கொள்கை அறிக்கை

சமூகநீதித் தமிழ்த் தேசம் நோக்கி…….

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கக் கொள்கை அறிக்கை

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்

 1. சீரிளமைத் திறம் குன்றாச் செம்மொழி தமிழ்தனை உயிராகவும், நீர், நிலம், கனி என எல்லா வளமும் குறைவறப் பெற்ற தமிழ் மண்ணை மெய்யாகவும் கொண்டிலங்கும் நம் தமிழ்த் தேசம் எல்லா வகையிலும் ஒடுக்குண்டு அடிமைப்பட்டுத் துன்புற்றுத் துவண்டு கிடப்பது வேதனைக்குரிய உண்மை.

 2. நம்மை மிதித்து நிற்கும் தில்லி வல்லாதிக்கமும், அதன் அரசமைப்பும் வல்லமைமிக்க தேசிய மொழியாம் தமிழை வட்டார மொழியென்றும், வளர்ந்து நிலைத்த தேசமாம் தமிழ்நாட்டை மாநிலமென்றும் குறுக்கிக் கொச்சைபடுத்தி நம் தேசிய ஒர்மையை மறுத்தும் மறைத்தும் வருகின்றன.

 3. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியம் உரைத்திடும் தொன்மைக் கால எல்லைகளோடு இன்றைய தமிழகத்தின் எல்லைகளை ஒப்புநோக்கின், வரலாற்றுப் போக்கில் ஏற்பட்டுள்ள எல்லைச் சிதைவை அறியலாம். இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் மொழிவழி மாநில அமைப்பின் போது வடவேங்கடம், தேவிகுளம்-பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, செங்கோட்டை வனப்பகுதி முதலான பல எல்லைப் பகுதிகளை நாம் பறிகொடுக்க நேர்ந்தது. எல்லை இழப்பின் கதை இத்தோடு முடியாமல் கச்சத் தீவு வரை நீண்டு செல்கிறது. அது மேலும் தொடராதென்ற உறுதியும் கிடையாது. தமிழகத்தின் எல்லைகளை மாற்றியமைக்க, வெட்டிக் குறைக்க, ஏன், தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லாமற் செய்திடஎல்லா அதிகாரமும் தில்லிக்கே! ஒவ்வொரு தேசத்துக்கும் இன்றியமையாக் கூறாகிய ஆட்சிப் பரப்பின் கட்டுக்கோப்பு தமிழகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது.

 4. தமிழர் அல்லாதார் தமிழகத்திற்குள் நுழைந்து குடியேறுவது காலங்காலமாய்த் தங்குதடையின்றி நிகழ்ந்து வருகிறது. இவர்களிற் பெரும்பகுதியினர் தமிழைத் தங்கள் வாழ்க்கை மொழியாகவும் தமிழகத்தைத் தங்கள் வாழ்விடமாகவும் கொண்டு, தமிழ்த் தேசிய இன உருவாக்கத்தில் இணைந்து தமிழ்த் தேசத்தின் பிரிக்கவொண்ணா உறுப்பாக மாறிவிட்டனர் அல்லது மாறிவருகின்றனர். சிறு பகுதியினர், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் மொழிச் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றனர். மொழிவழி மாநில அமைப்பிற்குப் பிறகும் கூட வேற்று இனத்தவர் நம் தேசத்தில் விருப்பம்போல் வந்தேறுவதற்குத் தடைக்கட்டு ஏதுமில்லை. அவர்களின் மக்கள் தொகைப் படையெடுப்பால் தமிழ்த் தேசத்தின் ஒரு சில பகுதிகளில் தமிழர்களே சிறுபான்மையாக மாறும் ஆபத்து வளர்ந்துள்ளது.

 5. தமிழ் மக்கள் மீது அயல்மொழிகளான இந்தியும் ஆங்கிலமும் தொடர்ந்து திணிக்கப்படுகின்றன. தில்லி அரசில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு இந்திய அரசமைப்பில் இடமே இல்லை. சென்னைக் கோட்டையிலும் தமிழக அரசு அலுவலகங்களிலும் கூடத் தமிழ் முழு அளவில் ஆட்சி மொழியாகிவிட வில்லை. உயர் கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்குவதற்கும் உருப்படியான முயற்சியேதும் செய்யப்படவில்லை. மழலைக் கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் தமிழ் மென்மேலும் புறந்தள்ளப்படுகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றளவும் ஆங்கிலமே கோலோச்சி வருகிறது. கீழமை நீதிமன்றங்களிலுங் கூட தமிழ் ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. வழிபாட்டுக்கு வடமொழி, இசைக்குத் தெலுங்கு என்று கோயிற் கதவுகளும் இசையரங்கக் கதவுகளும் தமிழுக்கு மூடிக் கொள்கின்றன.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் யாவற்றிலும் ஆங்கிலமும் பிற அயல்மொழிகளும் ஊடுருவி நுழைந்து தமிழைச் சிதைத்து வருகின்றன. திரைப்படப் பெயர்கள், பாடல்கள், உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொழில்-வணிக நிறுவனங்களின் பெயர்கள், விளம்பரப் பலகைகள், குழந்தைப் பெயர்கள், உறவுகள்எல்லாவற்றிலும், ஏன், தமிழர்களின் பேச்சு வழக்கிலும் கூட நம் தமிழ் காணாமற் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை என்று வருந்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தணிப்பரிய துன்பம் இன்னும் தணியவில்லை. மிகுந்தே உள்ளது.

