தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி – (1) தேசியம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? – தியாகு.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் 2015 நவம்பர் தொடங்கி 2016 மே முடிய தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் மார்க்சியம் பெரியாரியம் தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் பத்துக் கட்டுரைகள் கொண்ட ஒரு தொடர் எழுதினார். தந்தை பெரியார் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 2014 செப்டம்பர் 20ஆம் நாள் இளந்தமிழகம் இயக்கம் சென்னையில் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, பாவலர் தமிழேந்தி, செந்தில் ஆகியோருடன் நானும் ஆற்றிய உரைகளைத் தொகுத்து பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் 2015இல் வெளிவந்த குறுநூலுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டதே தோழர் பெ.ம.வின் கட்டுரைத் தொடர்.

இந்தத் தொடர் கட்டுரைகளோடு மேலும் எட்டுக் கட்டுரைகளையும் சேர்த்து திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? என்ற நூல் பன்மை வெளியீடாக வந்துள்ளது. இந்நூலில் தோழர் பெ.ம. முன்வைத்துள்ள கருத்துகளுக்கு மறுமொழியாக — குறிப்பாக என் உரைக்கு அவர் தெரிவித்துள்ள மறுப்புரைகளை மையப்படுத்தி — இதை எழுதுகிறேன். எப்போதோ எழுதியிருக்க வேண்டும், தமிழ்த் தேசம் வெளிவராமலிருந்ததால் முடியாமற்போயிற்று.

பெ.ம. எழுதுகிறார்:

“இந்நூலைத் திறனாய்வு செய்வோரிடம் நான் எந்தச் சலுகையும் கோரவில்லை. தருக்கம் என்பது ஒரு கருத்துப் போர் என்ற புரிதல் எனக்குண்டு!”

எனக்கும்தான்! கடந்த காலத்தில் போலவே இப்போதும்!

விவாதம் என்பது உண்மையைக் கண்டறிவதற்கும் பிறர் காணச் செய்வதற்குமான முயற்சியே தவிர, ஒருவரை ஒருவர் எப்படியேனும் வென்றடக்கும் சண்டைக் களமன்று என்ற புரிதலோடுதான் இந்தக் கருத்துப் போரில் என்னைப் பணிவுடன் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

“இந்நூலில் விவரப் பிழைகள் இருந்து அவற்றை நண்பர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்” என்கிறார் பெ.ம. என்னைப் பொறுத்த வரை, விவரப் பிழைகள் மட்டுமல்ல, கருத்துப் பிழைகள் இருந்து யார் சுட்டிக்காட்டினாலும் திருத்திக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

என் உரையில் விவரப் பிழை என்று பெ.ம. சுட்டிக்காட்டும் செய்தியை நேர்செய்து விட்டு மையப்பொருளுக்குச் செல்லலாம் எனக் கருதுகிறேன். 1938 மொழிப் போராட்டத்தின் போது பெரியாரைத் தமிழர் தலைவராகப் போற்றியவர்களில் சிலரைச் சொல்லும் போது கி.ஆ.பெ. விசுவநாதம், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் என்ற வரிசையில் தியாகராயர் என்ற பெயரையும் குறிப்பிட்டிருந்தேன். நான் சர் பிட்டி தியாகராயரைச் சொன்னதாகப் புரிந்து கொண்டு, அவர்தான் 1925ஆம் ஆண்டே மறைந்து விட்டாரே என்று பெ.ம. சுட்டிக்காட்டியுள்ளார். சரி, ஆனால் நான் குறிப்பிட்டது பிட்டி தியாகராயரை அல்ல, கருமுத்து தியாகராயரைத்தான்! அவர் நடத்திய தமிழ்நாடு இதழை நீண்ட காலம் நூலகத்தில் படித்து வந்த நினைவுண்டு. ஒருவேளை, அவரைத் தியாகராயர் என்று சொல்லாமல் தியாகராசர் என்று சொல்லியிருந்தால் குழப்பம் வராமற் போயிருக்கலாம். முதல் மொழிப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை என் ‘விவரப் பிழை’ தூண்டியிருக்குமானால் மகிழ்ச்சி!

