அண்ணல் அம்பேத்கர் தன்மானத்தின் குறியீடு – தோழர் வே.பாரதி அறிக்கை!

மக்கள் மன்றத் தோழர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்துத்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி அறிக்கை!

அண்ணல் அம்பேத்கர் நம்மைப் பொறுத்த வரை மக்கள் தலைவர், சாதி ஒழிப்பின் முன்னோடி, பார்ப்பனீயத்தின் தோலுரித்த வீரர், சாதியை பொருளியலின் அடித்தளத்தோடும் இணைத்துப் பார்த்த மேதை. சாதி இருக்கும் வரைக்கும் அம்பேத்கர் தமிழ்ச் சமூகத்தில் உயிர்ப்போடு உலவுவார். அதன்பின்னும் மனித குல வரலாற்றில் நிலைத்திருப்பார். இந்திய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் அம்பேத்கர் ஒரு சட்ட மேதை! இந்திய அரசமைப்பின் சிற்பி!

சென்ற 21.12.2017 அன்று காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆதிசங்கரர், ஏகாம்பரநாதர் கோவில், பல்லி உள்ளிட்டவை சுவர்களில் வண்ணங்களில் வரையப்பட்டுள்ளது. இதைக் கேள்வியுற்ற மக்கள் மன்றம் உள்ளிட்ட தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். எதிர்ப்பின் அடையாளமாக அந்தப் படங்களை வெள்ளை பூசிவிட்டு, அம்பேத்கர் படத்தை மாட்டிவிட்டு வெளிவருகிறார்கள். 23.12.2017 அன்று பாரதிய சனதாக் கட்சியினர் புகார் அளிக்கின்றனர். 25.12.2017 அன்று அந்தப் படங்களை வரைய ஒப்பந்தம் எடுத்த சீனிவாசலுவும் புகார் கொடுக்கிறார். 26.12.20117 அன்று மக்கள் மன்றத் தோழர்களும் தோழமை இயக்கத் தோழர்களும் 21 அன்று கொடுத்த புகாருக்கு ஏன் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என ஆட்சியரிடம் முறையிடச் செல்கின்றனர். அவர்களில் குறிப்பாக மக்கள் மன்றத் தோழர்கள் மீது நிறைய வழக்குகள் உள்ளது என்பதைக் காரணம் காட்டியும் வந்த புகார்களின் அடிப்படையிலும் தோழர்கள் மகேசு, ஜெஸ்சி, தஞ்சைத் தமிழன், பாலு ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது காவல்துறை. 29.12.2017 அன்று தோழர்கள் இரண்டு நாட்கள் கழித்து நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசின் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள அம்பேத்கர் படத்தைத் தூக்கி எறிந்து அங்கே இந்து மதம் சார்ந்தவைகளை நிறுத்த நினைப்பது எந்த வகையிலும் நல்லெண்ணம் சார்ந்ததாக இருக்க முடியாது. இந்து மதத்தின் அடையாளங்களை நாட்டின் அடையாளங்கள் போல் நிறுவியுள்ளார்கள். இந்த நாட்டின் அடையாளமான அம்பேத்கரைக் குப்பையில் வீசியுள்ளார்கள். இந்த நாடு மதசார்பற்ற நாடு என்று சட்டம் பறைசாற்றுவதை மீறியவர்கள் இந்தச் சட்டத்தின் படி யோக்கியர்கள். அதன்படி ஏன் நீ நடந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டவர்கள் குற்றவாளிகள். இதற்கென போராடிய தோழர்கள் அம்பேத்கருக்குப் பதிலாக கிறித்துவ, இசுலாமிய அடையாளங்களை நிறுவ விரும்புபவர்கள் அல்ல. அம்பேத்கர் இடத்தில் அம்பேத்கரை நிறுவ நிற்பவர்கள். உண்மையில் இவர்களை நீங்கள் பாராட்டி அனுப்பியிருக்க வேண்டும். மாறாகச் சிறைக் கொட்டடிக்கு அனுப்பியுள்ளீர்கள்.

