செப்டம்பர் 24 யாழ் பொங்குதமிழ் பேரணிக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் விடுத்த அழைப்பு ..

ஆண்டவர் காயினிடம் “உன் சகோதரன் ஆபேல் எங்கே? என்று கேட்டார். அதற்கு அவன் “எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாlளியோ?” என்றான். (விவிலியம், தொடக்க நூல் 4: 9)

காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. எங்கள் உறவுகள் எங்கே? என்று ஈழத் தமிழர்கள் கேட்கிறார்கள். சிறிசேனா-இரணில் அரசாங்கம் சொல்லும் சமாதானத்தை அவர்கள் ஏற்பதாய் இல்லை. ஆபேலின் இரத்தத்தின் குரலைப் போலவே நம் உறவுகளின் இரத்தத்தின் குரலும் மண்ணிலிருந்து நம்மை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.

ஆம், உறவுகளே! இளங்குமரன் எங்கே? எழிலன் எங்கே? பாலகுமாரன் எங்கே? யோகி எங்கே? திலகர் எங்கே? பாவலர் இரத்தினதுரை எங்கே? பாலேந்திரன் ஜெயக்குமாரியின் அன்பு மகன் எங்கே? அருட்சகோதரர் பிரான்சிஸ் எங்கே? மாயமாகிப் போன எம் பல்லாயிரம் உறவுகள் எங்கே? என்ற வினாக்களுக்கு விடை கிடைத்தாக வேண்டும்.

“எல்லாரும் மரித்து விட்டார்கள்” என்ற விக்கிரமசிங்க விடைகளை நம்மால் ஏற்க முடியாது. செத்தார்களா? சாகடிக்கப்பட்டார்களா? செத்தவனைப் புதைத்து விட்டாய், அல்லது உயிரின்றியோ உயிருடனோ தகனம் செய்து விட்டாய். சாகடித்தவனை என்ன செய்தாய்? கூண்டிலேற்றினாயா? சிறையில் அடைத்தாயா?

இந்தக் கேள்வியை சிங்கள அரசிடம் கேட்கிறோம். நல்லிணக்கம் நாடும் சிங்கள மக்களிடமும் கேட்கிறோம். ஐநாவை கேட்கிறோம். இந்திய அரசையும் உலக வல்லரசுகளையும் கேட்கிறோம். தந்தையைத் தொலைத்த பிள்ளை, கணவனைத் தொலைத்த மனைவி, அண்ணனைத் தொலைத்த தங்கை, மகனைத் தொலைத்த அன்னை, உறவைத் தொலைத்த தமிழன்… நம் குரல் ஒன்றுகூடி ஓங்கி ஒலித்தால்தான் உலகின் செவியில் நுழைந்து, நீதியின் கதவுகளைத் தட்டித் திறக்க வைக்கும்!

உங்கள் கோரிக்கைகளை உங்களுக்கே நான் விரித்துரைப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதாகி விடும் என்பதால் தவிர்க்கிறேன். நிலம் மீள வேண்டும்! நீதி நிலை பெற வேண்டும்! நம்மை நாம் ஆள வேண்டும்! இனியொரு நாளும் தமிழர் கண்ணில் கண்ணீர் திரளக் கூடாது, விடியலுக்குப் பின் வரும் ஆனந்தக் கண்ணீர் தவிர!

செப்டம்பர் 24 – உலகத் தமிழர்களின் கண்கள் எல்லாம் யாழ் நோக்கி! தமிழீழத் தாயகத்தின் எல்லாச் சாலைகளும் யாழ்ப்பாணம் நோக்கி! மண்ணதிரத் திரண்டு விண்ணதிர முழங்குங்கள்!

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பிலும் தமிழ்த் தேசம் திங்களேட்டின் சார்பிலும் அன்புரிமையுடன் உங்களை அழைக்கிறோம்!

                                                                                                       தோழர் தியாகு

                                                                                        தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

                                                                                                         தமிழ்த் தேசம்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


5 + 5 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>