சரி, இந்த விவாதத்தின் மையப்பொருளை எடுத்துக் கொள்வோம். பெரியாரும் தமிழ்த் தேசியமும் கருத்தரங்கில் ‘தேசியம்’ என்பதற்கான அடிப்படை வரையறுப்பை யாரும் பேசவில்லை என்று பெ.ம. குறைபட்டுக் கொள்கிறார். தேசியம் என்றால் என்ன? குறிப்பாகத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? பெ.ம. எந்தக் குறையும் வைக்காமல் இந்த அடிப்படை வரையறுப்பைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் – வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அப்படி – வழங்கியுள்ளார். அது சரியா தவறா? என்ற வினாவுக்குள் நுழையுமுன்… ஒரு வியப்புக் கலந்த அதிர்ச்சியைச் சொல்லியாக வேண்டும்:

தோழர் பெ. மணியரசன் அவர்களோ அடியேனோ தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கும் அரசியலுக்கும் புதியவர்கள் அல்ல. மார்க்சிஸ்டு (சிபிஎம்) கட்சிக்குள் தேசிய இனச் சிக்கல் குறித்து அவரும் தோழர்களும் ஒரு கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்த போது நான் சிறையிலிருந்தேன் என்றாலும், அவர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகக் கட்சித் தலைமைக்கு எழுதினேன். பெ.ம.வை மறுத்துத் தலைமை சார்பில் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவான நீண்ட மறுப்புரைகள் எழுதினேன். சிறையிலிருந்து விடுதலையான பின் அவர்களோடு நீண்டதொரு கருத்துப் போராட்டம் செய்தேன். இந்தப் போராட்டத்தில் தமிழீழ விடுதலை தொடர்பான நிலைப்பாட்டுக்கு முதன்மைப் பங்கு இருந்தாலும், அடிப்படையில் அது தேசிய இனச் சிக்கலையே மையப்படுத்தியது. முடிவில் திலீபன் மன்றம் என்ற அறிவிப்பை வெளியிட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். இஃதனைத்தும் பெ.ம.வுக்குத் தெரியும். இந்தக் காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படை நோக்கில் நானும் பெ.ம.வும் உடன்பட்டே இருந்தோம்.

முதலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை முன்னணி, பிறகு தமிழ்த் தேசிய முன்னணி இரண்டிலும் நாங்கள் இருவரும் அமைப்புக் குழுவில் இடம்பெற்று இயங்கினோம். இந்த இரு முன்னணிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் தன்னுரிமையா? தேசிய விடுதலையா? என்ற பொருள் குறித்து அவர் சார்ந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியோடும் நான் சார்ந்த தமிழ் தமிழர் இயக்கத்தில் ஒரு பிரிவினரோடும் நான் வெளிப்படையாக நடத்திய விவாதம்… கொள்கைவழித் தமிழ்த் தேசிய அரசியலில் அக்கறையுள்ள அனைவருக்கும் தெரிந்த செய்தி.

தமிழ்த் தேசிய முன்னணி கலைந்து போன பிறகும், தமிழீழ ஆதரவு, ஆற்று நீர் உரிமை, அடக்குமுறை எதிர்ப்பு, ஏதிலியர் உரிமை உள்ளிட்ட பல்வேறு களங்களில் சேர்ந்து செயல்பட்டுள்ளோம். இன்று வரை செயல்பட்டும் வருகிறோம். சுருங்கச் சொல்லின், 1980களின் பிற்பகுதியில் தொடங்கி இன்று வரை தமிழ்த் தேசிய உரிமைக் களத்தில் ஒத்த கருத்துடன் இயங்கி வருகிறோம். அதற்காக எங்களுக்கிடையே வேறுபாடுகளே இருக்கக் கூடாதென்று சொல்லவில்லை, ஆனால் தேசியம் என்றால் என்ன? குறிப்பாகத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்று வரையறுப்பதிலேயே வேறுபாடு என்றால், வியப்பாக இல்லையா? ஒருசிலருக்காவது அதிர்ச்சியும் கூட இருக்கலாம்.

