சமத்துவ சாயம் – உ.திலகவதி (சென்ற இதழின் தொடர்ச்சி)

சமத்துவ சாயம் !!

பெண்ணுரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டமும் முற்போக்குச் சமூகமும் பெண்கள் முன்னேறவும் சுயமாய் வாழவும் ஊன்றுகோளாக இருந்து வரும் இதே நேரத்தில் தான் நசுக்கப்படும் பெண்ணுரிமைகள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருவரின் உரிமையில் இன்னொருவர் தலையிடுவதே அநாகரிகம் எனும் போது, இன்னும் பெண்களின் உரிமைகள் ஒரு காற்றுப் புகா பெட்டியில் வைத்து நசுக்கப்பட்டு மூச்சுத் திணறடிக்கப்படுகின்றது. இதனை ஒளித்து மறைக்கும் சமூகம் தான், பெண் சமூகம் விடுதலை அடைந்து விட்டதாக போலியாய் சமத்துவ சாயம் பூசி மொழுகுகிறது. அம்பானிகளும் அதானிகளும் பன்னாட்டு முதலாளிகளும் இந்தியாவின் அடையாளமல்ல. பிளாட்பார குடும்பங்களும் உழைத்துத் தேய்ந்த உருவங்களும் தான் இந்தியாவின் அடையாளம். விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டும் பன்னாட்டு ஒப்பந்தங்களுமா வல்லரசு இந்தியாவின் வளர்ச்சிச் சான்று ? அனைவருக்கும் சமத்துவமான கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, உடை , இருப்பிடம்,சமூக நீதி, சமவாய்ப்பு இவை தானே ஒரு வல்லரசு நாட்டின் அடித்தளம். அதேபோல் தான் பணிக்குச் செல்லும் சில ஆயிரம் பெண்களை வைத்தோ, சுயமாய் முடிவெடுக்கும் சில நூறு பெண்களை வைத்தோ அரசியலில் ஈடுபடும் வெகுசில பெண்களை வைத்தோ சமூகத்தில் பெண்களின் நிலையை, பாலியல் சமத்துவத்தை கணக்கிடுவது அடி முட்டாள்தனம். இந்தியாவின் பல கோடி பெண்கள் இன்றும் அடிமைகளே. ஆம் அவர்கள் பாலியல் கொத்தடிமைகள். பண்பாட்டு பலிகடாக்கள்.
நகரங்களை வைத்து வளர்ச்சியை மதிப்பிடும் ஆட்சியாளகர்களின் அரசியல் விளையாட்டில் பெண்ணுரிமைகளும் சிக்கித் தவிக்கிறது. அவர்களிடம் நாம் உரக்கச் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. அது “இந்தியா கிராமங்களின் நாடு” என்பதே.

கலாச்சார அடிமைகள் :

இங்கே பெண்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல் கூட நடத்தப்படுவதில்லை. ஏதோ ஒரு தரைமட்ட தகுதியைத் தான் பெண்கள் மீது திணிக்கிறார்கள். ஏனென்றால் உலகம் தோன்றியதோ இல்லையோ மனிதர்கள் உருவாகினார்களோ இல்லையோ அறிவியல் வளர்ந்ததோ இல்லையோ பெண் மீதான கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் அசுர வேகத்தில் வளர்ந்தன.

உலகத்தின் அனைத்து மதங்களும் கலாச்சாரங்களும் புனித நூல்களும் பெண்ணை சபிக்கப்பட்டவர்ளாக, பாதுகாக்கப்படவேண்டியவர்களாக, இயற்கையிலேயே ஒழுக்கமற்றவர்களாக சித்தரித்தன. பல நூற்றாண்டு பண்பாட்டு தளத்தில் பெண்ணிற்கு வழங்கப்பட்ட இந்த இடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பெண் வெவ்வேறு பாணியில் ஒடுக்கப்படுகிறாள். ஒடுக்கப்படும் சாதி பெண்ணாக இருந்தால் அவளின் முலைக்கு கூட வரி விதித்ததிலிருந்து, இன்று முள்ளுச்செடிகளில் வன்புணர்ந்து வீசப்படும் வரை நீள்கிறது அவள் மீதான அடக்குமுறை. ஆதிக்க சாதி பெண்களும் விதிவிலக்கல்ல அவர்களின் காதல் முடிவுகள் தண்டவாளங்களிலும் நடுத்தெருவிலும் இரத்த ஆறாய் ஓடுகின்றது. ஏழைக் குடும்பத்து பெண் மீது உழைப்புச் சுரண்டல் என்றால் வசதி படைத்த பெண்ணிடம் வாழ்கையை சுரண்டி மூலையில் உட்கார வைக்கின்றது சமூகம். எனவே சாதி பேதமின்றி வர்க்க பேதமின்றி பெண்களின் மீது வன்மமும் ஆதிக்கமும் சமமாக கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. வரலாற்றின் இந்தப் பகுதியில் நின்று கொண்டுதான் நாம் பெண்ணுரிமைகளை முழுவதுமாய் அடைந்து விட்டதாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்றாட வாழ்வில் அடைந்தோமா சமத்துவம் ?

