தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி (4) ஆய்வின் பெயரால் அவதூறு – தோழர் தியாகு (தொடர்ச்சி)

- சென்ற பதிவின் தொடர்ச்சி…

இலெனின் சொல்வதை எளிமைப்படுத்திச் சொன்னால், (1) தேசிய இயக்கங்கள் பிரபுத்துவம் வீழ்ந்து முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் காலத்துக்குரியவை; (2) சரக்காக்கம் (சரக்கு உற்பத்தி) முழு வெற்றி பெற மொழிவழித் தேசம் தேவைப்படுவதுதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் ஆகிறது; (3) மொழிதான் மனித உறவின் முதன்மைக் கருவி; (4) மொழி வளர்ச்சி இல்லாமல் முதலிய (முதாலாளிய) வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவில் வணிக வளர்ச்சி ஏற்பட இயலாது; (5) சமூகம் வர்க்கங்களாகப் பிரிவதற்கும் விரிவாக உறுதிப்படுவதற்கும் மொழியின் ஓர்மையும் வளர்ச்சியும் இன்றியமையாத் தேவை; (6) சந்தைக்கும் சரக்குடையவர்க்கும் இடையே, சரக்கு விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட மொழி வளர்ச்சி தேவை. (இந்த இடத்தில் நான் தர விரும்பும் குறிப்பு: சரக்கு என்பதில் உழைப்புத் திறனும் அடங்கும்; சரக்கு விற்பவர் என்பதில் தொழிலாளியும் அடங்குவார்.)

மொழிதான் மனித உறவின் முதன்மைக் கருவி! மொழி வளர்ச்சி இல்லாமல் வர்க்க சமூக வளர்ச்சி இல்லை! மொழியும் மொழிவழித் தேசியமும் சமூக வளர்ச்சி வரலாற்றில் வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் கொண்டது என்பதற்கு இதுவே தக்க சான்று என்கிறேன். “உரியவாறு கணக்கில் கொள்ளுதல்” என்பதற்குத் தோழர் பெ.ம. வேறு ஏதோ இலக்கணம் வைத்திருப்பார் போலும்! அந்த இலக்கணத்தை உடைத்துச் சொன்னால் உதவியாக இருக்கும்.

மொழி, மொழிவழித் தேசியத்தின் பங்குப் பணியை கார்ல் மார்க்ஸ் உரியவாறு கணக்கில் கொண்டாரா? கொண்டார் என்பதற்கான சான்றுகளை லெனினே எடுத்துக்காட்டுகிறார். மார்க்ஸ் 1866 சூன் 20ஆம் நாள் எங்கெல்சுக்கு எழுதிய மடலில் சொல்கிறார்:
“நேற்று பன்னாட்டுப் பேரவையில் (அகிலம்) இப்போதைய போர் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது…. ‘இளைய பிரான்சு’ பேராளர்கள் (தொழிலாளர் அல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும், தேசங்களும் கூட ‘காலாவதியாகி விட்ட காழ்ப்புகளே’ என்று அறிவித்தார்கள்…. தேசிய இனங்களை இல்லாமற்செய்து விட்ட நம் நண்பர் லாஃபார்க்கும் மற்றவர்களும் நம்மிடம் ‘பிரெஞ்சு’ பேசினார்கள், அதாவது அவையில் பத்திலொரு பங்கினர்க்குப் புரியாத மொழியில் பேசினார்கள் என்று சொல்லி நான் என் உரையைத் தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் சிரித்து விட்டார்கள்….” <7>

“அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது கார்ல் மார்க்ஸ் அதை ஆதரித்தார்” என்று பெ.ம. சொல்கிறார். தேசிய விடுதலைப் போராட்டத்துக்குரிய வரலாற்றுப் பங்கினை கார்ல் மார்க்ஸ் உரியவாறு அறிந்தேற்கவில்லை என்பதற்கு இதுதான் சான்றா?

எங்கெல்சுக்கு 1867 நவம்பர் 2ஆம் நாள் எழுதிய மடலில் மார்க்ஸ் சொல்கிறார்:
“… இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணி வந்தேன். இப்போது அது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன், பிரிந்த பிறகு கூட்டாட்சி வரலாம் என்றாலும்.” <8>

அயர்லாந்தின் விடுதலை என்பதையும், அயர்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிந்து தனிநாடாவதையும் தோழர் பெ.ம. ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்கிறார் என்று தெரிகிறது. அயர்லாந்தின் விடுதலையை ஆதரிப்பதா வேண்டாமா என்பதன்று, அந்த விடுதலையின் வடிவம் அல்லது வழி என்ன என்பதே மார்க்சுக்கிருந்த கவலை. விடுதலையின் வடிவம் அல்லது வழி குறித்து அவரது கருத்து மாறியதே தவிர விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது குறித்தன்று. இங்கிலாந்தின் சமூக விடுதலை வழியாக அயர்லாந்தின் தேசிய விடுதலையா? அயர்லாந்தின் தேசிய விடுதலை வழியாக இங்கிலாந்தின் சமூக விடுதலையா? என்பதே அவர் முன்னிருந்த வினா. இவ்விரு வழிகளில் முன்னதற்கே வாய்ப்பிருப்பதாக முதலில் நினைத்தார். பிறகு அதிலிருந்து மாறிப் பின்னதைப் பரிந்துரைத்தார். தனியாகப் பிரிந்த பின் கூட்டாட்சி வரலாம் என்பதன் பொருள் என்ன? தனியாகப் பிரிவதுதான் விடுதலை என்றால் கூட்டாட்சியில் இணைவது விடுதலையை இழப்பது என்றாகி விடாதா? விடுதலையை இழப்பதற்கா மார்க்ஸ் வழிசொல்வார்?

