல் இனவழிப்பு இன்றும் தொடர்கிறது. போர்க் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இராணுவம் இப்போதும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கிறது. காணாமற்போனவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. அதேபோது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் பரவலாகத் தொடர்கின்றன. சிறிலங்கா படையினர் தமிழ்ப் பெண்களை வைத்து நடத்தும் பாலியல் வல்லுறவு முகாம்கள் இப்போதும் செயல்படுவதாக பன்னாட்டு மனித உரிமைக் குழுக்கள் அறிக்கையளித்துள்ளன. இவை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சப்பானியப் பேரரசின் இராணுவம் நடத்திய “ஆற்றுகைப் பெண்கள்” முகாம்களைப் போன்றவை. தெற்கில், சிறிசேனா ஆட்சியின் தொடக்கக் காலத்தில் சிலபல சனநாயக வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், இப்போது தெற்கில் அதிபர் இராசபட்சே ஆட்சியைப் போலவே சிறிசேனா ஆட்சியும் “சனநாயகக் கலைப்பு வேலை”யில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி: நாட்டில் மீளிணக்கம் எந்நிலையில் உள்ளது?
என் முந்தைய மறுமொழிகளே இந்தக் கேள்விக்கும் விடையளித்துள்ளன.
கேள்வி: தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு) குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனநிறைவடைகிறதா?

உள்நாட்டுத் தலைமை தமிழர்களின் அரசியல் வேணவாக்களை முழுமையாக வெளிப்படுத்த விடாமல் ஆறாம் திருத்தத்தால் சட்டத் தடைகள் இருப்பதாகப் புரிந்து கொள்கிறோம். குறிப்பாகச் சொன்னால் இலங்கைத் தீவுக்குள் இராணுவமயம் நிகழ்ந்து, அரசியல் வெளி குறுகியதால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டது என்பதே உண்மை. ஆறாம் திருத்தம் சுதந்திரத் தனியரசு கேட்பதைத் தடை செய்கிறது என்றாலும், ஆறாம் திருத்தத்தை நீக்குமாறு கேட்பதைத் தடை செய்யவில்லை. உள்நாட்டுத் தமிழ் அரசியல் தலைமையானது இந்த உண்மையைப் பன்னாட்டுச் சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமே தவிர, தமிழர்கள் முன்போல் சுதந்திரத் தனியரசு கேட்கவில்லை என்று தவறாகப் படம்பிடித்துக் காட்டக் கூடாது என விரும்புகிறோம். இது உண்மையன்று என்று அவர்களுக்கே தெரியும். சுதந்திரத் தனியரசுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் வலுப்படுத்தியுள்ளது. தமிழர்கள் சுதந்திரத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக யாராவது, குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின், கூறிக் கொள்வார்களாயின், அது பொய்மையே.

மேலும், உள்நாட்டுத் தலைமை சில ஆக்கவழிச் செயல்களை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்; எப்படி என்றால், வெனிசுவேலாவில் எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பொதுவாக்கெடுப்பு, இராக்கிய குர்திஸ்தானிலும் கட்டலோனியாவிலும் திட்டமிடப்படும் [நடந்து முடிந்துள்ள] பொதுவாக்கெடுப்புகள் போல் செய்யலாம். இந்தப் பொதுவாக்கெடுப்புகள் உள்நாட்டுத் தலைமை ஒழுங்கு செய்தவையே தவிர, ஐநாவோ அல்லது எந்த அயல்நாடோ ஒழுங்கு செய்தவை அல்ல.
கேள்வி: வருங்காலத்தில் சிறிலங்காவில் தேசிய அளவில் நடக்க கூடிய தேர்தல்களில் போட்டியிட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?

முன்பே பல தருணங்களில் நான் கூறியுள்ளேன், தமிழர்கள் தமது இறைமையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்புவிக்கவில்லை என்பதால், சிறிலங்காத் தேர்தல்களை முறையானவை என்று நாம் கருதவில்லை. எவ்வாறாயினும், எமது இலக்குகளை முன்னகர்த்தும் மேடையாக இத்தேர்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாம் இப்படிச் செய்வதற்கு ஆறாம் திருத்தத்தை நீக்கியாக வேண்டும்.
கேள்வி: நீங்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்கிறீர்களா? இல்லையென்றால், எதிர்காலத்தில் அப்படிச் செய்ய விரும்புகிறீர்களா?

