தந்தை பெரியார்: தமிழ்த் தேசிய அறிவியலர் – நலங்கிள்ளி

(ஆழம் மே 2015 இதழ் பெரியார் சிறப்பிதழாக வெளிவந்தது. அடுத்து வந்த ஜூன் இதழில் ம. வெங்கடேசன் எதிர்வினை புரிந்திருந்தார். ‘பெரியார் யாருக்குப் பெரியார்?’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அவருடைய கட்டுரை, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக எப்போதும் போராடியதில்லை என்றும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கு மட்டுமே அவர் பெரியார்; மற்றவர்களுக்கு அல்லர் என்றும் வாதிட்டிருந்தது. நலங்கிள்ளியின் இந்தக் கட்டுரை பெரியார் மீது முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதுடன் விரிவான ஒரு தளத்தில் பெரியாரையும் அவருடைய பங்களிப்பையும் அறிமுகப்படுத்துகிறது. – ஆசிரியர்.)

பெரியாரை இன்று பலரும் கொண்டாடுகிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக, விசிக, பாமக, தேமுதிக எனப் பல பல தேர்தல் அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகளில் பல நேரம் பெரியார் முகம் பளிச்சிடுகிறது. இவர்கள் நாளுக்கொரு கூட்டணி காண்பது, பதவி சுகங்கள் அனுபவிப்பது எல்லாமே பெரியார் புகழ் பரப்பத்தானாம்.

திராவிடர் கழகத்தை இன்று வழிநடத்தும் கி. வீரமணி பெரியாரின் கொள்கைகளை, கருத்துகளைத் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும், ஏன், உலகெங்கும் பரப்புவதே குறிக்கோள் என முழங்குகிறார்.

வீரமணியால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட பெரியார் கொள்கைகளை மீட்டெடுக்கப் போவதாக முழங்கி புதுப் புது திராவிட அமைப்புகள் பல பெயர்களில் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டுகளும் கூட கொஞ்ச நாளாகப் பெரியாரைப் புகழத் தொடங்கியுள்ளனர். அவர் ஒரு பூர்ஷ்வா சமூக சீர்திருத்தவாதி, கலகக்காரர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மகஇக உள்ளிட்ட அதிதீவிர கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இன்று பெரியாரியம், பார்ப்பனியம் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். மிதவாத, தீவிரவாத கம்யூனிஸ்டுகள் இருவருமேஇப்போதுதான் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எத்தனை எத்தனை அமைப்புகளும், எத்தனை ஆயிரம் பேரும் பெரியாரைக் கொண்டாடட்டும். அவர்கள் கொண்டாடுவது பெரியாரையா? பெரியார் கொள்கைகளையா? தேர்தல் பதவிக் கட்சிகளுக்கு அவர் விளம்பர மாடலா? கொள்கை வழிகாட்டியா?

புரிந்து கொள்ள கலைஞரை எடுத்துக் கொள்வோம். பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்தவர் அல்லவா? கலைஞரின் பெரியார்ப் புலமை என்ன? சென்ற ஆண்டு (2014) மோதி அரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. உடனே கலைஞர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு வாஜ்பாய் மீது என்றுமே பேரன்பு உண்டாம். வாஜ்பாய் அவருக்கு என்றுமே ஜென்டில்மேன்தானாம். கலைஞர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் குற்றமில்லை. அவருடைய பதவி வேட்டை அரசியல் புரிந்து கொள்ளக் கூடியதே. எஸ். வி. சேகரிடமே எம். ஆர். ராதாவின் முற்போக்கைக் கண்டவரல்லவா?அவர் குடியரசுத் தலைவர் பிரணாபுக்கும் தலைமை அமைச்சர் மோதிக்கும் கடிதம் எழுதினாராம். நீங்கள் அன்புமிகு வாஜ்பாயை கௌரவிப்பதெல்லாம் சரிதான். அதேபோது தமிழகத்தையும் திராவிட இயக்கத்தையும் கௌரவிக்கும் வகையில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கட்டாயம் பாரத ரத்னா தர வேண்டாமா? என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாராம். கலைஞாரின் உள்ளத்தில் இந்துத்துவ முகமூடி வாஜ்பாய்¢க்கும் இடமுண்டு, பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் இடமுண்டு. ஆனால் பெரியாரின் உள்ளத்தில் இந்த பாரதத்துக்கும் ரத்தினத்துக்கும் இடமுண்டா?