நாம் வாழும் இதே சமூகத்தில் தினசரி கடந்து போகும் டீக்கடைகளில் எத்தனை பெண்கள் அமர்ந்து செய்தித் தாள் வாசிப்பதை பார்த்திருக்கிறீர்கள்? வீதியோர பானிப்பூரி கடைகளிலும் சிக்கன் பக்கோடா கடைகளிலும் எத்தனை பெண்கள் நின்று சாப்பிட்டு (ரோட்டுக்கடைகளில்) கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்கள்? கறிக்கடைக்கோ பர்னிச்சர் கடைக்கோ எலக்கடிரிக்கல் கடைகளுக்கோ இங்கே பெரும்பாலும் பெண்கள் செல்வதே இல்லை. காய்கறி கடைக்களில் பெண்கள் கூட்டத்தை பார்கலாம். வாரச் சந்தைகளிலும் அதிகமாக பார்க்கலாம். எந்த ஒரு ஆய்வும் செய்யாமலேயே சராசரியாக நம் நடைமுறை வாழ்கையில் பெண்ணின் வெளியுலக பங்கை சிந்தித்துப் பார்த்தாலே பெண்களின் நிலை புரிந்து விடும். சென்ற தலைமுறை ஆண்களின் கைகளில் விளையாடும் ஆண்ட்ராயிட் போன்கள் அதே தலைமுறை பெண்களை இன்னும் சென்றடையவில்லை. இத் தலைமுறை பெண்கள் தொழில்நுட்ப தடைகளை உடைத்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் மிக மிக குறைந்த வேகத்தில். சென்ற தலைமுறைப் பெண்களோ இந்த சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்காமலேயே செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

குடும்பப் பெண்கள் :

சமூக தளத்தில் நடுத்தர வயதுப் பெண்கள் பங்கெடுக்காமலேயே சென்று விடுகிறார்கள். அவர்களை அப்படி கட்டிப்போடுவதுதான் எது ? அவர்களிடையே ஆண் சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஒரு உளவியல் சொல் தான் அது “குடும்பப் பெண்கள்” .

குடும்பப் பெண் என்பவள் இதிகாசங்களும் புராணங்களும் கொடுத்த பெண்ணுக்கான முன்மாதிகளின் பின்மாதிரிகள் தான். அதாவது அவர்களின் வெளியுலக வாழ்கை “சுப நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும்” அவ்வப்போது எட்டிப் பார்க்கும் . பண்டிகை நாட்களில் காலையிலிருந்து இரவு வரை செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை தெரிந்து வைத்திருப்பாள். சமையல் என்பது கடமையைத் தாண்டிய அவளோடு ஒன்றிப்போன நிகழ்வு. சீரியல்கள் பார்த்துக்கொண்டு கணவனுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை பெண்களை அவர்களைப் போலவே “குடும்பப் பெண்களாக” வளர்த்தெடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டு, கணவன் அடித்தாலும் வசைபாடினாலும் அந்த நாலு சுவற்றிற்கு வெளியே அதனை கசியவிடாமல் குடும்ப மானத்தை காப்பவள் தான் குடும்பப் பெண் எனப்படுபவள். இதுவும் வர்க்கம் சாதி சார்ந்ததுதான். ஒடுக்கப்படும் சாதியிலும் ஏழை வர்க்கத்திலும் இது போன்ற குடும்பப்பெண்களை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கைப் போர் சமூக சுவர்களை முட்டி முட்டி மோதுவதில் தான் நிறைவு பெறுகிறது. அவர்கள் நான்கு சுவற்றுக்குள் தங்கள் வாழ்கையை ஒளிக்க முடியாது. வாழ்வாதாரத்திற்காக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

இங்கே அனைத்து தளங்களிலுமே அவர்கள் சுயமாய் யோசிக்க தடை செய்யப்பட்டவர்கள். தன் ஆடவன் சொல்லும் இடங்களுக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும் சொல்லும் வேலைகளைத்தான் செய்ய வேண்டும். அவர்களின் ஒழுக்கத்தின் மீது அவனுக்கு சந்தேகம் வந்தால் எந்த நேரத்திலும் அவளின் வேலைக்கு அவன் முழுக்கு போடலாம்.