முன்பே நான் கூறியதுதான், ஒரு பொதுவாக்கெடுப்புக்கான திட்டமிடல் மற்றும் காலச் சட்டகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறோம்.
கேள்வி: முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் எமக்களித்த பேட்டியில், புதிய அரசமைப்பின் வாயிலாகத் தேசிய இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு வருமாயின் புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்து வளர்ச்சிக்கு உதவுவதை நாங்கள் உத்தரவாதம் செய்வோம் என்று சொன்னார். இந்தக் கூற்றினை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்?

புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்காகச் செய்ய விரும்பும் முதலீடு (பண முதலீடு மட்டுமன்று) என்ன? அரசமைப்புச் சட்ட சீர்திருத்தங்களின் செயல்வழி தொடர்பான நிகழ் நிலவரத்தையும் அதில் புலம்பெயர் தமிழர்களின் பங்கினையும் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்?

நான் முன்பே கூறியது போல, நிலைத்த அரசியல் தீர்வு ஏதும் வேண்டுமானால், அது தமிழ்த் தேசத்துக்காக நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பின் ஊடாக வரவேண்டும். பொதுவாக்கெடுப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வு ஏற்பட்டு விட்டால் சிறிலங்காத் தீவிலிருக்கும் அமைவுகளுக்குப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் தன வல்லமையையும், அதே போல் நிதி முதலீட்டையும் கொண்டுசேர்க்கும்.
கேள்வி: வட மாகாண அவை, உங்கள் பார்வையைப் பொறுத்து, செய்துள்ள அல்லது செய்யாதுள்ள பணியை எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்? மற்றபடி, வடக்கு, கிழக்கு இணைப்பு என்னும் முன்மொழிவு குறித்துச் சொல்லுங்கள்.

வட மாகாண அவைத் தேர்தலின் போதே சொன்னோம், மாகாண அவையால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது. இப்போது இதே கருத்தை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களே உறுதி செய்துள்ளார்.

இணைப்பைப் பொறுத்த வரை, இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி தமிழர் தாயகமாகும் என்பதை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இணைப்பு நீக்கம் செய்நுட்பக் காரணங்களால் நடைபெற்றது. இப்போதைய அரசாங்கம் உட்பட சிறிலங்கா அரசாங்கம் தமிழர் வேணவாக்கள் குறித்து உண்மையாக இருக்குமானால், எளிய பெரும்பான்மை கொண்டே வடக்கு-கிழக்கை மீண்டும் இணைக்கலாம். இந்த இணைப்புக்கு மூன்றிலிரு பங்குப் பெரும்பான்மை தேவையில்லை.
கேள்வி: இது வரை கேட்ட கேள்விகளில் உட்படாத கூறுகள் குறித்து நீங்கள் விளக்கிக் காட்ட விரும்பினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு எது குறித்து வேண்டுமானாலும் தாராளாமாகக் குறிப்பிடலாம்.
ஒரு மிலியனுக்கு மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திர சாசனம் ஒன்றைப் பறைசாற்றியது. சுதந்திர சாசனத்தில் முஸ்லிம்களின் தனித்துவ ஓர்மை அறிந்தேற்கப்பட்டுள்ளது; கல்வி அனைவருக்கும் கட்டாயமும் இலவயமும் ஆகும். தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் தமிழீழத்தின் ஆட்சிமொழிகளாக இருக்கும். நலவாழ்வு (உடல்நலம்) அடிப்படை உரிமையாக அறிந்தேற்கப்படும்; சுற்றச் சூழல் பாதுகாக்கப்படும்; சூரியன், காற்று, கடலலை போன்ற வழிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அழுத்தம் தரப்படும்.
மேலும், தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைவுற்றிருப்பதால், இப்பெருங்கடலில் அமைதிக்கும் இசைவுக்கும் துணைசெய்யும்.

 

சமத்துவ சாயம் – உ.திலகவதி (சென்ற இதழின் தொடர்ச்சி)

சமத்துவ சாயம் !!

