பிரிவு வாரியான பதிவுகள்: கட்டுரைகள்

திருநங்கை தாராவிற்கு நீதி வேண்டி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய கண்டன ஆர்பாட்டம் சிறப்புற நடைபெற்றது.

திருநங்கை தாராவிற்கு நீதி வேண்டி சென்ற 04.12.2016 ஞாயிறு அன்று வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய கண்டன ஆர்பாட்டம் சிறப்புற நடைபெற்றது.

தோழர் தி.சுதாகாந்தி தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார். தோழர் தமிழ்க் கதிர் அனைவரையும் வரவேற்றார். பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி தொடக்க உரையாற்றினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், உரிமைத் தமிழ்த் தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநிலச் செயலாளர் பி.பத்மாவதி, மதிமுக தீர்மானக் குழுச் செயலாளர் இரா.அந்திரிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை விளக்க அணிச் செயலாளர் பெரியார் சரவணன், கவிஞர் சல்மா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சுரேஷ், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் செள.சுந்தரமூர்த்தி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் செயப்பிரகாசு நாராயணன், மனிதி அர்ச்சனா, மையம் கலைக் குழு மனோஜ் லியான்சன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் மா.சுப்ரமணி, திருநங்கை தோழர் துர்கா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இயக்குநர் ராம் போராட்டத்தில் பங்கேற்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

தோழர் சு.மோகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

திருநங்கைகள் வாழ்வுரிமைக்காக ஒன்றுபடுவோம்..!

அன்பிற்குரியீர்!

வணக்கம்,

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என வரையறுத்துச் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது உச்ச நீதி மன்றம்.
சாதி மத ஏற்றதாழ்வுகளை நீக்கச் சட்டம் என்ன சொன்னாலும் சமூக நடைமுறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்பதை அறிவோம். அதைப் போலவே திருநங்கைகளுக்கான சமூக மதிப்பைச் சட்டம் உறுதி செய்தாலும், அது சமூக உளவியலில் ஊடுருவி நிலை பெறவே இல்லை . தாராவின் மரணம், அது குறித்துச் சமூகத்தில் நிலவும் மெளனம், திருநங்கைகள் மீது தொடரும் காவல் துறை அடக்குமுறை, அது குறித்தும் சமூகத்திலிருந்து புறப்படாத கேள்விகள்… திருநங்கைகள் குறித்த சமூகத்தின் உளவியலுக்குச் சான்று.

முதல் காரணியாக இந்தச் சமூகப் புறக்கணிப்புதான் குடும்பம், கல்வி, வேலை அனைத்திலிருந்தும்
அவர்களை அடியோடு புறக்கணித்து வைத்துள்ளது.
இந்த நிலையை மாற்ற எவ்வித முயற்சியும் செய்யாமலேயே திருநங்கைகள் பொருளீட்டும் முறைகளை மட்டும் குற்றமாய்க் கருதும் தகுதி நமக்கில்லாமல் போகிறது.

எர்ணாவூர் அரசுக் குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை தாரா அவர்கள் 9.11.2016ஆம் நாள் அதிகாலை இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பாண்டி பஜார் காவலர்களால் தடுக்கப்பட்டு வண்டியும் அலைபேசியும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதை மீட்கச் செல்லும் தாராவை காவலர்கள் தரக்குறைவாகவும் பிறப்பைச் சொல்லியும் நாக்கூசம் வார்த்தைகளால் மிரட்டுகின்றனர்.

அலைபேசியையாவது தாருங்கள் என வலியுறுத்தியும் வன்மத்தோடு தர மறுக்கின்றனர். இயலாமையின் வெளிப்பாடாகத் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்கிறார் தாரா. அதைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதையும் நிறுத்தாத போது, தன்னைத் தானே எரித்துக் கொள்வேன் நீங்களெல்லாம் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார். இதுவரைக்கும் காணொளிக் காட்சி ஆதாரமாய் உள்ளது. கழுத்தைக் கண்முன்னே அறுத்துக் கொண்டதன் பிறகு தாரா தீப்பிடித்துக் கருகி மாண்டுபோகிறார். அப்படியானால் கழுத்தறுபட்டதற்கும் தீப்பிடித்ததற்கும் இடையில் என்ன நடந்தது? இது குறித்த உண்மைகளுக்கு முகம் கொடுக்க காவல்துறை மறுத்து வருகிறது.

தாராவின் இழப்பில் உள்ள சந்தேகங்களால் திருநங்கைகள் ஆணையர் அலுவலகத்திற்கு முறையிடச் சென்ற போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை செவிமடுக்கவும் காவல்துறை முன்வரவில்லை. தடியடிக்குப் பிறகு இப்போது வரை காவல்துறை திருநங்கைகளை அச்சம் மிகுந்த சூழலிலேயே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிந்து போன உடலை எடுப்பதற்கு முன்னால் உடலைச் சுற்றி காவல்துறையால் மார்க் இடப்படவில்லை. கழுத்தறுத்துக் கொள்வது வரை காணொளி வைத்துள்ள காவல்துறை அதற்கு மேல் பதிவுகள் இல்லை எனச் சொல்கிறது. கண்காணிப்புக் காணொளி, அதுவும் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒழுங்காகச் செயல்படவில்லை எனச் சொல்வதெல்லாம்
நமக்கு அவர்கள் மீது பலத்த சந்தேகங்களையே எழுப்புகிறது.

தாரா வண்டி காவல்துறையால் பறிமுதல் செய்யப்படுகிறது. தவறு இருந்தால் சட்டப்படி உரிய கண்ணியத்தோடு நடவடிக்கை எடுப்பதை மறுக்கவில்லை. ஆனால் அலைபேசியைப் பறிப்பதற்கு என்ன தேவை வந்தது என்பதற்கு காவலர்களால் எந்த விளக்கமும் தர இயலவில்லை.

காவல் நிலையத்தில் தாரா திரும்பத் திரும்பக் கேட்டது அலைபேசியை மட்டுமாவது திருப்பித் தாருங்கள் என்பதுதான். தந்திருந்தால் தாரா இன்று நம்மோடு இருந்திருப்பார்.

எல்லாவற்றையும் விட தாராவின் அழுகுரலைக் கல்மனம் கொண்டு அலட்சியப்படுத்தியது காவல்துறையின் மனிதத்தன்மையற்ற வக்கிரப் போக்கு. தாழ்த்தப்பட்டவனின் வாயில் மலம் திணிக்கும் ஆதிக்கச் சாதி வெறியனின் உளவியல்தான் திருநங்கைகள் தொடர்பாக காவல்துறையிடம் செயல்படுகிறது.

உரிய காரணங்களோடு எத்தனை நூற்றுக்கணக்கான வண்டிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. எல்லோரையும் போல தாரா காவல்துறையால் நடத்தப்படவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த உயிருக்கு இன்று யாரும் பொறுப்பில்லை எனக் கடந்து போவது அறமும் அல்ல, மனிதமும் அல்ல.

தாராவுக்கு நீதி கேட்போம். அது ஒட்டுமொத்தத் திருநங்கைகளுக்குக் கிடைக்க வேண்டிய நீதியின் தொடக்கமாய் அமையட்டும்.

மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. சாலையில் மக்கள் திரண்டு நின்று உரை கேட்டனர். தோழர் ஜீவாவின் கடைக்குள் நிகழ்வை நடத்தினோம். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் மக்கள் திரண்டு நிற்பதைத் தடுக்க இயலவில்லை காவல் துறையால். நம் இடம் என்பதால் ஒலிபெருக்கி வைப்பதையும் தடுக்க முடியவில்லை.

தோழர் தமிழ்க் கதிர் தொடக்கவுரையாற்றினார். தோழர் சு.மோகன் அனைவரையும் வரவேற்றார். உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தி.சிவராஜ், நெல்லை பீட்டர், சுயமரியாதை மாணவர் இயக்கம் மனோஜ், தமிழ்நாடு மாணவர் நடுவம் பிரிட்டோ உரையாற்றினர். இறுதியாகத் தோழர் பாரதி காவல்துறை சனநாயக விரோதத்தை கடுமையாகச் சாடியும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் உரையாற்றினர்.
பேசப் பேச மக்கள் கூடினர். உடனே ஒலிபெருக்கியை அணைத்துவிட்டு உரையாற்றக் கோரினார் கிண்டி ஆய்வாளர் மகிமை வீரன். எங்கள் சொந்த இடம் அது. அப்படிச் செய்தால் நாங்கள் அப்படியே சாலை மறியலில் ஈடுபடுவோம் முடிந்ததைச் செய்யுங்கள் என்று ஒலிபெருக்கியிலேயே அறிவித்தோம். பிறகு எந்தப் பேச்சும் இல்லை. சுடரேந்தினோம். முழக்கமிட்டோம். காவலர்கள் குவிதுகிடந்ததாலேயே நல்ல பரபரப்பு. மக்கள் வந்து மலர்தூவி வணக்கம் செலுத்தி படம் எடுத்துக் கொண்டனர்.
காவல்துறையை அம்பலப்படுத்தினோம். விடுதலை விதைத்தோம்.
இறுதியாகத் தோழர்’ தமிழ்மில்லர் நன்றி தெரிவித்தார்.

கிண்டி காவல்துறையின் சனநாயகக் கொலை – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த துணிவோடு அணிவகுப்போம்.

அன்பிற்குரியீர்!
வணக்கம். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மாவீரர் நாள் நிகழ்வு நடத்தும் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகர் முதன்மைச் சாலை முழுதும் காக்கிக் கூட்டம் குவிந்துள்ளது. அந்த இடமே காவலர்களால் நிறைக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் மாவீரர்ளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பதாகை தலைவர் பிரபாகரன் படம் கொண்டு வைக்கத் தடை போடுவது சனநாயகக் கொலை! அதுவும் நாம் வைக்க இருப்பது சொந்த இடத்தில்தானே தவிர பொது இடத்தில் அல்ல.

நம்மை அச்சமூட்டிப் பணிய வைக்க விரும்புகிறார்கள். மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துபவர்களைக் கோழைகளாய்க் கருதுகிறார்கள். இது நமது உரிமை. இந்த அடிப்படை உரிமையை மிதிக்கும் கிண்டி காவல்துறையின் அடக்குமுறையை அம்பலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது.

கிண்டி இணை ஆணையர் சங்கரலிங்கம், ஆய்வாளர் மகிமை வீரன் ஆகியோர் அடக்குமுறை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகக் காவல்துறையின் சனநாயக மறுப்பை அம்பலப்படுத்தும் முதல் தொடக்கமாக மாலை மாவீரர் நிகழ்வு நடைபெறும்.

என் வீட்டில் எங்கள் மூதாதையர்க்கு வணக்கம் செலுத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது. இடைக்கால நெருக்கடி நிலையைத் தோற்றுவித்திருக்கும் காவல்துறைக்கு அஞ்சாது அணிதிரள்வோம்.

வே.பாரதி
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

நவம்பர் 29 ஆம் நாள் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய மாவீரர் நாள் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் அறிக்கை.

