தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி (4) – ஆய்வின் பெயரால் அவதூறு – தோழர் தியாகு

தேசியம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்ற வினாக்களை மையப்படுத்திய இந்த விவாதத்தில், தேசம் பற்றிய தோழர் ஸ்டாலினின் வரையறுப்பைத் தோழர் பெ. மணியரசன் பொதுவாக ஏற்றுக் கொள்வதோடு, அதையே தேசியத்துக்கும் நீட்டிப் பொருத்த முயல்கிறார் எனக் கண்டோம். அப்படியானால், மார்க்சியத்தின் அடிப்படையில் நின்று தேசியம் பேசுகிறாரோ எனத் தோன்றும்.

ஆனால் தேசிய இனச் சிக்கலில் மார்க்சியப் பார்வை குறித்து அவர் சொல்கிறார்:
”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. என்பது நமது திறனாய்வு. அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது கார்ல் மார்க்ஸ் அதை ஆதரித்தார். தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின் சொன்னார். சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக, புறநிலை உண்மையாக தேச விடுதலைப் போராட்டம் இருக்கிறது என்பதை மார்க்சும் லெனினும் கூறவில்லை. ஒரு தேசிய இனம் தனக்கு முரண்பட்ட பிற தேசிய இனங்களிடமிருந்து பிரிந்து போகும் உரிமையான தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டும் இலெனின் வரையறுக்கிறார்.”
(பெ. மணியரசன், திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? பக்கம் 15.)
மார்க்சியத்தின் மீதான இந்தத் துணிச்சலான திறனாய்வுக்கு விரிவாக விடை சொல்லத்தான் வேண்டும். அதற்குமுன், இலெனின் குறித்து பெ.ம. சொல்வது மெய்தானா? என்று பார்த்து விடுவோம்.

“தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின் சொன்னார்” என்று ‘திறனாய்வு’ செய்யும் பெ.ம. இதற்குச் சான்று ஏதும் தரவில்லை. எடுத்துக்காட்டு என்று எதுவும் குறிப்பிடவில்லை.

ஏதாவது ஒரு தேச விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, அந்தப் போராட்டத்தை எந்தெந்தக் கட்டங்களில் இலெனின் ஆதரிக்க மறுத்தார் என்பதைப் பெ.ம. சுட்டிக்காட்டட்டும். தேசியத் தன்னுரிமையை (தேசியத் தன்-தீர்வுரிமையை) ஆதரிக்கக் கூடாத கட்டங்கள் என்று இலெனின் சொன்னவற்றையும் அவர் நம் பார்வைக்கு வைக்கட்டும்.

நான் சொல்கிறேன்: தேச விடுதலைப் போராட்டத்தை, தேசியத் ‘தன்னுரிமையை’ இலெனின் எப்போதும் ஆதரித்தார். எந்தக் கட்டத்திலும் ஆதரிக்க மறுத்ததில்லை.

பெ. ம. சொல்வதன் பொருள்: ஒரு போராட்டத்தைத் தேச விடுதலைப் போராட்டம் என்று ஏற்றுக் கொண்டாலும் இலெனின் அப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு; தேசியத் ‘தன்னுரிமை’ என்று தெரிந்தே இலெனின் அவ்வுரிமையை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு என்பதாகும். பெ.ம.வின் இந்தத் ‘திறனாய்வு’க்கு அடிப்படை ஏதும் உண்டா? பார்ப்போம்.

தேசியத் தன்னுரிமை என்று பெ.ம. குறிப்பிடுவதும், தேசியத் தன்-தீர்வுரிமை என்று நான் குறிப்பிடுவதுமான தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து இலெனின் ஏராளமாக எழுதியுள்ளார். இவற்றுள் முதன்மையான இரு நூல்கள்:1914இல் எழுதிய தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை [THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION]; 1916இல் எழுதிய குமுகியப் புரட்சியும் தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமையும் [THE SOCIALIST REVOLUTION AND THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION].

