தமிழினியக்கா!

ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கட்டுக்கோப்புடன் இயங்கி மக்கள் தந்த செயலூக்கம் மிக்க ஆதரவினாலும், ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஈகத்தினாலும், தலைமையின் உறுதிமிக்க திறமான வழிகாட்டுதலாலும் அரும்பெரும் வெற்றிகளை ஈட்டி, வரலாற்றில் அழியா முத்திரை பதித்து, உலகம் வியக்க ஓங்கித் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென மாயமாய் மறைந்து விட்டது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏன் இப்படி ஆயிற்று? இதற்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விடை சொல்வதற்குப் போதிய தரவுகள் நம்மிடமில்லை….

முள்ளிவாய்க்கால் முன்னும் பின்னும் (2010) நூலில் நான் எழுதிய வரிகளே இவை. ஒரு கூர்வாளின் நிழலில் என்ற தமிழினியின் நூலைப் படிக்க முற்பட்ட போது, புலிகளின் பெருந்தோல்விக்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்கு விடை தேடும் முயற்சியாக இது இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏன் தோற்றீர்கள்? என்ற வினாவிற்கு விடை சொல்லும் முயற்சியே இந்நூல் என்பதைத் தமிழினியே சொல்கிறார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிரணித் தலைவியாக இருந்து, முள்ளிவாய்க்கால் வரை போராளிகளோடும் மக்களோடும் சேர்ந்து சென்று, இறுதிப் போரின் இறுதி நாளில் மக்களில் ஒருவராகச் சரணடைந்தவர் என்ற முறையில் தோல்விக்குக் காரணம் சொல்லத் தமிழினி தகுதிப் பொருத்தம் உடையவர் என்பதில் ஐயமில்லை.

இந்த நூல் தமிழினி உயிர் வாழ்ந்த போதே வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயற்கை அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டது என்ற நிலையில் பல சர்ச்சைகளுக்கு வழியமைந்து விட்டது. இவற்றுள் முதன்மையானது: இது தமிழினி எழுதிய நூல்தானா?

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற இந்த நூலை ஒரு முறைக்கு மேல் கூர்த்த கவனத்துடன் ஆழ்ந்து படித்துள்ளேன். ஓரளவு படிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் உடையேன் என்ற முறையில் இந்நூலில் முன்னுரைகள் முடிந்து 15 முதல் 255 முடியவுள்ள பக்கங்களில் தமிழினியின் அழகிய, எளிய நீரோடை போன்ற தடங்கலற்ற தமிழ் நடையையே கண்டுணர்கிறேன். இரண்டாவதாக, அவர் பதிவு செய்துள்ள முக்கியச் செய்திகள் அவர் மட்டுமே அறிந்து சொல்லக் கூடியவை. இந்த இரு கோணத்திலும் பார்க்க, தமிழினியின் பெயரால் வேறொருவர் இப்படி எழுதியிருக்கவோ, அல்லது அவர் எழுத்தில் இடைச் செருகல் செய்திருக்கவோ கூடும் என்பதற்கான அகச் சான்று ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் எனக்குள்ள நியாயமான ஐயப்பாடு தமிழினி எழுதியது முழுமையாக இடம்பெற்றதா என்பதுதான். கூர்வாள் சிங்களச் சிங்கத்தின் கையில் இருப்பது என்பதறிவோம். தமிழ்ப் புலியைத் தலைப்பில் சொல்ல நினைத்திருந்தால் துவக்கின் நிழலில் என்று எழுதியிருக்கக் கூடும். இந்நூல் தாம் சார்ந்த இயக்கம் தொடர்பான ஒரு தன்னாய்வு (ஆத்ம பரிசோதனை) என்றே வைத்துக் கொண்டாலும் சிங்களப் படையினர் நிகழ்த்திய கொடுமைகள், பேரினவாத அரசியல் பற்றியெல்லாம் பேசாமல் இத்தலைப்புக்கு நீதி செய்வதெப்படி? நடந்திருப்பது செருகல் அல்ல, உருவலே எனத் தோன்றுகிறது.