மாவீரர் நாள் அறிக்கை
(2015 நவம்பர் 27)
[தமிழீழ விடுதலைப் போரில் களமாடி வீரச் சாவடைந்த பல்லாயிரம் மாவீரர்களையும், இன அழிப்புக்கு ஆளாகி உயிரிழந்த இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ மக்களையும் போற்றி வணங்கி, இந்த அறிக்கையை தமிழ் மக்கள்முன் பணிந்தளிக்கிறோம்.]
1. தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை. ஈழத் தமிழ் மக்களுக்கெதிரான தேசிய ஒடுக்குமுறைக்குத் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு. இலங்கைத்தீவு சிங்களர், தமிழர் ஆகிய இரு தேசிய இனங்களின் தாயகங்களை உள்ளடக்கியது. தீர்வு நோக்கிய முதலடியே ஈழத் தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படை உண்மையை அறிந்தேற்பதுதான். இலங்கையை ஒரே தேசமாகக் கொண்டு சிங்களர் பெரும்பான்மை, தமிழர் சிறுபான்மை என்ற முறையில் தமிழர் இனச் சிக்கலை சிறுபான்மையினச் சிக்கலாக அணுகுவது தமிழனத்தின் மீதான தேசிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவே பயன்படும். தேசிய இனங்களின் நிகர்மை (சமத்துவம்), தன்தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) என்ற அடிப்படையில் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழம் விடுதலை பெறுவது ஒன்றே சரியான சனநாயகத் தீர்வாக அமையும். கடந்த கால வரலாற்றுப் பட்டறிவும் இந்த உண்மையையே உணர்த்தி நிற்கிறது.
2. சிறிலங்காகுடியரசின் அரசமைப்புச் சட்டம், இறுதி நோக்கில், தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறையின் சட்ட வடிவமே தவிர வேறன்று. இந்த அரசமைப்பை நாடாளுமன்ற வழிமுறைகளில் திருத்தம் செய்து, ஈரின நிகர்மையையும் தமிழினத்தின் தன்தீர்வுரிமையையும் அறிந்தேற்கச் செய்யவோ, அல்லது ஒற்றையாட்சி முறைமையைக் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமையாக மாற்றவோ வாய்ப்பே இல்லை. இந்நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது ஒற்றையாட்சி இலங்கைக்குள் தீர்வு என்றே பொருள்படும். மேற்பூச்சான மாற்றங்கள் வாயிலாக ஒற்றையாட்சி அடிப்படையைத் தக்க வைத்துக் கொண்டே கூட்டாட்சி வேடம் தரிக்கும் முயற்சிகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இவ்வாறான ஏமாற்று வேலைகளுக்கு இந்திய அரசமைப்பே போதிய சான்றாக உள்ளது. தமிழினத்தின் தன்தீர்வுரிமையை சிறிலங்கா ஏற்கச் செய்வதோ இலங்கைக்குள் கூட்டாட்சி காண்பதோ அல்ல, தமிழீழத் தனியரசு வாயிலாகத் தேசிய விடுதலை பெறுவதே தமிழீழ மக்கள் போராட்டத்தின் இறுதிக் குறிக்கோளாக இருக்க இயலும். கூட்டாட்சிதான் நோக்கம் என்றாலும் கூட, அது விடுதலைக்குப் பிறகு வரக் கூடுமே தவிர விடுதலைக்கு மாற்றாக அன்று. தமிழீழ மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976) தொடங்கிப் பல முறை பல வழிகளிலும் விடுதலையே தங்கள் அரசியல் பெருவிருப்பு என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். விட்டுக்கொடுக்கவியலாத இந்தக் குறிக்கோளை எக்காரணத்தை முன்னிட்டு விட்டுக்கொடுத்தாலும் அது தமிழீழ மக்களுக்குச் செய்யும் இரண்டகமாகவே இருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் துணைநிற்கும் தேசியக் கடமை தமிழினத்தின் முதல் தாயகமாகிய தமிழகத்து மக்களைச் சாரும்.
3. இலங்கையின் வடக்கும் கிழக்குமாகிய தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமாக ஈழத் தமிழ்த் தேசிய இனம் பிரிந்து கிடந்தாலும், தமிழீழ விடுதலை எனும் அடிப்படைக் குறிக்கோளில் ஒன்றுபட்டே உள்ளது. தாயகத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் முன்னெடுக்கும் விடுதலைப் போராட்டத்தில் முதற்பெரும் தோழமை தமிழகத் தமிழ் மக்களே என்ற அடிப்படைப் புரிதல் தேவை. தமிழீழத் தாயகத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் தமிழீழ மக்கள் விடுதலைப் போராட்டத்தின் மும்முனைகள் என்று கருதத் தகும். இந்தப் புரிதலோடு உலகளாவிய நட்பாற்றல்களையும் இனங்கண்டு அணிசேர்க்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
4. இலங்கைத் தீவின் முதன்மை முரண்பாடு என்பது சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையிலானது. இம்முரண்பாட்டைத் தீர்க்கும் ஒரே வழி தமிழீழ விடுதலைதான். தெற்காசியப் பிற்போக்கின் அரண் என்ற வகையில் இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசின் நெருங்கிய கூட்டாளியாகவும் தமிழீழத்துக்கு எதிராளியாகவும் தொடர்ந்து செயல்படுகிறது. 1985 இந்திய-இலங்கை உடன்படிக்கையையும், அதையொட்டிய இந்தியப் படையெடுப்பையும், தமிழீழத்தில் அப்படை நிகழ்த்திய கொடுமைகளையும், இன அழிப்புப் போரில் அது சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உதவியாக, உடந்தையாக இருந்ததையும், இன்றளவும் தமிழீழ மக்களுக்கு ஈடுசெய் நீதி கிட்டாமற்செய்வதில் அது வகிக்கும் பங்கையும், தமிழகத்தில் தமிழீழ ஏதிலியரை மோசமாக நடத்துவதையும், தமிழீழ மக்களுக்குத் துணைநிற்க தமிழக மக்களுக்குள்ள சனநாயக உரிமையை மறுப்பதையும் தமிழீழ மக்களுக்குப் பகையான நிலைப்பாடுகள் என்றுதான் வரையறுக்க முடியும். எனவே பேருத்தி நோக்கில் இந்திய அரசை நட்பாகக் கருதும் நயத்தற்கொள்கை (APPEASEMENT POLICY)பயன்தராது.
5. தேசிய ஒடுக்குமுறையையும் மக்களினங்களிடையிலான ஏற்றத்தாழ்வையும் உலகளாவிய உழைப்புச் சுரண்டலையும் அடிப்படைகளாகக் கொண்ட இன்றைய உலக ஒழுங்கைக் காக்கத் துடிக்கும் அமெரிக்கா முதலான வல்லாதிக்கங்களும் அடிப்படையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவேசெயல்படக் காண்கிறோம். மக்கள்-போராட்டங்களுக்கு மாற்றாக புவிசார் அரசியல் சதுரங்கத்தில் திறம்படக் காய் நகர்த்தியே வல்லாதிக்கங்களை நமக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளும் முயற்சி வீண். அரசியலுக்கு அரசதந்திரம் துணையாகக் கூடுமே தவிர, மாற்றாகாது. இந்த அடிப்படைப் பார்வையைத் தெளிவாக வரித்துக் கொண்டு முதற்பகையைத் தனிமைப்படுத்தவும் அடுத்த நிலைகளில் இருக்கும் பகைகளை இயன்ற வரை செயலிழக்கச் செய்யவும், நட்பாற்றல்களை உடன்சேர்த்துக் கொள்ளவுமான உத்திகளைக் கைகொள்ள முயல்வதே தமிழீழப் போராட்ட ஆற்றல்கள் முன்னுள்ள வழி.
6. முள்ளிவாய்க்கால் (2009 மே) முழுப்பேரழிவு தமிழீழ விடுதலைக்கான தேவையை உறுதி செய்துஉயர்த்தியுள்ளதே தவிர, ஒழித்து விடவோ தணித்து விடவோ இல்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை ஆற்றலாகிய தமிழீழ மக்களை –- தாயகத்தில் மட்டுமன்று, ஓரளவு புலம்பெயர் உலகிலும் கூட– நம்பிக்கைக் குலைவுக்கு ஆளாக்கிக் கொடுஞ்சோர்வுக்குள் அமிழ்த்தி விட்டது முள்ளிவாய்க்கால் என்பதே மெய். விடுதலைத் தேவையின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கான ஆற்றலின் சிதைவுக்கும் இடையிலான முரண்பாட்டைக் களைவது எப்படி? முதற்களமாகிய தாயகத்தில் மக்கள் போராட்டத்துக்கான சனநாயக வெளியைத் தோற்றுவிக்கவும் விரிவாக்கவும் வேண்டும். இந்த வகையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பணி முகாமையானதாகிறது.
7. தமிழீழ மக்கள் மீதான இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்களுக்கு நீதி கோரும் போராட்டம் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் அறநெறி சார்ந்தும் இன்றியமையாத ஒன்று என்பது மட்டுமன்று, அதுவே விடுதலைப் போராட்டத்தைக் காத்து முன்னெடுப்பதற்கான வழியாகவும் அமைந்துள்ளது. நீதிப் போராட்டம் விடுதலைப் போராட்டத்தின் இன்றைய படிநிலை என்றே சொல்லத்தகும். நீதியின் நிறைவாக்கம் விடுதலையாகக் கனியும் என்றும் சொல்லலாம்.
8. முள்ளிவாய்க்கால் தமிழீழ மக்களின் படையாற்றலைச் சிதைத்து விட்டது என்னும் போதே, அது அவர்களின் அற வலிமையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த அற வலிமையை அரசியல் வலிமையாகப்பெயர்க்கக் கூடிய உள்ளாற்றல் நீதிக்கான போராட்டத்துக்கு உண்டு.
9. கடந்த ஆறாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டம் மிகக் கடுமையான தடைகளை எல்லாம் மீறி உறுதியாக முன்னேறி வருகிறது. தாயகம், புலம்பெயர் உலகம், தமிழகம் ஆகிய மும்முனைகளிலும் நடந்துள்ள போராட்டங்களும் பிற வகை முயற்சிகளுமே இம்முன்னேற்றத்துக்கு அடிப்படை. பன்னாட்டு சனநாயக, மனிதவுரிமை ஆற்றல்களின் முயற்சிகளையும் இந்தக் காரணிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐநா பொதுச் செயலர் அமைத்த மூவல்லுனர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கான கோரிக்கை வலுப்பெற்றது. இந்தக் கோரிக்கையும், தொடர்ந்து வரும் கட்டமைப்பியல் இனகொலைக்கு எதிரான பாதுகாப்புப் பொறியமைவு, தமிழீழ மக்களின் அரசியல் வருங்காலத்தைத் தீர்வு செய்வதற்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளும் சேர்ந்து தமிழ் மக்களின் ஒருமித்த நீதிக் கோரிக்கைகளாக மலர்ந்தன.
10. கடந்த 2009, 2012, 2013, 2014 ஐநா மனித உரிமை மன்றத்தில் இயற்றப்பட தீர்மானங்கள், அவற்றின் மீது நடந்த வாக்கெடுப்புகள், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்ந்து பார்த்தால், சிங்கள அரசின் அடாவடித்தனமும், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் சூழ்ச்சித்தனமும் மட்டுமல்ல, நம்நீதிப் போராட்டத்தின் நல்ல தாக்கங்களும்புலப்படும். இந்தப் போராட்டத்தில் தமிழீழத் தமிழர்களோடும், புலம்பெயர் தமிழர்களோடும் சேர்ந்து தமிழகத் தமிழர்கள் (மாணவர்களும் மக்களும்) வகித்துள்ள பங்கு பெருமைக்குரியது.
11. காலம் அழைத்து வந்துள்ள மாற்றங்களைக் கைக்கொள்ளாமல்,எல்லாவற்றையும் புவிசார் அரசியல் சூழ்ச்சி என்றும், உலக வல்லாதிக்கங்கள் நடத்தும் பொம்மலாட்டம் என்றும் ஒரேயடியாக மறுதலிப்பது மக்கள் போராட்டங்களுக்கும் சனநாயக – மனிதவுரிமை ஆற்றல்களின் முயற்சிகளுக்கும் உள்ள பங்கை மறுப்பதாகும். இப்படி எல்லாவற்றையும் எதிர்வகையாகவே பார்க்கிற இன்மைநோக்கினர் (NIHILISTS) தன்னம்பிக்கை இல்லாதவர்கள். இவர்கள் தாங்களே தங்கள் முயற்சிகளையும் போராட்டங்களையும் நம்பாதவர்கள் என்றாகும்.கடந்த 2014 மார்ச்சு மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் பத்தாம் பத்தி குறித்திட்ட முன்னோக்கிய அந்த ஓரடிதான் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் மனித உரிமைப் புலனாய்வுக்கு (OISL) வழிவகுத்தது. இந்தப் புலனாய்வும், 2015 செப்டெம்பரில் வெளியிடப்பட்ட உறுதியான அச்சாரமாகக் கூடிய ஓர் இடைக்கால வெற்றியைக் குறிக்கும்.இது நீதியும் விடுதலையும் நோக்கிய நம் நெடும்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்.
12. ஐநாவின் ஊடாகக் கிடைத்த இந்தச் சிறிய — உளிபோல் சிறிய — வெற்றியை அடாத முறையில் நம்மிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சிதான் 2015 அக்டோபரில் அமெரிக்கா இலங்கையோடும் இந்தியாவோடும் சேர்ந்து மனித உரிமை மன்றத்தில் எதிர்ப்பின்றி இயற்றிக் கொண்ட தீர்மானம். தமிழ் மக்கள் மீது ஐநா வழியாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிற அரசுகளும் திணித்துள்ள இத்தீர்மானத்தையும் மீறி –ஒருவகையில் இத்தீர்மானத்தின் ஊடாகவும் கூட — நீதிக்கான போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவையுள்ளது. மூவல்லுனர் குழு அறிக்கை என்பது தற்சார்பான பன்னாட்டு நீதி விசாரணையைக் குறிக்கும், ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு என்பது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் குறிக்கும். அடுத்து நடைபெற வேண்டியது தற்சார்பான பன்னாட்டு உசாவல். இதற்குரிய பன்னாட்டு நீதிபொறிமுறை என்பது அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமாகவோ, ஐநா அமர்த்திடும் தனித் தீர்ப்பாயமாகவோ இருக்கலாம். இலங்கை அரசே அமைக்கும் நீதிப் பொறிமுறை உள்நாட்டுப் பொறிமுறை என்றாலும் கலப்புப் பொறிமுறை என்றாலும் குற்றஞ்சாட்டப்பட்டவரே தீர்ப்பாளர் ஆவதாகத் தான் அமையும்.
13. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் -– மகிந்த ராசபட்சே தோற்று மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் ரணில் விக்கிரமசிங்கா தலையமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் – தமிழ் மக்களின் பங்கு முகாமையானது என்றாலும், அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மை ஏதும் கிட்டவில்லை. எளிதில் நடந்திருக்க வேண்டிய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கூட படுமோசமாக இழுத்தடிக்கப்பட்டு, இன்னும் அரைகுறை கால்குறை கூட நிறைவேறவில்லை. நடந்தது உள்நாட்டுப் போர், அது முடிந்து சிறிலங்கா இப்போது நாடுவது நல்லிணக்கம் என்பது உண்மையானால், தமிழ் அரசியல் கைதிகளைப் போர்க்கைதிகளாகக் கருதி போர் முடிந்தவுடனே விடுதலை செய்திருக்க வேண்டும். இராணுவம் பறித்த தமிழர் காணியில் சிறிதளவே மீளத் தரப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெரும்படியாகக் கால்பரப்பி நிற்கிறது. தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கும் கெடுமுயற்சிகள் தொடர்கின்றன. கடந்த காலத்திய படுகொலைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் மீது ஒப்புக்கும் உலகப் பார்வைக்கும் சிற்சில தளைப்படுத்தல்களும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நீதியின் தேவைகளுக்கு இவை கிஞ்சிற்றும் ஈடாக மாட்டா.
14. இந்நிலையில் தற்சார்பான பன்னாட்டு நீதிப் பொறிமுறைக்கான போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டத்தில் தமிழக இயக்கங்கள், கட்சிகள் ஒத்த நிலைப்பாட்டில் நிற்பது ஆறுதல் அளிக்கக்கூடியது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பெருந்திரளாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறாமலிருப்பது பெருங்குறை ஆகும். 2009க்கு முன் இயங்கி வந்தது போன்ற கூட்டமைப்புகள் இப்போது இல்லை. கூட்டியக்கங்கள் நடந்தாலும் அவ்வப்போது கூடிக் களைந்து விடுகின்றன. கொள்கை சார்ந்த கூட்டுப் புரிதலின் அடிப்படையில் தொடர்ச்சியான கூட்டியக்கங்கள் நடத்துவதற்கு ஒரு கூட்டமைப்பு தேவைப்படுகிறது.
15. தமிழீழ விடுதலைதான் தீர்வு, அதற்கான போராட்டத்துக்குத் துணை நிற்பது, தாயகத்திலும் புலம்பெயர் உலகிலும் இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடும் அமைப்புகளோடு தோழமை, நீதிக்கான போராட்டத்தில் பன்னாட்டுப் புலனாய்வு – பன்னாட்டு உசாவல் என்ற கோரிக்கைகளிலும், அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கையிலும் விட்டுக்கொடாமை, இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், சிங்கள அரசைத் தனிமைப்படுத்தித் தமிழீழ மக்களின் சனநாயக வெளியை விரிவாக்கவும் “இலங்கையைப் புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தை ஒரு பேருத்தியாக முன்னெடுத்தல், தமிழக, இந்திய அரசியல் போக்குகளால் சிதைவுறாமல் தமிழீழ ஆதரவுக்கான செயலொற்றுமையைப் பாதுகாத்தல், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அல்லலுறும் தமிழீழ ஏதிலியரின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களை நீதிக்கும் விடுதலைக்குமான போராட்ட ஆற்றலாக வழிப்படுத்தல் ஆகிய அடிப்படைகளில் ‘தமிழீழ ஆதரவுத் தமிழகக் கூட்டமைப்பு’ ஒன்றைக் கட்டுவது உடனடித் தேவை. அந்தந்த அமைப்புக்கும் தனிமனிதருக்கும் தற்சார்பாக இயங்கும் உரிமையை மறுக்காமலே, தமிழீழ ஆதரவுக் கொள்கை சார்ந்து கூடிச் செயல்படும் கடமையைச் செய்வதாக இந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப முன்வருமாறு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் இந்த மாவீரர் நாளில் அழைக்கிறோம். உலகத் தமிழர் வேட்கை தமிழீழ விடுதலை!
தியாகு, 2015 நவம்பர் 25.

ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை

இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக –

திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை” எனும் தலைப்பிலான கருத்தரங்கில்  தமிழீழ மக்களின் இன்றைய நீதிப் போராட்டத்தில் தோழமை கொண்டுள்ள தமிழக இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுகிறோம்.

1)      கடந்த 2014 மார்ச்சில் ஐநா மனித உரிமை மன்றம் இயற்றிய தீர்மானத்தின் படி அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையை மனித உரிமை மன்ற உயர் ஆணையர் திரு சையது ராத் அல் உசைன் கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் வெளியிட்டுள்ளார். சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசுக்கு எதிராக நாம் இதுகாறும் கூறி வந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தக்க சான்றுகள் இருப்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம். சட்டப் புறம்பான கொலைகள், வெள்ளை வேன் கடத்தல், சித்திரவதை, ஆண் பெண் இருபாலருக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை, உணவும் மருந்தும் கிடைக்க விடாமல் தடுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள்வழி மனித உரிமை மீறல், உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களைத் தமிழர் என்ற இன அடையாளத்திற்காகவே முகாம்களில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துதல், பாதுகாப்பு வளையங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் ஆகிய கொடுஞ்குற்றங்களில் சிறிலங்கா அரசும் படையினரும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டுவதோடு, இந்தக் குற்றங்களை அமைப்புசார் குற்றங்கள் என்றும் புலனாய்வு அறிக்கை வகைப்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம்.

