நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில்… அடுத்து என்ன? – உருத்திரகுமாரன் விரிவான பேட்டி

1) கேள்வி: தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு அல்லது தீர்வுகள் வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தச் செயல்வழி ஒன்று தொடர்கிறது; இது தொடர்பாக உள்ளூர்த் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பான சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்; மிக அண்மையில் உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் குழுக்கள் மீளிணக்கம் நோக்கிய நேர்வகை முயற்சிகள் எடுத்து வருகின்றன – இவை உள்ளிட்ட இப்போதைய அரசியல் சூழலைக் கருதிப் பார்க்கையில், சிறிலங்கா தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலையிட்டுச் செய்திருப்பவை என்ன?

தமிழ் மக்களின் இறைமை அவர்களைச் சார்ந்ததே என்பதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு. 1972 மற்றும்/அல்லது 1978 அரசமைப்பு ஆக்கும் செயல்வழியில் தமிழ் மக்கள் பங்கேற்க வில்லை என்பதால், அவர்கள் தமது இறைமையை கொழும்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. ஆகவே, இன்று, எந்தவோர் அரசியல் தீர்வுக்கும் முன்னதாக, அந்த அரசியல் தீர்வுச் செயல்வழியில் தாங்கள் எவ்வடிவில் பங்கேற்க விரும்புகிறோம் என்பதைத் தமிழ்த் தேச மக்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். சிறிலங்காத் தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ்த் தேசிய இன மக்கள் தமது விருப்பத்தை வெளியிடுவதற்குரிய அமைதியான, சனநாயக வழிகளில், ஒரு பொதுவாக்கெடுப்பு ஊடாகத் தங்கள் அரசியல் வருங்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கமுதல் எடுத்து வரும் நிலைப்பாடு. நாம் எதிர்நோக்கும் பொதுவாக்கெடுப்பு சுதந்திரத் தனியரசுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் வாக்களிப்பதற்கானது அன்று. ஒற்றையாட்சி அரசு, கூட்டாட்சி அரசு, மாக்கூட்டாட்சி அரசு, சுதந்திரத் தனியரசு போன்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பாக அஃதமையும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்ற ஆண்டு நியூயார்க் நகரில் நாங்கள் நடத்திய மாநாட்டில் அறிஞர்களும் செயற்பாட்டளர்களும் அடங்கிய “வேண்டும் பொதுவாக்கெடுப்பு” எனும் குழு அமைக்கப்பட்டது. ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அவர்கள் விரைவில் ஒரு செயல்திட்டம் வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.

2) கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்தியல் குழுக்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று வாதஎதிர்வாதம் செய்யக் கூடியவை என்னும் சூழலில், உள்நாட்டில், குறிப்பாக சிங்களரிடையே இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற எதிர்வகைப் பார்வை உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் பிரிவினைவாத ஈழக் கொள்கைக்கான சுடரேந்திகளாக அறியப்பட்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவான பிரிவினைவாத மற்றும்/அல்லது தேசிய இனவாதப் பார்வைகள் கொண்டதா?

என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்குப் பொதுவாக்கெடுப்பின் ஊடாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துப் புலம்பெயர் குழுக்களிடையிலும் பொதுக்கருத்து காணப்படுகிறது. எமது அரசியல் வருங்காலத்தை பொதுவாக்கெடுப்பின் ஊடாக முடிவு செய்து கொள்வது அடிப்படை மனித உரிமை ஆகும். ஆக, இது அரசியல் சிக்கல் மட்டுமன்று, இன்னுங்கூட முக்கியமாக மனித உரிமைச் சிக்கலும் ஆகும். பன்னாட்டு நடைமுறைகளும் இதற்கு ஏற்ற முறையிலேயே உள்ளன. தெற்கு சூடான் (மச்சாகோஸ் வகைமுறை) ஆனாலும், புனித வெள்ளி உடன்பாடு ஆனாலும், செர்பிய-மொண்டனிக்ரோ உடன்பாடு ஆனாலும், பாப்புவா நியூ கினி – பூகன்வில் அமைதி உடன்பாடு ஆனாலும், அனைத்தும் காட்டும் வழி தேசிய இனச் சிக்கல்களைப் பொது வாக்கெடுப்பின் ஊடாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே. இங்கு மேலும் ஒன்றை நான் உரைத்தாக வேண்டும்: பொதுவாக்கெடுப்பு என்று சொல்லும் போது நாடு முழுமைக்குமாகச் சொல்லவில்லை, குறிப்பிட்ட தேசிய இனத்துக்கான பொதுவாக்கெடுப்பையே சொல்கிறேன்.

எடுத்துக்காட்டாக, கனடிய உச்ச நீதிமன்றம் குவிபெக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தச் சொன்னதே தவிர, கனடா முழுக்க நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை.
அதேபோது சிறிலங்கா அரசு நெகிழ்வற்ற சிங்கள பௌத்த இனநாயகத் தன்மை கொண்டதாக இருப்பதால் சுதந்திரத்தின் ஊடாகத்தான் நாங்கள் இலங்கைத் தீவில் கண்ணியத்துடன் அமைதியாக வாழ முடியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