கலைஞர், வைகோ, கி. வீரமணி எனத் தமிழ்த் தலைவர்கள் பெரியாரை இந்தியத் தேர்தல் சந்தையில் ஒரு பண்டமாக்கி வெகு காலமாகிவிட்டது. இப்போது பாரதக் கட்சிகளுக்கும் பெரியார் அத்தியாவசியப் பண்டமாகி வருகிறார். சமூகநீதி காக்கவும், இந்து மதவெறி எதிர்க்கவும் பெரியாரைக் கையில் எடுப்பதாக அனைவரும் ஒரே பாட்டு பாடுகின்றனர்.

அப்படியானால் பெரியார் சமூகநீதிக்காகப் போராடவில்லையா? கட்டாயம் போராடினார். ஆனால் அத்துடன் அவரைக் கோடு கட்டி நிறுத்துவதில்தான் சிக்கல். இதைச் சொல்வதற்குச் சமூகநீதிக் காவலர்களும், தமிழினத் தலைவர்களும், எழுச்சித் தமிழர்களும், புரட்சிப் புயல்களும் தேவையில்லை. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே போதும். பெரியார் சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்கப் பாடுபட்டார், வைக்கம் வீரர் எனப் போற்றப்படுகிறார் என்றெல்லாம் அவர்கள் காலங்காலமாய் மனனம் செய்து தேர்வெழுதி தேறி வருகிறார்கள். ஆனால் பெரியாரின் முழு மெய்யியலையும் கற்க இத்தகைய எளிய சொல்லாடல்கள் போத மாட்டா.

சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்க எனச் சராசரி அரசியல்வாதிகள் போல் வெறும் முழக்கங்களை மட்டும் முன்வைத்தவரல்லர் பெரியார். அவர் சமூக விடுதலைக்கான மெய்யியலை உருவாக்கிக் கொடுத்தவர். கற்பு, பதிவிரதை, பத்தினி, தாலி, விதவை போன்ற ஆணாதிக்கக் கருத்தியல்களை உடைத்தெறிந்து புத்தம் புதுப் பெண்ணியக் கருவைச் செதுக்கிக் கொடுத்தவர்.

சாதியத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் போரிட்ட பெரியார் அந்தச் சாதிப் புற்றைக் கரைப்பதற்குக் கூட்டணித் தந்திரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. அவரே கூறுவது போல், அவரது காமராசர் ஆதரவு, திமுக ஆதரவு எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காலிக உரிமைகளை நிலைநாட்டவே.சாதிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை போதிக்கவில்லை பெரியார். சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டும் விடுதலை அரசியலை முன்வைத்தார். அந்த விடுதலைக்குத் தேவையான அறிவியலை விண்டுரைத்தார்.

அவர் விண்டுரைத்த அறிவியலை மேம்போக்காக ஒன்றிரண்டு பெரியார் மேற்கோள்களை மேய்வோரால் புரிந்து கொள்ள முடியாது. அவர் 1925 முதல் 1973 வரை அவரே நடத்திய பல ஏடுகளில் எழுதிய கோடிக் கணக்கான எழுத்துக்களிலும், ஆயிரக்கணக்கான கூட்டங்களில் முழங்கிய சொற்களிலும் அடிநாதமாய் இழையோடி நிற்கும்அறிவியலைப் புரிந்து கொள்பவர்களால்தான் சமூகநீதிக் கொடுமுடியை அடைய  முடியும்.

பெரியார் விண்டுரைத்த அந்த அறிவியல்தான் என்ன?

தமிழகத்தில் சமூகநீதிக்குக் கேடு பயக்கும் அகப் பகை எது எனக் கேட்டால் பல முற்போக்கர்களும் பார்ப்பனியம், சாதியம் என விடையளிக்கக் கூடும். சாதியம் காக்கும் புறப் பகையை வரையறுத்துச் சொன்னதில்தான் பெரியாரின் மேதைமை அடங்கியுள்ளது. அந்த மேதைமையின் ஆழ அகல உயரங்களை ஆராயத் துணிவோருக்கே பெரியாரின் சமூக அறிவியல் விதிகள் தெளிவாய் விளங்கும்.