குடும்ப வன்முறை :

குடும்ப வன்முறை அனைத்து தரப்பு பெண்களிடமும் நீக்கமற நிறைந்துள்ளது. முன்பின் தெரியாத ஒரு ஆணால் நிகழும் கொடுமைகளைப் போல் தான் தன் சொந்தக் குடும்பத்தில் அவள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறாள். அதில் முக்கியமானது “வார்த்தை வன்முறை”. அனைத்து வகைப் பெண்களுமே இதில் உட்படுத்தப்படுகிறார்கள். அவளின் ஒழுக்கத்தின் மீதான வசைகள் தமிழில் பஞ்சமே இல்லை. தன் வாழ்நாளில் “விபச்சாரி” எனப் பொருள்படும் அந்தக் கெட்டவார்த்தையை கடக்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வார்த்தைகளால் அவள் மீது அவளின் ஒழுக்கத்தின் மீது அத்தனை அமில வீச்சுக்கள். வரதட்சணை முதல் விவாகரத்து வரை பெண்ணின் விருப்பத்தோடு எதுவும் நடப்பதில்லை. விவாகரத்து உரிமைகள் என்பது பல போராட்டங்களுக்கு பிறகு டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான உரிமை. வேத சாஸ்திரங்கள் மனுதர்மங்கள் திருமணம் என்பது முடிவில்லாதது, துண்டிக்க முடியாதது என வரையறுத்தது. விருப்பமின்றி வாழ்நாள் முழுவதும் திருமண பந்தந்தில் பெண்கள் சிக்கித் தவித்தனர். அதை உடைத்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு பெற்ற விவாகரத்து உரிமையும் பெண்களுக்கு இன்று எளிதாக எட்டுமளவிற்கு இல்லை. ஒரு பெண் விவாகரத்து செய்ய வேண்டுமெனில் அவள் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளை குடும்பத்திற்குள்ளேயே சந்நிக்க வேண்டும். பெரும்பாலும் அவை விவாகரத்து வரை செல்லாமல் குடும்ப மானத்தை காக்க அவளின் சுயமரியாதை அடகு வைக்கப்படும். மீண்டும் மீண்டும் அதே பந்தத்தில் தள்ளப்படுவாள். அடி, உதை, திட்டு மட்டுமில்லாமல் குடும்ப வன்முறை என்பது பாலியல் ரீதியாகவும் பெண்களை மிரட்டுகிறது. இங்கே பெண்கள் என்பது குழந்தைகளை உள்ளடக்கிய சொல் தான். அவர்களை பாலியல் ரீதியாக குடும்பம் சுரண்டுகிறது. சொந்தக் குடும்பம் என்பதால் இதை பெரிய பிரச்சனையாக்காமல் கடந்து செல்லும் கேவலங்களும் குடும்பத்தில் நிகழ்கிறது. மனைவியை கணவன் எப்போது வேண்டுமானலும் உறவுக்கு அழைக்கலாம். இங்கே “அழைத்தல்” என்பதை விட “வற்புறுத்துதல்” என்பதே பொருத்தமானதாக இருக்க முடியும். கணவன் செய்யும் வன்புணர்வு என்பது இங்கே குற்றமாக பார்க்கப்படுவதில்லை என்பதே இத்தனைக்கால பெண்ணுரிமைக்கு செய்யும் துரோகம். “என் கணவர் என்னை வன்புணர்ந்தார்” என் ஒரு பெண் சொன்னால் கேலியாக சிரித்துவிட்டுச் செல்லும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதெப்படி அது வன்புணர்வாகும். புணர்வை பெற்றோர்கள் பெரியோர்கள் சம்மதத்துடன் ஆசியுடன் செய்வதுதானே திருமணம். இதில் “வன்புணர்வு” என்ற சொல்லுக்கு இடமே இல்லையே என்பது தான் பெரும்பாண்மை சமூகத்தின் எண்ணமாக இருந்து வருகிறது. குடும்பங்களின் வன்முறையில் சிக்கி தூக்கிற்கிறையான கரிக்கட்டையான பெண்களின் பிணங்களின் மேல் மாற்றி எழுதப்பட்ட FIRகளின் வரலாறு அழிந்து விடாது.