1958, 1977, 1983 ஆண்டுகளிலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டும் தமிழர்கள் பெருந்திரளாகக் கொலையுண்டதும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதும், சிறிலங்காப் படையினர் தமிழ்ப் பெண்களை வைத்துப் பாலியல் வல்லுறவு முகாம்கள் நடத்தி வருவதாக அண்மையில் வந்துள்ள செய்திகளும் இந்த எமது நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டுக்கும் சான்றுபகரக் கூடியவை ஆகும். காலஞ்சென்ற இதழியலர் தார்சி விட்டாச்சி எழுதிய ‘நெருக்கடிநிலை – 58’ என்ற நூலையும் கவனப்படுத்த விரும்புகிறேன். 1958ஆம் ஆண்டு தமிழர்கள் பெருந்திரளாகக் கொலை செய்யப்பட்ட உடனே இந்நூல் எழுதப்பட்டது. அப்போது விட்டாச்சி தமது நூலின் முடிவில் “சிங்களர்களும் தமிழர்களும் பிரிந்து விடும் நிலைக்கு வந்து விட்டார்களா?” என்று கேட்டார். தமிழர்கள் இந்தக் கேள்வியை 1958 முதற்கொண்டே கேட்டு வருகிறார்கள்.

1977 பொதுத்தேர்தலில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப்படுவதைப் பெருவாரியாக ஆதரித்து வாக்களித்தார்கள். ஆனால் இப்போதே ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்: தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ கூட்டாட்சிக்கோ “கூட்டாட்சியல்லாத கூட்டாட்சிக்கோ” ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

3) கேள்வி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் தரும் விடை பிரிவினைக்கு ஆம் என்று இருக்குமானால், நாட்டின் சாலச் சிறந்த நலன்களுக்கும், நாட்டிற்குள் வாழும் அனைத்துச் சமுதாயங்களின் நலன்களுக்கும் அது முரணாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதவில்லையா?

சுதந்திரத் தமிழீழ அரசு என்பது சிறிலங்காத் தீவிற்குள் வாழும் அனைத்து சமுதாயங்களுக்கும் இடையே நட்புறவுக்குத் துணைசெய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் மக்களினங்களிடையே அமைதியும் நட்புறவும் மலரச் செய்வதுதான் நோக்கமே தவிர, நிகழமைப்பைக் காப்பதோ நடப்பு எல்லைகளைக் காப்பதோ அல்ல.
மேலும், சுதந்திரத் தனியரசு என்ற வடிவில் நிலைத்த தீர்வு காண்பதன் மூலம் — பேராசிரியர் டொனால்டு ஹொரொவிட்ஸ் தமது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பது போல் — சிங்கள அரசியல் சமூகத்திற்குள்ளான இனவாதக் கூக்குரலை நம்மால் அகற்றக் கூடும். சிங்களத் தலைவர்கள் சாமானியர்களின் அன்றாடச் சிக்கல்களில் முழுமையாகக் கவனம் செலுத்தலாம். அது சனநாயகத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படும்.

சிறிலங்காவுக்கும் தமிழீழத்துக்கும் இடையில் எப்போதும் பதற்றமாக இருக்கும் என்று சிலர் வாதிடக் கூடும். ஆனால் அப்படி இருக்கத் தேவையில்லை என நம்புகிறோம். நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையிலோ சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலோ பதற்றமேதும் இல்லை. கொஞ்சம் பதற்றம் இருக்கும் என்றே வைத்துக் கொண்டாலும், நாடுகளுக்கிடையிலான வன்முறையைக் கட்டுப்படுத்துவதை விடவும் பதற்றத்தை சமாளிப்பதற்கு மேலதிக பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளும் பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றும் இருக்கவே செய்கின்றன.

4) கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பிளவு அல்லது பிளவுகள் உண்டா?

முன்பே சொன்னேன், தமிழர்கள் ஒரு தேசிய இனம், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் தமது உள்ளார்ந்த உரிமையாகிய சுயநிர்ணய உரிமையை மெய்ப்படச் செய்திட வழிசெய்ய வேண்டும் என்பன போன்ற அடிப்படைச் சிக்கல்களில் கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இப்போதுள்ள எல்லைகளுக்குள்ளேயே மெய்ப்படச் செய்திட முடியுமென்று புலம்பெயர் தமிழர்களின் சில குழுக்கள் நம்புவதையும் நான் மறுக்கவில்லை.

5) கேள்வி: இலங்கையில் பிறவாது, இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்த இளையோர் உள்ளனர். தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் கண்கள், செவிகள் வழியே பட்டறிந்துள்ள போர் தொடர்பாகவும், நாட்டிலுள்ள நடப்பு நிலைமை தொடர்பாகவும், சிறிலங்காவை சீரமைப்பதில் தங்களுக்குள்ள எதிர்காலப் பங்குப்பணி குறித்தும் இந்த இளையோரின் கண்ணோட்டத்தை வடித்திட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதென்ன?

மனித உரிமை பற்றிய உரையாடல் வழியாகவும் பண்பாட்டுய் நிகழ்வுகளின் ஊடாகவும் இளைய தலைமுறையின் இதயத்திலும் மனத்திலும் அவர்களின் ஓர்மையையும் அடையாளத்தையும் விதைக்கிறோம். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு குறித்தும், தொடர்ந்துவரும் கட்டமைப்பியல் இனவழிப்பு குறித்தும், அவர்களின் உற்றார் உறவினர் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய அவர்களின் அறக் கடன் குறித்தும் உணர்வூட்டுகிறோம்.

இப்போது ஜெனிவாவிலும், தாயகத்திலும் கூட, எமது மக்களுக்கு நீதி கிட்டச் செய்வதில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கக் காண்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


5 + = 11

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>