காங்கிரசிடம், காந்தியிடம் சாதிக்கு, தீண்டாமைக்கு நீதி பெறுவது இயலாத காரியம் என உணர்ந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார் (22.11.1925). சுயமரியாதை இயக்கம் காண்கிறார். பார்ப்பனரல்லாதார் உரிமைகள் காத்தல், தீண்டாமை ஒழித்தல், பெண்ணடிமை ஒழித்தல், மூடநம்பிக்கை அகற்றுதல் ஆகியவற்றை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக அறிவிக்கிறார். அவர் காங்கிரசில் இருந்தபோதே தொடங்கிய குடி அரசு ஏட்டில் இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார். ஞாயிறுதோறும் வெளிவந்த குடி அரசு கிழமையேட்டின் முதல் பக்க முகப்பில் கோயிலும், தேவாலயமும், மசூதியும் காட்சியளித்தன. பாரத மாதா காட்சியளித்தாள். பெரியாரிடம் கடவுள் நம்பிக்கை அகன்று நாத்திகக் கொள்கைகள் ஏற்றம் கண்டு வந்த நிலையில் மத வழிபாட்டிடங்கள் காணாமல் போயின. அதே காலக் கட்டத்தில் அவரிடம் இந்திய நம்பிக்கையும் அகன்றது, பாரத மாதாவும் காணாமல் போனாள். கடவுள், இந்தியம் இரண்டுமே கற்பனைப் புனைவுகள் என உணரத் தலைப்பட்டார். குடி அரசு ஏட்டில் (01.06.1930) வெளியான அவரது சேலம் சொற்பொழிவைக் கேளுங்கள்:

‘இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு.’

1937இல் இராஜாஜி அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தில் பெரியாரின் இந்திய எதிர்ப்புணர்வும், தமிழ்நாடு பிரிவினை உணர்வும் இன்னும் இன்னும் கூர்மைப்பட்டன.

1937 செப்டம்பர் 19ஆம் நாள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் இந்திய எதிர்ப்பு இன்னும் சூடுபிடிக்கிறது பாருங்கள்:

‘நாம் ஏமாறுவதற்குத்தான் வடநாடு உபயோகப்படுகிறது. இன்றைய அரசியலைப் பார்க்கின்றபோது, எக்காரணம் கொண்டாவது, எப்பாடு பட்டாவது நம் நாட்டை வடநாட்டு சம்பந்தத்திலிருந்து தனியாகப் பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுதலையோ மானமோ ஏற்படப் போவதில்லை. இன்று நமக்குச் சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் இருக்கிறதென்றால், அது நமது தமிழ் நிலை உணர்ச்சியாலேயும், இந்தி படிக்காததாலேயுந்தான் என்று வலிமையாகக் கூறுவேன்.’

பெரியார் இந்தக் கருத்துகளை உணர்ச்சியில் அள்ளித் தெளித்துவிடவில்லை. தேசிய இனங்களின் வரையறை குறித்துத் தெளிவான அறிவியலை முன்வைத்த லெனினியத்தைக் கரைத்துக் குடித்த இந்திய கம்யூனிஸ்டுகளே இந்திய மயக்கத்தில் கிறங்கிக் கிடந்த காலத்தில், பெரியார் பட்டறிவு கொண்டே தமிழின விடுதலைக்கான அடிப்படைகளைத் தெளிவாய் விளக்கினார். அவர் அதே உரையில் கூர்முனைக் கேள்விகளால் எப்படி ஏரணத் தோரணம் கட்டுகிறார் பாருங்கள்:

  1. இந்தியாவை மொழி அடிப்படையில் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்து விட்டால், இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்?
  2. நம் ஒரு ஜில்லா போல் விஸ்தீரணம் கொண்ட நேபாளத்தில் வாழ்வோர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  3. இந்து மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சயாம் நாட்டினர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  4. பர்மா, நேபாளம், பூடான், மலேயா என எல்லாம் ஒவ்வொன்றாக இந்தியாவை விட்டுப் பிரிந்து விட்டன. அதற்கு முன் காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தான்) பிரிந்து விட்டன. இப்படி எவ்வளவோ பிரிந்து, எவ்வளவோ சேர்ந்து விட்ட பிறகு தாய்நாடெது? தகப்பன் நாடெது?
  5. ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் தத்தமது நாட்டைத் தாய்நாடென்பார்களா? ஐரோப்பாவைத் தாய்நாடென்பார்களா?
  6. ஆகவே தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூற வேண்டும்? எதற்காக இந்தியா பூராவும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும்? ‘பாரத நாடு’ என்பதையும், நாமெல்லாம் ‘பரதர்கள்’ என்பதையுங்கூட நாம் ஏன் ஏற்க வேண்டும்?

