தாயகக் கனவுடன் தமிழழீழ மண்ணில் விதையாகிப் போன தலைவருக்கும் மாவீரர்களுக்கும் செவ்வணக்கம்!

தேசத்தின்குரல்

தாயகக் கனவுடன்
தமிழழீழ மண்ணில் விதையாகிப் போன
தலைவருக்கும் மாவீரர்களுக்கும் செவ்வணக்கம்!

தமிழீழத் தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நீதிக்கும் விடுதலைக்குமான நெடும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் மாவீரர்நாள் செவ்வாழ்த்து!

கடந்த1982ஆம் ஆண்டு தமிழீழப் போர்க் களத்தில் காயமுற்று, மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு, நவம்பர் 27ஆம்நாள் தலைவர் மடியில் தலைசாய்த்து உயிர்துறந்த லெப்டினன்ட் சங்கர் வீரச்சாவடைந்த முதல் விடுதலைப்புலி. அந்த நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும் வழக்கம் 1989ஆம் ஆண்டு தொடங்கியது.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுக் காலத்தில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் புலிப்படை வீரர்கள் களத்தில் வீழ்ந்து மடிந்துள்ளார்கள். உயிராயுதம் ஏந்திப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயல்பட்டு, ஒற்றை எலும்பு கூட மிஞ்சாமல் தாயகக் காற்றிலும் நீரிலும் கலந்து விட்ட கரும் புலிகளின் ஈடில்லாஈகத்தைகாலம்உள்ளளவும்நெஞ்சில்ஏந்துவோம்.

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்னும்படியாக இந்திய, சிங்களப் படையெடுப்புகளை முறியடித்துப் புலிப் பெண்கள் புது யுகம் படைத்தார்கள். தளபதிகளாகப் பொறுப்பேற்றுப் போரை வழிநடத்தினார்கள். பெண் புலிகளின் ஈகம் என்றென்றும் நினைக்கப்படும்.

முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் நின்று, தப்பிப் போகும் வாய்ப்புகளை மறுதலித்து, வீரர்களோடும், மக்களோடும் சேர்ந்து, இறுதி வரை சமராடி மாண்ட தலைவர் பிரபாகரனுக்கு செவ்வணக்கம்.

குழிக்குள் வாழ்ந்திடும்’கொள்கை மறவர்தம் நினைவுகள் நமக்கு உரமேற்றட்டும். தமிழர்களின் நடுகல் வழிபாட்டு மரபின் தொடர்ச்சிதான் மாவீரர் துயிலும் இல்லங்கள். அவற்றை நீராட்டிப் பூச்சொரிந்து சுடரேற்றி வணங்குவது தமிழ் மக்கள்தம் மரபு.

ஆனால் 2009 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பின் புனிதமான துயிலும் இல்லங்கள் தகர்க்கப்பட்டுப் புழுதிமேடாக்கப்பட்டன. மாவீரர்தம் சிலைகளும் பிற நினைவுச் சின்னங்களும் நொறுக்கப்பட்டன. வாழ்கிறவர்களின் உரிமைகளை ஒடுக்கியது போலவே சிங்களப் பேரினவாதக் கொலைவெறி மறைந்தவர்களின் நினைவுகளையும் சிதைத்தது.
ஈடுசெய் நீதி கோரும் தாயக மக்கள்தம் போராட்டங்களுக்கு நடுவில் இந்த ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களை இயன்ற வரை சீர்படுத்தும் பணியைச் செய்து வருகின்றனர். இந்த மாவீரர் நாள் தாயகத்திலும் உலகெங்கிலும் புத்துணர்வோடு கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை.

கட்டமைப்பியல் இனவழிப்பு தொடர்ந்து வரும் நிலையில், தானே ஒப்புக்கொண்டவற்றைக் கூட செய்யாமல் காலங்கடத்துவதிலேயே சிங்கள அரசு குறியாக இருந்து வரும் நிலையில், தாயகத்தில் பழைய தலைமை மண்டியிட்டு மற்றொரு சமரசத்துக்கு மன்றாடி வரும் நிலையில், மாவீரர்களின் கனவையும் நினைவையும் சுமந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கடமை தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களாகிய நமக்கு உள்ளது.

தமிழீழத் தாயகத்தில் எத்தனயோ இடர்ப்பாடுகளுக்கு நடுவில் மக்கள் மனந்தளராமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கைதிகள் எனப்படும் போர்க் கைதிகளை உடனே விடுதலை செய்யக் கோரியும், சிங்களப் படை கைப்பற்றிய காணிகளைத் திரும்பத் தரக் கோரியும், காணாமலடிக்கப்பட்ட சொந்தங்களுக்கு நீதி வேண்டியும் அவர்கள் நடத்தி வரும் நீண்ட போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்து வருவதோடு, உலகத் தமிழர் போராட்டங்களுக்கு ஊக்கமும் அளித்து வருகின்றன.

நிலைமாற்ற நீதி என்ற முறையில், இது வரை நடந்த குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின்முன் நிறுத்த வேண்டும். இது முதல் தேவை. இரண்டாவதாக, இதே குற்றங்கள் மீண்டும் நடக்காத படி நீதிப் பொறிமுறைகளை நிறுவ வேண்டும். மீண்டும் ஓர் இனவழிப்பு நிகழாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவற்றில் எதையும் செய்யாமல் சிறிலங்கா காலங்கடத்தி வருவதை மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரே சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். இந்நிலையில் தீர்க்கமான கோரிக்கைகளோடு தெளிவான கொள்கைவழிப் போராட்டங்களை முன்னெடுப்பது ஒன்றுதான் நமக்குள்ள வழி.

அரசியல் தீர்வு என்ற பெயரில் சிங்கள அரசு முன்மொழிந்திருக்கும் புதிய அரசமைப்பு இனவழிப்புக்குச் சட்டப் பூச்சு கொடுப்பதல்லாமல் வேறன்று என்பதே உண்மை. சிங்களப் பேரினவாத சிறிலங்காவிற்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்ற படிப்பினை — வரலாறு நெடுகிலும் வழிநிறைத்துக் கிடக்கும் இந்தப் படிப்பினை – மீண்டும் ஒரு முறை நமக்குக் கிடைத்துள்ளது. தமிழர்கள் தமது எதிர்காலத்தைத் தாமே உறுதி செய்வதற்குப் பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்க வேண்டும்.

தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களோடு இணைந்து தமிழகத்திலும் உறதியான ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் கடமை நமக்குண்டு. மாவீரர் நினைவு போற்ற நாம் ஏற்றும் செஞ்சுடரின் வெளிச்சம் இவ்வகையில் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

நடந்த இனவழிப்பு குறித்துப் பன்னாட்டு விசாரணை, அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு என்ற உறுதியான கோரிக்கைகளோடு நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல…

தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்கள் சிந்திய குருதியின் பேரால் உறுதி ஏற்போம்.

தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


2 + = 8

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>