இந்த இரு நூல்களையோ, வேறெந்த இலெனின் எழுத்தையுமோ எடுத்துக்காட்டித் தோழர் பெ.ம. தமது திறனாய்வை — “தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை, (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின் சொன்னார்” என்ற திறனாய்வை – உரிய சான்றுகளுடன் மெய்ப்பிக்க முற்படவில்லை.
இனியாவது அந்த முயற்சியை அவர் செய்தால் நன்று.

இலெனின் “தேசியத் தன்னுரிமையை” முழுமையாக ஆதரித்தார், அட்டியின்றி ஆதரித்தார் என்பதே என் நிலைப்பாடு. இதற்கான சான்றுகள் இதோ:

1896ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பன்னாட்டுப் பேராயத்தின் தீர்மானத்தை இலெனின் எடுத்துக்காட்டுகின்றார்:
“இந்தப் பேராயம் அனைத்துத் தேசிய இனங்களின் முழு அளவிலான தன்-தீர்வுரிமையையும் ஆதரிப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறது; படைவகை, தேசியவகை அல்லது பிறவகை முற்றாதிக்க நுகத்தடியின் கீழ் அல்லலுற்று வரும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்கள் பாலும் பரிவு தெரிவித்துக் கொள்கிறது….” <1>

தேசியத் தன்-தீர்வுரிமையின் அரசியல் உள்ளடக்கமாகிய பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமைக்கும் பிரிவினைக்குமான தொடர்பை இலெனின் இவ்வாறு வரையறுக்கிறார்:
“அனைவருக்குமான பிரிந்துபோகும் உரிமையை அறிந்தேற்றல், உருத்திட்டமான பிரிவினைச் சிக்கல் ஒவ்வொன்றையும் அணுகும் போது ஏற்றத்தாழ்வனைத்தையும், சிறப்புரிமைகள் அனைத்தையும், தனித்தொதுக்கம் அனைத்தையும் அகற்றும் கண்ணோட்டத்திலிருந்து மதிப்பிடுதல்.” <2>

மார்க்சியத்தின் தேசியத் திட்டம் என்ன? என்ற வினாவிற்கு விடையிறுக்கும் போது இரத்தினச் சுருக்கமாக இலெனின் முடிவுரைக்கிறார்:
“அனைத்துத் தேசிய இனங்களுக்கும் முழுமையான உரிமைச் சமத்துவம்; தேசிய இனங்களுக்குத் தன்-தீர்வுரிமை; அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமை – மார்க்சியமும் உலகமுழுவதன் பட்டறிவும், உருசியாவின் பட்டறிவும் தொழிலாளர்களுக்குக் கற்றுத்தந்துள்ள தேசியத் திட்டம் இதுவே.” ♥>

ஆக, இலெனின் தேசியத் தன்-தீர்வுரிமையை (தன்னுரிமையை) ஆதரித்த கட்டங்கள், ஆதரிக்காத கட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. தோழர் பெ.ம. அவர்களே! இலெனின் இந்தக் கட்டத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை, தேசியத் தன்னுரிமையை ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார் என்று ஒரே ஒரு சான்றாவது காட்டுங்கள், பார்ப்போம்! ஒரு சான்றுமே இல்லாமல் உங்கள் மனத்தில் பட்ட எதையோ இலெனின் மேல் சாற்றுகிறீர்கள் என்றால், இது திறனாய்வு அன்று, அவதூறு! அவலை நினைத்து உரலை இடிக்கும் வேலை!

சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையாம்! இது தோழர் பெ.ம. அவர்களின் தீர்க்கமான திறனாய்வு! அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது கார்ல் மார்க்ஸ் அதை ஆதரித்தார் என்று சொல்லிச் செல்வதற்கு மேல் இந்தத் திறனாய்வுக்கு வேறு எந்தச் சான்றும் பெ.ம.விடமிருந்து நமக்குக் கிடைக்கவில்லை.