இந்தியா தமிழர்களின் நாடன்று, தமிழகமே தமிழர்களின் நாடெனப் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறார் பெரியார்.

அந்த உரையில் இந்தியத்தின் ஆபத்தைப் பெரியார் சுட்டுகிறார்:

‘தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்துப் பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.’

இறுதியில் பெரியார் தமிழர்க்கு உரிமையுடன் கட்டளையிடுகிறார்:

‘நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும், தமிழரல்லாதானுக்கும் நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே! என ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே! எனப் பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுதோறும் தமிழ்நாடு தமிழருக்கே! என்னும் வாசகத்தை எழுதிப் போடுங்கள்!’

பெரியாரின் தமிழகப் பிரிவினைஇந்தித் திணிப்பினால் தீவிரமடைந்தது உண்மைதான். ஆனால் அந்தப் பிரிவினையின் மையம் இன்னும் ஆழமானது. அது சரியாகச்சாதி ஒழிப்பில், இந்து மத அழிப்பில் மையம் கொண்டிருந்தது. சாதி ஒழிப்புக்குப் பெரியாரிட்ட அறைகூவல் தமிழக ஓர்மைக்கு அடிப்படையாக இருந்தது. இதற்கான சான்றை அதே உரையில் காணலாம்:

‘தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும், கலப்படமற்ற தனித் தமிழ்ச் சாதி என்றும் ஒருவன் சந்தேகமறக் கருதுவானாயின், அவன் உடனே தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் சமயத்தை, சரியாகச் சொன்னால் தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்பந்தமே இல்லாத, தன்னை சூத்திரன் என்றும், சண்டாளன் என்றும் கூறும்படியான சமயத்தை உதறித்தள்ளி விட வேண்டியது முதற்காரியமாகும்.’

ஒருவர் தன்னை உண்மைத் தமிழன் என்று கருதிக் கொள்ள வேண்டுமானால், சூத்திரன், சண்டாளன் இரு நிலைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் எனப் பெரியார் இங்கு தெளிவாகக் கூறுகிறார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்குமான ஒற்றுமையை வலியுறுத்தித் தமிழர் ஓர்மைக்கு அடித்தளமிடுகிறார்.

பெரியாரின் இந்தப் பார்வை 1940 ஆகஸ்டு 25ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது:

‘திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதித் திராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பதும், திராவிடருக்கும் ஆதித் திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை.’

பெரியாரின் இந்த உரையில் அவர் தமிழர் ஓர்மைக்கு அடிப்படையாகச் சாதி ஒழிப்பை முன்வைப்பது தெளிவாக வெளிப்படுகிறது. அவர் இந்தப் பார்வையைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பேசி வந்தது அவரது சாதி ஒழிப்பு நேர்மையைக் காட்டுகிறது.

1930 ஜூன் முதல் நாள் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் குல சத்ரியர் மாநாட்டில் பெரியார் எழுப்பிய முழக்கம் அவரை உண்மை சாதியொழிப்பு வீரராகக் காட்டும். பெரியோர்களே! இந்த மாநாட்டிலாவது உங்களுக்கு மேல் சாதி ஒன்று இருக்கிறது என்பதையும், நீங்கள் சில சாதிகளுக்கு மேலானவர்கள் என்பதையும் மறந்து விடுங்கள், இல்லையேல் உங்களின் கீழ்மை நிலை என்றென்றும் நிலைக்கவே செய்யும் என வன்னிய மக்களை எச்சரித்தார் பெரியார். சத்ரியர் என்ற பட்டமெல்லாம் உங்களுக்கு மேலும் இழிவைத் தேடித் தருமே தவிர என்றும் எந்த மேன்மையையும் அளிக்காதெனத் துணிந்துரைத்தார்.

சாதியொழிப்பின் அடிப்படையை உணர்த்தும் வகையில்தான் ‘பறையர்ப் பட்டம் ஒழியாது சூத்திரப் பட்டம் ஒழியாது’ என முழங்கினார் பெரியார்.