பெண்ணுரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டமும் முற்போக்குச் சமூகமும் பெண்கள் முன்னேறவும் சுயமாய் வாழவும் ஊன்றுகோளாக இருந்து வரும் இதே நேரத்தில் தான் நசுக்கப்படும் பெண்ணுரிமைகள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருவரின் உரிமையில் இன்னொருவர் தலையிடுவதே அநாகரிகம் எனும் போது, இன்னும் பெண்களின் உரிமைகள் ஒரு காற்றுப் புகா பெட்டியில் வைத்து நசுக்கப்பட்டு மூச்சுத் திணறடிக்கப்படுகின்றது. இதனை ஒளித்து மறைக்கும் சமூகம் தான், பெண் சமூகம் விடுதலை அடைந்து விட்டதாக போலியாய் சமத்துவ சாயம் பூசி மொழுகுகிறது. அம்பானிகளும் அதானிகளும் பன்னாட்டு முதலாளிகளும் இந்தியாவின் அடையாளமல்ல. பிளாட்பார குடும்பங்களும் உழைத்துத் தேய்ந்த உருவங்களும் தான் இந்தியாவின் அடையாளம். விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டும் பன்னாட்டு ஒப்பந்தங்களுமா வல்லரசு இந்தியாவின் வளர்ச்சிச் சான்று ? அனைவருக்கும் சமத்துவமான கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, உடை , இருப்பிடம்,சமூக நீதி, சமவாய்ப்பு இவை தானே ஒரு வல்லரசு நாட்டின் அடித்தளம். அதேபோல் தான் பணிக்குச் செல்லும் சில ஆயிரம் பெண்களை வைத்தோ, சுயமாய் முடிவெடுக்கும் சில நூறு பெண்களை வைத்தோ அரசியலில் ஈடுபடும் வெகுசில பெண்களை வைத்தோ சமூகத்தில் பெண்களின் நிலையை, பாலியல் சமத்துவத்தை கணக்கிடுவது அடி முட்டாள்தனம். இந்தியாவின் பல கோடி பெண்கள் இன்றும் அடிமைகளே. ஆம் அவர்கள் பாலியல் கொத்தடிமைகள். பண்பாட்டு பலிகடாக்கள்.
நகரங்களை வைத்து வளர்ச்சியை மதிப்பிடும் ஆட்சியாளகர்களின் அரசியல் விளையாட்டில் பெண்ணுரிமைகளும் சிக்கித் தவிக்கிறது. அவர்களிடம் நாம் உரக்கச் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. அது “இந்தியா கிராமங்களின் நாடு” என்பதே.

கலாச்சார அடிமைகள் :

இங்கே பெண்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல் கூட நடத்தப்படுவதில்லை. ஏதோ ஒரு தரைமட்ட தகுதியைத் தான் பெண்கள் மீது திணிக்கிறார்கள். ஏனென்றால் உலகம் தோன்றியதோ இல்லையோ மனிதர்கள் உருவாகினார்களோ இல்லையோ அறிவியல் வளர்ந்ததோ இல்லையோ பெண் மீதான கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் அசுர வேகத்தில் வளர்ந்தன.

உலகத்தின் அனைத்து மதங்களும் கலாச்சாரங்களும் புனித நூல்களும் பெண்ணை சபிக்கப்பட்டவர்ளாக, பாதுகாக்கப்படவேண்டியவர்களாக, இயற்கையிலேயே ஒழுக்கமற்றவர்களாக சித்தரித்தன. பல நூற்றாண்டு பண்பாட்டு தளத்தில் பெண்ணிற்கு வழங்கப்பட்ட இந்த இடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பெண் வெவ்வேறு பாணியில் ஒடுக்கப்படுகிறாள். ஒடுக்கப்படும் சாதி பெண்ணாக இருந்தால் அவளின் முலைக்கு கூட வரி விதித்ததிலிருந்து, இன்று முள்ளுச்செடிகளில் வன்புணர்ந்து வீசப்படும் வரை நீள்கிறது அவள் மீதான அடக்குமுறை. ஆதிக்க சாதி பெண்களும் விதிவிலக்கல்ல அவர்களின் காதல் முடிவுகள் தண்டவாளங்களிலும் நடுத்தெருவிலும் இரத்த ஆறாய் ஓடுகின்றது. ஏழைக் குடும்பத்து பெண் மீது உழைப்புச் சுரண்டல் என்றால் வசதி படைத்த பெண்ணிடம் வாழ்கையை சுரண்டி மூலையில் உட்கார வைக்கின்றது சமூகம். எனவே சாதி பேதமின்றி வர்க்க பேதமின்றி பெண்களின் மீது வன்மமும் ஆதிக்கமும் சமமாக கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. வரலாற்றின் இந்தப் பகுதியில் நின்று கொண்டுதான் நாம் பெண்ணுரிமைகளை முழுவதுமாய் அடைந்து விட்டதாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்றாட வாழ்வில் அடைந்தோமா சமத்துவம் ?