2)      எந்த மன்றத்தில் இலங்கை அரசு போர் நடத்திய விதத்தைப் பாராட்டிக் கடந்த 2009 மே மாதம் தீர்மானம் இயற்றப்பட்டதோ, அதே மன்றத்தில் இலங்கை அரசு போர்க்குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் புரிந்திருப்பதாகச் சொல்லும் அறிக்கை இப்போது முன்வைக்கப்பட்டிருப்பது உலகத் தமிழர்களின் அயரா உழைப்புக்கும் உறுதியான போராட்டத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி என்று உணர்கிறோம். எமது முயற்சிக்குத் துணைநின்ற உலகளாவிய மனித உரிமை ஆற்றல்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வல்லரசுகளின் புவிசார் அரசியல் சூதாட்டங்களை எல்லாம் மீறி, டப்ளின் தீர்ப்பாயம், ஐநா மூவல்லுனர் குழு, சார்லஸ் பெற்றியின் ஐநா உள்ளகத் தணிக்கை, அப்போதைய மனித உரிமை மன்ற உயர் ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை, பிரேமன் தீர்ப்பாயம் … இவை எல்லாம் பாதை அமைத்துக் கொடுக்க, எமது நீதிக்கான பயணத்தில் இந்த மைல் கல்லை அடைந்துள்ளோம் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

3)      நடந்திருப்பவை அமைப்புசார் குற்றங்கள், அதிகாரப் படிவரிசையில் இருப்பவர்கள் செய்த குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டு நோக்குடன் செய்த குற்றங்கள் என்றெல்லாம் புலனாய்வு அறிக்கை அறுதியிட்டுரைப்பது இலங்கையில் நடந்ததும் நடப்பதும் தமிழினப் படுகொலை என்பதையே காட்டுவதாக நம்புகிறோம். இனக்கொலைக் குற்றம் நடந்துள்ளது என்று புலனாய்வு அறிக்கை வரையறுக்காமல் விட்டது ஒரு குறைதான் என்றாலும், இனக்கொலை என்பதை இவ்வறிக்கை மறுக்கவில்லை என்பதும், அப்படி வரையறுப்பதற்கு மேலும் புலனாய்வு தேவை என்று உயர் ஆணையர் கூறியிருப்பதும் இந்த அறிக்கையின் அடிப்படையில் நாம் தொடர வேண்டிய நீதிப் போராட்டத்துக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்.

4)      சாட்சிகளுக்குப் பாதுகாப்பின்மை, பெருமளவிலான சர்வதேசச் சட்ட மீறல் குற்றங்களை விசாரிப்பதற்கு இலங்கையில் சட்டதிட்டங்கள் இல்லாமை, இலங்கை நீதிக் கட்டமைப்பின் நம்பகத் தன்மையற்ற நிலை ஆகிய காரணங்களால் உள்நாட்டு நீதிப் பொறிமுறை போதாது என்று கூறி சிறிலங்கா அரசின் கோரிக்கையை ஐநா மனித உரிமை மன்ற உயர் ஆணையர் மறுதலித்திருப்பதை வரவேற்கிறோம். அதே போது இதற்கென்று தனியாக ஒரு கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு சிறிலங்காவைக் கேட்டுக்கொள்ளும் உயர் ஆணையரின் நிலைப்பாட்டை ஏற்பதற்கில்லை. நடந்துள்ள மனித உரிமைப் புலனாய்வைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வு செய்வதற்கும், குற்றவியல் நீதிமன்றத்தில் உசாவல் (வழக்கு விசாரணை) நடத்துவதற்கும் பன்னாட்டுப் பொறிமுறைதான் தேவை, அது அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமாகவோ, இலங்கை தொடர்பான தனித் தீர்ப்பாயமாகவோ இருக்கலாம். பன்னாட்டு நீதிப் பொறிமுறைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாக முன்னெடுப்பது தவிர உலகத் தமிழினத்துக்கு வேறு வழி இல்லை என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

5)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வுக்கு எவ்வகையிலும் ஒத்துழைக்காத சிறிலங்கா அரசிடமே கலப்பு நீதிமன்றம் அமைக்கும் பொறுப்பைத் தருவது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போன்ற நிலைப்பாடே தவிர வேறன்று. இலங்கை சொல்லும் உள்நாட்டுப் பொறிமுறைக்கும், உயர் ஆணையர் அவ்வரசின் பொறுப்பில் அமைக்கச் சொல்லும் கலப்புப் பொறிமுறைக்கும் விளைவளவில் வேறுபாடில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

6)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்வேறு கடுங்குற்றங்கள் புரிந்ததாகப் பட்டியலிடுகிறது. ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ள இனக் கொலைகார அரசின் நடவடிக்கைகளையும், இனக் கொலையிலிருந்து தம் மக்களின் உயிரும் உடைமையும் காக்க ஆயுதமெடுத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளையும் ஒரே துலாக்கோலில் நிறுத்துப் பார்க்க இயலாது என்ற வரலாற்றுப் பாடத்தை நினைவூட்ட விரும்புகிறோம்.

7)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் கணக்கில் கொள்ளும் புவிசார் அரசியல் அழுத்தங்கள் தென்பட்ட போதிலும், இவ்வறிக்கை உறையிலிட்ட கூர்வாள் போன்றது, தமிழ் மக்களின் போராட்டம் வளர்ந்து செல்லும் போது இந்தக் கூர்வாள் இலங்கையை இரண்டாகக் கூறு போட்டு ஈழத்தை வென்றெடுக்கும் அற வலிமையை நமக்குத் தரக் கூடியது என்பதைக் காலம் மெய்ப்பிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

8)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையை ஒதுக்கித் தள்ளி விட்டு, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவின் அறிக்கையில் சிற்சில மாற்றங்கள் செய்து, வழமையான முன்னொட்டும் பின்னொட்டும் சேர்த்து வண்ணந்தீட்டித் தீர்மானம்’கொண்டுவந்துள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் வஞ்சனையை வன்மையாகக் கண்டிக்கிறோம். புலனாய்வு அறிக்கை வெளிவருமுன்பே, இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப் போகிறோம் என்று கொழும்பில் வைத்தே அமெரிக்க அமைச்சர் அறிவித்து விட்ட நிலையில் அமெரிக்காவின் கழுத்தறுப்பு எதிர்பார்த்த ஒன்றே.

9)      மனித உரிமை மன்ற உயர் ஆணையரின் அறிக்கையை வரவேற்பதாகவும், அவ்வறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா செயலாக்க வேண்டுமெனக் கோருவதாகவும் தீர்மானத்தின் முதல் வரைவில் எழுதியதைக் கூட இரண்டாம் வரைவில் மாற்றி எழுதும் அளவுக்கு இலங்கை அரசை மட்டுமின்றி, அந்நாட்டின் சிங்களக் கட்சிகளையும் அரவணைக்க முற்பட்டுள்ளது அமெரிக்கா. அதேபோது புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய தேவையை அறிந்தேற்பதாகப் புதிய தீர்மான வரைவில் ஒரு தனிப் பத்தியை சேர்த்திருப்பதை… தமிழர்களின் அரசியல் பெருவிருப்பங்களைக் கொச்சைப்படுத்தி இனக்கொலை இலங்கைக்கு முட்டுக் கொடுக்கும் அமெரிக்க முயற்சி என்றே பார்க்க வேண்டியுள்ளது.

10)   இலங்கையின் வட மாகாண சபை சென்ற பிப்ரவரியில் இனக் கொலை குறித்து இயற்றிய தீர்மானத்தையும் அண்மையில் பன்னாட்டுப் புலனாய்வு கோரி இயற்றிய தீர்மானத்தையும் உளமார வரவேற்கிறோம். இதற்காக வட மாகாண முதல்வர் மாண்புமிகு விக்னேசுவரன் அவர்களையும் வட மாகாண சபை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

11)   ஈழத் தமிழர் துயரம் குறித்துத் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவை இதற்கு முன் இயற்றியுள்ள தீர்மானங்களையும், பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தி அண்மையில் இயற்றிய தீர்மானத்தையும் உளமார வரவேற்கிறோம். இதற்காகத் தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்களையும் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

12)   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண சபையும் தமிழகச் சட்டப் பேரவையும் இயற்றியுள்ள தீர்மானங்களை மதித்து இனக்கொலைக்கு நீதிசெய்யப் பன்னாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தும் படியும், இதற்காக மனித உரிமை மன்றத்தின் இந்த அமர்விலேயே பொருத்தமான ஒரு தீர்மானம் கொண்டுவரும் படியும், இனக்கொலை இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும் படியும் இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

13)   சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றும் படி சிங்கள ஆக்கிரமிப்பில் உள்ள தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை இலட்சம் மக்களும், உலக அளவில் 14 இலட்சம் மக்களும் கையொப்பமிட்டு அளித்துள்ள விண்ணப்பத்தை ஏற்று ஆவன செய்யும் படி ஐநா மனித உரிமை மன்றத்தையும், பொதுப் பேரவையையும், பாதுகாப்பு மன்றத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.

14)   இலங்கை தொடர்பாக இதுவரை நடந்துள்ள நீதி விசாரணை, புலனாய்வு எதற்கும் சிறிலங்காவும் இந்தியாவும் ஒத்துழைப்பு நல்க வில்லை என்பதால், இவை முழுமை அடையவில்லை. ஆய்வுக்குரிய வரலாற்றுக் காலம் என்ற வகையிலும் இவை முழுமையற்றவையாகவே நிற்கின்றன. வட மாகாண சபைத் தீர்மானம் சுட்டியுள்ளவாறு கடந்த 1948 பிப்ரவரி 4 தொடங்கி இன்று வரை தொடரும் இனக் கொலை குறித்து ஒரு முழுமையான பன்னாட்டுத் தற்சார்பு விசாரணை தேவை என்பதை ஓர் அடிப்படைக் கோரிக்கையாக வலியுறுத்த விரும்புகிறோம்.

15)   பன்னாட்டு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் போதே, இந்தியாவும் இலங்கையும் புலனாய்வை சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளையும் முறியடித்தாக வேண்டும் என்பதை மனித உரிமை மன்றமும் மற்ற அனைவரும் கவனத்தில் இருத்த வேண்டுகிறோம். .

16)   தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதில் இந்திய அரசு வகித்து வரும் பெரும் பங்கை நன்கறிந்தவர்கள் என்ற முறையில் இந்த முட்டுக்கட்டையை நீக்குவதில் தமிழக மக்களுக்குள்ள தலைமைப் பங்கைத் தெளிவாக நினைவிற்கொண்டுள்ளோம்.

17)   தமிழீழ மக்களின் இனச் சிக்கலுக்கு ஒரே தீர்வு தமிழீழ விடுதலையே என்பதுதான் வரலாறு கற்பிக்கும் பாடம். முள்ளிவாய்க்கால் பேரவலமும், அது முதல் ஈடுசெய் நீதிக்காக நடந்துள்ள போராட்டமும், அண்மைய புலனாய்வு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் வரையிலான ஐநா நிகழ்வுகளும்… இதே உண்மையை மேலதிக வலியோடு உணர்த்தியுள்ளன. இந்தத் தீர்வை அமைதியான முறையில் சனநாயக வழியில் அடைந்திடத் தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தும் படி ஐநாவை வலியுறுத்துகிறோம்.

18)   தமிழர்களுக்கு உரித்தான நீதியை உலகம் சட்ட வழியில் பெற்றுத் தர தவறுமானால், எவ்வழியிலும் அதனை அடையும் அறவுரிமை அவர்களுக்கு உண்டு என்பதைத் தொடர்புள்ள அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம். அப்போது திலீபனின் இறுதி முழக்கமே எமதுமாகும்: மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

உலகத் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!

கூட்டறிக்கையை ஏற்று கையொப்பமிட்ட தலைவர்கள்:

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தொல்.திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ஜே. ஹாஜா கனி
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்

நிஜாம் முகைதீன்
பொதுச் செயலாளர்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா

வே.பாரதி
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

பாலன்
பொதுச் செயலாளர்
கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை

தோழர் தியாகு
ஆசிரியர்
தமிழ்த்தேசம்

தமிழ்நேயன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேச மக்கள் கட்சி

நாகை திருவள்ளுவன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் புலிகள்

செந்தில்
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்

அன்பு தனசேகரன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்
திராவிடர் விடுதலைக் கழகம்

ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் இணையம்

தெய்வமணி
அமைப்பாளர்
அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

சௌ.சுந்தரமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் விடுதலைக் கழகம்

மா.சேகர்
ஒருங்கிணைப்பாளர்
குமுக விடுதலைத் தொழிலாளர்கள்

 

தந்தை பெரியார்: தமிழ்த் தேசிய அறிவியலர் – நலங்கிள்ளி

(ஆழம் மே 2015 இதழ் பெரியார் சிறப்பிதழாக வெளிவந்தது. அடுத்து வந்த ஜூன் இதழில் ம. வெங்கடேசன் எதிர்வினை புரிந்திருந்தார். ‘பெரியார் யாருக்குப் பெரியார்?’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அவருடைய கட்டுரை, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக எப்போதும் போராடியதில்லை என்றும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கு மட்டுமே அவர் பெரியார்; மற்றவர்களுக்கு அல்லர் என்றும் வாதிட்டிருந்தது. நலங்கிள்ளியின் இந்தக் கட்டுரை பெரியார் மீது முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதுடன் விரிவான ஒரு தளத்தில் பெரியாரையும் அவருடைய பங்களிப்பையும் அறிமுகப்படுத்துகிறது. – ஆசிரியர்.)

பெரியாரை இன்று பலரும் கொண்டாடுகிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக, விசிக, பாமக, தேமுதிக எனப் பல பல தேர்தல் அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகளில் பல நேரம் பெரியார் முகம் பளிச்சிடுகிறது. இவர்கள் நாளுக்கொரு கூட்டணி காண்பது, பதவி சுகங்கள் அனுபவிப்பது எல்லாமே பெரியார் புகழ் பரப்பத்தானாம்.

திராவிடர் கழகத்தை இன்று வழிநடத்தும் கி. வீரமணி பெரியாரின் கொள்கைகளை, கருத்துகளைத் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும், ஏன், உலகெங்கும் பரப்புவதே குறிக்கோள் என முழங்குகிறார்.

வீரமணியால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட பெரியார் கொள்கைகளை மீட்டெடுக்கப் போவதாக முழங்கி புதுப் புது திராவிட அமைப்புகள் பல பெயர்களில் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டுகளும் கூட கொஞ்ச நாளாகப் பெரியாரைப் புகழத் தொடங்கியுள்ளனர். அவர் ஒரு பூர்ஷ்வா சமூக சீர்திருத்தவாதி, கலகக்காரர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மகஇக உள்ளிட்ட அதிதீவிர கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இன்று பெரியாரியம், பார்ப்பனியம் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். மிதவாத, தீவிரவாத கம்யூனிஸ்டுகள் இருவருமேஇப்போதுதான் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எத்தனை எத்தனை அமைப்புகளும், எத்தனை ஆயிரம் பேரும் பெரியாரைக் கொண்டாடட்டும். அவர்கள் கொண்டாடுவது பெரியாரையா? பெரியார் கொள்கைகளையா? தேர்தல் பதவிக் கட்சிகளுக்கு அவர் விளம்பர மாடலா? கொள்கை வழிகாட்டியா?