பெரியார் தாம் உட்பட அனைத்துக் கழகத் தோழர்களையும் சாதிப் பின்னொட்டுகளைக் களையச் செய்தார். இதனால் தமிழகத்தில் இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் எனச் சாதிப் பட்டங்கள் அனைத்தும் ஒழிந்தன.

தமிழகத்தில் சாதிப் பட்டம் ஒழியக் காரணமாக இருந்த மாபெரும் தலைவாரின் பெயரையே ஈ. வெ. ராமசாமி நாயக்கர் எனக் கூச்சமற்று எழுதுவோரின், பேசுவோரின் அறிவு நாணயத்தை என்னென்பது? பெரியார் இடைநிலைச் சாதித் தலைவரே தவிர தலித்துகளுக்கு ஏதும் செய்து விடவில்லை எனப் பார்ப்பனர்களும், ஆதிக்கச் சாதியினர் சிலரும் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். பெரியார் தலித்துகளைக் கோயிலுக்குள், ஆதிக்கச் சாதியார் தெருக்களுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டமேதும் நடத்தினாரா? எனச் சில தலித் எழுத்தாளர்கள் கேட்கின்றனர். அவரை தலித் விரோதி என்னும் அளவுக்கு அறிந்தோ அறியாமலோ எழுதுகின்றனர். இந்த மனிதர்களின் அறிவு முதிர்ச்சியை என்னென்பது?

சாதியையும் பாதுகாத்துக் கொண்டு தலித் விடுதலை கோரிய மொன்னைப் பேர்வழியல்ல பெரியார். சாதிக் குடுமி இழுத்துப் பார்ப்பனியத்தின் தீண்டாமையின் அடிமடியில் கைவைத்த மாவீரர் அவர்.

சாதியம் என்னும் புற்றுடைத்து தலித்தியத் தேரைத் தமிழ்த் தேசியப் பாட்டையில் தங்கு தடையின்றி முடுக்கி விட்டவர் பெரியார். சல்லி வேர் நுனி கண்டு மனநிறைவு காண்போர் சாதாரண மனிதர்கள். ஆணி வேர் அடி காணும் வரை அயராதோரே மேதைகள்.

பெரியார் தலித்துகளை எத்தனை கோயில்களுக்குள், தெருக்களுக்குள் அழைத்துச் சென்றார் எனக் கணக்கு கேட்போர் சம்பிரதாய மாற்றங்களில் நம்பிக்கை வைத்து தலித் விடுதலையைக் கற்பனைக் கனவாக்கி வைத்துள்ளனர், அப்படியே நம்மையும் நம்பச் சொல்கின்றனர். ஆனால் பெரியாரோ சார அளவிலான மாற்றங்களில் நம்பிக்கை வைத்தவர். எனவேதான் அவர் தலித்துகளின் கோயில் நுழைவு என்பதை விட, கருவறை நுழைவு என்பதில் பெரும் அக்கறை செலுத்தினார்.

திமுக ஆட்சியின் போது 1972 ஜூன் 23ஆம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசுவதைக் கேளுங்கள்:

‘இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.’

சேரி மக்கள் ஆதிக்கச் சாதியினர் தெருக்களுக்குள் அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டவரல்லர் பெரியார். அந்தச் சேரிகளையே இல்லாதொழிக்க வேண்டுமென அவரது வாழ்நாள் முடிவு வரை முழக்கமிட்டதைத்தான் அவரது நொய்யல் பேச்சு காட்டுகிறது.

பெரியார் சுயமரியாதை இயக்கக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கு நேரடியாகக் கண்ட களங்கள் பல. சென்னை (15.01.1928; 10.02.1929; 21.07.1929; 07.08.1933), கள்ளக்குறிச்சி (16.06.1929), இராமநாதபுரம் (25.08.1929), ஆதனூர் (13.10.1929), தலைச்சேரி (30.03.1930), திருநெல்வேலி (10.06.1930), சேலம் (16.05.1931), லால்குடி (07.06.1931; 07.02.1932; 07.08.1933), திருச்சிராப்பள்ளி (05.07.1931), கோயம்புத்தூர் (05.07.1931), அருப்புக்கோட்டை (28.08.1932; 03.01.1938), தஞ்சாவூர் (09.07.1935), சீர்காழி (10.07.1935), திருச்செங்கோடு (07.03.1936), கொச்சி (23.05.1936), சேலம் (02.09.1936), சிதம்பரம் (06.05.1937), ஆம்பூர் (04.07.1937), திருச்செங்கோடு (01.08.1937) எனத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பல ஆதி திராவிடர் மாநாடுகளையும், தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும் நடத்தியவர் பெரியார்.