நாம் வாழும் இதே சமூகத்தில் தினசரி கடந்து போகும் டீக்கடைகளில் எத்தனை பெண்கள் அமர்ந்து செய்தித் தாள் வாசிப்பதை பார்த்திருக்கிறீர்கள்? வீதியோர பானிப்பூரி கடைகளிலும் சிக்கன் பக்கோடா கடைகளிலும் எத்தனை பெண்கள் நின்று சாப்பிட்டு (ரோட்டுக்கடைகளில்) கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்கள்? கறிக்கடைக்கோ பர்னிச்சர் கடைக்கோ எலக்கடிரிக்கல் கடைகளுக்கோ இங்கே பெரும்பாலும் பெண்கள் செல்வதே இல்லை. காய்கறி கடைக்களில் பெண்கள் கூட்டத்தை பார்கலாம். வாரச் சந்தைகளிலும் அதிகமாக பார்க்கலாம். எந்த ஒரு ஆய்வும் செய்யாமலேயே சராசரியாக நம் நடைமுறை வாழ்கையில் பெண்ணின் வெளியுலக பங்கை சிந்தித்துப் பார்த்தாலே பெண்களின் நிலை புரிந்து விடும். சென்ற தலைமுறை ஆண்களின் கைகளில் விளையாடும் ஆண்ட்ராயிட் போன்கள் அதே தலைமுறை பெண்களை இன்னும் சென்றடையவில்லை. இத் தலைமுறை பெண்கள் தொழில்நுட்ப தடைகளை உடைத்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் மிக மிக குறைந்த வேகத்தில். சென்ற தலைமுறைப் பெண்களோ இந்த சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்காமலேயே செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

குடும்பப் பெண்கள் :

சமூக தளத்தில் நடுத்தர வயதுப் பெண்கள் பங்கெடுக்காமலேயே சென்று விடுகிறார்கள். அவர்களை அப்படி கட்டிப்போடுவதுதான் எது ? அவர்களிடையே ஆண் சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஒரு உளவியல் சொல் தான் அது “குடும்பப் பெண்கள்” .

குடும்பப் பெண் என்பவள் இதிகாசங்களும் புராணங்களும் கொடுத்த பெண்ணுக்கான முன்மாதிகளின் பின்மாதிரிகள் தான். அதாவது அவர்களின் வெளியுலக வாழ்கை “சுப நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும்” அவ்வப்போது எட்டிப் பார்க்கும் . பண்டிகை நாட்களில் காலையிலிருந்து இரவு வரை செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை தெரிந்து வைத்திருப்பாள். சமையல் என்பது கடமையைத் தாண்டிய அவளோடு ஒன்றிப்போன நிகழ்வு. சீரியல்கள் பார்த்துக்கொண்டு கணவனுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை பெண்களை அவர்களைப் போலவே “குடும்பப் பெண்களாக” வளர்த்தெடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டு, கணவன் அடித்தாலும் வசைபாடினாலும் அந்த நாலு சுவற்றிற்கு வெளியே அதனை கசியவிடாமல் குடும்ப மானத்தை காப்பவள் தான் குடும்பப் பெண் எனப்படுபவள். இதுவும் வர்க்கம் சாதி சார்ந்ததுதான். ஒடுக்கப்படும் சாதியிலும் ஏழை வர்க்கத்திலும் இது போன்ற குடும்பப்பெண்களை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கைப் போர் சமூக சுவர்களை முட்டி முட்டி மோதுவதில் தான் நிறைவு பெறுகிறது. அவர்கள் நான்கு சுவற்றுக்குள் தங்கள் வாழ்கையை ஒளிக்க முடியாது. வாழ்வாதாரத்திற்காக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

இங்கே அனைத்து தளங்களிலுமே அவர்கள் சுயமாய் யோசிக்க தடை செய்யப்பட்டவர்கள். தன் ஆடவன் சொல்லும் இடங்களுக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும் சொல்லும் வேலைகளைத்தான் செய்ய வேண்டும். அவர்களின் ஒழுக்கத்தின் மீது அவனுக்கு சந்தேகம் வந்தால் எந்த நேரத்திலும் அவளின் வேலைக்கு அவன் முழுக்கு போடலாம்.