தான் அன்பு செலுத்தும் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, கணவன் போன்றோரோ வார்த்தையாலும் உடலாலும் வன்முறை செய்கிறார்கள் என்றால் முன்பின் அறியாத ஆண் சமமாய் மதித்து மரியாதை தந்துவிடுவானா என்ன ?

உற்று நோக்குதல் (Starring):

பெண் என்றால் உற்றுநோக்கக் கூடிய “ஜவுளிக்கடை பொம்மைகள்” தான் ஆண்களின் எண்ணத்தில். ஜவுக்கடை பொம்மைமேல் கைவைத்தாலாவது அதன் உரிமையாளன் கோபப்பட்டு அறைய வருவான் ஆனால் பேருந்திகளிலும் நெரிசல்களிலும் இடித்துச் செல்லும் உரசிச்செல்லும் அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். இதை கடந்தால்தான் வாழ்வின் அடுத்த படிக்கு நகரமுடியுமென பெண்களும் இதனை கடந்துத் தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் புதுமைப்பெண்ணாக உருவெடுத்து காவல் நிலையத்திற்கு உரசுபவனை அடித்து இழுத்துச் சென்றால் அவர்களுக்கான நியாயம் எப்படி இருக்கும் என்பது சென்று வந்த பெண்களிடம் கேட்டால் புலப்படும். பின்புலம் கொண்ட பெண் என்றால் தான் அவர்களின் பேச்சே காவல் நிலையங்களில் எடுபடும். சராசரி பெண் என்றால் “கோபத்தை மனதிலும் கண்ணீரை விழியிலும்” சுமந்துக்கொண்டு வெளியேற வேண்டும். இங்கே சராசரி பெண்களின் கைகளுக்கு எட்டக்கூடியதாக எளிய முறையானதாக நம் புகார் நடைமுறைகள் இல்லை என்பதே உண்மை.

உற்று நோக்குவதே தவறு என்ற எண்ணம் இச்சமூக ஆணாகளிடம் இல்லை. பார்க்கவேண்டும் ஒரு பெண்ணை மேலருந்து கீழாக பிறகு கீழிருந்து மேலாக அப்புறம் இடமிருந்து வலமாக அடுத்து வலமிருந்து இடமாக குறுக்கெழுத்து போட்டி போல் பார்க்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில், கடைகளில், பயணத்தில், கல்லூரியில், பணி இடத்தில் என எல்லா இடங்களிலும் அவர்கள் பார்த்து இரசிக்க கிடைத்த பண்டமே பெண். இது தவறென அவர்களின் மூளைகளுக்கு எட்டவே எட்டாது. உற்று நோக்குதலின் அருவெறுப்பை பெண்கள் கடக்க பழகிக் கொண்டுதான் படி தாண்டுகிறார்கள்.

பின்தொடர்தல் (Stalking) :

உற்று நோக்குதல் (Starring) எப்படி ஒரு குற்றமாக பார்க்கப்படுவதில்லையோ அதே போல் பின்தொடர்தலும் (Stalking) ஒரு குற்றமாக பார்க்கப்படுவதில்லை. காதலின் படிநிலைகளில் ஒன்றாகத்தான் பின்தொடர்தல் பார்க்கப்படுகின்றது. “வேண்டாம்” என்று நிராகரித்த ஒரு பெண்ணை “பின்தொடர்ந்தால்” நிச்சயம் ஒரு நாள் அவள் ஏற்றுக் கொள்வாள் , காதலுக்கு சம்மதிப்பாள் என்ற மனநிலை எங்கிருந்து இவர்களுக்கு வருகிறதென்றால் அதற்கு மூலம் “திரைப்படங்கள்” தான். பெரும்பாலும் திரைப்படங்களில் கதாநாயகன்கள் நாயகிகளை பின்தொடர்ந்து தான் காதல் சம்மதம் பெறுகிறார்கள். இந்த மனநிலையில் வளரும் இளைஞர்கள் அதே மாயையில் பெண்களை பின் தொடர்கிறார்கள். அவர்கள் அதை மறுக்கும் பட்சத்தில் தங்களின் தாழ்வுமனப்பான்மை ஓங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை கையிலெடுக்கிறார்கள். ஆசிட் வீச்சு, கத்தியால் குத்துவது, பிளேடால் அறுப்பது இதோ இப்போது உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிப்பது என இந்த வன்முறைகளின் துவக்கம் பின் தொடர்தல் தான். இதனை ஒரு குற்றமாக பார்க்கும் மனநிலை சமூகத்திற்கு வர வேண்டும். காதல் என்பது ஒரு அன்பின் பறிமாற்றம் அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையும் விருப்பமும் உள்ளது. ஒருவரின் விருப்பமில்லாமல் காதலிக்க வற்புறுத்துவது வன்புணர்விற்கு சமம். தோல்விகளை ஏற்கப் பழகாமை, காதல் ஒருவர் மீது மட்டும் தான் வரும் என்ற பழங்கதை போன்றவை தான் இந்தக் காதல் வன்முறைக்கு முக்கிய காரணம். “அவள் என்னை நிராகரிக்க முடியாது. என்னை வேண்டாம் எனக் கூறும் உரிமையற்ற உயிரினம் அவள்” என்பது எவ்வளவு கேவலமான சிந்தனையாக இருக்க முடியும் !!

