வேண்டும் ஜோயல் பிரகாசுக்கு நீதி! – மலையன்

தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்வில் உயர்ந்த சிகரங்களைத் தொடுவது மட்டுமல்ல, அப்படிக் கனவு கூடக் காணக் கூடாது என்கிறது பார்ப்பனீயம். சாதியம் தந்துள்ள சமூகப் பொருளியல் தடைகளையெல்லாம் உடைத்து ஒளிரும் அறிவுச் சுடர்களை அது புதைகுழிக்குத் தள்ளுகிறது. ரோகித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா இப்போது ஜோயல் பிரகாசு!

தற்கொலை ஏற்கத்தக்கதல்ல என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த உளவியலின் காரணிகளை மறைத்து அரண் செய்ய இடமளித்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்போம்.

ஜோயல் பிரகாசு – வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை கிராமத்தின் மருந்தாளுநர் பார்த்திபன் அவர்களின் இளைய மகன். சென்னையில் தங்கிப் படிக்கப் பொருளியல் இடம்தராததால் வேலூரிலிருந்து தினம்தினம் ஆறுமணிநேரம் தொடர்வண்டியில் பயணித்துப் படிப்பைத் தொடர்ந்து வந்தவர். இத்தனையிருந்தும் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பீங்கான் கலைத்துறையில் சேர்ந்துள்ளார். அவரின் கூர்மையான கலைத்திறனை இங்கே தந்துள்ள ஓவியம், சிற்பங்களிலிருந்தே உணரலாம். இவ்வளவு சிறப்புகள் கொண்ட மாணவனைக் கல்லூரி ஆசிரியர்கள் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டும். மாறாக துறைத் தலைவர் இரவிக்குமாரால் அவர் இழிவுக்குள்ளாக்கப்பட்டு தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். பிரகாசின் சாவுக்குக் காரணமான இந்நிலைக்கு இரண்டு காரணங்கள் – ஒன்று தாழ்த்தப்பட்டவர், மற்றொன்று அவர் ‘ஜோயல்’ பிரகாசு!

இரவிக்குமார் வகுப்பறையிலேயே புராணங்களின் ‘சிறப்பை’ எடுத்தியம்புபவர் என்றால் அந்தச் சூழலை நாம் புரிந்து கொள்ள அதுவே போதுமானது. பிரகாசு தேவாலயம் போவதைத் துறைத் தலைவர் கேள்வி எழுப்பியதும், பறப்பயல் சோறு போட்டால் அந்த மதம் சேர்வாயா என இழிசொல் பேசியதுமான ஒரு சோற்றின் பதம் போதும் ஒரு பானைச் சோற்றுக்கு!

பொதுவாகக் கவின் கல்லூரியில் போதிய பேராசிரியர்களும் இல்லை ஆய்வுகள் பயிற்சிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மாணவர் சேர்க்கையில் ஊழலும் நடப்பதாக மாணவர்கள் சொல்லப்படுகிறது. உயர்நிலை, மேல்நிலை படிப்புகள் மட்டும் முடித்துப் பயிலும் DFA, BFA படித்தவர்கள்தான் MFA வுக்குப் பாடம் எடுக்கும் அவலநிலை. பேராசிரியராக MFA பட்டம் பெற்றிருந்தாலும் கூடப் போதாது, அவர் தன் கலைப்படைப்புகளுக்கான கண்காட்சி நடத்தியிருக்க வேண்டும். ஆய்வு செய்து முனைவர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பிரகாசின் துறைத் தலைவர் இதில் எந்தத் தகுதியும் பெற்றிராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தளவு அடிப்படை நேர்மையற்றவர்களால் புறக்கணிக்கப்படும் போது பிரகாசு எதிர்க்க முற்படுகிறார். கேள்விகள் எழுப்புகிறார். அவை சூழலை இன்னும் கடுமையானதாக மாற்றிவிடுகின்றன.

இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கல்லூரியின் தரமின்மையை எதிர்த்து பிரகாசு மட்டுமே நிற்கிறார். மற்ற மாணவர்கள் சிவராஜ் என்ற ஆசிரியரின் மிரட்டலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை. அதையும் தாண்டி தமது கல்வித் தரத்திற்காகவேனும் மாணவர்கள் ஒன்றுபட்டிருந்தால் பிரகாசு களத்திலும் மனத்திலும் வலிமை பெற்றிருப்பார். ஒன்றுபட்டு நிற்கும் மாணவர்களில் ஒருவரை மட்டும் பழிவாங்கியிருக்கவும் முடியாது. இது எதிர்காலத்தில் மாணவச் சமூகத்தின் படிப்பினையாகட்டும். அதோடு இது நிற்க!

தன் மீதான இழிவும் நிர்வாகத்துடனான முரணும் பிரகாசின் கல்விச் சூழலைக் கெடுக்கின்றன. கல்வி உயர்வுக்குக் கல்லூரிச் சூழல் துணை செய்வதற்கு மாறாக அதுவே எதிரானதாக அமைந்துவிடுகிறது. பிரகாசு கல்லூரிக்கு மகிழ்வோடு போவது தடைபட்டு கல்விப் பயணம் தேங்குகிறது. தன் கல்விக் கனவு கண்முன்னாலேயே சிதையும் போது வாழ்வை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துவிட்டார் எனத் தெரிகிறது.

ஜோயல் பிரகாசின் இறப்புக்கு துறைத் தலைவர் இரவிக்குமாரும் கல்லூரி முதல்வருமே முழுப் பொறுப்பு! அவர்கள் தற்கொலைக்குத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட வேண்டும். பிரகாசின் காணொளிக் காட்சி உண்மைகள் மீது ஒளிபாய்ச்சிய பின்னும் எழும்பூர் காவல் நிலையம் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதியாமல் சந்தேகத்துக்குரிய மரணம் எனப் பதிந்துள்ளது. இது உரியவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பதே இவ்வகைக் குற்றத்திற்குத்தான் எனும்போது அதன் கீழும் குறிப்பாக இரவிக்குமார் மீது வழக்குப் பதிய வேண்டும். பிரகாசு குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் துயர்தணிப்பு நிதியும் வழங்கப்பட வேண்டும். இது அனைத்தையும் தமிழக அரசே செய்ய வேண்டும்.

வழக்குப் பதிவு குறித்து நாம் சொல்லும் முரண்களுக்கு காவல்துறை காணொளிக் காட்சியை ஆய்வுக்குட்படுத்த 7 நாட்கள் வேண்டும் என்கிறது. காணொளிக் காட்சிக்கு சரி அவரின் கடிதத்தையும் ஆய்வுக்கூடம் அனுப்ப வேண்டுமா என்ன! தொழல்நுட்பக் காலத்தில் காணொளிக்குக் கூட எதற்கு அவ்வளவு தாமதம். எல்லாவற்றையும் விட முறையீடு செய்தால் முன்னுரிமை தந்து வழக்குப் பதியும் காவல்துறையின் விதியில் இதற்கு மட்டும் விதிவிலக்கா..!

காவல்துறையும் அதன் அரசும் சாதி காப்பதில் விதிவிலக்குக்கு இடமளிக்காதவை. என்றென்றும் அரசும் அதன் இயந்திரமும் சாதியம் காப்பதைக் கூச்சமின்றிச் செய்பவை.

எடப்பாடியினுடைய காவல்துறையின் சாதியப் போக்கைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்சொன்ன கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறது. நீதிப் போராட்டத்தில் இணைந்து நிற்கும் என உறுதியேற்கிறது.

கலை நுணுக்கமும் திறனும் நிறைந்த மாணவர் ஜோயல் பிரகாசின் இறப்பு இந்தியத் தேசத்தின் இழப்பு இல்லையா? ஆனால் அதைவிட இந்தியத்தைக் காத்து நிற்கும் தூணே சாதிதான்! தூணைத் தூளாக்கினால் இந்தியத் தேசம் நொறுங்கி விடும். சாதி காக்காமல் இந்தியத் தேசம் காக்க முடியாது. தேசம் காக்கத்தான் பிரகாசை பாரத மாதாவிற்குப் பலியிடுகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


1 + 7 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>