இருக்கட்டும், தேசியம், குறிப்பாகத் தமிழ்த் தேசியம் குறித்து நான் என்ன சொல்கிறேன்? பெ.ம. என்ன சொல்கிறார்?

நான்: “தேசியம் என்ற சொல்லை அதற்குரிய வரலாற்றுச் சமூகவியல் பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அல்லது தேசிய இனத்தினுடைய ஆக்கக் கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னால், ‘மொழி, பண்பாடு, நிலம், பொருள், வரலாறு’. பண்பாடு என்பது ‘நாம்’ என்கிற மனநிலை, அது வெளிப்படுகிற கருத்தியலைச் சொல்கிறது. இதுதான் தேசியத்தின் அடிப்பொருள். அதன் வளர்ச்சி பெற்ற அறிவியல் பார்வை என்பதெல்லாம் பிறகு. அது தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா, தன்தீர்வுரிமையா (சுயநிர்ணய உரிமையா) என்பதெல்லாம் பிறகு. தேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக் கொண்டால்…”

எனது இக்கூற்றில் “தேசியம் குறித்த வரையறுப்பும் தெளிவின்றி இருக்கிறது, தமிழ்த் தேசியம் குறித்த வரையறுப்பும் துல்லியமின்றி இருக்கிறது” என்பது பெ.ம.வின் குற்றாய்வு. எனது ஒரு மேடைப் பேச்சு. பெ.ம.வினுடையது எழுத்து. ஆனால் எனது மேற்படிக் கூற்றில் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக நான் இப்போதும் கருதவில்லை.

பேச்சை விடவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டியது எழுத்து. ஆனால் அடிப்பொருள், அடிப்பொருள் என்று நான் அடித்துக் கொள்கிறேனே, அது என்ன அடிப்பொருள் என்று பெ.ம. சற்றேனும் கருதிப் பார்த்தாரா? அடிப்பொருளாவது, நுனிப்பொருளாவது, எல்லாம் ஒரு பொருள்தான் என்றாவது சொன்னாரா? தேசியத்தின் அடிப்பொருள் (ELEMENTARY SENSE), வளர்ச்சி பெற்ற முழுப் பொருள் (DEVELOPED AND FULL SENSE) என்ற வேறுபாடெல்லாம் அறிவியல் ஆய்வுக்குத் தேவையற்றது என்று நினைத்தால் வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

தேசியம், தமிழ்த் தேசியம் பற்றிய என் பார்வையை மேலும் விளக்குவதற்கு முன் பெ.ம.வின் தெளிவான, துல்லியமான வரையறுப்பு என்னவென்று தெரிந்து கொள்வோம்:

“…தமிழ்த் தேசியம் சாதி ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவம், பொருளாதாரச் சமத்துவம் போன்ற பலவற்றையும் தனது பிரிக்க முடியாத உட்கூறுகளாகக் கொண்டுள்ளது என்பது நம் நிலைப்பாடு. அதே வேளை தமிழ்த் தேசியம் என்பது தமிழ்நாடு விடுதலை, இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற முதன்மை இலக்கைக் கொண்டது என்பது நமது வரையறுப்பு. ஏனெனில் “தேசியம்” என்பதே ஒரு தேசத்தின் இறையாண்மை மீதுதான் நிற்கிறது.”

தமிழ்த் தேசியத்தின் முதன்மைக் குறிக்கோள் தமிழ்நாடு விடுதலைதான், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசுதான் என்பதோடு, “தேசியம்” என்பதே ஒரு தேசத்தின் இறையாண்மை மீதுதான் நிற்கிறது என்கிறார் பெ.ம.

இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் குறிக்கோள் தமிழ்நாடு விடுதலைதான் என்பதே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடும் கூட. இதிலே சிக்கல் இல்லை. ஆனால் பொதுவாகத் தேசியம் என்றாலே தேசத்தின் விடுதலை, இறையாண்மை அதன் அடிப்படையாக இருந்தாக வேண்டும் என்று பெ.ம. வலியுறுத்துகிறார். அதாவது தேச விடுதலையை, இறையாண்மையை வலியுறுத்தாத தேசியம் தேசியமே ஆகாது என்கிறார். தேச விடுதலையை, இறையாண்மையைத் தேசியத்தின் இன்றியமையாக் கூறு எனக் கருதுகிறார். மீண்டும் சொல்கிறார்:

“ “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” கருத்தரங்கில் “தேசியம்” என்பதற்கான அடிப்படை வரையறுப்பை யாரும் பேசவில்லை. இறையாண்மையுள்ள தேச அரசு என்பது தேசியத்தின் உயிர்நாடி… சனநாயகம், சாதி ஒழிப்பு இரண்டும் தமிழ்த் தேசியத்தில் பிரிக்க முடியாத கூறுகள்தாம்; முகாமையானவைதாம். ஆனால் தமிழ்த் தேசியத்தின் அடித்தளமான தமிழ்நாடு விடுதலை இக்கருத்தரங்கில் உரியவாறு பேசப்படவில்லை.”

பொதுவாகத் தேசியம் குறித்து: இறையாண்மையுள்ள தேச அரசு என்பது தேசியத்தின் உயிர்நாடி என்பதும், குறிப்பாகத் தமிழ்த் தேசியம் குறித்து: தமிழ்த் தேசியத்தின் அடித்தளம் தமிழ்நாடு விடுதலையே என்பதும் பெ.ம.வின் திட்டவட்டமான சாற்றுரை.

பெ.ம.வின் பார்வையில், தேச விடுதலையைக் கோராத எதுவும் தேசியமாகாது. என் பார்வையில், தேசியம் என்பதன் அடிப்பொருள் நாம் என்கிற மனநிலையை, அது வெளிப்படும் பண்பாட்டைக் குறிக்கும். தேசியம் வளர்ந்து சென்று, தனக்கான அரசியல் குறிக்கோளாகத் தேச விடுதலையை வரித்துக் கொள்ளும் போது முழுமையடைந்து தேசியம் எனும் அரசியல்-கருத்தியலாக மலர்கிறது.

தேசியம் என்பது முதலாவதாக ஓர் உணர்ச்சி, ஒரு மக்கள் கூட்டத்தின் மனவுணர்வு. இப்படித்தான் அது வரலாற்றில் தொடங்குகிறது. பிறகுதான் அது ஒரு சமூக அறிவியலாக வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தச் சமூக அறிவியல் தேசிய அரசியலையும் தேசியப் பொருளியலையும் தேசியப் பண்பாட்டையும் தன் உறுப்புகளாகக் கொண்டு வளர்கிறது. தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியிலான இந்த இருவேறு படிநிலைகளையும் நான் அடிப்பொருள், முழுப்பொருள் என்று வகைப்படுத்துகிறேன்.

இந்த வேறுபாட்டை நான் என் உரையில் முழுமையாகக் வெளிக் கொண்டுவரவில்லைதான். என் உரை நோக்கத்துக்கு அது தேவைப்படவில்லை. ஆனால் அடிப்பொருள் என்பதை ஒரு முறைக்கு இரு முறை வலியுறுத்துகிறேன். பெ.ம. இதைக் கிஞ்சிற்றும் கண்டுகொள்ளாமல் “பார்த்தீர்களா தியாகுவின் தேசியத்தை?” என்று எள்ளி நகையாடுகிறார்.

தேச விடுதலைதான் தேசியத்தின் உயிர்நாடி என்பதற்கு பெ.ம. எவ்விதச் சான்றும் தரக் காணோம். நேர்மாறான சான்றுகளை அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம். இப்போதைக்கு நான் பெ.ம.விடம் பணிவன்புடன் கேட்க விரும்புவது:

தேச விடுதலைதான் தேசியத்தின் உயிர்நாடி என்பதை எப்போது கண்டுபிடித்தீர்கள்? என்று தமிழ்த் தேச விடுதலை என்ற நிலைப்பாட்டைக் கைக்கொண்டீர்களோ அன்றுதான் உண்மையில் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா? அதற்கு முன் நீங்கள் – உங்கள் தலைமையிலான இயக்கம் சரியான தமிழ்த்தேசியத்தை வந்தடையவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

(மறுமொழி தொடரும்)                                                                             -  தியாகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


8 + 8 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>