“தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்!”  இனவாதமா? இனவுரிமையா? – தோழர் தியாகு

தமிழ் வாழ்க! தமிழ் ஆள்க! – ஆம், தமிழ் வாழ வேண்டுமானால் தமிழ் ஆள வேண்டும். தமிழை ஆள வைக்காமல் வாழ வைக்க முடியாது. சில ஆண்டு முன்பு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்துக்காக எழுதிக்கொடுத்த அறிக்கையில் இப்படிச் சொல்லியிருந்தேன். தமிழ் ஆள்க! என்றால் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது மட்டுமன்று. தமிழ் மீட்புக்கும் தமிழ்க் காப்புக்கும் அரசியல் அதிகாரம், அரசுரிமை, அதாவது தமிழர் இறைமை இன்றியமையாதது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழுக்காக நடக்கும் போராட்டங்கள் தமிழர் இறைமைக்கான போராட்டங்களாக வளராமல் தம் நோக்கங்களை அடைய முடியாது. தமிழர் இறைமையை மறுக்கும் இந்திய அரசமைப்புக்குள் தமிழ்க் காப்பும் தமிழ் மீட்பும் முழுமை பெற இயலாது என்பதைக் கோட்பாட்டு வழியில் மட்டுமின்றி, பட்டறிவின் பாற்பட்டும் சொல்ல இயலும். தமிழ்நாட்டில் இத்தனை மொழிப் போராட்டங்களுக்குப் பிறகும் தொலைந்து போனவர்கள் பட்டியலில் தமிழன்னை முதலிடம் பிடிக்கிறாள். மாந்தோப்பில் நிழலுண்டு, மணக்க வரும் தென்றலிலே குளிருண்டு, தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை எனும் அவல நிலை!

அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் உரக்கப் பேசப்படும் ஒரு முழக்கம்: “தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்!” உண்மைதான், தமிழ்நாட்டை அயலான் ஆளக் கூடாது, தமிழன்தான் ஆள வேண்டும்! தமிழர் இறைமையை வலியுறுத்தும் முழக்கமாக இது அமையுமானால் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தின் தொடர்ச்சியாக இதனைப் புரிந்து கொள்ளளலாம். ஆனால் இந்த முழக்கத்தை எழுப்புவோர் இதன் உள்ளடக்கத்தைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளனரா?

தமிழன் ஆள வேண்டும்! தமிழன் என்பதைத் தமிழச்சிகள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவருக்குமான குறியீட்டுச் சொல்லாக ஏற்றுக்கொள்ளலாம். சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தமிழன்டா என்ற முழக்கத்தை அப்படித்தான் புரிந்து கொண்டோம். ஆனால் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்று இப்போது முழங்குகிறவர்கள் இப்படித்தான் பொருள் கொள்கின்றார்களா? அவர்கள் தமிழன் என்பதை ஒருமைப் பொருளிலேயே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அவர்கள் கோருவது தமிழ் மக்களின் அரசை அல்ல, தமிழன் அரசையே! நேராகச் சொன்னால் முதலமைச்சர் தமிழனாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.

முதலமைச்சர் மட்டும் தமிழராக இருந்தால் போதுமா? அமைச்சர்கள் தமிழர்களாக இருக்க வேண்டாமா? சட்டப் பேரவை உறுப்பினர்கள் தமிழர்களாக இருக்க வேண்டாமா? அரசு என்பதை முழுமையாக எடுத்துக் கொண்டால் அதிகாரவர்க்கத்தினர், காவல்துறையினர், சிறைத்துறையினர், நீதித்துறையினர் ஆகிய அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டாமா? என்று கேட்கலாம்தான். இப்போதைக்கு அரசாங்கம் அல்லது ஆட்சியை மட்டும் கருத்தில் கொள்வோம். அதிலும் அரசியல் தலைமையை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், அமைச்சர்களையும், முதலைமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், அமைச்சர்களாகும் வாய்ப்பும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களையும் எடுத்துக் கொள்வோம். இவர்கள் அத்தனை பேரும் தமிழர்களாக இருக்க வேண்டும், இருந்தால்தான் அது ஓரளவுக்கேனும் தமிழ் மக்கள் ஆட்சியாக அமையும் அல்லவா?

தமிழர்கள் மட்டுமே சட்டப் பேரவை உறுப்பினர்களாக வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்தது ‘தமிழன் ஆள வேண்டும்’ முழக்கத்தார் மட்டுமாவது தமிழர் அல்லாதவர்களைத் தேர்தலில் நிறுத்தக் கூடாது. அவர்கள் உண்மையிலேயே இப்படித்தான் வேட்பாளர்களைப் பொறுக்கியெடுத்து நிறுத்துகின்றார்களா? எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தமிழன் ஆள வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டுமானால் தமிழர் அல்லாதார் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது. அதற்குத் தேவையான சட்டமியற்ற வேண்டும். அல்லது இப்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். ‘தமிழன் ஆள வேண்டும்’ முழக்கத்தார் இப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் வைத்துள்ளார்களா?