தமிழினி சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைப் போலவே இனவழிப்புப் போர்க் காலத்தில் மக்களோடும் போராளிகளோடும் இறுதி வரை உடனிருந்து முள்ளிவாய்க்கால் வரை வந்தவர்களில் முக்கியமான ஒரு சிலராவது இப்போதும் எங்கோ உயிருடனிருப்பார்கள். அவர்களில் முடிந்தவர்கள் தமிழினி செய்தது போல் எழுதட்டும், சொல்லட்டும். நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

தமிழினியின் பார்வைகள் உங்களுக்கும் எனக்கும் உவப்பானவையா? கசப்பானவையா? என்பதன்று, அவை ஒரு வரலாற்று ஆய்வின் முற்கோள்களாகப் பயன்படுகின்றனவா? இல்லையா? என்பதே மையக் கேள்வி. பெரிதும் பயன்படுகின்றன என்பதே என் விடை. இவை உண்மையில் தமிழினியின் பதிவுகளே அல்ல என்றாலும் கூட என் விடையில் மாற்றமில்லை.

தலைவர் பிரபாகரன் மீது தமிழினியின் மதிப்பார்ந்த நம்பிக்கை இந்நூல் முழுக்க இழையோடி நிற்கிறது. ஆனால் இந்த அறிவார்ந்த நம்பிக்கை தலைவரைக் குற்றாய்வு செய்வதே கூடாது என்ற குருட்டு நம்பிக்கையாக மாறுவதை பிரபாகரனே ஏற்க மாட்டார். பெரியோரை வியத்தல் இலமே என்ற பூங்குன்றன் வழி நம்மை எப்போதும் ஆற்றுப்படுத்தும்.

நோயாளியின் சாவுக்கு நோய்தான் காரணம். ஆனால் மருத்துவர் என்ன பிழை செய்தார், என்ன பிழை விட்டார் என்று ஆராய்வதில் தவறில்லை. அதுதான் அறிவு, அதுதான் அறம்.

நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்: கடந்த 1990 செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த திலீபன் மன்ற அறிமுகக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டிய தேவையை வலியுறுத்திப் பேசிய போதே அவர்களின் நடைமுறையில் வெளிப்படும் இராணுவவாதப் போக்குகளையும், அவற்றுக்குரிய வரலாற்றுக் காரணிகளையும் எடுத்துக்காட்டினேன். படைமுதற்கொள்கை (இராணுவவாதம்) புலிகளிடம் மட்டுமல்ல, உலகெங்கும் அநேகமாய் ஒவ்வொரு ஆயுதப் போராட்டத்திலும் கூடக்குறையத் தலையெடுக்கும் படியான போக்குதான். உரிய நேரத்தில் சரிசெய்யா விட்டால், கட்டுப்படுத்தத் தவறினால் பெருந்தீங்காகி விடலாம்.

விடுதலைப் புலிகளின் தலைமை குறித்தும், அது போராட்டத்தை வழிநடத்திய விதம் குறித்தும் தமிழினி காணும் குறைகள் இது வரை யாருமே சொல்லாதவை அல்ல. மற்றவர்கள் வெளியிலிருந்து சொன்னார்கள். அல்லது வெளியேறி வந்து சொன்னார்கள். தமிழினி உள்ளிருந்து சொல்கிறார், செறிவான பட்டறிவுடன் சொல்கிறார். தனிமனித வழிபாடு, உள்ளியக்க சனநாயகமின்மை, படைவலிமை மீது மிகை நம்பிக்கை இவற்றை வெறும் கோட்பாட்டளவில் சொல்லாமல், குறிப்பான நேர்வுகளின் அடிப்படையில் சொல்கிறார். இந்தக் குறைகளை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

ஏன் இதையெல்லாம் இப்போது சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்குத் தமிழினியிடமிருந்து கிடைக்கும் விளக்கம் நெஞ்சைத் தொடுகிறது:

நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட போராட்டம் இலட்சோப இலட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படி பூச்சியமானது? போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன். நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறி விட்டோம். ஆயுதங்களைப்பதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.

தமிழினி இயக்கத் தலைமைக்கு உண்மையாக இருந்தார், அதை விடவும் மக்களுக்கு உண்மையாக இருந்தார் என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்தி நிற்கிறது. கொள்கைப் பற்று, இயக்கப் பாசம், கட்சிக் கட்டுப்பாடு, தலைமை விசுவாசம் எல்லாவற்றை விடவும் பெரியதொன்று உண்டென்றால் அது மக்கள் மீதான மாறா அன்புதான். நாம் செய்கிற, செய்யத் தவறுகிற ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள் என்ற கவலைதான்!

இந்த ஒரு பாடத்திற்காகவே ஒரு கூர்வாளின் நிழலில் நாம் ஒவ்வொருவரும் படித்து உணர்வேற்றவும் அறிவேற்றவும் வேண்டிய நூல்.

                                                                                                             – தியாகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 8 = 12

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>