குடும்ப வன்முறை :

குடும்ப வன்முறை அனைத்து தரப்பு பெண்களிடமும் நீக்கமற நிறைந்துள்ளது. முன்பின் தெரியாத ஒரு ஆணால் நிகழும் கொடுமைகளைப் போல் தான் தன் சொந்தக் குடும்பத்தில் அவள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறாள். அதில் முக்கியமானது “வார்த்தை வன்முறை”. அனைத்து வகைப் பெண்களுமே இதில் உட்படுத்தப்படுகிறார்கள். அவளின் ஒழுக்கத்தின் மீதான வசைகள் தமிழில் பஞ்சமே இல்லை. தன் வாழ்நாளில் “விபச்சாரி” எனப் பொருள்படும் அந்தக் கெட்டவார்த்தையை கடக்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வார்த்தைகளால் அவள் மீது அவளின் ஒழுக்கத்தின் மீது அத்தனை அமில வீச்சுக்கள். வரதட்சணை முதல் விவாகரத்து வரை பெண்ணின் விருப்பத்தோடு எதுவும் நடப்பதில்லை. விவாகரத்து உரிமைகள் என்பது பல போராட்டங்களுக்கு பிறகு டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான உரிமை. வேத சாஸ்திரங்கள் மனுதர்மங்கள் திருமணம் என்பது முடிவில்லாதது, துண்டிக்க முடியாதது என வரையறுத்தது. விருப்பமின்றி வாழ்நாள் முழுவதும் திருமண பந்தந்தில் பெண்கள் சிக்கித் தவித்தனர். அதை உடைத்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு பெற்ற விவாகரத்து உரிமையும் பெண்களுக்கு இன்று எளிதாக எட்டுமளவிற்கு இல்லை. ஒரு பெண் விவாகரத்து செய்ய வேண்டுமெனில் அவள் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளை குடும்பத்திற்குள்ளேயே சந்நிக்க வேண்டும். பெரும்பாலும் அவை விவாகரத்து வரை செல்லாமல் குடும்ப மானத்தை காக்க அவளின் சுயமரியாதை அடகு வைக்கப்படும். மீண்டும் மீண்டும் அதே பந்தத்தில் தள்ளப்படுவாள். அடி, உதை, திட்டு மட்டுமில்லாமல் குடும்ப வன்முறை என்பது பாலியல் ரீதியாகவும் பெண்களை மிரட்டுகிறது. இங்கே பெண்கள் என்பது குழந்தைகளை உள்ளடக்கிய சொல் தான். அவர்களை பாலியல் ரீதியாக குடும்பம் சுரண்டுகிறது. சொந்தக் குடும்பம் என்பதால் இதை பெரிய பிரச்சனையாக்காமல் கடந்து செல்லும் கேவலங்களும் குடும்பத்தில் நிகழ்கிறது. மனைவியை கணவன் எப்போது வேண்டுமானலும் உறவுக்கு அழைக்கலாம். இங்கே “அழைத்தல்” என்பதை விட “வற்புறுத்துதல்” என்பதே பொருத்தமானதாக இருக்க முடியும். கணவன் செய்யும் வன்புணர்வு என்பது இங்கே குற்றமாக பார்க்கப்படுவதில்லை என்பதே இத்தனைக்கால பெண்ணுரிமைக்கு செய்யும் துரோகம். “என் கணவர் என்னை வன்புணர்ந்தார்” என் ஒரு பெண் சொன்னால் கேலியாக சிரித்துவிட்டுச் செல்லும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதெப்படி அது வன்புணர்வாகும். புணர்வை பெற்றோர்கள் பெரியோர்கள் சம்மதத்துடன் ஆசியுடன் செய்வதுதானே திருமணம். இதில் “வன்புணர்வு” என்ற சொல்லுக்கு இடமே இல்லையே என்பது தான் பெரும்பாண்மை சமூகத்தின் எண்ணமாக இருந்து வருகிறது. குடும்பங்களின் வன்முறையில் சிக்கி தூக்கிற்கிறையான கரிக்கட்டையான பெண்களின் பிணங்களின் மேல் மாற்றி எழுதப்பட்ட FIRகளின் வரலாறு அழிந்து விடாது.