ஒப்புக்காகவேனும் மதச்சார்பின்மையை வெளிபடுத்தும் விதமாக இந்துமதக் கோவிலோடு தேவாலயத்தையோ, மசூதியையோ வரையலாம் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு எழவில்லை. இந்து மதம் மட்டும் பொது இடத்தில் வெளிப்பட்டால் எதிர்ப்பு வரும் என்ற அச்சம் எட்டியும் பார்க்கவில்லை. அந்தளவு அவர்கள் நெஞ்சில் இந்துத்துவம் ஊறியுள்ளது பெரிய செய்தி இல்லை. இந்த நாடே அப்படித்தான் உள்ளது என்ற அவர்களின் நம்பிக்கை இந்தியா எனும் கட்டமைப்பு கட்டமைக்கும் நம்பிக்கை! அதுதான் நாம் உணரவேண்டிய முக்கியச் செய்தி! கேட்டதற்கு, காஞ்சியின் வரலாற்றை எடுத்துச் சொல்ல என்றார்களாம். ஏன் இவர்களுக்குக் கைத்தறி, பட்டுத்தறி, இளந்திரையன் ஆட்சி, பல்லவர் காலக் கோவில்கள், அறிஞர் அண்ணா இவையெல்லாம் காஞ்சியின் வரலாறு இல்லையா! இன்னும் சொன்னால், காஞ்சி சமண, பௌத்தத்திற்கு பெயர் போன ஊர். மதச்சார்பற்று எல்லோரும் பிணைந்து வாழும் ஊர். இதை இந்து மதத்தின் அடையாளமாக்க முனைவது மக்கள் விரோதச் செயல்.

இப்போது நீதிமன்றம் தோழர்களை பிணையில் விடுதலை செய்துவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமானவர்கள் ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் தந்தவரும். இவர்கள் மீது நாங்கள் தந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை எடுத்த நடவடிக்கை..? மருந்துக்கும் இல்லை. இனிதான் நமது வேலையே தொடங்க உள்ளது.
வழக்கு நடத்துவதோடு நாங்கள் இதை விட்டுவிடுவோம் என்று கருதினால் ஏமாந்து போவீர்கள். இனி தொடர்வண்டி நிலையத்தில் அம்பேத்கர் மட்டுமே இருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு மக்கள் மன்றத்தின் கையில் செயலளவில் வந்துவிட்டது. அதை நாங்கள் சிறப்பாகவே செய்வோம். அதுமட்டுமல்ல, இதில் குற்றவாளிகளைச் சட்டம் கண்டும்காணாது விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் மக்களை நம்புகிறவர்கள்; மக்களோடு நிற்பவர்கள். எங்கள் மக்களிடம் இந்தச் செய்திகளைக் கொண்டு சென்று குற்றவாளிகளை அம்பலப்படுத்துவோம்.

அம்பேத்கர் படம் என்பது தன்மானத்தின் குறியீடு! ஆதிசங்கரரும் அம்பேத்கரும் இருவேறு தத்துவத்தின் அடையாளங்கள். நாம் இதில் அம்பேத்கரின் பக்கம்! என்னதான் நீ சட்ட மேதை எனச் சொல்லி விழா எடுத்தாலும் உன்னால் அவரைச் செரிக்க இயலவில்லை என்பதை புரிந்துகொள்ள இந்தச் செய்தி பலருக்கும் உதவினால் நன்று. சட்டத்தில் என்ன எழுதப்பட்டிருந்தாலும் சட்டம் யாருடையது, யாருக்கானது என்பதை அறிவோம். என் கைபிடித்துப் பார்ப்பனர்கள் எழுதினார்கள் என அம்பேத்கர் சொன்னதும், இது மனுதர்மத்தின் மறுபதிப்பே என பெரியார் சொன்னதும் இன்றளவும் உண்மை என்பதே மெய்ப்பிக்கப்படுகிறது. எத்தனை முறை சிறை தள்ளினாலும் அவர்களின் வழி நின்று புதிய சமூகம் படைக்கும் பணியில் ஓய்தலின்றி முன்னணியில் நிற்போம்!

தோழர்கள் மீது வழக்குப் பதிந்து சிறைதள்ளிய காவல்துறையையும் அம்பேத்கர் படத்தை எடுத்து வீசியவர்களையும் அதற்குக் காரணமானவர்களையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக மக்கள் மன்றத் தோழர்கள் முன்னெடுக்கும் பணிகளில் கைகோர்ப்போம் என்பதை அறிவித்துக் கொள்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


3 + 7 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>