“சாதியம் களையக் கிடைத்த நீதி”, சங்கர் – கௌசல்யா சட்டம் படைக்கும் ! – ஆ. சத்தியபிரபு.

சமூகமெங்கும் பரவிக்கிடக்கும் சாதிய வெறியால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அதிலும் குறிப்பாக சாதிய கௌரவக் கொலைகள் சாதியம் தோற்றுவித்திருக்கிற தனிக் குற்றவகை. வெளித் தெரிந்தவை ஒருசிலவே. மூடிமறைக்கப்பட்டவைகளுக்கு எவ்விதக் கணக்கும் இல்லை. அவற்றில் ஒன்றுதான் உடுமலை சங்கர் படுகொலை. 13.03.2016 படுகொலை நிகழ்ந்த அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 21 மாதங்களாக திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியில் சென்ற 12.12.2017 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப் படையைச் சேர்ந்த செகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன் மற்றும் மதன் (எ) மைக்கேல் ஆகிய 6 குற்றவாளிகளுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அலமேலு நடராசன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மொத்தத்தில் 11,65000 ரூபாயை குற்றவாளிகள் குற்றங்களுக்கு ஈடு செய்யும் வகையில் கௌசல்யாவுக்கும் சங்கர் தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாக அனைவராலும் வரவேற்கப்படுகிறது. ஆனாலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகிய குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலையும் செய்துள்ளது.
மூவரின் விடுதலை நமக்கு அதிர்ச்சியே என்றாலும் அவர்கள் என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள தீர்ப்பின் முழுமையான ஆவணம் இதுவரை கௌசல்யா தரப்பிற்குக் கிட்டவில்லை. ஆனால் ஒன்றை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா இம்மூவரும் எந்த அடிப்படையில் இந்த வழக்கிற்குள் சேர்க்கப்பட்டார்களோ அந்த அடிப்படை இப்போது வரை மாறாமல் உயிருடன்தான் உள்ளது. அதாவது அன்னலட்சுமி, சின்னச்சாமிக்கு நிகராகக் கொலைக்கு முதன்மைக் காரணியாகச் செயல்பட்டவர்; பாண்டித்துரை கொலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தவர்; பிரசன்னா சங்கர் – கௌசல்யா இருவரையும் பின்தொடர்ந்து கொலையாளிகளுக்குத் தகவல் கொடுத்தவர். கௌசல்யா சொன்ன இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர்கள் இவ்வழக்குக்குள் சேர்க்கப்பட்டார்கள். கொலைக்கு முன்னால் கௌசல்யா சந்தித்த கடத்தல், வீட்டுச் சிறை, கொலை மிரட்டல், வன்முறை என அத்துணை அடக்குமுறைகளையும் உடனிருந்து செயல்படுத்தியவர்கள் அன்னலட்சுமியும் பாண்டித்துரையும். இதை உடனிருந்து கண்ட சாட்சி கௌசல்யா. இந்த அடக்குமுறைகளின் தொடர்ச்சிதான் சங்கர் கொலையும் கௌசல்யா மீதான கொலை முயற்சியும். அவரின் கூற்றே மறுக்கப்படுமானால் அதன் நீட்சியாக இந்த வழக்கிற்கான அடிப்படையே செத்துப் போகும். இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உரிய சான்றுகள் நீதிமன்றத்திற்குக் கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால் அதற்குரிய அடிப்படைக் காரணிகளை யாராலும் மறுக்க முடியாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். நம்மைப் பொருத்தவரை மூவரும் குறிப்பாக அன்னலட்சுமியும் பாண்டித்துரையும் இரத்தக்கறை படிந்தவர்களே ! சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இவர்கள் கொடிய குற்றவாளிகளே !

எத்தனையோ சாதியக் கொலைகளில் சாதிய கௌரவக் கொலைகளில் நீதிக் குரலை மௌனித்து இரத்த உறவுகள் பக்கம் பலரும் நின்றிருக்கிறார்கள். அதனாலேயே முக்கியமான சாட்சியின்மையால் பல
வழக்குகள் முடிந்தேறியுள்ளன. ஆனால் தோழர் கௌசல்யாவின் உறுதி போற்றத்தக்கது. தன் சங்கர் சிந்திய இரத்தத்திற்கு விடையெடுத்தே ஆகவேண்டும் என்று பயணித்து நீதியை வென்றெடுத்துள்ளார். தூக்கி வளர்த்த பெற்றோர்களின் அன்பைக் கூட தூசி போல் தூக்கியெரிந்து தான் அடைந்த பெருவலியை இனி எந்தவொரு காதல் இணையர்களும் அடைந்துவிடக் கூடாதென நின்றதன் வழி கிடைத்த நீதிதான் இந்த எட்டு பேருக்குக் கிடைத்துள்ள தண்டனை !