தான் அன்பு செலுத்தும் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, கணவன் போன்றோரோ வார்த்தையாலும் உடலாலும் வன்முறை செய்கிறார்கள் என்றால் முன்பின் அறியாத ஆண் சமமாய் மதித்து மரியாதை தந்துவிடுவானா என்ன ?

உற்று நோக்குதல் (Starring):

பெண் என்றால் உற்றுநோக்கக் கூடிய “ஜவுளிக்கடை பொம்மைகள்” தான் ஆண்களின் எண்ணத்தில். ஜவுக்கடை பொம்மைமேல் கைவைத்தாலாவது அதன் உரிமையாளன் கோபப்பட்டு அறைய வருவான் ஆனால் பேருந்திகளிலும் நெரிசல்களிலும் இடித்துச் செல்லும் உரசிச்செல்லும் அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். இதை கடந்தால்தான் வாழ்வின் அடுத்த படிக்கு நகரமுடியுமென பெண்களும் இதனை கடந்துத் தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் புதுமைப்பெண்ணாக உருவெடுத்து காவல் நிலையத்திற்கு உரசுபவனை அடித்து இழுத்துச் சென்றால் அவர்களுக்கான நியாயம் எப்படி இருக்கும் என்பது சென்று வந்த பெண்களிடம் கேட்டால் புலப்படும். பின்புலம் கொண்ட பெண் என்றால் தான் அவர்களின் பேச்சே காவல் நிலையங்களில் எடுபடும். சராசரி பெண் என்றால் “கோபத்தை மனதிலும் கண்ணீரை விழியிலும்” சுமந்துக்கொண்டு வெளியேற வேண்டும். இங்கே சராசரி பெண்களின் கைகளுக்கு எட்டக்கூடியதாக எளிய முறையானதாக நம் புகார் நடைமுறைகள் இல்லை என்பதே உண்மை.

உற்று நோக்குவதே தவறு என்ற எண்ணம் இச்சமூக ஆணாகளிடம் இல்லை. பார்க்கவேண்டும் ஒரு பெண்ணை மேலருந்து கீழாக பிறகு கீழிருந்து மேலாக அப்புறம் இடமிருந்து வலமாக அடுத்து வலமிருந்து இடமாக குறுக்கெழுத்து போட்டி போல் பார்க்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில், கடைகளில், பயணத்தில், கல்லூரியில், பணி இடத்தில் என எல்லா இடங்களிலும் அவர்கள் பார்த்து இரசிக்க கிடைத்த பண்டமே பெண். இது தவறென அவர்களின் மூளைகளுக்கு எட்டவே எட்டாது. உற்று நோக்குதலின் அருவெறுப்பை பெண்கள் கடக்க பழகிக் கொண்டுதான் படி தாண்டுகிறார்கள்.

பின்தொடர்தல் (Stalking) :

உற்று நோக்குதல் (Starring) எப்படி ஒரு குற்றமாக பார்க்கப்படுவதில்லையோ அதே போல் பின்தொடர்தலும் (Stalking) ஒரு குற்றமாக பார்க்கப்படுவதில்லை. காதலின் படிநிலைகளில் ஒன்றாகத்தான் பின்தொடர்தல் பார்க்கப்படுகின்றது. “வேண்டாம்” என்று நிராகரித்த ஒரு பெண்ணை “பின்தொடர்ந்தால்” நிச்சயம் ஒரு நாள் அவள் ஏற்றுக் கொள்வாள் , காதலுக்கு சம்மதிப்பாள் என்ற மனநிலை எங்கிருந்து இவர்களுக்கு வருகிறதென்றால் அதற்கு மூலம் “திரைப்படங்கள்” தான். பெரும்பாலும் திரைப்படங்களில் கதாநாயகன்கள் நாயகிகளை பின்தொடர்ந்து தான் காதல் சம்மதம் பெறுகிறார்கள். இந்த மனநிலையில் வளரும் இளைஞர்கள் அதே மாயையில் பெண்களை பின் தொடர்கிறார்கள். அவர்கள் அதை மறுக்கும் பட்சத்தில் தங்களின் தாழ்வுமனப்பான்மை ஓங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை கையிலெடுக்கிறார்கள். ஆசிட் வீச்சு, கத்தியால் குத்துவது, பிளேடால் அறுப்பது இதோ இப்போது உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிப்பது என இந்த வன்முறைகளின் துவக்கம் பின் தொடர்தல் தான். இதனை ஒரு குற்றமாக பார்க்கும் மனநிலை சமூகத்திற்கு வர வேண்டும். காதல் என்பது ஒரு அன்பின் பறிமாற்றம் அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையும் விருப்பமும் உள்ளது. ஒருவரின் விருப்பமில்லாமல் காதலிக்க வற்புறுத்துவது வன்புணர்விற்கு சமம். தோல்விகளை ஏற்கப் பழகாமை, காதல் ஒருவர் மீது மட்டும் தான் வரும் என்ற பழங்கதை போன்றவை தான் இந்தக் காதல் வன்முறைக்கு முக்கிய காரணம். “அவள் என்னை நிராகரிக்க முடியாது. என்னை வேண்டாம் எனக் கூறும் உரிமையற்ற உயிரினம் அவள்” என்பது எவ்வளவு கேவலமான சிந்தனையாக இருக்க முடியும் !!