புரிந்து கொள்ள கலைஞரை எடுத்துக் கொள்வோம். பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்தவர் அல்லவா? கலைஞரின் பெரியார்ப் புலமை என்ன? சென்ற ஆண்டு (2014) மோதி அரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. உடனே கலைஞர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு வாஜ்பாய் மீது என்றுமே பேரன்பு உண்டாம். வாஜ்பாய் அவருக்கு என்றுமே ஜென்டில்மேன்தானாம். கலைஞர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் குற்றமில்லை. அவருடைய பதவி வேட்டை அரசியல் புரிந்து கொள்ளக் கூடியதே. எஸ். வி. சேகரிடமே எம். ஆர். ராதாவின் முற்போக்கைக் கண்டவரல்லவா?அவர் குடியரசுத் தலைவர் பிரணாபுக்கும் தலைமை அமைச்சர் மோதிக்கும் கடிதம் எழுதினாராம். நீங்கள் அன்புமிகு வாஜ்பாயை கௌரவிப்பதெல்லாம் சரிதான். அதேபோது தமிழகத்தையும் திராவிட இயக்கத்தையும் கௌரவிக்கும் வகையில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கட்டாயம் பாரத ரத்னா தர வேண்டாமா? என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாராம். கலைஞாரின் உள்ளத்தில் இந்துத்துவ முகமூடி வாஜ்பாய்¢க்கும் இடமுண்டு, பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் இடமுண்டு. ஆனால் பெரியாரின் உள்ளத்தில் இந்த பாரதத்துக்கும் ரத்தினத்துக்கும் இடமுண்டா?

கலைஞர், வைகோ, கி. வீரமணி எனத் தமிழ்த் தலைவர்கள் பெரியாரை இந்தியத் தேர்தல் சந்தையில் ஒரு பண்டமாக்கி வெகு காலமாகிவிட்டது. இப்போது பாரதக் கட்சிகளுக்கும் பெரியார் அத்தியாவசியப் பண்டமாகி வருகிறார். சமூகநீதி காக்கவும், இந்து மதவெறி எதிர்க்கவும் பெரியாரைக் கையில் எடுப்பதாக அனைவரும் ஒரே பாட்டு பாடுகின்றனர்.

அப்படியானால் பெரியார் சமூகநீதிக்காகப் போராடவில்லையா? கட்டாயம் போராடினார். ஆனால் அத்துடன் அவரைக் கோடு கட்டி நிறுத்துவதில்தான் சிக்கல். இதைச் சொல்வதற்குச் சமூகநீதிக் காவலர்களும், தமிழினத் தலைவர்களும், எழுச்சித் தமிழர்களும், புரட்சிப் புயல்களும் தேவையில்லை. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே போதும். பெரியார் சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்கப் பாடுபட்டார், வைக்கம் வீரர் எனப் போற்றப்படுகிறார் என்றெல்லாம் அவர்கள் காலங்காலமாய் மனனம் செய்து தேர்வெழுதி தேறி வருகிறார்கள். ஆனால் பெரியாரின் முழு மெய்யியலையும் கற்க இத்தகைய எளிய சொல்லாடல்கள் போத மாட்டா.

சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்க எனச் சராசரி அரசியல்வாதிகள் போல் வெறும் முழக்கங்களை மட்டும் முன்வைத்தவரல்லர் பெரியார். அவர் சமூக விடுதலைக்கான மெய்யியலை உருவாக்கிக் கொடுத்தவர். கற்பு, பதிவிரதை, பத்தினி, தாலி, விதவை போன்ற ஆணாதிக்கக் கருத்தியல்களை உடைத்தெறிந்து புத்தம் புதுப் பெண்ணியக் கருவைச் செதுக்கிக் கொடுத்தவர்.

சாதியத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் போரிட்ட பெரியார் அந்தச் சாதிப் புற்றைக் கரைப்பதற்குக் கூட்டணித் தந்திரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. அவரே கூறுவது போல், அவரது காமராசர் ஆதரவு, திமுக ஆதரவு எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காலிக உரிமைகளை நிலைநாட்டவே.சாதிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை போதிக்கவில்லை பெரியார். சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டும் விடுதலை அரசியலை முன்வைத்தார். அந்த விடுதலைக்குத் தேவையான அறிவியலை விண்டுரைத்தார்.

அவர் விண்டுரைத்த அறிவியலை மேம்போக்காக ஒன்றிரண்டு பெரியார் மேற்கோள்களை மேய்வோரால் புரிந்து கொள்ள முடியாது. அவர் 1925 முதல் 1973 வரை அவரே நடத்திய பல ஏடுகளில் எழுதிய கோடிக் கணக்கான எழுத்துக்களிலும், ஆயிரக்கணக்கான கூட்டங்களில் முழங்கிய சொற்களிலும் அடிநாதமாய் இழையோடி நிற்கும்அறிவியலைப் புரிந்து கொள்பவர்களால்தான் சமூகநீதிக் கொடுமுடியை அடைய  முடியும்.

பெரியார் விண்டுரைத்த அந்த அறிவியல்தான் என்ன?

தமிழகத்தில் சமூகநீதிக்குக் கேடு பயக்கும் அகப் பகை எது எனக் கேட்டால் பல முற்போக்கர்களும் பார்ப்பனியம், சாதியம் என விடையளிக்கக் கூடும். சாதியம் காக்கும் புறப் பகையை வரையறுத்துச் சொன்னதில்தான் பெரியாரின் மேதைமை அடங்கியுள்ளது. அந்த மேதைமையின் ஆழ அகல உயரங்களை ஆராயத் துணிவோருக்கே பெரியாரின் சமூக அறிவியல் விதிகள் தெளிவாய் விளங்கும்.

காங்கிரசிடம், காந்தியிடம் சாதிக்கு, தீண்டாமைக்கு நீதி பெறுவது இயலாத காரியம் என உணர்ந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார் (22.11.1925). சுயமரியாதை இயக்கம் காண்கிறார். பார்ப்பனரல்லாதார் உரிமைகள் காத்தல், தீண்டாமை ஒழித்தல், பெண்ணடிமை ஒழித்தல், மூடநம்பிக்கை அகற்றுதல் ஆகியவற்றை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக அறிவிக்கிறார். அவர் காங்கிரசில் இருந்தபோதே தொடங்கிய குடி அரசு ஏட்டில் இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார். ஞாயிறுதோறும் வெளிவந்த குடி அரசு கிழமையேட்டின் முதல் பக்க முகப்பில் கோயிலும், தேவாலயமும், மசூதியும் காட்சியளித்தன. பாரத மாதா காட்சியளித்தாள். பெரியாரிடம் கடவுள் நம்பிக்கை அகன்று நாத்திகக் கொள்கைகள் ஏற்றம் கண்டு வந்த நிலையில் மத வழிபாட்டிடங்கள் காணாமல் போயின. அதே காலக் கட்டத்தில் அவரிடம் இந்திய நம்பிக்கையும் அகன்றது, பாரத மாதாவும் காணாமல் போனாள். கடவுள், இந்தியம் இரண்டுமே கற்பனைப் புனைவுகள் என உணரத் தலைப்பட்டார். குடி அரசு ஏட்டில் (01.06.1930) வெளியான அவரது சேலம் சொற்பொழிவைக் கேளுங்கள்:

‘இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு.’

1937இல் இராஜாஜி அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தில் பெரியாரின் இந்திய எதிர்ப்புணர்வும், தமிழ்நாடு பிரிவினை உணர்வும் இன்னும் இன்னும் கூர்மைப்பட்டன.

1937 செப்டம்பர் 19ஆம் நாள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் இந்திய எதிர்ப்பு இன்னும் சூடுபிடிக்கிறது பாருங்கள்:

‘நாம் ஏமாறுவதற்குத்தான் வடநாடு உபயோகப்படுகிறது. இன்றைய அரசியலைப் பார்க்கின்றபோது, எக்காரணம் கொண்டாவது, எப்பாடு பட்டாவது நம் நாட்டை வடநாட்டு சம்பந்தத்திலிருந்து தனியாகப் பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுதலையோ மானமோ ஏற்படப் போவதில்லை. இன்று நமக்குச் சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் இருக்கிறதென்றால், அது நமது தமிழ் நிலை உணர்ச்சியாலேயும், இந்தி படிக்காததாலேயுந்தான் என்று வலிமையாகக் கூறுவேன்.’

பெரியார் இந்தக் கருத்துகளை உணர்ச்சியில் அள்ளித் தெளித்துவிடவில்லை. தேசிய இனங்களின் வரையறை குறித்துத் தெளிவான அறிவியலை முன்வைத்த லெனினியத்தைக் கரைத்துக் குடித்த இந்திய கம்யூனிஸ்டுகளே இந்திய மயக்கத்தில் கிறங்கிக் கிடந்த காலத்தில், பெரியார் பட்டறிவு கொண்டே தமிழின விடுதலைக்கான அடிப்படைகளைத் தெளிவாய் விளக்கினார். அவர் அதே உரையில் கூர்முனைக் கேள்விகளால் எப்படி ஏரணத் தோரணம் கட்டுகிறார் பாருங்கள்:

  1. இந்தியாவை மொழி அடிப்படையில் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்து விட்டால், இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்?
  2. நம் ஒரு ஜில்லா போல் விஸ்தீரணம் கொண்ட நேபாளத்தில் வாழ்வோர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  3. இந்து மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சயாம் நாட்டினர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  4. பர்மா, நேபாளம், பூடான், மலேயா என எல்லாம் ஒவ்வொன்றாக இந்தியாவை விட்டுப் பிரிந்து விட்டன. அதற்கு முன் காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தான்) பிரிந்து விட்டன. இப்படி எவ்வளவோ பிரிந்து, எவ்வளவோ சேர்ந்து விட்ட பிறகு தாய்நாடெது? தகப்பன் நாடெது?
  5. ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் தத்தமது நாட்டைத் தாய்நாடென்பார்களா? ஐரோப்பாவைத் தாய்நாடென்பார்களா?
  6. ஆகவே தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூற வேண்டும்? எதற்காக இந்தியா பூராவும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும்? ‘பாரத நாடு’ என்பதையும், நாமெல்லாம் ‘பரதர்கள்’ என்பதையுங்கூட நாம் ஏன் ஏற்க வேண்டும்?

இந்தியா தமிழர்களின் நாடன்று, தமிழகமே தமிழர்களின் நாடெனப் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறார் பெரியார்.

அந்த உரையில் இந்தியத்தின் ஆபத்தைப் பெரியார் சுட்டுகிறார்:

‘தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்துப் பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.’

இறுதியில் பெரியார் தமிழர்க்கு உரிமையுடன் கட்டளையிடுகிறார்:

‘நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும், தமிழரல்லாதானுக்கும் நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே! என ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே! எனப் பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுதோறும் தமிழ்நாடு தமிழருக்கே! என்னும் வாசகத்தை எழுதிப் போடுங்கள்!’

பெரியாரின் தமிழகப் பிரிவினைஇந்தித் திணிப்பினால் தீவிரமடைந்தது உண்மைதான். ஆனால் அந்தப் பிரிவினையின் மையம் இன்னும் ஆழமானது. அது சரியாகச்சாதி ஒழிப்பில், இந்து மத அழிப்பில் மையம் கொண்டிருந்தது. சாதி ஒழிப்புக்குப் பெரியாரிட்ட அறைகூவல் தமிழக ஓர்மைக்கு அடிப்படையாக இருந்தது. இதற்கான சான்றை அதே உரையில் காணலாம்:

‘தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும், கலப்படமற்ற தனித் தமிழ்ச் சாதி என்றும் ஒருவன் சந்தேகமறக் கருதுவானாயின், அவன் உடனே தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் சமயத்தை, சரியாகச் சொன்னால் தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்பந்தமே இல்லாத, தன்னை சூத்திரன் என்றும், சண்டாளன் என்றும் கூறும்படியான சமயத்தை உதறித்தள்ளி விட வேண்டியது முதற்காரியமாகும்.’

ஒருவர் தன்னை உண்மைத் தமிழன் என்று கருதிக் கொள்ள வேண்டுமானால், சூத்திரன், சண்டாளன் இரு நிலைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் எனப் பெரியார் இங்கு தெளிவாகக் கூறுகிறார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்குமான ஒற்றுமையை வலியுறுத்தித் தமிழர் ஓர்மைக்கு அடித்தளமிடுகிறார்.

பெரியாரின் இந்தப் பார்வை 1940 ஆகஸ்டு 25ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது:

‘திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதித் திராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பதும், திராவிடருக்கும் ஆதித் திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை.’

பெரியாரின் இந்த உரையில் அவர் தமிழர் ஓர்மைக்கு அடிப்படையாகச் சாதி ஒழிப்பை முன்வைப்பது தெளிவாக வெளிப்படுகிறது. அவர் இந்தப் பார்வையைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பேசி வந்தது அவரது சாதி ஒழிப்பு நேர்மையைக் காட்டுகிறது.

1930 ஜூன் முதல் நாள் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் குல சத்ரியர் மாநாட்டில் பெரியார் எழுப்பிய முழக்கம் அவரை உண்மை சாதியொழிப்பு வீரராகக் காட்டும். பெரியோர்களே! இந்த மாநாட்டிலாவது உங்களுக்கு மேல் சாதி ஒன்று இருக்கிறது என்பதையும், நீங்கள் சில சாதிகளுக்கு மேலானவர்கள் என்பதையும் மறந்து விடுங்கள், இல்லையேல் உங்களின் கீழ்மை நிலை என்றென்றும் நிலைக்கவே செய்யும் என வன்னிய மக்களை எச்சரித்தார் பெரியார். சத்ரியர் என்ற பட்டமெல்லாம் உங்களுக்கு மேலும் இழிவைத் தேடித் தருமே தவிர என்றும் எந்த மேன்மையையும் அளிக்காதெனத் துணிந்துரைத்தார்.

சாதியொழிப்பின் அடிப்படையை உணர்த்தும் வகையில்தான் ‘பறையர்ப் பட்டம் ஒழியாது சூத்திரப் பட்டம் ஒழியாது’ என முழங்கினார் பெரியார்.

பெரியார் தாம் உட்பட அனைத்துக் கழகத் தோழர்களையும் சாதிப் பின்னொட்டுகளைக் களையச் செய்தார். இதனால் தமிழகத்தில் இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் எனச் சாதிப் பட்டங்கள் அனைத்தும் ஒழிந்தன.

தமிழகத்தில் சாதிப் பட்டம் ஒழியக் காரணமாக இருந்த மாபெரும் தலைவாரின் பெயரையே ஈ. வெ. ராமசாமி நாயக்கர் எனக் கூச்சமற்று எழுதுவோரின், பேசுவோரின் அறிவு நாணயத்தை என்னென்பது? பெரியார் இடைநிலைச் சாதித் தலைவரே தவிர தலித்துகளுக்கு ஏதும் செய்து விடவில்லை எனப் பார்ப்பனர்களும், ஆதிக்கச் சாதியினர் சிலரும் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். பெரியார் தலித்துகளைக் கோயிலுக்குள், ஆதிக்கச் சாதியார் தெருக்களுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டமேதும் நடத்தினாரா? எனச் சில தலித் எழுத்தாளர்கள் கேட்கின்றனர். அவரை தலித் விரோதி என்னும் அளவுக்கு அறிந்தோ அறியாமலோ எழுதுகின்றனர். இந்த மனிதர்களின் அறிவு முதிர்ச்சியை என்னென்பது?

சாதியையும் பாதுகாத்துக் கொண்டு தலித் விடுதலை கோரிய மொன்னைப் பேர்வழியல்ல பெரியார். சாதிக் குடுமி இழுத்துப் பார்ப்பனியத்தின் தீண்டாமையின் அடிமடியில் கைவைத்த மாவீரர் அவர்.