வன்புணர்வு (Rape) எனும் வன்முறை :

பெண்ணின் மீதான உட்சபட்ச வன்முறை “வன்புணர்வு” இதுவும் இன்றைய சூழலில் கடந்து போகக் கூடிய சாதாரண செய்தியாகிவிட்டது. இரும்பு ராட் சொருகிய வன்புணர்வு, கரும்பு சொருகிய வன்புணர்வு, வன்புணர்வுக்குப் பின் கொடூரான முறையில் கொலை போன்ற வித்யாசமான நடைமுறை மாற்றம் கொண்ட வன்புணர்வுதான் சமூகத்தின் கவனத்தையும் இழுக்கிறது.

வன்புணர்விற்கு நியாங்களும் இல்லாமல் இல்லை. “அவளின் ஆடை, அவளின் இரவுப் பயணம், அவள் நிராகரித்த என் காதல், அவளால் ஏமாற்றப்பட்ட நான்” இன்னும் எத்தனையோ நியாயங்கள். வன்புணர்வுக்குக் கூட பெண்ணைக் கைகாட்டும் கேவலம் படிந்த கரங்களை நாம் கடக்காமலில்லை. 6 மாத குழந்தை, 80 வயது பாட்டி என எந்தப் பெண்ணும் இதற்கு விதிவிலக்குமில்லை.

பெண் ஒரு போகப்பொருளா ? :

எங்கேயும் அவள் போகப் பொருளாகத் தான் பார்க்கப்படுகின்றாள். பணியிடத்தில், திரைப்படத்தில், விளம்பரத்தில் என எல்லா இடத்திலும். அவளின் அழகிற்காகத் தான் இந்தியாவில் எத்தனை வணிகம் நடக்கிறது ! உலகின் அழகு சாதனங்கள் ஏன் நம்மை நோக்கிப் படை எடுக்கின்றன. அவர்களின் முதலீடு எதற்காக நம்மை நோக்கி உள்ளது ? ஏனென்றால் நாம் தான் அழகே பெண்ணின் தகுதி என நினைக்கிறோம். அதுவே அவளின் குறிக்கோள் அதுவே அவளுக்கு அனைத்தையும் பெற்றுத் தருகிறது என்ற பிம்பத்தை வளர்க்கிறோம். சிவப்புத் தோல், நீளமான முடி, ஒல்லியான தேகம் இதன் பின்னால் போட்டிக் குதிரையென ஓட வைக்கிறோம். தோற்றக் குதிரைகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறோம். இந்த வணிகம் பெண்ணின் மீதுதான் தன் மூலதனத்தை நிறுத்தியுள்ளது. அவள் அறிவார்ந்து சிந்தித்து கொஞ்சம் நகர்ந்தாலும் வியாபார அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். அதனால் அவளை சிந்திக்கவிடாமல் சினிமா, சீரியல், விளம்பரங்கள் என அனைத்திலும் அவளுக்கான உடலமைப்பை அவர்கள் கவனமாக பதிவு செய்கிறார்கள்.

