தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 2016 : தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தேர்தல் நிலைப்பாடு.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் களத்தைப் போர்க்களம் என்று சில தலைவர்கள் முழங்கி வருகின்றார்கள். இது என்ன போர் என்று பார்த்தால் வைக்கோல் போர் போல் சில இடங்களில் கரன்சி நோட்டுக் கற்றைகளை போர் போட்டு வைத்திருப்பது வெளிப்பட்டுள்ளது. அரிசிக் கிடங்கி, சரக்குக் கிடங்கி போல் கரூர் அருகே ரூபாய்க் கிடங்கி இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிடங்கிக்காரர் சில முக்கியமான அஇஅதிமுக அமைச்சர்களின் பினாமி என்று ஏடுகள் வெளிப்படையாகவே எழுதிய போதிலும் மறுப்பாரும் இல்லை, அவதூறு வழக்குத் தொடுப்பாருமில்லை.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் தமிழக முதல்வர் செயலலிதா தம் கட்சிக்காரர்களைப் பார்த்து “வோட்டுக்குப் பணம் கொடுக்காதீர்கள்” என்றோ மக்களைப் பார்த்து “வாக்குரிமையைக் காசுக்கு விற்காதீர்கள்” என்றோ பேசியதாகச் செய்தி இல்லை. ஆக பச்சை நோட்டுகளை வாரியிறைத்துத் தேர்தலில் வென்று விட முடியும் என்பதுதான் ஆளுங்கட்சியின் திட்டம். காசு கொடுத்து வாக்குத் திரட்டுவதில் திமுக ஒன்றும் சளைத்ததில்லை என்பதற்குக் கடந்த காலச் சான்றுகள் பலவுண்டு. இந்த வகையில் அஇஅதிமுக திமுகவுக்கு முன்னோடியும் பின்னோடியுமாக இருப்பவை காங்கிரசும் பாரதிய சனதா கட்சியும். ஒரே வேறுபாடு பணப் பட்டுவாடாவுக்கான ஆள்மாகாணம் குறைவாக இருப்பதுதான்.

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பணப் புழக்கம் 60,000 கோடி ரூபாய் கூடுதலாகியுள்ளது என்று இந்தியச் சேம (ரிசர்வ்) வங்கி ஆளுநரே கூறியிருப்பது இந்திய சனநாயகம் என்பது இழிவான பணநாயகமே என்பதற்குப் போதிய சான்று.

முடை நாற்றம் வீசும் இந்தச் சாய்க்கடையைத்தான் தேர்தல் ஆணையம் சந்தன ஓடை என்று காட்டி, அனைவரையும் அள்ளிப் பூசிக் கொள்ள அழைக்கிறது. நூறு விழுக்காடு வாக்குப் பதிவு செய்யச் சொல்கிறது. இத்தனைத் தேர்தல்களிலும் நூறு விழுக்காடு வாக்குப் பதியாமல் போனதுதான் நம் துன்ப துயரங்களுக்கெல்லாம் காரணம் போலும்!

தமிழீழம், ஏதிலியர் (அகதிகள்) வாழ்வு, எழுவர் விடுதலை, காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு, கூடங்குளம், மீத்தேன், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மின் பற்றாக்குறை, கனிம வளக் கொள்ளை, உழவர் துயர், தொழில் நெருக்கடி, விலை உயர்வு, ஆங்கில-இந்தித் திணிப்பு, கல்வி வணிகம் இப்படி வரிசை கட்டி நிற்கும் தமிழ்நாட்டின் தீராச் சிக்கல்களின் தீர்வுக்கான புதிய திட்டம் எதையும் எந்தக் கட்சியும் எந்தக் கூட்டணியும் முன் வைக்கவில்லை. அரைத்த மாவையே வலியுறுத்தி வலியுறுத்தி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