சாதியம் என்னும் புற்றுடைத்து தலித்தியத் தேரைத் தமிழ்த் தேசியப் பாட்டையில் தங்கு தடையின்றி முடுக்கி விட்டவர் பெரியார். சல்லி வேர் நுனி கண்டு மனநிறைவு காண்போர் சாதாரண மனிதர்கள். ஆணி வேர் அடி காணும் வரை அயராதோரே மேதைகள்.

பெரியார் தலித்துகளை எத்தனை கோயில்களுக்குள், தெருக்களுக்குள் அழைத்துச் சென்றார் எனக் கணக்கு கேட்போர் சம்பிரதாய மாற்றங்களில் நம்பிக்கை வைத்து தலித் விடுதலையைக் கற்பனைக் கனவாக்கி வைத்துள்ளனர், அப்படியே நம்மையும் நம்பச் சொல்கின்றனர். ஆனால் பெரியாரோ சார அளவிலான மாற்றங்களில் நம்பிக்கை வைத்தவர். எனவேதான் அவர் தலித்துகளின் கோயில் நுழைவு என்பதை விட, கருவறை நுழைவு என்பதில் பெரும் அக்கறை செலுத்தினார்.

திமுக ஆட்சியின் போது 1972 ஜூன் 23ஆம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசுவதைக் கேளுங்கள்:

‘இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.’

சேரி மக்கள் ஆதிக்கச் சாதியினர் தெருக்களுக்குள் அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டவரல்லர் பெரியார். அந்தச் சேரிகளையே இல்லாதொழிக்க வேண்டுமென அவரது வாழ்நாள் முடிவு வரை முழக்கமிட்டதைத்தான் அவரது நொய்யல் பேச்சு காட்டுகிறது.

பெரியார் சுயமரியாதை இயக்கக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கு நேரடியாகக் கண்ட களங்கள் பல. சென்னை (15.01.1928; 10.02.1929; 21.07.1929; 07.08.1933), கள்ளக்குறிச்சி (16.06.1929), இராமநாதபுரம் (25.08.1929), ஆதனூர் (13.10.1929), தலைச்சேரி (30.03.1930), திருநெல்வேலி (10.06.1930), சேலம் (16.05.1931), லால்குடி (07.06.1931; 07.02.1932; 07.08.1933), திருச்சிராப்பள்ளி (05.07.1931), கோயம்புத்தூர் (05.07.1931), அருப்புக்கோட்டை (28.08.1932; 03.01.1938), தஞ்சாவூர் (09.07.1935), சீர்காழி (10.07.1935), திருச்செங்கோடு (07.03.1936), கொச்சி (23.05.1936), சேலம் (02.09.1936), சிதம்பரம் (06.05.1937), ஆம்பூர் (04.07.1937), திருச்செங்கோடு (01.08.1937) எனத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பல ஆதி திராவிடர் மாநாடுகளையும், தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும் நடத்தியவர் பெரியார்.

வரலாற்றை மறந்த, அல்லது வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவ வெறியர்கள் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் என்ன தொடர்பு என இன்று கேட்கின்றனர்.

1936இல் லாகூரில் நடைபெறவிருந்த சாதி ஒழிப்புச் சங்கத்தார் மாநாட்டுக்குஅண்ணல் அம்பேத்கர் ஒரு தலைமை உரையை அனுப்பி வைத்ததும், அந்த உரையை அம்மாநாட்டார் மறுதலித்ததும், எனவே அந்த உரையை அம்பேத்கர் The Annihilation of Caste என்னும் தலைப்பில் 1936 மே 15ஆம் நாள் புத்தகமாக வெளியிட்டதும் நம்மில் சிலருக்கேனும் தெரிந்த செய்திகளே. அதுவும் அருந்ததி ராய் போன்றோரே இப்போதுதான் அம்பேத்காரின் அந்த உரையைப் படிக்க நேர்ந்தது என்றும், அதன் மூலமாகத்தான் சாதியத்தின் கொடூர முகத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது என்றும் புல்லரித்துப் பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆனால் இணைய வசதியேதுமற்ற அந்தக் காலத்தில், அம்பேத்கர் உரை புத்தகமாக வெளியான இரண்டே மாதத்தில் அதனைத் தமிழில் மொழிபெயர்த்து 1936 ஜூலை 19ஆம் நாள் ‘சாதி ஒழிய வேண்டும்’ என்னும் தலைப்பில் குடி அரசு ஏட்டில் வெளியிடச் செய்தார் பெரியார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கருத்தியலே உண்மையான தலித் விடுதலைக்கு அச்சாணியாயிற்று என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கும் மேலாகப் பெரியார் சாதியத்துக்குக் காரணமான ஆணி வேருக்கே அமிலம் அடித்த வரலாறுதான் அவரின் மெய்யுருவை நமக்குப் படம்பிடித்துக் காட்டும்.

சாதி ஒழிப்புக்கு, தலித் விடுதலைக்குத் தடையாக நிற்கும் அகப் பகைக்கு எதிராகத் தமிழகத்தில் களங்கண்ட பெரியார் புறப் பகையையும் சரியாக அடையாளம் கண்டு முன்னிறுத்தினார். பார்ப்பனியத்தின், சாதியத்தின் காப்பரணாக இந்தியமும் இந்திய அரசமைப்புச் சட்டமும் திகழ்வதாக நிறுவினார். இந்தியத்தில் தமிழர்களுக்கு எந்த விடிவுமே கிடைக்காது என்பதால்தான் அவர் இந்தியாவின் முதல் விடுதலை நாளையும், தொடர்ந்து முதல் குடியரசு நாளையும் (26.01.1950) துக்க நாள்களாக அறிவித்தார்.

பார்ப்பனியத்தின் உறைவிடமாகத் திகழும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடினார் பெரியார்.

1952 ஆகஸ்டு 3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பெரியார் பேசினார்:

‘நான் சொல்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம்.’

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் களத்தில் 1957இல் இறங்கினார் பெரியார். போராட்டத்துக்கு நவம்பர் 26 என நாள் குறித்தார். போராட்டத்துக்கு முதல் நாள் பெரியார் கைது செய்யப்படுகிறார். குறிப்பிட்ட நாளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துணிந்து எரித்தனர். அவர்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் மூன்றாண்டு அளவுக்குச் சிறைத் தண்டனை பெற்றனர். சிறைக் கொடுமையில் இருவர் இறந்தனர்.

போராட்டத்தில் கைதாகி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒரே வாக்குமூலத்தையே ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு வாசித்துக் காட்டினர். அவர்கள் வாசித்துக் காட்ட வேண்டிய வாக்குமூலத்தை ஏற்கெனவே விடுதலை (21.11.1957) நாளிதழ் வெளியிட்டிருந்தது. அந்த வரலாற்று வாக்குமூலமே பெரியாரின் சாதியொழிப்புக் குறிக்கோளுக்கு ஆவணமாகிறது:

‘நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உள்ளடக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு.  இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.’

‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என ஆணவத்தோடு திருச்சிராப்பள்ளியில் பேசினார் நேரு (இந்து, 10.12.1957). மீறுபவர் எவரானாலும் சிறையில் வைப்பேன், பைத்தியக்கார மருத்துவமனையில் அடைப்பேன் என்றெல்லாம் எக்காளமிட்டார் அந்த சனநாயகப் புத்திரர். ஆனால் பெரியார் சளைக்கவில்லை. நேருவே! தமிழ்நாடு உன்னாடல்ல! நீ முதலில் என்னாட்டை விட்டு வெளியேறு! என முழங்கினார். இன்னும் தீவிரமான பல போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப் படத்தைத் தமிழ்நாடெங்கும் எரிக்கச் செய்து கைதானார் (05.06.1960). இந்தியக் கொடி எரிக்கும் போராட்டங்களையும் அடுத்தடுத்து அறிவித்தார். தமிழ்நாட்டுக்கு முழு விடுதலை கோரி 1968 ஏப்ரல் 24ஆம் நாளை தில்லி ஆதிக்கக் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை என்பது தமிழக விடுதலையில், இந்திய ஆதிக்க எதிர்ப்பில் பின்னிப் பிணைந்துள்ளது. பாரத ஒற்றுமை பேசி சாதியை ஒழிப்பேன் என்பது பெரியார் மெய்யியலின் ஆன்மாவை வேரோடு பறிப்பதாகும்.ஓட்டு வேட்டைக்கு, சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பெரியார் கொள்கைகள் உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக அவற்றைத் திரிப்பதும், புரட்டிப் பேசுவதும் அவருக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பெரியார் விடுதலை நாளேட்டைத் தொடங்கியதிலிருந்து முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை இடம்பெறச் செய்தார். அவர் இறப்புக்குப் பின் இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலத்தில் அம்முழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு அகற்றப்பட்டது. ஆனால் நெருக்கடிக் காலம் முடிவுக்கு வந்த பிறகும் அம்முழக்கத்துக்கு இன்று வரை இடந்தரவில்லை கி. வீரமணி.

பெரியார் தனித் தமிழ்நாடு கேட்ட காலத்தில் கன்னடர்கள் காவிரியைச் சிறைப்பிடிக்கவில்லை, மலையாளிகள் பெரியாற்று அணையை உடைக்கத் துடிக்கவில்லை, சிங்களவர்கள் தமிழ் மீனவர்கள் எவரையும் கொல்லவில்லை, தமிழீழத்தில் வரலாற்றின் பெருந்துயரமான இனப்படுகொலை ஏதும் நடைபெறவில்லை. எனவே முன்னெப்போதையும்விட இன்றுதான் நமக்குப் பெரியாரின் பிரிவினை ஆயுதம் இன்றியமையாததாகிறது. ஆனால் இன்று பெரியாரின் பிரிவினைக் கொள்கையே கதைக்குதவாது என திராவிடக் கட்சியினரும், பாரதக் கம்யூனிஸ்டுகளும் ஒன்றாகச் சொல்கின்றனர்.

அண்மையில் 2014 செப்டம்பர் 17 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி விவாதம் நடைபெற்றது. தனித் தமிழ்நாடு என்பதே தந்தை பெரியாரின் உயிர்க் கொள்கை என்னும் கருத்தை முன்வைத்தார் தோழர் தியாகு. விவாதத்தில் மதிமுகவின் காரை செல்வராஜ், அதிமுகவின் கோ. சமரசம், திமுக ஆதரவு சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மூவருமே பெரியாரின் தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்று சாத்தியமில்லை என ஒற்றுமையாகக் குரல் கொடுத்தனர். பைசா பெறாத சிக்கல்களுக்கெல்லாம் குடுமிப்பிடிச் சண்டையிடும் இந்தத் திராவிடக் கட்சிகள் தனித் தமிழ்நாடு என்னும் பெரியாரின் உயிர்க் கொள்கைக்குத் தமிழகத்தில் வேலையில்லை எனக் காட்டுவதில் ஒற்றுமை காட்டினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்து கூட்டாட்சியைக் கொண்டு வருவதே இன்றைக்கு நடைமுறையில் சாத்தியம் என்றார் சுபவீ. தேர்தல் கட்சிகளுக்கு என்று ஓர் எல்லை உண்டு எனக் கூறினார். பதவிச் சுகங்களைப் பங்கிட்டுக் கூட்டணி பிடிக்கத் துடிக்கும் கட்சிகளுக்கு ஓர் எல்லை உண்டு எனக் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உங்களின் ஓட்டு வேட்டை அரசியலுக்குப் பெரியாரின் பிரிவினைக் கொள்கை முற்றுப் புள்ளியாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியர்களுக்குப் பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கந்தான் தொடக்கப் புள்ளியாக இருக்க முடியும்.

திராவிடக் கட்சியினரின் இந்தச் சந்தர்ப்பவாத விளக்கங்களுக்குத் தமிழ்த் தேசியர்கள் விடையளிக்க வேண்டியதில்லை. பெரியார் அன்றே விடையளித்து விட்டார். அவர் இறப்பதற்கு 3 மாதம் முன்பு தமது 95ஆவது பிறந்த நாள் விழா மலா¤ல் பெரியாரே எழுதுகிறார்:

‘நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது.’

பெரியாரின் தனித் தமிழ்நாடு முழக்கத்துக்கு எதிராய் நிற்கும் எவரும் பெரியாருக்கு எதிரிகளே. வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கும் கைகளால் பெரியார் சிலைகளுக்கு மாலையிடும் தலைவர்களுக்கும், பெரியாரைச் செருப்பால் அடித்து இழிவுபடுத்தும் இந்து வெறியர்களுக்கும் அடிப்படையில் வேறுபாடேதும் இல்லை.

பெரியார் பாரதத்தின் ரத்தினம் இல்லை, தமிழர்களின் பல நூற்றாண்டுச் சமூகநீதிப் போராட்டத்தின் விளைபயனாய்த் தமிழ்த் தேசியத்துக்குத் தமிழன்னையளித்த நன்முத்து ஆவார்.

பெரியார் பதவி அரசியலுக்குப் பயன்படும் விளம்பரப் பொம்மையல்ல, சாதியறுக்கும் தமிழ்த் தேசிய விடுதலையின் திருவுரு என்பதையே தமிழகத்துக்காக, தமிழர்களுக்காக உழைக்கும் எவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரைத் தேச விரோதி என்போரிடம் உரக்கச் சொல்வோம், ஆம், உங்களின் இந்தியத் தேசியத்துக்கு அவர் பெரும் விரோதியே! எங்களின் தமிழ்த் தேசியத்துக்கோ அவர் பெரும் அறிவியலர்!

பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவித்த போது ‘திருப்பூர் குமரன் ஏந்திய கொடியை எரிப்பதா?’ என அன்று பாரதக் கம்யூனிஸ்டுகள் மனம் புழுங்கினர். பெரியார் சென்னை திருவல்லிக்கேணியில் 1955 ஜூலை 31ஆம் நாள் ஆற்றிய உரையில் அவர்களுக்குக் காட்டமாகப் பதில் சொன்னார்:

‘குமரன் ஒருவன் உயிர் விட்டுக் காப்பாற்றிய கொடி இதுவானால், தாளமுத்து, நடராசன் என்ற இருவர் உயிர் விட்டது, இந்திக் கிளர்ச்சிக்காகவல்லவா? குமரன் ஓர் ஆள்; எங்களில் இருவர் பலியானோமே! இதை யார் இன்றைக்குக் கூறுகிறார்கள்?’

திராவிடக் கட்சிகளே! கம்யூனிஸ்டுகளே! அன்று பெரியார் மொழிப் போராளிகள் இருவாரின் உயிரைக் காவு வாங்கிய இந்தியக் கொடியை எரிப்பேன் என்றார். இன்று தமிழீழத்தில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய இந்தியக் கொடி நம் தமிழகச் சட்டமன்றத்தில் திமிராய்ப் பறக்கிறதே? அதை எரித்துச் சாம்பலாக்க உங்களின் பாரத பக்தி  உங்களுக்குத் தடையாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியத்தின் தமிழ்ப் பற்று வருங்காலத்தில் இந்தியக் கொடியையும் எரிக்கும், இந்தியத்தையும் எரிக்கும். இதுவே பெரியார் தமிழர்களுக்கு இட்ட கட்டளை. ஆம், 1950 நவம்பர் 27ஆம் நாள் சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் முழங்கினார்:

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிந்தனைக்கு

ஒற்றுமை நோக்கில் ஒரு விவாதம் - 2

(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி “தமிழ்த் தேசியப் பேரியக்கம்” எனப் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமுன் இக்கட்டுரை எழுதப்பட்டது.)

தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு ஆற்றல்களிடையே கருத்தொற்றுமையும் செயலொற்றுமையும் இப்போதைய உடனடித் தேவைகள் என்று நம்புகிறோம். பதவி அரசியல் போதைக்கு மயங்காத கொள்கைவழிப்பட்ட இயக்கங்கள்தாம் இந்த ஒற்றுமைக்கு நடுவணச்சாகத் திகழ முடியும் என்பதைக் கூறத் தேவையில்லை. கடந்த காலம் கற்பிக்கும் பாடமும் இதுவேதான்.

சென்ற இதழில் (2014 சித்திரை) மே பதினேழு சிந்தனைக்கு (ஒற்றுமை நோக்கில் ஒரு விவாதம்  1) ஒரு சிலவற்றை முன்வைத்திருந்தோம்.  இம்-முறை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி-யோடு விவாதிக்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அண்ணன் திரு பழ. நெடுமாறன் அவர்–களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 1991 தொடங்கிக் கிட்டத்தட்ட 18 ஆண்டுக் காலம் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்தது. கடுமை

யான நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் முகங்கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுச் சுடரை அணைய விடாமல் காத்த பெருமை நம் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உரியது.

ஒருங்கிணைப்பு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவிலும் அதன் சார்பில் நடாத்தப்பட்ட கிளர்ச்சி இயக்கங்களிலும் தமிழ்த் தேசப் பொது-வுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், மற்றத் தோழமைக் கட்சிகள், இயக்கங்-களும் பங்கேற்றுப் பாடாற்றின.

கடந்த 2008இல் போர்நிறுத்தம் முறிவுற்று, சிங்கள முப்படையின் இன அழிப்புப் போர் தொடங்கிய பிறகு ஒருங்கிணைப்புக் குழு ஒரே ஒரு முறைதான் கூடியது. அதன் பிறகு ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டு முனைப்புடன் செயல்பட்டது. நாமும் அந்தச் செயற்பாடுகளில் ஊக்கத்துடன் பங்கேற்ற போதிலும் நம் அமைப்புகளுக்கு  அந்த இயக்கத்–தில் முறைப்படி இடமில்லை. போரை நிறுத்த வேண்டிய அவசியத் தேவை கருதி நாமும் குறையன்றும் சொல்லாமல் அவர்களோடு இணக்கமாக இயங்கி வந்தோம்.

ஆனால் நம் தற்சார்பான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி, பெரியார் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு என்ற கூட்டியக்கத்தை நிறுவி அதன் சார்பில் சென்னை வருமானவரி அலுவலக முற்றுகை, தஞ்சை வானூர்தித் தள மறியல் போன்ற சில போராட்டங்களும்  நடாத்தினோம். போர்நிறுத்தக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் குறுவுத்தியாக (tactic) 2009 மே பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்கப் பரப்புரை செய்வது என்றும் முடிவெடுத்தோம், அதற்காகவே ஈரோடை நகரில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டோம்.

ஆனால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டார். பெரியார் திராவிடர் கழகம் காங்கிரசை எதிர்ப்பது என்ற அளவோடு நில்லாமல் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்துச் செயல்படத் தொடங்கி விட்டதால் தமிழர் ஒருங்கிணைப்பு கலைந்து விட்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலத்தில் தமிழீழத்துக்காகச் செய்ய வேண்டியது என்ன என்பதை முள்ளிவாய்க்கால் – முன்னும் பின்னும் என்ற கட்டுரையில் கோட்பாட்டளவில் முன்வைத்-திருந்தேன். தமிழீழத் தாயகத்தில் மக்கள் போராடு-வதற்கான சனநாயக வெளியைத் தோற்றுவிக்கவும் விரிவாக்கவும் ஏற்ற வகையில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் சிங்கள சிறிலங்காவைத் தனிமைப்படுத்திப் புறக்கணிப்பது என்பதே என் முன்மொழிவின் சாரம்.

ஐநா மனித உரிமை மன்ற விவாதங்களும் தீர்-மானங்-களும் சிறிலங்காவைப் புறக்கணிக்கும் நம் முயற்சிக்குத் துணையாகலாம் என்பதை ததேபொ–கவும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. அதே போது ஐநா நிறுவனங்களின் வரம்புக் கூறு

களைப் பற்றியும், ஏற்றத்தாழ்வான உலக ஒழுங்கின் விளைவாக ஐநாவில்  வல்லரசுகளின் சட்டாம்-பிள்ளைத்தனம், சதியாட்டங்கள் பற்றியும் ததேபொகவுக்கு நாம் சொல்லித்தர வேண்டும் என்ற தேவையில்லை.

ஒன்றை மனத்தில் நிறுத்துவோம். ஈழத்தில் நடந்தது இனக்கொலை என்பதை உலகில் ஒரே ஓர் அரசு கூட இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசல்லாத நிறுவனங்களில் பிறேமெனில் கூடிய நிரந்தரத் தீர்ப்பாயம் மட்டுமே இனக்கொலை நடந்ததாக ஏற்றுக் கொண்டுள்ளது. வேறு யாரும் இதை அறிந்தேற்கவில்லை.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில். . .

கடந்த 2009, 2012, 2013 ஐநா மனித உரிமை மன்ற நடவடிக்கைகள், விவாதங்கள், தீர்மானங்கள், அமெரிக்கா எடுத்த முயற்சிகள், யாவற்றிலும் குறிப்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள் . . . இந்த ஒவ்வொன்றிலும் ததேபொக, ததேவிஇ பார்வைகளில் அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. தீர்மான உரைகளிலும் வாக்களிப்பு முறையிலும் ஏற்பட்டு வந்த மெல்லிய மாற்றங்-களுக்குக் கொடுத்த அழுத்தங்களில் சிறு  வேறு-பாடுகள் இருக்கலாம். இப்போது அவை பொருட்டில்லை.

ஆனால் 2014 தீர்மானத்தையும் அதன் புற விளைவுகளையும் புரிந்துகொள்வதில் நம்மிடையில் கூர்மையான கருத்து வேறுபாடுகள் முன்-னுக்கு வந்து வெளிப்பட்டன. வேறு பல கட்சிகள், இயக்கங்களாலும் இந்தக் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியவில்லை. மாணவர் போராட்டம், மக்கள் எழுச்சி என்ற கோணத்தில் 2013 போல் 2014 இல்லையே என்ற வருத்தம் உங்களுக்கும் எங்களுக்கும் நம்மையத்த பலருக்கும் உண்டு. இதற்கான காரணங்களில் மேற்சொன்ன கருத்து வேறுபாடுகளுக்கு ஒரு முகாமைப் பங்குண்டு.

விவாதத்துக்குரிய கட்டுரைகள்

எவ்வித உள்நோக்கம் கற்பிப்பதும் கருத்து வேறு-பாடுகளைக் களைய உதவாது என்று உறுதியாக நம்புகிறோம். இந்த அடிப்படையில்தான் மே பதினேழுடன் விவாதித்தோம். இப்போது ததேபொகவுடனும் விவாதிக்கப் போகிறோம். ததேபொக நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக இரு கட்டுரைகளை எடுத்துக் கொள்கிறோம்.

1) தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 மார்ச்சு 16-&31 இதழில் ததேபொக பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை: கிழித்தெறியப்பட வேண்டிய அமெரிக்கத் தீர்மானம்.

2) தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 ஏப்ரல் 1-&15  இதழில் ததேபொக தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ள கட்டுரை: தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும்.

முதல் கட்டுரை ஐநா மனித உரிமை மன்றத்தில் முதல் வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் எழுதப்பட்டது. இரண்டாம் கட்டுரை இறுதி வடிவில் தீர்மானம் இயற்றப்பட்ட பின் எழுதப்பட்டது. கி.வெ., பெ.ம. இருவரின் கட்டுரைகளிலும் வெளிப்படும் பார்வைகள் ததேபொகவினுடையவை  மட்டுமல்ல, வேறு பலரும் கூட ஏறத்தாழப் பகிர்ந்து கொள்ளக் கூடியவையே என்பதால், இந்தக் கட்டுரைகளை மையப்படுத்தி விவாதிப்பது இன்னுங்கூடத் தேவையானதாகிறது.

மாறுபாடுகளுக்கு மையமான ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்துத் தமிழ்த் தேசம் ஏட்டில் ஓரடி முன்னே… (2014 சித்திரை) கட்டுரையிலும், பிறகு மே பதினேழு சிந்தனைக்கு (2014 வைகாசி) கட்டுரையிலும் சற்றே விரிவாக எழுதியுள்ளேன். ஆகவே, தவிர்க்கவியலாத இடந்தவிர கூறியது கூறலைத் தவிர்க்கும் அக்கறையோடு இவ்விவா-தத்தைத் தொடர்கிறேன்.

மோசடித் திட்டம்

தோழர் கி.வெ.முதலில் பழைய தீர்மானங்களோடு புதிய தீர்மானத்தை ஒப்பிட்டுக் காட்டி, சேர்க்கைகள் நீக்கங்களைப் பட்டியலிடுகிறார். பதின்-மூன்றாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்று இந்தத் தீர்மானம் முன்மொழிவது ஒரு மோசடித் திட்டமே என்பது சரியானது. ஒன்று பட்ட இலங்கைக்குள்ளும் பதின்மூன்றாம் சட்டத் திருத்தத்துக்குள்ளும் அரசியல் தீர்வு என்பது இலங்கையின் ஒற்றையாட்சி முறைக்குப் பட்டுக்-குஞ்சம் கட்டுவதே தவிர வேறன்று.

ஆனால் இது ஈழத் தமிழர்களை  நிரந்தரமாகச் சிக்க வைக்கும் ஏற்பாடு என்பது மிகையான அச்சம். ஏனென்றால் இந்தத் தீர்மானம் ஈழத் தமிழர்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. இந்தத் தீர்மானத்துக்குப் பிறகும் பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட தங்கள் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகப் போராடத் தமிழர்களுக்கு முழு உரிமை உண்டு.

அமெரிக்கத் தீர்மானமானது தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை என்பது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைதான் என்பதை மறைப்பதும் மறுப்பதும் உண்மைதான்.

தேசிய இன ஒடுக்குமுறையும் சமய ஒடுக்குமுறையும்

ஆனால் இந்தத் தேசிய ஒடுக்குமுறையில் சமயப் பாகுபாட்டுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆகவேதான் சிங்கள அரசை பௌத்த & சிங்களப் பேரினவாத அரசு என்கிறோம். சிங்கள இனவெறியும் பௌத்த மத வெறியும் இணைந்தே அரசாள்கின்றன.

அண்மையில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மீது சிங்கள & பௌத்த வெறியர்கள் நடத்திய தாக்குதல்களை இனவெறியும் மதவெறியும் கலந்த தாக்குதல்களாக விவரிப்பதில் தவறில்லை. அமெரிக்கத் தீர்மானம் தேசிய இன ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளவில்லை என்பதாலேயே, அது பதிவு செய்யும் மதஞ்சார்ந்த தாக்குதல்களை சிங்கள அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்துவதில் கேடில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளும் உலக அரங்கில் சிறிலங்காவைத் தனிமைப்படுத்தவே துணைசெய்யும் என்பதை மறந்து விடக் கூடாது.

உள்நாட்டு விசாரணையா? பன்னாட்டு விசாரணையா?   

அமெரிக்கத் தீர்மானம் – 2014 தொடர்பாகப் பன்னாட்டு அரங்கில் நம் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்குமான போராட்டம் இறுதியாக ஒரு கேள்வியைத்தான் சுற்றிச் சுற்றி வந்தது: உள்நாட்டு விசாரணையா? பன்னாட்டு விசாரணையா?

கடந்த 2012, 2013 தீர்மானங்களைக் கவைக்குதவாதவை என்று நாம் மறுதலித்ததற்கு அடிப்-படையே அவை பன்னாட்டு விசாரணைக்கு எள்முனையளவும் இடந்தரவில்லை என்பதுதான். ஆனால் 2014 தீர்மானம் இந்த வகையில் பன்-னாட்டு விசாரணைக்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது.

போர்க்குற்றங்கள், மானிடவிரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்பதுதான் ஐநா பொதுச்செயலர் அமைத்த மூவல்லுனர் குழுவின் பரிந்துரை. இலங்கைக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கையளித்த மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் பரிந்துரையும் அதுவே. ஆணையரின் இந்தப் பரிந்துரையை வரவேற்பதாக அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவு கூறியது. இது குறித்துக் கி.வெ. எழுதுகிறார்:–

‘இறுதியாக, “இலங்கையில் நம்பகமான கருதத்தக்க விளைவுகளை உருவாக்கும் தேசிய நடவடிக்கைகள் செயல்படாமல் போனால்சுதந்திரமான நம்பக-மான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற ஆணையரின் பரிந்துரையை இம்மன்றம் வரவேற்கிறது….” என்று (அமெரிக்கத் தீர்மானம்) கூறுகிறது.’

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவில் இருப்பதை ஆங்கிலத்தில் படிப்போம்:

“welcomes the high commisioner’s recommadations and conclusions regarding ongoing human rights violations and on the need for an independent and credible inqyiry mechanism in the absence of a credible national process with tangible results…. “

(Emphasis addedd)

செயல்படாமல் போனாலா? செயல்படாத நிலையிலா?

தோழர் கி.வெ. in the absences of  என்ற தொடரை செயல்படாமல் போனால் என்று தமிழாக்குவது சரியா? அல்லது செயல்படாத நிலையில் என்பது சரியா? இரண்டும் ஒன்றல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை. செயல்படாமல் போனால் என்பது சரியாக இருக்குமானால் தேசிய நடவடிக்கைகள் (National processes – உள்நாட்டுச் செயல்வழிகள்) செயல்படத் தவறி விட்டன என்ற முடிவுக்கு ஆணையர் இன்னும் வரவில்லை என்று பொருள். செயல்படாத நிலையில் என்பது சரியாக இருக்குமானால் அவர் ஏற்கெனவே அந்த முடிவுக்கு வந்து விட்டார் என்று பொருள்.

ஆணையரின் அறிக்கை என்ன சொல்கிறது? அதை அமெரிக்கத் தீர்மானம் எப்படிப் புரிந்து கொள்கிறது? என்பதைக் கண்டறிய தமிழாக்க நுட்பங்கள் தவிர வேறு வழிகளும் உள்ளன.

ஆணையர் அறிக்கை

ஐநா மனித உரிமை உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் 2014 பெப்ரவரி 24  நாளிட்ட அறிக்கை முதல் பக்கத்தில் கட்டம் கட்டித் தந்துள்ள சுருக்கம் (summary) என்ற பகுதியின் இரண்டாவது பத்தியே இதைத் தெளிவுபடுத்தி விடுகிறது.

“உயர் ஆணையரும் தனி வல்லுனர்களும் வழங்க முன்வந்த செய்நுட்ப உதவியை அரசாங்கம் (சிறிலங்கா) ஏற்கவில்லை. இதற்கிடையில், ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களில் நடந்தவை குறித்துப் புதிய சான்று தொடர்ந்து வெளிப்பட்ட வண்ணமுள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு தற்சார்பான பன்னாட்டு விசாரணைப் பொறி-யமைவை நிறுவும்படி உயர் ஆணையர் பரிந்துரைக்கிறார்.

