கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறையின் வன்முறை – இலங்கைத் தமிழர் கால்கள் உடைப்பு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்க ஒருங்கிணைப்பில் செய்தியாளர் சந்திப்பு…

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியதையும் குறிப்பிட்டிருந்தோம். இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களில் சிலரும் வந்திருந்தனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகளோடு அழைத்துவந்திருந்தோம். சிவகுமாரும் வந்திருந்தார். அவர்களே செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தரமூர்த்தி, குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ம.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் வே.பாரதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
காவல்துறை தலைமை இயக்குனருக்கு நடவடிக்கை கோரி சுபேந்திரன், சிவகுமார் விண்ணப்பம் அளித்தனர். தோழர்கள் பாவேந்தன், அண்ணாமலை, செந்தில், பாரதி உடன் இருந்தனர்.

செய்திக் குறிப்பும் கோரிக்கைகளும்:

நாளிதழ்கள் – ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறையின் வன்முறை – இலங்கைத் தமிழர் கால்கள் உடைப்பு – முகாம் தலைவர் மீது கொடுந்தாக்குதல் – முகாமில் வேண்டும் மனித உரிமைகள்.

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அராஜகம் எல்லை மீறிப் போயுள்ளன. சென்ற 15.03.2016 அன்று சுபேந்திரன் என்ற ஈழத் தமிழர் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. இன்று வரை அவரால் கால்களை இயக்க முடியவில்லை. தொடர்ந்தும் அந்தக் கால்கள் இயங்குமா எனபது சந்தேகமே. அந்தக் குடும்பம் அன்றாடச் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கிறது. இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர். சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன.
முகாமின் தலைவர் கண்ணன் அவர்களையும் அதே காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் நம்மவர்கள் போராடி அவர்களைப் பிணை எடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. இதை எதிர்க்க யாரும் எண்ணியும் பார்க்க முடியாது. இடமாற்றம் செய்துவிடுவோம் குறிப்பாக சிறப்பு முகாமில் அடைத்துவிடுவோம் எனபது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் பொதுவான மிரட்டலாகும். இதுதான் ஈழத் தமிழர்களை உண்மையிலேயே அச்சம் மிகுந்த சூழலில் வாழவைத்து விடுகிறது. இந்நிலை மாற வேண்டும். இலங்கைத் தமிழர் முகாம்களில் முழுமையான சனநாயகம் கடைபிடிக்கப்பட வேண்டும். தொடர்ந்து இதை மக்கள் மன்றத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயக ஆற்றல்கள், கட்சிகள், அமைப்புகள் ஒருங்கிணைந்து எடுத்துச் செல்லவுள்ளன. இந்நிலை தொடருமானால் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதாக அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைத்து குரல் கொடுத்துள்ளன.

எமது கோரிக்கைகள்:

இந்திய அரசே! தமிழக அரசே!
1) கும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதி சுபேந்திரன் அவர்களைத் தாக்கிக் கால்களை உடைத்து, முகாமின் தலைவர் கண்ணன் அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவைக் கொலை முயற்சி வழக்கில் கைது செய்க!
2) மதுரை அருகே உச்சம்பட்டி முகாமின் இலங்கைத் தமிழ் அகதி ரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரியைக் கைது செய்து குற்ற வழக்குத் தொடர்க!
3) இலங்கைத் தமிழ் அகதிகளை நடைமுறையில் குற்றப் பரம்பரையாக நடத்துவதைக் கைவிடுக! அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துத்துக்கும் தக்க மதிப்பளித்து நடத்துக!
4) தமிழ்நாட்டு இலங்கைத் தமிழ் அகதி முகாம்கள் மீதான வருவாய்த் துறை, உளவுத் துறை ‘கியூ’ பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்க!
5) இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்குக!
6) இந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிற நாட்டு அகதிகளோடு ஒப்புநோக்கின் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதைக் கைவிடுக!
7) தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை மூடுக!
8) ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் முகாம்களுக்குள் சென்று இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவக் கூடாது என்ற இப்போது நடைமுறையிலிருக்கும் தடையை நீக்குக!
9) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை, அமைப்பாகத் திரளும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அகதிகளுக்கு உறுதி செய்க!
10) கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் உரிய பங்கு கிடைக்கச் செய்க!

பங்கேற்கும் அமைப்புகள்:
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தமிழர் விடுதலைக் கழகம் இளந்தமிழகம் இயக்கம்
திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக மக்கள் முன்னணி தமிழ்த் தேச மக்கள் கட்சி
தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


7 + 7 =