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து வெவ்வேறு கருத்துகள் உலவிக்கொண்டுள்ளன. பட்டப் பகலில் பெற்ற மகளையும் கொல்லத் துணிந்து அவள் கரம் பிடித்தவனையும் படுகொலை செய்தவர்களை எப்படி உயிருடன் விடமுடியும் என்ற அறச்சீற்றம் நியாயமானதே. அதே நேரம் தூக்கில் ஏற்றப்பட்டால் இந்தக் குற்றம் நின்றுபோகும் அல்லது பெருமளவு குறையும் என்று யாராலும் உறுதிதர முடியாது. உறுதி தருவதற்கான சான்றுகளையும் தரமுடியாது. போதையில் செய்யப்படுகின்ற கொலை, உணர்ச்சிவயத்தில் செய்யப்படுகின்ற கொலை, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகச் செய்யப்படுகின்ற கொலை – இந்த எந்தக் கொலையையும் தூக்குத் தண்டனை அச்சுறுத்தி விடாது. அதுபோல்தான் சாதிவெறி தலைக்கேறி பறிபோன சாதிய கௌரவத்தால் நிதானமிழந்து தூக்கமிழந்து சீரான மனநிலை இழந்து செய்யப்படுகின்ற கொலையையும் தூக்குத் தண்டனை தடுத்துவிடாது. எப்படிப் பார்த்தாலும் கொலை என்பது தண்டனையாகாது. பழிக்குப் பழிதீர்த்தலை தனிமனிதன் செய்தாலும் ஒரு அரசே செய்தாலும் குற்றம் குற்றமே ! சாதிய கௌரவக் கொலைக்கு எதிரான தனிச் சட்டமும் முடிவில் சாதி ஒழிப்புமே இவற்றுக்குத் தீர்வு ! தூக்குத் தண்டனை அல்ல! இந்த வழக்கைப் பொருத்தவரைக்கும் விடுதலை செய்யப்பட்ட மூவருள்ளிட்ட அனைவரும் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்பட வேண்டும். அப்படிக் கண்ணுக்கெதிரே அவர்கள் சாகும் வரைக்கும் தண்டனையை அனுபவிக்கச் செய்ய வேண்டும். இதுவரைக்கும் குற்றவாளிகள் சாதி உணர்விலிருந்து மீளவில்லை என்பதை அறிகிறோம். வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்படுவதன் மூலம் தினம் தினம் அவர்களுக்குள் இருக்கும் சாதிய உணர்வு கேள்விக்குள்ளாக வேண்டும். இன்னும் சொன்னால் அவர்களை அவர்களே பார்த்துக்கொள்ளும் கண்ணாடிதான் சிறை. இதை மீறி அவர்கள் தூக்கில் ஏற்றப்பட்டால் சாதிய உணர்வோடுதான் சாவார்கள். அதன் மூலம் சாதிவெறியர்களுக்கு அவர்கள் கதாநாயகர்கள் ஆவார்கள். சிலையும் கூட வைக்கப்படலாம். இதையா நாம் விரும்புகிறோம் ?

சாதிமறுப்புத் திருமணங்களினால் ஏற்படும் இதுபோன்ற படுகொலைகளை தடுக்க வேண்டுமானால் அதற்குச் சாதிய படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் வேண்டும். இந்திய அரசியமைப்புச் சட்டம் 21 வயது நிரம்பிய ஆணும் 18 வயது நிரம்பிய பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த அடிப்படைச் சட்ட உரிமைக்கு நேர் எதிரானவை சாதிய கௌரவக் கொலைகள். அடிப்படை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற திருமண உரிமையை கேள்விக்குள்ளாக்கும் சாதியக் கௌரவக் கொலை சாத்தியம் உருவாக்கியுள்ள தனிக் குற்றவகை என்பதை முதலில் அறிந்தேற்க வேண்டும். அதை இனிமேலும் சாதாரண பொதுவான சட்டங்கனைக் கொண்டு கையாள்வது ஏற்கவே முடியாத முரண்பாடு. அடிப்படை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற ஒன்றை நிலை நிறுத்துவதற்குத்தான் நாம் சாதிய கௌரவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் கேட்கிறோம். இதை இந்தத் தீர்ப்பை ஒட்டி தமிழக அரசே அதற்குரிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோருகிறோம். அந்தச் சட்டத்திற்கு சங்கர் – கௌசல்யா சட்டம் என்ற பெயரே பொருத்தமானதாக இருக்கும்.

தோழர் கௌசல்யா சாதி ஒழிப்பிற்காகவும் பெண் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் மக்களோடு மக்களாய் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உறுதியும் துணிவும் எத்தனையோ பேரை சமூகநீதி களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. களத்தில் நிற்கும் தூய உள்ளங்களை மட்டுமல்ல பொதுவான அனைத்துத் தரப்பு நல்லுள்ளங்களையும் கௌசல்யா தன்னையே அறியாமல் தன் பக்கம் வென்றெடுத்திருக்கிறார். தோழரின் உறுதிமிக்க களப்பயணம் சங்கர் – கௌசல்யா சட்டத்தை வென்றெடுக்கும். பெரியாரின் பேத்தியாக உருவெடுத்துள்ள தோழர் கௌசல்யாவின் போராட்டப் பயணத்திற்கு தோள் கொடுப்போம். இந்தத் தனிச்சட்டத்திற்காக தமிழர் ஓர்மை கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்படி ஒன்று எழுப்பபட்டால் அதுவே நாம் அடைய விரும்பும் சமூகநீதித் தமிழ்த் தேசம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


5 + 2 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>