உள்நாட்டு விசாரணைப் பொறியமைவுகள் செயல்படத் தவறி விட்ட நிலையில், இது (பன்னாட்டுப் பொறியமைவு)   உண்மையை நிலைநாட்ட உதவக் கூடியதாகும்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இதே அறிக்கையின் பரிந்துரைகள் என்று தலைப்-பிட்ட இறுதிப் பகுதியில் உயர் ஆணையர் முன்-வைக்கும் முதல் பரிந்துரை இதுதான்:

“74. மனித உரிமை மன்றமானது பன்னாட்டு மனித உரிமைச் சட்ட மீறல்கள், மனிதநேய உரிமைச் சட்ட மீறல்கள் எனும் குற்றச்சாட்டை மேலும் புலனாய்வு செய்யவும், உள்நாட்டுப் பொறுப்புக் கூறல் செயல்வழிகள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்காணிக்கவும் ஒரு பன்னாட்டு விசாரணைப் பொறியமைவை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் ஆணையர் பரிந்துரைக்கிறார். இவ்வாறான ஒரு செயல்வழியில் துணைபுரிய மனித உரிமை உயர் ஆணையர்ப் பணியகம் அணியமாயுள்ளது.”

உள்நாட்டுச் செயல்வழிகளும் பன்னாட்டு விசாரணையும்

இதையடுத்து வரும் 75ஆம் பத்தி சிறிலங்கா அரசுக்கான பரிந்துரைகளைப் பட்டியலிடுகிறது. இந்த இரு பத்திகளுக்கும் இடையில் சார்புறவு ஏதுமில்லை. இந்த 75ஆம் பத்தியைச் செயலாக்கி–னால் அந்த 74ஆம் பத்தியைச் செயலாக்கத் தேவையில்லை என்ற சலுகை ஏதும் தரப்படாத போது, இரண்டும் தனித் தனியானவை, தற்சார் பானவை என்றாகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் உள்நாட்டுச் செயல்வழிகளைக் கைக்கொள்வதன் மூலம் பன்னாட்டு விசாரணை-யிலிருந்து தப்ப முடியாது என்று பொருள்.

ஆகவே, இனிமேல் உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால்தான் பன்னாட்டுப் புலனாய்வு என்று கி.வெ. தரும் பொருள் விளக்-கத்துக்கு அடிப்படையே இல்லை. உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போய் விட்டன என்று பெப்ரவரி 24 அறிக்கையிலேயே நவநீதம் பிள்ளை திட்டவட்டமாக அறிவித்த பிறகு, மார்ச்சு தொடக்கத்தில் வரைவு பெறும் அமெரிக்கத் தீர்மானம் ‘உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால்’ என்ற சொற்றொடரை உயர் ஆணையரின் அறிக்கைக்குள் திணிக்கு-மானால் அது திரிபு வேலையே தவிர வேறன்று. ஆனால் அமெரிக்கத் தீர்மானம் உயர் ஆணையர் அறிக்கையை அப்படித் திரித்திருந்தாலோ தவ-றாகப் புரிந்து கொண்டிருந்தாலோ நவநீதம் பிள்ளையே முதல் ஆளாக அதை மறுத்துரைத்-திருப்பார்.

தீர்மானத்திலேயே அகச் சான்று

அமெரிக்கத் தீர்மானம் அப்படித் திரிக்கவோ தவறாகப் புரிந்து கொள்ளவோ இல்லை என்-பதற்கு தோழர் கி.வெ. எடுத்துக்காட்டும் வரைவுத் தீர்மானத்திலேயே அகச் சான்று உள்ளது. கி.வெ. எடுத்துக்காட்டும் எட்டாம் பத்திக்கு மேல் முதல் பத்தி சொல்வது ஐயத்துக்கிடமற்றது:

“சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்கி வளர்ப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர்ப் பணி-யகம் 2013 செப்டம்பர்  25இல் வாய்மொழியாகத் தெரிவித்த  நடப்புநிலையையும் 2014 பெப்ரவரி 24இல் அளித்த அறிக்கையயும், அவற்றில் அடங்கிய பரிந்துரைகள், முடிவுகளையும் [இத்-தீர்மானம்] வரவேற்கிறது….”

உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால் என்று கி.வெ. புரிந்து கொள்ளும் நிபந்தனைக்கு இங்கு இடமே இல்லை. உள்நாட்டுச் செயல் வழிகள் செயல்படாமல் போய் விட்டன என்ற முடிவுக்கு உயர் ஆணையர் முன்பே வந்து விட்டார் என்பதற்கு இந்தத் தீர்மான வரை-விலேயே நேர்ச் சான்று இருப்பதை கி.வெ. கவனிக்கத் தவறி விட்டார். வரிசையாக 1, 2, 3… என்று எண்ணிடப்பட்ட முடிவுரைப் பத்திகளுக்கு மேல் வரும் பகுதியை முகப்புரை எனலாம். இந்த முகப்புரையின் இறுதிக்கு முந்தைய பத்தி [ Recalling the High commisioner's conclusion.....என்று தொடங்கும் பத்தி] இதைத் தெளிவாக்குகிறது:

“உண்மையை நிறுவி நீதியை நிலைநாட்ட உள்-நாட்டுப் பொறியமைவுகள் செயல்படத் தவறுவது  விடாத்தொடர் நிகழ்வாகி விட்டது என்ற முடிவுக்கு உயர் ஆணையர் வந்திருப்பதையும், பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் மீறப்பட்ட நிகழ்வுகளை மேலும் புலனாய்வு செய்யவும், உள்நாட்டுப் பொறுப்புக் கூறல் செயல்வழிகள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்காணிக்கவும் மனித உரிமை மன்றம் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்தவும் அவர் பரிந்துரை செய்திருப்பதையும் [இத்தீர்மானம்] நினைவு-கூர்கிறது.”                                                                        

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இது சற்றே நீண்ட வாக்கியம் என்பதால் செய்தி–களை உடைத்துப் பார்ப்போம்: (1) உள்நாட்டுப் பொறியமைவுகள் செயல்படாமல் போய் விட்டன என்ற முடிவுக்கு உயர் ஆணையர் வந்து விட்டார். (2) பன்னாட்டுப் பொறியமைவை ஏற்-படுத்த வேண்டும் என்பது அவரது திட்டவட்ட-மான பரிந்துரை. இதற்கு நிபந்தனை ஏதுமில்லை. (3) உள்நாட்டுச் செயல்வழிகள் ஏதும் இருப்பின் அவற்றையும் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு கண்காணிக்க வேண்டும். (4) இந்த உண்மைகளை அமெரிக்கத் தீர்மானம் நினைவு-கூர்கிறது.

முன்முடிவே காரணமா?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, இப்-போதே! இது தமிழர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு அட்டியின்றி ஆதரவு தருவதுதான் நவநீதம் பிள்ளை அறிக்கை. அந்த அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் அமெரிக்காவின் முதல் வரைவுத் தீர்மானம் வரவேற்கிறது என்பதுதான் முகாமையான செய்தி. தோழர் கி.வெ. இதைக் காணத் தவறுவது ஏன்? தவறான புரிதலே என்று நம்ப முடியவில்லை. அமெரிக்கத் தீர்மானத்தை முன்பு எதிர்த்தோம், இம்முறையும் அடியோடு எதிர்க்கத்தான் வேண்டும் என்ற முன்முடிவோடு அணுகியதுதான் காரணமா? யாமறியோம்.

பிறேமன் தீர்ப்பாயத்தின் ‘இனக் கொலை’த் தீர்ப்பைத் தோழர் கி.வெ. எடுத்துக்காட்டுவது சரியானது. இனக்கொலை, போர்க் குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை-மீறல்கள் ஆகிய அனைத்துக் குற்றச் சாட்டுகள் குறித்தும் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்பதுதான் நம் அழுத்தமான கோரிக்கை.

கி.வெ. தரும் தவறான தகவல்கள்

ஆனால் “சேனல் நான்கு தொலைக்காட்சி சிங்களப் படையாட்களின் கைப்பேசியின் வழி கிடைத்த படத் தொகுப்புகளைக் கொண்டே நடந்திருப்பது இன அழிப்புதான் என உறுதிபடக் கூறுகிறது” என்று கி.வெ. சொல்வது தவறு. நடந்திருப்பது இன அழிப்புதான் என்று சேனல் நான்கு ஒருபோதும் உறுதிபடக் கூறவில்லை. இதை இயக்குனர் கலம் மக்ரே அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார். இன அழிப்புதான் என்று வரையறுப்பதற்கு குற்றமுறு உள்நோக்கம் (criminal intent) மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கமளித்தும் உள்ளார்.

ki.venkatraman (8)தோழர் கி.வெ. அமெரிக்கத் தீர்மானத்தின் பல பித்தலாட்டங்களையும்  எடுத்துக்காட்டுவதில் நமக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்ய அது வழங்கும் வாய்ப்பை அவர் காணத் தவறுவதுதான் பிழை. இந்தத் தீர்மானத்தால் ஒரு பயனும் இல்லை என்று காட்டும் ஆர்வத்தில் தவறான தகவல் தருகிறார். சான்றாக,

“… இனக் கொலையாளிக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இராசபட்சே நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்தி நிலைமையை மேம்படுத்த வேண்டுமாம். அவ்-வாறு நம்பகமான விசாரணை நடத்தி தவறிழைத்த-வர்கள் மீது இராசபட்சே நடவடிக்கை எடுக்கி-றாரா என்று கண்காணித்து ஐநா மனித உரிமை ஆணையர் அடுத்த 2015 மார்ச்சில் அறிக்கை அளிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு மனித உரிமை மன்றம் மேல் முடிவு எடுப்பதைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்கிறது தீர்மானம்.”

ஆகா, இது கி.வெ.யின் கண்டுபிடிப்பு! தீர்மானம் இப்படி எதுவும் எங்கும் சொல்லவில்லை. ஒரு-வேளை தீர்மானத்துக்கு அவர் இப்படிப் பொருள்விளக்கம் கொள்வதாக இருக்கலாம். அதாவது இது ஒரு வகையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானம் என்பதை அவர் மறுக்க விரும்பலாம். பன்னாட்டுப் புலனாய்வே வந்தாலும் அது  2015 மார்ச்சுக்குப் பிறகுதான் என்று அவர் சொல்ல வருகின்றாரோ?

இந்த 2014 சூன்,- சூலையிலேயே புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டனவே, இது ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்குப் புறம்பானது எனக் கி.வெ. கருதுகிறாரா?

அமெரிக்கத் தீர்மானம் பன்னாட்டுப் புலனாய்-வுக்கு வழிகோலுமா? கோலாதா? என்ற கேள்வி-யில்தான் கி.வெ. பார்வையுடன் முரண்படுகிறோம். மற்றச் செய்திகளில் பெரிதாக விவாதிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை.

பன்னாட்டுப் புலனாய்வுதான் ஈடுசெய் நீதிக்கான போராட்டத்தில் தமிழர்கள் கைப்பற்ற வேண்டிய அடுத்த கண்ணி என்று நம்புகிறோம். இதைக் கண்டுகொள்ளாமல் தாவிப் பாயும் முயற்சிகள் தமிழர்களின் போராட்டத்துக்கு உதவ மாட்டா. இப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் தமிழர்களுக்-கென்று கி.வெ. முன்மொழியும் மூன்று கோரிக்கை-களில் முதலாவது:

“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அங்கு இப்போதும் தொடர்வது தமிழின அழிப்பு என்பதைப் பன்னாட்டுச் சமூகம் ஏற்க வேண்டும், இக்குற்றச்சாட்டின் மீது இராசபட்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை மேற்-கொள்ளப்பட வேண்டும்.”

நாம் இங்கே சர்வதேசச் சட்டங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், அந்தச் சட்டங்-களின் படி சர்வதேசச் சமூகம் என்றால் என்ன? ஐநா அமைப்பா? அதன் பொதுப் பேரவையா? பாதுகாப்பு மன்றமா? மனித உரிமை மன்றமா? பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமா? சர்வதேசச் சமூகம் என்பது அரசுகளின் சமூகம்தான் என்-றால் அவற்றில் விரல்விட்டு எண்ணத்தக்கவை கூட – ஏன், ஒன்றிரண்டு கூட — உடனடியாக உங்கள் கோரிக்கையை ஏற்க வாய்ப்பில்லை. பெரும்பான்மை நாடுகள் தமிழின அழிப்பு என்-பதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் பன்னாட்டுப் புலனாய்வு என்றால், நீங்கள் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகப் பொருள். இது இனக் கொலையாளிகள் எவ்வித விசாரணையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்தித் தரும்  கோரிக்கையே தவிர வேறல்ல.

அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு படி முன்னேற்றம் என்று பார்ப்பது அழிவுப் பார்வை என்று சாடு-கிறீர்கள். இந்தத் தீர்மானத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று ஆவேச அறைகூவல் விடுக்கின்-றீர்கள். சரி, இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் உலக நாடுகளிடம், குறிப்பாக இந்தியாவிடம் கோரிக்கை வைத்தீர்களா? இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த-வர்களையும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியவர்களையும் பாராட்டினீர்களா? இந்தத் தீர்மானத்தையட்டி ஐநா மனித உரிமை ஆணையர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்களா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் அமெரிக்கத் தீர்மானம், அதற்குள் மறைந்திருக்கும் இந்திய–&சிங்கள சதித் திட்டங்கள் பற்றியெல்லாம் எச்சரிக்கையாக இருந்து, தமிழ் மக்களையும் எச்சரிக்க விரும்புவதில் தவறில்லை. ஆனால் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்–தாலும் உலக சனநாயக ஆற்றல்களின் ஆதரவாலும் புறநிலையில் வளர்ந்து வரும் முன்னேற்றங்களைக் காணத் தவறி விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகிறோம்.

ஆனால் ஐநா மனித உரிமை மன்றத்தில் அல்பேனியா முதல் வட அமெரிக்கா முடிய 39 நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேறிய பிறகும், அது எத்தனையோ குற்றங்குறைகளுக்கு நடுவிலும் விளைவளவில்  பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானம் என்பது தெளிவான பிறகும், தமிழ்த் தேசப் பொது-வுடைமைக் கட்சி தன் நிலைப்பாட்டைச் சிறிதும்  மாற்றிக் கொள்ளவில்லை என்பது தோழர் பெ.ம. எழுதியுள்ள கட்டுரையிலிருந்து தெரிகிறது.

கி.வெ.யை மறுக்கும் பெ.ம.

பெ.ம. முன்வைக்கும் வாதங்களைக் கருதிப் பார்க்குமுன், கி.வெ. தூணாக நம்பியிருக்கும் ஆதாரம் ஒன்றை அவர் தம்மையறியாமல் பெயர்த்-தெறிவதைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை எனக் கருதுகிறோம். அதாவது, உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்பது தான் கி.வெ.யின் புரிதல். ஆனால் பெ..ம. இறுதித் தீர்மானத்தின் பத்தாம் பத்தியை எடுத்துக்காட்டுகிறார்:

DSC_0488-300x260“தொடர்ந்து கொண்டுள்ள மனித உரிமை மீறல்-கள் மீது நடவடிக்கை எடுக்க நம்பகமான உள்-நாட்டுச் செயல்முறைகள் இல்லாததால் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு தேவை என்று மனித உரிமை ஆணையர் அலுவலகம் பரிந்துரைத்தது.”

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

 மனித உரிமை ஆணையரின் பரிந்துரையைப் புரிந்து கொள்வதிலேயே பெ.ம., கி.வெ. தங்களுக்குள் மாறுபடுகிறார்கள் என்றாலும் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானத்தைக் கிழித்தெறியும் கருத்தில் உடன்படவே செய்கிறார்கள்.

