பெண் விடுதலையும் மண் விடுதலையும் – பெண்ணுரிமை எழுச்சிப் பொதுக்கூட்டம்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்தும்

பெண் விடுதலையும் மண் விடுதலையும்

பன்னாட்டுப் பெண்கள் நாளில் (2015 மார்ச்சு 8, செங்கிப்பட்டி, தஞ்சை)

பெண்ணுரிமை எழுச்சிப் பொதுக்கூட்டம்

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்   அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”  — பாரதியார்.

ஆண்டு தோறும் மே முதல் நாளை உலகத் தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறோம். அதே போல் உழைக்கும் பெண்களுக்காகவும் ஒரு போராட்டத் திருநாள் உண்டு. அதுதான் மார்ச்சு 8ஆம் நாள்.

கடந்த 1910 ஆகஸ்டு மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனில் இரண்டாம் பன்னாட்டு உழைக்கும் மக்கள் சங்கத்தின் மாநாட்டுக்கு முன் கூடிய பன்னாட்டுப் பெண்கள் மாநாடு எடுத்த முடிவின் படி ஆண்டுதோறும் பன்னாட்டுப் பெண்கள் நாள் கொண்டாடும் நடைமுறை தொடங்கியது. இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் செருமானியக் கம்யூனிஸ்டும் லெனினின் தோழருமான கிளாரா செட்கின் அம்மையார்.

கடந்த 1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் பன்னாட்டுப் பெண்கள் நாளை முன்னிட்டு உருசிய நாட்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உழைக்கும் பெண்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம்தான் உருசியப் புரட்சிக்கே தொடக்கமாய் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

தொடக்கக் காலத்தில் பெண்களின் வாக்குரிமைக்காகவும் பிற உரிமைகளுக்காகவும் பன்னாட்டுப் பெண்கள் நாளில் கிளர்ச்சிகள் நடைபெற்றன. உலகெங்கும் பெண்ணுரிமைக்கான, பெண்ணதிகாரத்துக்கான போராட்டம் இன்றளவும் தொடர்கிறது.

கடந்த 1977ஆம் ஆண்டு ஐநா பொதுப் பேரவை மார்ச்சு 8ஆம் நாளை உலகப் பெண்கள் நாளாகக் கொண்டாடும் படி அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டது.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீராது என்பதை நெஞ்சிலேந்தித் தமிழின விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு கூறாகப் பெண்விடுதலைக்காகப் போராட வேண்டிய கடமை நமக்குள்ளது. இந்த நாளில்…

  • இனக்கொலைப் போரில் கைம்பெண்கள் ஆக்கப்பட்ட 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழீழப் பெண்களையும் பிற தமிழுறவுகளையும் …
  • இந்திய வல்லாதிக்க அரசின் இராணுவ அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடும் மணிப்பூர் மாதரசி இரோம் சர்மிளாவையும் காசுமீர் மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த பெண்களையும் …
  • அணு உலை ஆபத்துக்கெதிராக மூன்றாண்டு காலத்துக்கு மேல் போராடி வரும் இடிந்தகரைப் பெண்களையும் …
  • தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகமெங்கிலும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடி வரும் பெண்களையும் …

நெஞ்சிலேந்தி அவர்களின் போராட்டங்களோடு தோழமை கொள்ள இந்தப் பன்னாட்டுப் பெண்கள் நாளில் உறுதி ஏற்போம்.

சிறப்புரை:
தோழர் வே.பாரதி,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பேச: 9715417170

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


7 + = 8

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>