சமூக வளர்ச்சியில் பெண் :

படிப்படியாக பெண்கள் கடந்து வந்த கல்வி, வேலைவாய்ப்பு சிக்கல்கள் இன்றும் தீரவில்லை. மாதவிடாய் பற்றிய அறிவும் தெளிவும் இல்லாமல் அதை தீட்டென கருத்தும் சமூகத்தின் மிச்சமாய் வந்த ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அந்தச் சிறுமியும், ஒட்டுமொத்த அரசும் ஏமாற்றியதால் கடைசி முயற்சி என தூக்கை தழுவிய அனிதாவும் பெண்கல்வியின் பின்னடைவாகத்தான் தெரிகிறார்கள். “பெண் குழந்தைகள் படிகக்கச் சென்றால் இந்த நிலைமை தானோ ?” என யோசிக்க வைத்த இந்த மரணங்கள் பெண்கல்வியின் மீதான பின்னடைவன்றி வேறென்ன. ?

செங்கல் சூளையிலிருந்து கார்ப்பரேட் கம்பெனி வரை பணிபுரியும் பெண்களுக்கு ஆணுக்கு நிகரான ஊதியம் மறுக்கப்படுகின்றது. பாலியல் அத்துமீறல் மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பும் குன்றியுள்ளது. இந்த சவால்கள் மிகுந்த சமூகச் சூழலில் தான் பெண்கள் தங்கள் முட்பாதைகளை கடந்து சமூகத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டியுள்ளது. தங்களின் சுய வாழ்க்கையையே போராட்டமாக வாழும் பெண்களுக்கு நிச்சயமாகவே அரசியல் போராட்டம் நிகழ்த்த தெம்பும் நேரமும் இல்லாமல் தான் போகிறது. இவற்றைத் தாண்டி தெளிவும் மனவலிமையும் ஊட்டப்பட்ட வெகு சில பெண்களே இன்று சமூக அரசியல் களத்தில் நிற்கிறார்கள். அந்த வெகுசிலரையே அரும்பாடுபட்டு ஒடுக்கிக் கொண்டிருக்கிறது அரசு.

சமத்துவம் மெய்ப்பட சாயம் நீக்குவோம் :

பெண்ணை தனக்கு நிகரான உயிரனமாக மதிக்கத் தவறிய ஆண்களுக்கு பன்னெடுங்காலமான பண்பாட்டு வரலாறு காரணமாக இருக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு போனில் உலகை சுற்றும் தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்குப் பின்பும் பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் குழந்தை வளர்ப்பும் கல்வி முறையும் மாற்றப்பட வேண்டிய கட்டாய்த்தில் உள்ளோம். தந்தை பெரியார் “பெண் பிள்ளை பெற்கும் இயந்திர மல்ல” என்றார். அந்த தெளிவை சமூகத்தில் புகுத்திட வேண்டும். பெண் அனைத்து உணர்வுகளும் அடங்கிய புனிதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதாரண உயிரினம். இதை உலகின் செவிகளில் கல்வியால் மட்டுமே புகுத்திட வேண்டும். அதனால் தான் அத்தனை ஒடுக்குமுறைக்கும் நிரந்தர தீர்வாக “பாலியல் கல்வியைக்” கேட்கிறோம். ஆனால் சானிட்டரி நேபிகினுக்கு GST வரி விதிக்கும் அரசிடமிருந்து பதில் தான் வரவில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறைக்காகவும் பெண் உரிமைகளை காக்கவும் “பெண்ணியம்” எனும் வார்த்தை கேடயமாக பயன்டுத்தப்பட்டு வருகிறது. பெண்ணியத்தை கெட்ட வார்த்தையாக சித்தரிக்கும் சமூகம் பெண்ணியவாதிகளை வேற்று கிரகவாசிகளைப்போல் பார்க்கவும் தவறவில்லை. எங்களின் பொது எதிரி ஆண்கள் அல்ல, ஆணாதிக்கம் மட்டும் தான். ஆணும் பெண்ணும் இணைந்து கரம் கோர்த்து கட்டி எழுப்பும் சமூகமே சமத்துவத்தை தாங்கி நிற்கும். பாலின சமத்துவம் என்பது என்றுமே எட்டாக்கனியல்ல. நாம் நிச்சயம் சுவாசிக்கப்போகும் சுதந்திரக்காற்று. அதை நோக்கிப் பயணிப்போம். சமத்துவச்
சாயங்களை நீக்கி சமத்துவம் மெய்திட களமாடுவோம்.

-உ.திலகவதி, B.tech, B.A, L.L.B
சட்டக் கல்லூரி மாணவி,
காவேரிப்பாக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


3 + 6 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>