என்ன சொல்கிறார் தோழர் பெ.ம.? ஈழத் தமிழர் இனக்கொலை மீது  இலங்கை அரசைத்  தண்டிப்–பது  தொடர்பான  சிக்கல்களில் அமெரிக்காவும் இந்தியாவும் கடைப்பிடிக்கும் உத்திகள் ஆரிய சூழ்ச்சித் திட்டங்களை ஒத்தவை என்கிறார்! ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் அனுகூலச் சத்துரு உத்தி சார்ந்தது என்கிறார்! அமெரிக்கா–&-இந்தியா—&இலங்கை மூன்று நாடுகளும் திரைக்குப் பின்னால் கூட்டாகப் பேசித் திரைக்குப் பின்னால் ஒத்திகையும் நடத்தி விட்டு அரங்கத்தில் எதிரும் புதிருமானவர்களாக நின்று வசனம் பேசி நாடகம் நடத்தியிருப்பது அம்பலமாகி விட்டது என்கிறார்!

ஆரிய சூழ்ச்சித் திட்டங்கள், அனுகூலச் சத்துரு உத்திகள், ஆதிக்க அரசுகள் அரங்கேற்றும் நாடகங்கள்… எல்லாம் சரி. ஆனால் வரலாறு என்பதே இவ்வளவுதானா? மக்கள் போராட்டங்-கள், சனாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான அயரா முயற்சிகள், வெளிப்பட்டு வரும் உண்மை-களின் தாக்கம், பன்னாட்டு அரங்கிலான ஆதிக்கப் போட்டிகள், அரசுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் முரண்பாடுகள் …

இவற்றுக்-கெல்லாம் நிகழ்ச்சிப் போக்குகளை நிர்ணயிப்பதில் எந்தப் பங்கும் இல்லையா?  எல்லாவற்றையும் அரண்மனைச் சூழ்ச்சிகளாகவும் நாடக அரங்-கேற்றங்களாகவும் கற்பித்து விளக்கமளிப்பது மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகுமா? வர்க்கப் போராட்டங்கள், இனப் போராட்டங்கள் உள்ளிட்ட சமூக ஆற்றல்களின் நலமோதல்களையும் மக்கள் போராட்டங்களையும் கனத்த புத்தகப் பக்கங்களில் பூட்டி வைத்து விட்டு, ஆரிய சூழ்ச்சிகளையும் அனுகூலச் சத்துரு உத்திகளையுமே உருவிக் கொண்டு கிளம்புவது கருத்துமுதல்வாதமாகாதா? ஐந்-தாண்டுக் காலத்திய உலக நிகழ்வுகளையும் அவற்றின் பிரதிபலிப்புகளையும் தூலமாக ஆய்ந்து மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கில் கொள்ள மறப்பது இயக்க மறுப்பியல் ஆகாதா?

‘டமாரம்‘ அடித்தது யார்?

அமெரிக்கத் தீர்மானம் வருமுன்பே டெசோவும் கருணாநிதியும் அதை ஆதரிக்கச் சொல்லித் தீர்மானம் இயற்றியது குறித்து பெ.ம. வினாத் தொடுப்பது சரி. நமக்கு அதில் மாற்றுக் கருத்-தில்லை. ஆனால் கருணாநிதியைச் சாடும் அதே தொனியில் பெ.ம. நம்மையும் ஒரு பிடி பிடிக்கிறார்:

“கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம் நிறைவேற்றிய தீர்மானத்தை விடப் புரட்சிகரத் தீர்மானம் இந்த ஆண்டு வந்துள்ளது, தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும், தமிழ்நாட்டுத் தமிழர்களில் ஒரு சாராரும் டமாரம் அடித்துத் திரிந்தனர்.”

இப்படி டமாரம் அடித்துத் திரிந்தவர்கள் யார் என்று பெ.ம. திட்டவட்டமாக இனங்காட்டட்டும். விவாதத்துக்குரிய அந்தத் தீர்மானத்தைப் புரட்சிகரத் தீர்மானம் என்று நாம் ஒரு போதும் குணங்குறிக்கவில்லை. பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று நாம் ஒருபோதும் டமாரம் அடிக்கவும் இல்லை.

எமது கூட்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் (இப்போது இளந்தமிழகம்) ஆகியவற்றின் சார்பில், மார்ச் 2014: தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு என்ற தலைப்பில் நாங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையைப் பெ.ம. படித்திருக்க வேண்டும். அந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை நேரடியாகவோ சுற்றடியாகவோ புரட்சிகரத் தீர்மானம் என்று நாங்கள் குணங்-குறித்துள்ளோமா? கூட்டறிக்கை–யில் இப்படிச் சொல்கிறோம்:

“… இலங்கை அரசு நம்பகமான தேசியச் செயல்-முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்-புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்று விட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை…”

முழு அறிக்கையையும் படித்து விட்டு, எங்கே டமார ஓசை கேட்கிறது என்று பெ.ம. எடுத்துக்-காட்டட்டும். அமெரிக்கச் சூழ்ச்சி, இந்தியச் சதி என்றெல்லாம் பொத்தம்பொதுவாகப் பேசாமல் வரைவுத் தீர்மானத்திலிருந்தே உரிய அகச் சான்றுகளை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“இனக்கொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்க-தன்று” என்று எமது கூட்டறிக்கையில் முரசரைந்-திருக்கிறோமே, இதற்குப் பெயர்தான் டமாரமா? தீர்மானத்தின் மீது தோழர் பெ.ம. முன்வைக்கும் குற்றாய்வுகள் பெரும்பாலும் எமது கூட்டறிக்-கையிலும் இன்னுங்கூடக் கூர்மையாகவும் துல்லியமாகவும் –இடம்பெற்றிருப்பதை அவர் கருத்தில் கொள்ளாதது ஏன்?

கோரிக்கை இல்லாத வெற்று முழக்கம் 

யாரிடமும் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் நழுவி ‘அமெரிக்கத் தீர்மானத்தைக் கிழித்தெறி-வோம்!’ என்று ஆவேச முழக்கமிடுவதில் எமக்கு நம்பிக்கை இல்லை. கூட்டறிக்கையின் இறுதிப் பத்தியில் தமிழர்களின் கோரிக்கையைத் தெளிவாக முன்வைக்கிறோம்:

“அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அள-வோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்-டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும்.”

இந்தப் பார்வையில் நீங்கள் காணும் குற்றமென்ன? சொல்லுங்கள் தோழரே!

தோழர் பெ.ம. சொல்கிறார்:

“இத்தீர்மானத்தை ஏற்கச் செய்ய, புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களையும் வளைத்துப் போட, அமெரிக்கா இரண்டு மாதங்களாக எல்லாச் சித்து வேலை-களிலும் ஈடுபட்டது. ஏற்கெனவே அமெரிக்கா &-இந்தியா & கருணாநிதி அச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அந்த அச்சில் சுழலும் ஆரக்கால்களாகச் சில தமிழின உணர்வு அமைப்புகளும், சில உணர்-வாளர்களும் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.”

அவதூறுகள்

தோழர் பெ.ம. அவர்களே! கருத்துப் போர்வாள் கைநழுவி விட்டதாலோ  என்னவோ, கையில் கிடைத்ததையெல்லாம் அள்ளி வீசுகின்றீர்கள். அமெரிக்கச் சித்து வேலைகளால் வளைத்துப் போடப்பட்ட புலம் பெயர் தமிழர்களும் தமிழ்-நாட்டுத் தமிழின உணர்வாளர்களும் யார்? யார்?

உலகத் தமிழர்களின் பொறுப்புவாய்ந்த பல்வேறு அமைப்புகள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை (USTPAC) … இவை போன்ற தமிழர் அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் செயற்பாடுகள், மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்து இவ்வமைப்புகள் எடுத்துள்ள கூட்டு நிலைப்பாடு…

இவை குறித்தெல்லாம் ததேபொக மௌனம் காப்பது ஏன்? இலங்கை அரசமைப்புக்குட்பட்டு, தமிழீழக் குறிக்கோளைத் துறந்து விட்டு மாகாண சபை அரசியல் செய்து வரும் பெரியவர் சம்பந்தனைக் குற்றாய்வு செய்வதோடு நிறுத்தி கொள்கின்றீர்களே, உலக அளவில் அரும்பாடுபட்டு வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும், அவற்றின் நிலைப்பாடுகளையும் கணக்கில் கொள்ளத் தேவை இல்லையா? இந்த அமைப்புகளை சிங்கள அரசு தடை செய்திருப்பதும், அந்தத் தடையை இந்தியா ஆதரிப்பதும் கூட நாடகம்தானா?

அமெரிக்கா&இந்தியா&கருணாநிதி அச்சில் சுழலும் ஆரக்கால்களாகத் தங்களைப் பொருத்திக் கொண்ட அந்தச் சில தமிழின உணர்வு அமைப்பு-கள் எவை? உணர்வாளர்கள் எவர்? வெளிப்படை-யாகச் சொல்லி உங்கள் குற்றச்-சாட்டுகளை மெய்ப்பிக்க முன்வாருங்கள்.

விபரீத விளக்கம்

மெய்க்கூறுகளிலிருந்து உண்மையை அடைவது (from facts to the truth), தூலமான சிக்கல்களைத் தூலமாக அணுகுவது ஆகிய லெனின் வழிமுறைகளை அறியாதவரல்லர் பெ.ம. ஆனால் இறுதித் தீர்மான உரையை எப்படிப் படித்துப் புரிந்து கொள்கிறார், பாருங்கள்:

“… இராசபட்சே அனுமதித்தால் மனித உரிமை ஆணையர் அறிவுரை வழங்கலாம். கவனிக்க வேண்டும். அது கூட குற்றப்புலனாய்வு செய்-வதற்கல்ல, அறிவுரை கூறுவதற்கு! சுதந்திரமான அதிகாரம் படைத்த பன்னாட்டு வல்லுனர்களைக் கொண்ட குழு குற்றப் புலனாய்வு செய்வது என்ற கோரிக்கையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது அமெரிக்கத் தீர்மானம்.’

மனித உரிமை ஆணையர் கட்டளைப்படியான புலனாய்வுக்கு வழி செய்வது 10ஆம் பிரிவு. மனித உரிமை ஆணையர் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று அறிவுரையும் தொழில்நுட்ப உதவியும் வழங்குவது பற்றியது 11ஆம் பிரிவு. இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பி, புலனாய்வுக்கே இலங்கை அரசின் ஒப்புதல் தேவை என்று தவறாகப் பொருள்விளக்கம் தருகிறார் பெ.ம.

அமெரிக்கத் தீர்மானம் இனப்படுகொலை பற்றிய புலனாய்வு என்று கூறா விட்டாலும் போர்க் குற்றம் என்று கூறுகிறது எனப் பூரித்துப் போனார்கள் என்று பெ.ம. குறிப்பிடும் அந்தத் தமிழின உணர்வாளர்கள் யார்? போர்க் குற்றத்திற்குள் இனப்படுகொலைக் குற்றமும் இடம் பெறும் என்று விரித்துரைத்த அந்த விளக்கவுரை விற்பன்னர்கள் யார்?

போர்க் குற்றங்களும் இனக்கொலையும்

ஆனால் அமெரிக்கத் தீர்மானத்தில், “இலங்கையில் இரு தரப்பினரும் நடத்திய மனித உரிமை மீறல்–களையும் … அவை தொடர்பான குற்றங்களையும் விரிவாகப் புலனாய்வு செய்யவும்…” என்று சொல்லப்பட்டுள்ளதே, “அவை தொடர்பான குற்றங்கள்” என்பதில் போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் என்பவற்றோடு இனக் கொலைக் குற்றத்தையும் சேர்க்க வேண்டும் என்று நாம் வாதிட வாய்ப்புள்ளது என்பது என் கருத்து.

இறுதித் தீர்மானத்தின் சாரம்தான் என்ன? திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலைக் கழகம், தமிழ்–நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் (இளந்தமிழகம்) ஆகியவற்றின் கூட்டறிக்கை (பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது!) சொல்கிறது:

“இத்தீர்மானம் இலங்கை அரசு நம்பகமான தேசியச் செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் பன்னாட்டுப் புலன் விசாரணைக்கான பொறியமைவு ஒன்று அவசியம் என்ற ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவிப் பிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் கவனத்தில் கொள்கிறது. கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கால வரையறைக்குள் (2002 முதல் 2009 வரை) இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்ற ஆணையர்ப் பணியகத்தைக் கேட்டுக் கொள்கிறது….”

இது ஒரு தற்சார்பான கட்டளை என்பதைப் புரிந்து கொள்ளப் பெரிய சட்டப் புலமை ஏதும் தேவையில்லை. 11ஆம் பிரிவுக்குத் தோழர் பெ.ம. புரிந்து  கொள்வது போல் பொருள் கொண்டால், குற்றம் பற்றிப் புலனாய்வு செய்யக் குற்றவாளியின் இசைவு தேவை என்று பொருள்படும். ஐநா மனித உரிமை மன்றம் இவ்வளவு முட்டாள்தனமாக முடிவெடுத்தால் உலகத்தின் நகைப்புக்கு இடமாகி விடாதா? தீர்மானத்தை எதிர்ப்பவர்களோ ஆதரிப்பவர்களோ, யாருமே பெ.ம. தரும் விபரீத விளக்கத்தைத் தரவில்லை. அவ்வளவு ஏன்? இலங்கை அரசு கூட தீர்மானத்தின் இந்தப் பகுதியை இப்படி விளக்க முற்படவில்லை. பெ.ம. சொல்வதுதான் சரி என்றால் இலங்கை அரசு இத்தீர்மானத்தை எதிர்க்க வேண்டியதில்லை, தனக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.

கமுக்கம் என்ன?

முதல் படியாக அமெரிக்கத் தீர்மானத்தைப் பிடித்துக் கொண்டு மேலேறுவோம் என்று தர்க்கம் பேசியவர்களை நாங்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தெரிந்தே நூலாம்படை அணியை உருவாக்கியவர்கள் யார்? அதில் ஏதோ கமுக்கம் இருப்பதாகச் சொல்கிறீர்களே, அந்தக் கமுக்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், அனைவர்க்கும் உதவியாக இருக்கும்!

மார்க்சிய வெளிச்சத்தில் தமிழ்த் தேசியத்துக்குச் செறிவூட்டிய முன்னோடிகளில் ஒருவரென நான் மதிக்கும் தோழர் பெ. மணியரசன் கூர்மையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டிய ஒரு விவா-தத்தைத் துப்பறியும் கதை போல் அணுகுவது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

இறுதியில் தோழர் பெ.ம. அறைகூவி அழைக்கின்றார்:

“தமிழகத் தமிழின உணர்வாளர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்புவோம்!”

ஒன்றுபடுவோம் போராடுவோம்

ஒற்றுமைக்கான அழைப்பு என்ற வகையில் இதை வரவேற்கிறோம். ஒரு வகையில் தற்சார்-புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்கப்பட்டு விட்டது, அதற்கு சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் தடைபோட வரிந்துகட்டி நிற்கின்றன, இந்தத் தடைகளை வென்று, சிங்களப் பேரினவாத அரசை எதிர்த் தடைகளால் முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழக மக்-களைத் திரட்ட ஒன்றுபட்டு அணிவகுப்போம்.

உலக அரங்கில் மாற்றங்கள் வரும் என்று பெ.ம. சொல்கிறார். ஏற்கெனவே அவை சிறு அளவிலாவது வரத் தொடங்கி விட்டன என்பதை அறிந்தேற்றுத் திட்டமிட்டுச் செயல்பட்டால், அவரும் நாமும் விரும்புவது போல் நம் கோரிக்கைகள் ஏற்கப்படும் நிலை விரைவில் வரும்!

                                                                                                  – தோழர் தியாகு

                                                                                                 பொதுச் செயலாளர்

                                                                                தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

நன்றி: தமிழ்த் தேசம்

               தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் திங்களேடு

                2014 ஆனி – ஆவணி (சூலை – செப்டெம்பர்)

                09865107107, 044-23610603