வாக்குரிமை என்பதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் அடங்கும். ஒவ்வொரு வாக்காளருக்கும் வேட்பாளராக உரிமை உண்டு. தமிழர் அல்லாதாருக்கு வாக்குரிமை இருக்கும் வரை.வேட்பாளராகும் உரிமையும் இருக்கும். ‘தமிழன் ஆள வேண்டும்’ முழக்கத்தார் தமிழர் அல்லாதாரின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும், அதற்கான சட்ட வழிவகைகள் செய்ய வேண்டும் எனக் கோருகின்றார்களா? குடியுரிமை இருந்தால் வாக்குரிமையும் இருக்கும் என்பதால் தமிழர் அல்லாதாரின் குடியுரிமையை நீக்க வேண்டும் என கேட்கின்றார்களா? தமிழ்நாட்டுக்குத் தனிக் குடியுரிமைச் சட்டம் இல்லாமல் இந்த நோக்கம் நிறைவேறாது. தமிழ்நாட்டுக்குத் தனிக் குடியுரிமைச் சட்டம் வேண்டுமென்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டியிருக்கும். அப்படியே திருத்தினாலும் நீதி மன்றத்தில் நிற்குமா? இப்படி நிறைய கேள்விகளுக்கு ‘தமிழன் ஆள வேண்டும்’ முழக்கத்தார் விடை சொல்ல வேண்டியிருக்கும்.

ஆகவே தமிழன் ஆள வேண்டும் என்ற முழக்கத்தின் ஈடேற்றத்துக்கு முதலமைச்சர் பதவிக்கு ஒரு நல்ல தமிழரைக் கண்டுபிடிப்பதோடு வேலை முடிந்து விடுவதில்லை.
சட்டம் ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதாரின் குடியுரிமையைப் பறிப்பது குடியாண்மை (சனநாயக) நெறிகளுக்குப் பொருந்துமா? இப்படிச் செய்வதை முதலில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற வினாக்களை எழுகின்றன. தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பது எளிய குடியாண்மைக் கோரிக்கைதான் என்கிறார்கள். சரியாகப் புரிந்து கொண்டால் குடியாண்மைக் கோரிக்கைதான். ‘தமிழன் ஆள வேண்டும்’ முழக்கத்தார் புரிந்து கொண்டுள்ள படி இது முதலமைச்சர் பதவி தொடர்பான கோரிக்கைதான் என்றால், அதன் ஏரணத் தொடர்ச்சி குடியாண்மைக்கு எதிராகப் போய் முடியக் காண்கிறோம்.

இவ்வளவு சிக்கல் எதற்கு? தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆனாலே போதும் என்றால், இது உங்கள் முதல்வர்-வேட்பாளரின் தகுதிகளில் ஒன்று, அவ்வளவுதான். இதே தகுதியோடு கடந்த காலத்தில் ஒருசிலராவது இருந்துள்ளனர். நிகழ்காலத்திலும் இருக்கின்றனர். ஆகவே இதில் புதுமையும் இல்லை, தமிழ்த் தேசியப் பெருமையும் இல்லை.
தடைகளையெல்லாம் உடைத்தோ தாண்டியோ வந்து மெய்த் தமிழர் முதலமைச்சர் ஆகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அவர் முதலமைச்சர்தானே தவிர முடியரசர் அல்லர். இறுதியாகப் பார்த்தால் குடியாண்மையில் ஆள்வது சட்டமே தவிர ஆட்கள் அல்ல. சட்டத்தின் ஆட்சி மக்களாட்சியாக இருக்க வேண்டுமானால் அது மக்கள்-சட்டமாக இருக்க வேண்டும். மக்களுக்காக மக்களால் இயற்றப்பட்ட சட்டமாக இருக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் ஒருசில குடியாண்மைக் கூறுகளைக் கொண்டதாயினும் அது மக்களால் இயற்றப்பட்டதும் அன்று, மக்களுக்கானதும் அன்று. குறிப்பாகச் சொன்னால் அது தேசிய இனங்களின் அடிமை முறி என்பதுதான் நமது பார்வை. “தமிழன் ஆள வேண்டும்” முழக்கத்தாரும் இதே பார்வை கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் பதவி மட்டும் போதுமா? ஏனென்றால் தமிழ்நாடு இந்தியாவில் இந்திய அரசின் கனத்த காலடியில் மிதிபட்டுக் கிடக்கும் போது, நம்மை இந்திய அரசும் ஆள்கிறது, பார்க்கப் போனால் இந்திய அரசுதான் ஆள்கிறது, அரசமைப்பின் படி தமிழக அரசும் பிற மாநில அரகளும் அரசுகளே அல்ல என்பதுதானே உண்மை? தமிழன் முதலமைச்சர் ஆவது போல் இந்தியத் தலைமையமைச்சரும் ஆகி விட்டால் போதும் தமிழன் நாடாள்வதை உறுதி செய்து விடலாமா?

இதே ஏரணப்படி பிற தேசிய இனங்களும் கோரிக்கை வைத்தால் எந்த இனத்தவரைத் தலைமையமைச்சர் ஆக்குவது? தில்லிக்குப் போவதெல்லாம் தேவையில்லை என்றால் இந்திய அரசை என்ன செய்வது? அரசமைப்பை என்ன செய்வது? இந்திய அரசும் அரசமைப்பும் தமிழன் ஆட்சியில் குறுக்கிடக் கூடாதென்றால். அதற்கு ஒரே வழி வெளியேற்றம் அல்லது வெளிடப்புதான். தமிழ்நாட்டை விட்டு இந்தியாவை வெளியேற்ற வேண்டும், அல்லது இந்தியாவை விட்டு நாம் வெளியேற வேண்டும். தமிழ்த் தேச இறைமையை நிறுவ வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பது குடியாண்மையின் பாற்பட்ட இனவுரிமை முழக்கமாக வெற்றி பெறும். அது வரை குடியாண்மைக்கு ஒவ்வாத இனவாத முழக்கமாகவே இருக்கும்.

பிற்குறிப்பு: தமிழகத்தில் தமிழர் யார்? தமிழர் அல்லாதார் யார்? என்ற வினாகளை இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை. “தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்” முழக்கத்தார் இது குறித்துச் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம் என்று இதற்குப் பொருளில்லை. இந்தச் சிக்கலைப் பிறகு தனியாக அலசுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


5 + = 9

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>