தமிழர் ஒத்துழையாமை இயக்கம்

*விவசாயிகள் போராட்டம் வெல்லத் துணை நிற்போம்!*

*காவிரி, நெடுவாசல் – இந்திய அரசின் வஞ்சகம்*

*தமிழர் ஒத்துழையாமை இயக்கம்*

*இந்திய அரசின் பிரதமரும் அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது!*

*தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் போராட்ட அறிவிப்பு!*

தமிழ்நாட்டின் விவசாயிகள் கோவணம் கட்டிக் கொண்டும் பிணங்களாய்ப் படுத்துக் கொண்டும் தில்லியில் போராடும் காட்சிகளை அன்றாடம் பார்த்து வருகிறோம். தஞ்சையிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகமெங்கும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்து வருவதும் தமிழகக் காவல்துறை அச்சுறுத்தி அடக்குவதும் நடந்து கொண்டுள்ளன. மெரினாக் கடலுக்குள் நின்று மாணவர்கள் போராடியது அடக்குமுறையை மீறி தமிழகத்தின் கொந்தளிப்பு பனிமலை முகடாய் வெளிப்பட்டதற்கான சான்றாகும்.

தில்லிக்கே வந்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை இந்திய அரசு செயலளவில் காலில் போட்டு மிதித்துவிட்டது. *காவிரி மேலாண்மை வாரியம்* அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி சென்ற 15.03.2017 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர்ப் பூசல் சட்டத்தில் (1956) திருத்தத்திற்கான நோக்க அறிக்கையை முன்வைத்தார். இந்தத் திருத்தத்தில் கண்டுள்ளபடி இந்தியாவில் ஆற்று நீர்ச் சிக்கலுக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படுமாம். இப்போதுள்ள தீர்ப்பாயங்கள் தோற்றுவிட்டதால் இந்த ஏற்பாடாம். அதாவது தமிழ் மக்கள் போராடிப் பெற்ற காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இந்திய அரசு நயவஞ்சகமாய் நழுவிக் கொள்கிறது. ஆற்று நீர் உரிமைப் பறிப்புக்கு அந்த உரிமையையே இல்லாமலாக்குவதுதான் தீர்வு என்பதே இந்திய அரசு கண்டுள்ள வழி!

ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை முறியடிப்பதற்கான நெடுவாசல் போராட்ட எழுச்சி தமிழகத்திற்கே வழிகாட்டியது. எரிவாயு எடுப்பதற்கென்று சொல்லி விளைநிலத்தைப் பாழ்படுத்தும் விபரீதத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலிலும் வடகாட்டிலும் மற்ற ஊர்களிலும் மக்கள் போராடினார்கள்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை இந்திய அரசாலோ தமிழக அரசாலோ மறுக்க முடியாத நிலையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றது தமிழக அரசு.மக்கள் விருப்பத்திற்கு மாறாக இதைச் செயல்படுத்த மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். போராட்டக் குழுவினரைத் தில்லிக்கும் அழைத்துப் போய் உறுதி வாங்கிக் கொடுத்தார். இந்த உறுதிமொழிகளை நம்பி மக்கள் தமது போராட்டத்தை ஒத்தி வைத்திருந்த நிலையில் இந்திய அரசு நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்து ஒப்பந்தங்கள் செய்துள்ளது. குறிப்பாக நெடுவாசலில் ஜெம் லேப்ரட்டிரீஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் வேலையை ஒப்படைத்துள்ளது. மத்திய எரிசக்தித் துறை அமைச்சரும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என உறுதிபட அறிவித்துள்ளார். இது மக்கள் விருப்பம் பற்றிய குறைந்தபட்ச சனநாயகக் கண்ணோட்டத்தைத் தூக்கியெறிந்த அராசகச் செயலாகும். இதைத் தட்டிக் கேட்கும் முயற்சி கூட தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடாகும்.

தமிழ்நாட்டின் உழவுக்கும் உழவர்க்கும் அதன்வழி தமிழ்நாட்டிற்கும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்துள்ளது நரேந்திர மோதியின் இந்திய அரசு! இதை எதிர்த்துத் தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். இந்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோதியானாலும் பிற மத்திய அமைச்சர்களானாலும் தமிழ்நாட்டுக்குள் அமைதியாக வந்து திரும்புவதை ஏற்க முடியாது. மீறி வந்தால் அவர்களை எதிர்த்துக் *கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்* நாடெங்கும் நடக்கட்டும்.

*தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்* இத்தகைய போராட்டத்தை நடத்தும். மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், வணிகர்கள், பெண்கள், தோழமை அமைப்புகள், கட்சிகள், பொது மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

வே.பாரதி
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
31.03.2017

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 8 = 10

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>