வரலாற்றை மறந்த, அல்லது வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவ வெறியர்கள் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் என்ன தொடர்பு என இன்று கேட்கின்றனர்.

1936இல் லாகூரில் நடைபெறவிருந்த சாதி ஒழிப்புச் சங்கத்தார் மாநாட்டுக்குஅண்ணல் அம்பேத்கர் ஒரு தலைமை உரையை அனுப்பி வைத்ததும், அந்த உரையை அம்மாநாட்டார் மறுதலித்ததும், எனவே அந்த உரையை அம்பேத்கர் The Annihilation of Caste என்னும் தலைப்பில் 1936 மே 15ஆம் நாள் புத்தகமாக வெளியிட்டதும் நம்மில் சிலருக்கேனும் தெரிந்த செய்திகளே. அதுவும் அருந்ததி ராய் போன்றோரே இப்போதுதான் அம்பேத்காரின் அந்த உரையைப் படிக்க நேர்ந்தது என்றும், அதன் மூலமாகத்தான் சாதியத்தின் கொடூர முகத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது என்றும் புல்லரித்துப் பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆனால் இணைய வசதியேதுமற்ற அந்தக் காலத்தில், அம்பேத்கர் உரை புத்தகமாக வெளியான இரண்டே மாதத்தில் அதனைத் தமிழில் மொழிபெயர்த்து 1936 ஜூலை 19ஆம் நாள் ‘சாதி ஒழிய வேண்டும்’ என்னும் தலைப்பில் குடி அரசு ஏட்டில் வெளியிடச் செய்தார் பெரியார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கருத்தியலே உண்மையான தலித் விடுதலைக்கு அச்சாணியாயிற்று என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கும் மேலாகப் பெரியார் சாதியத்துக்குக் காரணமான ஆணி வேருக்கே அமிலம் அடித்த வரலாறுதான் அவரின் மெய்யுருவை நமக்குப் படம்பிடித்துக் காட்டும்.

சாதி ஒழிப்புக்கு, தலித் விடுதலைக்குத் தடையாக நிற்கும் அகப் பகைக்கு எதிராகத் தமிழகத்தில் களங்கண்ட பெரியார் புறப் பகையையும் சரியாக அடையாளம் கண்டு முன்னிறுத்தினார். பார்ப்பனியத்தின், சாதியத்தின் காப்பரணாக இந்தியமும் இந்திய அரசமைப்புச் சட்டமும் திகழ்வதாக நிறுவினார். இந்தியத்தில் தமிழர்களுக்கு எந்த விடிவுமே கிடைக்காது என்பதால்தான் அவர் இந்தியாவின் முதல் விடுதலை நாளையும், தொடர்ந்து முதல் குடியரசு நாளையும் (26.01.1950) துக்க நாள்களாக அறிவித்தார்.

பார்ப்பனியத்தின் உறைவிடமாகத் திகழும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடினார் பெரியார்.

1952 ஆகஸ்டு 3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பெரியார் பேசினார்:

‘நான் சொல்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம்.’

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் களத்தில் 1957இல் இறங்கினார் பெரியார். போராட்டத்துக்கு நவம்பர் 26 என நாள் குறித்தார். போராட்டத்துக்கு முதல் நாள் பெரியார் கைது செய்யப்படுகிறார். குறிப்பிட்ட நாளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துணிந்து எரித்தனர். அவர்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் மூன்றாண்டு அளவுக்குச் சிறைத் தண்டனை பெற்றனர். சிறைக் கொடுமையில் இருவர் இறந்தனர்.

போராட்டத்தில் கைதாகி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒரே வாக்குமூலத்தையே ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு வாசித்துக் காட்டினர். அவர்கள் வாசித்துக் காட்ட வேண்டிய வாக்குமூலத்தை ஏற்கெனவே விடுதலை (21.11.1957) நாளிதழ் வெளியிட்டிருந்தது. அந்த வரலாற்று வாக்குமூலமே பெரியாரின் சாதியொழிப்புக் குறிக்கோளுக்கு ஆவணமாகிறது:

‘நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உள்ளடக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு.  இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.’

‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என ஆணவத்தோடு திருச்சிராப்பள்ளியில் பேசினார் நேரு (இந்து, 10.12.1957). மீறுபவர் எவரானாலும் சிறையில் வைப்பேன், பைத்தியக்கார மருத்துவமனையில் அடைப்பேன் என்றெல்லாம் எக்காளமிட்டார் அந்த சனநாயகப் புத்திரர். ஆனால் பெரியார் சளைக்கவில்லை. நேருவே! தமிழ்நாடு உன்னாடல்ல! நீ முதலில் என்னாட்டை விட்டு வெளியேறு! என முழங்கினார். இன்னும் தீவிரமான பல போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப் படத்தைத் தமிழ்நாடெங்கும் எரிக்கச் செய்து கைதானார் (05.06.1960). இந்தியக் கொடி எரிக்கும் போராட்டங்களையும் அடுத்தடுத்து அறிவித்தார். தமிழ்நாட்டுக்கு முழு விடுதலை கோரி 1968 ஏப்ரல் 24ஆம் நாளை தில்லி ஆதிக்கக் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை என்பது தமிழக விடுதலையில், இந்திய ஆதிக்க எதிர்ப்பில் பின்னிப் பிணைந்துள்ளது. பாரத ஒற்றுமை பேசி சாதியை ஒழிப்பேன் என்பது பெரியார் மெய்யியலின் ஆன்மாவை வேரோடு பறிப்பதாகும்.ஓட்டு வேட்டைக்கு, சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பெரியார் கொள்கைகள் உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக அவற்றைத் திரிப்பதும், புரட்டிப் பேசுவதும் அவருக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பெரியார் விடுதலை நாளேட்டைத் தொடங்கியதிலிருந்து முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை இடம்பெறச் செய்தார். அவர் இறப்புக்குப் பின் இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலத்தில் அம்முழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு அகற்றப்பட்டது. ஆனால் நெருக்கடிக் காலம் முடிவுக்கு வந்த பிறகும் அம்முழக்கத்துக்கு இன்று வரை இடந்தரவில்லை கி. வீரமணி.

பெரியார் தனித் தமிழ்நாடு கேட்ட காலத்தில் கன்னடர்கள் காவிரியைச் சிறைப்பிடிக்கவில்லை, மலையாளிகள் பெரியாற்று அணையை உடைக்கத் துடிக்கவில்லை, சிங்களவர்கள் தமிழ் மீனவர்கள் எவரையும் கொல்லவில்லை, தமிழீழத்தில் வரலாற்றின் பெருந்துயரமான இனப்படுகொலை ஏதும் நடைபெறவில்லை. எனவே முன்னெப்போதையும்விட இன்றுதான் நமக்குப் பெரியாரின் பிரிவினை ஆயுதம் இன்றியமையாததாகிறது. ஆனால் இன்று பெரியாரின் பிரிவினைக் கொள்கையே கதைக்குதவாது என திராவிடக் கட்சியினரும், பாரதக் கம்யூனிஸ்டுகளும் ஒன்றாகச் சொல்கின்றனர்.

அண்மையில் 2014 செப்டம்பர் 17 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி விவாதம் நடைபெற்றது. தனித் தமிழ்நாடு என்பதே தந்தை பெரியாரின் உயிர்க் கொள்கை என்னும் கருத்தை முன்வைத்தார் தோழர் தியாகு. விவாதத்தில் மதிமுகவின் காரை செல்வராஜ், அதிமுகவின் கோ. சமரசம், திமுக ஆதரவு சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மூவருமே பெரியாரின் தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்று சாத்தியமில்லை என ஒற்றுமையாகக் குரல் கொடுத்தனர். பைசா பெறாத சிக்கல்களுக்கெல்லாம் குடுமிப்பிடிச் சண்டையிடும் இந்தத் திராவிடக் கட்சிகள் தனித் தமிழ்நாடு என்னும் பெரியாரின் உயிர்க் கொள்கைக்குத் தமிழகத்தில் வேலையில்லை எனக் காட்டுவதில் ஒற்றுமை காட்டினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்து கூட்டாட்சியைக் கொண்டு வருவதே இன்றைக்கு நடைமுறையில் சாத்தியம் என்றார் சுபவீ. தேர்தல் கட்சிகளுக்கு என்று ஓர் எல்லை உண்டு எனக் கூறினார். பதவிச் சுகங்களைப் பங்கிட்டுக் கூட்டணி பிடிக்கத் துடிக்கும் கட்சிகளுக்கு ஓர் எல்லை உண்டு எனக் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உங்களின் ஓட்டு வேட்டை அரசியலுக்குப் பெரியாரின் பிரிவினைக் கொள்கை முற்றுப் புள்ளியாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியர்களுக்குப் பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கந்தான் தொடக்கப் புள்ளியாக இருக்க முடியும்.