சுருங்கச் சொல்லின், சமூக வளர்ச்சி வரலாற்றில் தேசியத்தின் பங்கு என்ன? இலெனின் இந்தக் கேள்விக்குத் தரும் விடையும் விளக்கமும் என்னவென்று பார்ப்போம். கார்ல் மார்க்ஸ் என்ற தலைப்பிலான கட்டுரையில் வர்க்கப் போராட்டம் என்ற துணைத் தலைப்பில் இலெனின் எழுதுகிறார்:
“குறிப்பிட்ட எச்சமூகத்திலும், அதன் உறுப்பினர்களில் சிலரின் நாட்டங்கள் மற்றவர்களின் நாட்டங்களோடு முரண்படுவதும், சமூக வாழ்க்கை முரண்பாடுகள் நிறைந்ததாக இருப்பதும், தேசங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும், அதே போல் தேசங்களுக்குள்ளேயும் சமூகங்களுக்குள்ளேயும் ஒரு போராட்டம் நடப்பதை வரலாறு வெளிப்படுத்துவதும் … பரவலாகத் தெரிந்த செய்தியே.” <4>

அடுத்து, தேசங்களுக்கிடையிலும் தேசங்களுக்குள்ளேயும் … வெளிப்படுகிற போராட்டத்தில் மறைந்துள்ள வர்க்க நலன்களின் மோதலை மார்க்சியம் கண்டறிந்து விளக்குவதை இலெனின் எடுத்துக்காட்டுகிறார். ஆக, வர்க்கப் போராட்டத்தை ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் வர்க்கங்களிடையில் நடக்கும் போராட்டமாக மட்டுமல்லாமல், தேசங்களுக்கிடையே நடக்கும் போராட்டமாகவும் இலெனின் விளக்கினார்; அதாவது வர்க்கப் போராட்டம் என்பதை நேரடியாக வர்க்கங்களுக்கு இடையில் நடைபெறும் போராட்டமாக மட்டும் அவர் கருதவில்லை என்பதை அறிகிறோம்.

இந்த அடிப்படைப் புரிதலிலிருந்து இலெனின் தேசிய இனச் சிக்கலை எவ்வாறு அணுகினார் என்று பார்ப்போம். தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை என்பதன் பொருள் என்ன? என்ற வினாவிற்கு அவர் விடையளிக்கிறார்:
“இதற்கான விடையைச் சட்டத்தின் அனைத்து வகைப் “பொதுவான கருத்தாக்கங்களிலிருந்தும்” வரப்பெறும் சட்ட இலக்கணங்களில் தேடுவதா? அல்லது தேசிய இயக்கங்கள் பற்றிய வரலாற்றுப் பொருளியல் ஆய்வில் தேடுவதா?” <5>

உலகெங்கும் தேசிய இயக்கங்களின் பட்டறிவை (அனுபவத்தை) இலெனின் இவ்வாறு தொகுத்துரைக்கிறார்:
“உலகெங்கிலும் பிரபுத்துவத்தின் மீது முதலியம் (முதலாளித்துவம்) இறுதி வெற்றி பெறும் காலம் தேசிய இயக்கங்களோடு தொடர்புடையதாக இருந்துள்ளது. சரக்காக்கத்தின் (சரக்குற்பத்தியின்) முழுமையான வெற்றிக்கு முதலாளர் வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றியாக வேண்டும். ஒற்றை மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட, அரசியல்வகையில் ஒன்றுபட்ட ஆட்சிப்புலங்கள் வேண்டும், அம்மொழியின் வளர்ச்சிக்கும் இலக்கிய வார்ப்புக்குமான தடைகளனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும். இதில்தான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் உள்ளது. மொழிதான் மானிட உறவாடலின் மிக முதன்மையான கருவி. மொழியின் ஓர்மையும் தங்குதடையற்ற வளர்ச்சியுமே புதுமக்கால முதலியத்துக்கு ஈடான அளவில் மெய்யாகவே தடையற்ற, விரிவான வணிகத்துக்கும், மக்கள்தொகை அதன் பல்வேறு வர்க்கங்களிலும் இடையிடர் இன்றியும் பரந்தகன்ற முறையிலும் குழுச்சேருவதற்கும், கடைசியாக, சந்தைக்கும் ஒவ்வொரு பெரிய சிறிய உடைமையர்க்கும் இடையிலும், விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் இடையிலும் நெருங்கிய தொடர்பு நிறுவப்படுவதற்குமான இன்றியமையாத் தேவைகளில் மிக முக்கியமானவை.” <6>

- அடுத்த பதிவில் தொடரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 7 = 14

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>