தேசிய இனச் சிக்கலில் மார்க்சியப் பார்வை குறித்து தோழர் பெ.ம. செய்துள்ள திறனாய்வின் உச்சம் இஃதென்பேன்:
“ஒரு தேசிய இனம் தனக்கு முரண்பட்ட பிற தேசிய இனங்களிடமிருந்து பிரிந்து போகும் உரிமையான தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டும் இலெனின் வரையறுக்கிறார்.”

சனநாயக உரிமையாக வரையறுத்தது போதாதென்றால் வேறென்ன உரிமையாக வரையறுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். குமுகிய (சோசலிச) உரிமையாகவா? பொதுமை (கம்ம்யூனிச) உரிமையாகவா? விரிந்த பொருளில் சனநாயகம் என்பதில் தேசியமும் அடங்கும். தேசிய ஒடுக்குமுறையுடன் கூடிய சனநாயகம் சனநாயகமே ஆகாது. சனநாயக உரிமை என்பதைக் குறுகிய பொருளில் (சட்டப்படியான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என்பது போல்) தோழர் பெ.ம. புரிந்து கொள்கிறார் போலும். இலெனின் அப்படிப் புரிந்து கொள்ளவில்லை. மார்க்சிய நோக்கில் அப்படிப் புரிந்து கொள்ளவும் கூடாது. தேசியத் தன்-தீர்வுரிமைக்கும் சனநாயகத்துக்கும் குமுகியத்துக்குமான உறவு குறித்து இலெனின் சொல்கிறார்:

“குமுகியம் (சோசலிசம்) வெற்றி பெறும் போது முழு சனநாயகத்தை நிறுவியாக வேண்டும்; ஆதலால் தேசிய இனங்களின் முழு நிகர்மையை (சமத்துவத்தை) அறிமுகம் செய்வதோடு, ஒடுக்குண்ட தேசங்களின் தன்-தீர்வுரிமையை, அதாவது தடையின்றி அரசியல்வகையில் பிரிந்து செல்லும் உரிமையை மெய்ப்படச் செய்யவும் வேண்டும்.” <9>

ஆக, இலெனின் பார்வையில் “தேசியத் தன்னுரிமை” என்பது “ஒரு சனநாயக உரிமை மட்டும்” என்பதன்று; அது குமுகியப் புரட்சியின் (சோசலிசப் புரட்சியின்) செறிவான முழக்கங்களில் ஒன்று. போராட்ட முழக்கம் மட்டுமன்று, செயல்முழக்கமும் ஆகும்.

”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று தோழர் பெ.ம. சொல்வது திறனாய்வு அன்று, அடிப்படை ஏதுமற்ற அவதூறே ஆகும்.
(தொடரும்)

FOOTNOTES:
<1> THE RESOLUTION OF THE LONDON INTERNATIONAL CONGRESS, 1896. This resolution reads: “This Congress declares that it stands for the full right of all nations to self-determination and expresses its sympathy for the workers of ever country now suffering under the yoke of military, national or other absolutism… “

<2> The recognition of the right to secession for all; the appraisal of each concrete question of secession from the point of view of removing all inequality, all privileges, and all exclusiveness.

♥> Complete equality of rights for all nations; the right of nations to self-determination; the unity of the workers of all nations—such is the national programme that Marxism, the experience of the whole world, and the experience of Russia, teach the workers.

<4> It is common knowledge that, in any given society, the strivings of some of its members conflict with the strivings of others, that social life is full of contradictions, and that history reveals a struggle between nations and societies, as well as within nations and societies,…

<5> WHAT IS MEANT BY THE SELF-DETERMINATION OF NATIONS?… Should the answer be sought in legal definitions deduced from all sorts of “general concepts” of law? Or is it rather to be sought in a historico-economic study of the national movements?

<6> Throughout the world, the period of the final victory of capitalism over feudalism has been linked up with national movements. For the complete victory of commodity production, the bourgeoisie must capture the home market, and there must be politically united territories whose population speak a single language, with all obstacles to the development of that language and to its consolidation in literature eliminated. Therein is the economic foundation of national movements. Language is the most important means of human intercourse. Unity and unimpeded development of language are the most important conditions for genuinely free and extensive commerce on a scale commensurate with modern capitalism, for a free and broad grouping of the population in all its various classes and, lastly, for the establishment of a close connection between the market and each and every proprietor, big or little, and between seller and buyer.

<7> “Yesterday,” Marx wrote on June 20, 1866, “there was a discussion in the International Council on the present war…. The representatives of ‘Young France’ (non workers) came out with the announcement that all nationalities and even nations were ‘antiquated prejudices’…. The English laughed very much when I began my speech by saying that our friend Lafargue and others, who had done away with nationalities, had spoken ‘French’ to us, i. e., a language which nine-tenths of the audience did not understand….”

<8> “… I used to think the separation of Ireland from England impossible. I now think it inevitable, although after the separation there may come federation.”
<9> Victorious socialism must necessarily establish a full democracy and, consequently, not only introduce full equality of nations but also realise the right of the oppressed nations to self-determination, i.e., the right to free political separation.

- தொடரும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


+ 3 = 10

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>