இதில் திமுக, அதிமுக மட்டுமல்ல, இவற்றுக்கு மாற்று என்று மார்தட்டி வரும் கட்சிகளும் ஒரே நிலையில்தான் உள்ளன. மக்கள் நலம், தமிழர் ஆட்சி என்ற கவர்ச்சி முழக்கங்களுக்குப் பின்னால் தமிழினத்தின் அடிமை நிலையை மூடி மறைத்து, இந்திய அரசமைப்புக்குப் பொன்முலாம் பூசவே முயல்கின்றனர். ஆளும் கட்சியையும் முதல்வர் நாற்காலியில் அமரும் ஆளையும் மாற்றினால் போதும், இந்த அரசமைப்புக்கு உட்பட்டே தமிழின உரிமைகளை மீட்டு விட முடியும் என்ற மயக்கம் அறிந்தோ அறியாமலோ வளர்க்கப்படுகிறது.

இந்திய அரசமைப்பு என்பது தேசிய இனங்களுக்கும் ஒடுக்குண்ட மக்களுக்கும் அடிமை முறியே. தமிழக அரசு என்பது அரசே அன்று. தமிழக சட்டப் பேரவை என்பது சட்டமியற்றும் இறைமை இல்லாத அரட்டை மடமே. அங்கு போய் ஆசை தீர மேசை தட்டலாம். அல்லது வெளிநடப்புச் செய்து வீரம் பேசலாம். தமிழக சட்டப் பேரவை கடந்த 63 ஆண்டுகளில் தன்னுரிமையோடு – தில்லி வல்லாதிக்கத்தின் ஒப்புதலின்றி – எத்தனைச் சட்டங்கள் இயற்றியுள்ளது? அது நிறைவேற்றிய தீர்மானங்கள் எப்போதாவது
இந்திய அரசால் மதிக்கப்பட்டுள்ளனவா?
இந்திய அரசுதான் நம்மை ஆள்கிறது, தமிழக அரசு என்பது அதன் முகவாண்மைதான், முதல்வர் பதவி என்பது தில்லியின் கங்காணிப் பதவிதான் என்ற உண்மையை மறைக்கத்தான் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், தலைவர்களின் சூறாவளிப் பயணங்களும், மேடைப் பேச்சாளர்களின் வாய்வீச்சுகளும் பயன்படுகின்றன.

அதிமுகவுக்கு மாற்று, திமுக-அதிமுகவுக்கு மாற்று, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற பேச்செல்லாம் இந்தியாவுக்கு மாற்று என்ன என்ற தேடலைத் திசை திருப்பத்தான் உதவுகின்றன. இந்திய அரசமைப்புக்குள் எதுவும் எதற்கும் மாற்று இல்லை, எல்லாமே ஏமாற்றுதான்.

நாம் என்ன செய்யலாம்? மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டி வளர்ப்பது ஒன்றே நம் உரிமைகளை வென்றெடுக்கவும், விடுதலைப் பாதையில் முன்னேறிச் செல்லவும் பயன்படும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நம்புகிறது. இதற்குப் பொருத்தமானது பொதுவாகத் தேர்தல் புறக்கணிப்பே!

எந்த அமைப்பிலும் வாக்குரிமையின் தேவையை நாம் மறுக்கவில்லை. வாக்களிக்கும் உரிமை என்பதில் வாக்களிக்க மறுக்கும் உரிமையும் அடக்கம். இந்த உரிமையை வாக்குச் சீட்டிலேயே இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது ஒரு சனநாயகக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை ஓரளவு நிறைவு செய்வதாக “மேற்கண்ட எவர்க்கும் வாக்கில்லை” (நோட்டா) என்ற பதிவு அமைந்துள்ளது.

எந்த வேட்பாளருக்கும் வாக்கில்லை என்பதை இந்த அமைப்புக்கு எதிரான வாக்கு என்று பொருள் கொள்ளலாம். ‘நோட்டா’ என்பது தேர்தல் புறக்கணிப்புக்குச் சட்ட வடிவம் தரும் என நம்புகிறோம்.
எல்லாக் கட்சிகளையும் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்! நோட்டாவில் முத்திரையிடுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 9 = 15

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>