வன்புணர்வு (Rape) எனும் வன்முறை :

பெண்ணின் மீதான உட்சபட்ச வன்முறை “வன்புணர்வு” இதுவும் இன்றைய சூழலில் கடந்து போகக் கூடிய சாதாரண செய்தியாகிவிட்டது. இரும்பு ராட் சொருகிய வன்புணர்வு, கரும்பு சொருகிய வன்புணர்வு, வன்புணர்வுக்குப் பின் கொடூரான முறையில் கொலை போன்ற வித்யாசமான நடைமுறை மாற்றம் கொண்ட வன்புணர்வுதான் சமூகத்தின் கவனத்தையும் இழுக்கிறது.

வன்புணர்விற்கு நியாங்களும் இல்லாமல் இல்லை. “அவளின் ஆடை, அவளின் இரவுப் பயணம், அவள் நிராகரித்த என் காதல், அவளால் ஏமாற்றப்பட்ட நான்” இன்னும் எத்தனையோ நியாயங்கள். வன்புணர்வுக்குக் கூட பெண்ணைக் கைகாட்டும் கேவலம் படிந்த கரங்களை நாம் கடக்காமலில்லை. 6 மாத குழந்தை, 80 வயது பாட்டி என எந்தப் பெண்ணும் இதற்கு விதிவிலக்குமில்லை.

பெண் ஒரு போகப்பொருளா ? :

எங்கேயும் அவள் போகப் பொருளாகத் தான் பார்க்கப்படுகின்றாள். பணியிடத்தில், திரைப்படத்தில், விளம்பரத்தில் என எல்லா இடத்திலும். அவளின் அழகிற்காகத் தான் இந்தியாவில் எத்தனை வணிகம் நடக்கிறது ! உலகின் அழகு சாதனங்கள் ஏன் நம்மை நோக்கிப் படை எடுக்கின்றன. அவர்களின் முதலீடு எதற்காக நம்மை நோக்கி உள்ளது ? ஏனென்றால் நாம் தான் அழகே பெண்ணின் தகுதி என நினைக்கிறோம். அதுவே அவளின் குறிக்கோள் அதுவே அவளுக்கு அனைத்தையும் பெற்றுத் தருகிறது என்ற பிம்பத்தை வளர்க்கிறோம். சிவப்புத் தோல், நீளமான முடி, ஒல்லியான தேகம் இதன் பின்னால் போட்டிக் குதிரையென ஓட வைக்கிறோம். தோற்றக் குதிரைகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறோம். இந்த வணிகம் பெண்ணின் மீதுதான் தன் மூலதனத்தை நிறுத்தியுள்ளது. அவள் அறிவார்ந்து சிந்தித்து கொஞ்சம் நகர்ந்தாலும் வியாபார அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். அதனால் அவளை சிந்திக்கவிடாமல் சினிமா, சீரியல், விளம்பரங்கள் என அனைத்திலும் அவளுக்கான உடலமைப்பை அவர்கள் கவனமாக பதிவு செய்கிறார்கள்.