திராவிடக் கட்சியினரின் இந்தச் சந்தர்ப்பவாத விளக்கங்களுக்குத் தமிழ்த் தேசியர்கள் விடையளிக்க வேண்டியதில்லை. பெரியார் அன்றே விடையளித்து விட்டார். அவர் இறப்பதற்கு 3 மாதம் முன்பு தமது 95ஆவது பிறந்த நாள் விழா மலா¤ல் பெரியாரே எழுதுகிறார்:

‘நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது.’

பெரியாரின் தனித் தமிழ்நாடு முழக்கத்துக்கு எதிராய் நிற்கும் எவரும் பெரியாருக்கு எதிரிகளே. வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கும் கைகளால் பெரியார் சிலைகளுக்கு மாலையிடும் தலைவர்களுக்கும், பெரியாரைச் செருப்பால் அடித்து இழிவுபடுத்தும் இந்து வெறியர்களுக்கும் அடிப்படையில் வேறுபாடேதும் இல்லை.

பெரியார் பாரதத்தின் ரத்தினம் இல்லை, தமிழர்களின் பல நூற்றாண்டுச் சமூகநீதிப் போராட்டத்தின் விளைபயனாய்த் தமிழ்த் தேசியத்துக்குத் தமிழன்னையளித்த நன்முத்து ஆவார்.

பெரியார் பதவி அரசியலுக்குப் பயன்படும் விளம்பரப் பொம்மையல்ல, சாதியறுக்கும் தமிழ்த் தேசிய விடுதலையின் திருவுரு என்பதையே தமிழகத்துக்காக, தமிழர்களுக்காக உழைக்கும் எவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரைத் தேச விரோதி என்போரிடம் உரக்கச் சொல்வோம், ஆம், உங்களின் இந்தியத் தேசியத்துக்கு அவர் பெரும் விரோதியே! எங்களின் தமிழ்த் தேசியத்துக்கோ அவர் பெரும் அறிவியலர்!

பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவித்த போது ‘திருப்பூர் குமரன் ஏந்திய கொடியை எரிப்பதா?’ என அன்று பாரதக் கம்யூனிஸ்டுகள் மனம் புழுங்கினர். பெரியார் சென்னை திருவல்லிக்கேணியில் 1955 ஜூலை 31ஆம் நாள் ஆற்றிய உரையில் அவர்களுக்குக் காட்டமாகப் பதில் சொன்னார்:

‘குமரன் ஒருவன் உயிர் விட்டுக் காப்பாற்றிய கொடி இதுவானால், தாளமுத்து, நடராசன் என்ற இருவர் உயிர் விட்டது, இந்திக் கிளர்ச்சிக்காகவல்லவா? குமரன் ஓர் ஆள்; எங்களில் இருவர் பலியானோமே! இதை யார் இன்றைக்குக் கூறுகிறார்கள்?’

திராவிடக் கட்சிகளே! கம்யூனிஸ்டுகளே! அன்று பெரியார் மொழிப் போராளிகள் இருவாரின் உயிரைக் காவு வாங்கிய இந்தியக் கொடியை எரிப்பேன் என்றார். இன்று தமிழீழத்தில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய இந்தியக் கொடி நம் தமிழகச் சட்டமன்றத்தில் திமிராய்ப் பறக்கிறதே? அதை எரித்துச் சாம்பலாக்க உங்களின் பாரத பக்தி  உங்களுக்குத் தடையாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியத்தின் தமிழ்ப் பற்று வருங்காலத்தில் இந்தியக் கொடியையும் எரிக்கும், இந்தியத்தையும் எரிக்கும். இதுவே பெரியார் தமிழர்களுக்கு இட்ட கட்டளை. ஆம், 1950 நவம்பர் 27ஆம் நாள் சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் முழங்கினார்:

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


5 + 7 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>