சமூக வளர்ச்சியில் பெண் :

படிப்படியாக பெண்கள் கடந்து வந்த கல்வி, வேலைவாய்ப்பு சிக்கல்கள் இன்றும் தீரவில்லை. மாதவிடாய் பற்றிய அறிவும் தெளிவும் இல்லாமல் அதை தீட்டென கருத்தும் சமூகத்தின் மிச்சமாய் வந்த ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அந்தச் சிறுமியும், ஒட்டுமொத்த அரசும் ஏமாற்றியதால் கடைசி முயற்சி என தூக்கை தழுவிய அனிதாவும் பெண்கல்வியின் பின்னடைவாகத்தான் தெரிகிறார்கள். “பெண் குழந்தைகள் படிகக்கச் சென்றால் இந்த நிலைமை தானோ ?” என யோசிக்க வைத்த இந்த மரணங்கள் பெண்கல்வியின் மீதான பின்னடைவன்றி வேறென்ன. ?

செங்கல் சூளையிலிருந்து கார்ப்பரேட் கம்பெனி வரை பணிபுரியும் பெண்களுக்கு ஆணுக்கு நிகரான ஊதியம் மறுக்கப்படுகின்றது. பாலியல் அத்துமீறல் மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பும் குன்றியுள்ளது. இந்த சவால்கள் மிகுந்த சமூகச் சூழலில் தான் பெண்கள் தங்கள் முட்பாதைகளை கடந்து சமூகத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டியுள்ளது. தங்களின் சுய வாழ்க்கையையே போராட்டமாக வாழும் பெண்களுக்கு நிச்சயமாகவே அரசியல் போராட்டம் நிகழ்த்த தெம்பும் நேரமும் இல்லாமல் தான் போகிறது. இவற்றைத் தாண்டி தெளிவும் மனவலிமையும் ஊட்டப்பட்ட வெகு சில பெண்களே இன்று சமூக அரசியல் களத்தில் நிற்கிறார்கள். அந்த வெகுசிலரையே அரும்பாடுபட்டு ஒடுக்கிக் கொண்டிருக்கிறது அரசு.

சமத்துவம் மெய்ப்பட சாயம் நீக்குவோம் :

பெண்ணை தனக்கு நிகரான உயிரனமாக மதிக்கத் தவறிய ஆண்களுக்கு பன்னெடுங்காலமான பண்பாட்டு வரலாறு காரணமாக இருக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு போனில் உலகை சுற்றும் தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்குப் பின்பும் பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் குழந்தை வளர்ப்பும் கல்வி முறையும் மாற்றப்பட வேண்டிய கட்டாய்த்தில் உள்ளோம். தந்தை பெரியார் “பெண் பிள்ளை பெற்கும் இயந்திர மல்ல” என்றார். அந்த தெளிவை சமூகத்தில் புகுத்திட வேண்டும். பெண் அனைத்து உணர்வுகளும் அடங்கிய புனிதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதாரண உயிரினம். இதை உலகின் செவிகளில் கல்வியால் மட்டுமே புகுத்திட வேண்டும். அதனால் தான் அத்தனை ஒடுக்குமுறைக்கும் நிரந்தர தீர்வாக “பாலியல் கல்வியைக்” கேட்கிறோம். ஆனால் சானிட்டரி நேபிகினுக்கு GST வரி விதிக்கும் அரசிடமிருந்து பதில் தான் வரவில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறைக்காகவும் பெண் உரிமைகளை காக்கவும் “பெண்ணியம்” எனும் வார்த்தை கேடயமாக பயன்டுத்தப்பட்டு வருகிறது. பெண்ணியத்தை கெட்ட வார்த்தையாக சித்தரிக்கும் சமூகம் பெண்ணியவாதிகளை வேற்று கிரகவாசிகளைப்போல் பார்க்கவும் தவறவில்லை. எங்களின் பொது எதிரி ஆண்கள் அல்ல, ஆணாதிக்கம் மட்டும் தான். ஆணும் பெண்ணும் இணைந்து கரம் கோர்த்து கட்டி எழுப்பும் சமூகமே சமத்துவத்தை தாங்கி நிற்கும். பாலின சமத்துவம் என்பது என்றுமே எட்டாக்கனியல்ல. நாம் நிச்சயம் சுவாசிக்கப்போகும் சுதந்திரக்காற்று. அதை நோக்கிப் பயணிப்போம். சமத்துவச்
சாயங்களை நீக்கி சமத்துவம் மெய்திட களமாடுவோம்.

-உ.திலகவதி, B.tech, B.A, L.L.B
சட்டக் கல்லூரி மாணவி,
காவேரிப்பாக்கம்.