 1. தமிழ் மக்கள் மீது இந்தியக் குடியுரிமை திணிக்கப்பட்டுள்ளது. தமிழகக் குடியுரிமை என்ற ஒன்றிற்கு இடமே தரப்படவில்லை. இந்தியக் குடியுரிமையைப் பயன்படுத்தி மார்வாரி-குசராத்தி சேட்டுகளும் பிறரும் தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை வளர்ந்து வருகிறது. நமது நிலமும் வாழ்வும் பறிபோய் தமிழகத்திலேயே தமிழர்கள் ஏதிலியராவதற்கு இது வழிகோலி வருகிறது.

 2. தமிழகத்தின் இயற்கை வளங்கள் மீது தமிழ்த் தேசத்திற்கு இறையாண்மை இல்லை. அவை தில்லி வல்லாதிக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ் மக்கள் தம் வாழ்விற்காக இந்த வளங்களை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ள முடியாத அவலம் நிலவுகிறது.

 3. காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்டதோர் வையை பொருணை நதி – யென

மேவிய ஆறு பலவோடத் – திரு

மேனி செழித்த தமிழ்நாடு

இன்று நீரின்றிக் காய்ந்து கிடக்கும் அவலம் தோன்றியுள்ளது.

வான் பொய்ப்பினும் தான் பொய்த்திடா காவிரி வறண்டு கிடப்பதும், பெரியாறு சிறுத்து வையை என்னும் பொய்யாக் குலக்கொடி வாடிக் கிடப்பதும் தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமையுங் கூட மறுக்கப்பட்டிருப்பதற்கு மறுக்கவியலாச் சான்றுகள்.

 1. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றது ஒரு காலம்; வடக்கே தெற்கில் வந்து வாழ்வது இக்காலம். மார்வாரி-குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் தொழில் வணிகத்தைப் பெருமளவிற்குக் கைப்பற்றியுள்ளனர். தானியங்கி ஊர்திகள் மற்றும் அவற்றிற்கான உதிரி உறுப்புகள் வணிகம், ஊர்திகளுக்கான வட்டிக் கடன், திரைப்படத் தயாரிப்பு மற்றும் அதற்கான வட்டிக் கடன், மனைச் சொத்து வணிகம் மற்றும் கட்டுமானத் தொழில், தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில், தாள் மொத்த வணிகம், தென் மாவட்டத் தானிய மொத்த வணிகம், ஈரோடு மஞ்சள் மற்றும் துணி வணிகம்இப்படி அனைத்துத் தொழில் வணிகத் துறைகளிலும் மார்வாரி-குசராத்தி சேட்டுகள் தமது சுரண்டல் வலையை அகல விரித்துள்ளனர்.

 2. உழுபவர்க்கே நிலம் என்ற முழக்கம் இன்னமும் ஈடேறாத கனவாகவே இருந்து வருகிறது. நிலச் சீர்திருத்தச் சட்டங்களில் காணப்படும் ஒட்டைகளினாலும் அச்சட்டங்களைச் செயலாக்க வேண்டிய அதிகார வர்க்கத்தின் ஊழல் முறை கேட்டினாலும், நிலமற்றவர்கள் அமைப்பு வழித் திரளாத குறைபாட்டினாலும் நிலச் சீர்திருத்தங்கள் ஏட்டளவிலும் பேச்சளவிலுமே நின்று போய் விட்டன. உற்பத்தி முறைகளில் ஒருசில மாற்றங்கள் வந்துற்ற போதிலும் பெருநிலக்கிழார்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

தமிழ்நாட்டின் வேளாண்துறை பன்னாட்டுப் பெரு முதலாளித்துவக் குழுமங்களின் வேதி உரங்களையும் உயிர்க் கொல்லி மருந்துகளையும் நவீன வேளாண் கருவிகளையும் சார்ந்து நிற்கும் நிலை வளர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பயிர் விளைத்து உயிர் காத்து வந்த அன்னை நிலம் சில பத்தாண்டுகளுக்குள் கசக்கிப் பிழியப்பட்டு மலடாகிப் போகும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. வழிவழிவந்த நம் பயிர்செய்முறைகளும் மரபுசார் விதைகளும் இல்லாதொழியும் நிலை உருவாகி வருகிறது. உழுதுண்டு வாழும் உழவர் பெருமக்கள் மீளாக் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

தில்லி வல்லாதிக்கத்தின் தாராள இறக்குமதிக் கொள்கையால் உழவர்களின் விளைபொருள் பலவற்றிற்கும் சந்தையில்லாமற் போய்விட்டது. சர்க்கரை இறக்குமதியால் கரும்பு பயிரிடுவோரும், தேயிலை இறக்குமதியால் தேயிலை பயிரிடுவோரும், இழப்புகளுக்கு ஆளாகித் தெருவில் நிற்பது இதன் விளைவேயாகும். அயோடின் கலந்த உப்பு வணிகம் என்ற பெயரால் தமிழ்நாட்டின் தொன்மையான உப்பளத் தொழில் நசுக்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி போன்ற துணைத் தொழில்களும் இதே போன்ற நெருக்கடியில் சிக்கியுள்ளன. உழவர்களின் விளைபொருளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. உழவர்கள் தங்கள் விளைபொருள்களுக்குத் தாங்களே விலை குறித்திட உரிமையில்லை. தமிழ்நாட்டில் விளையும் நெல்லுக்குக் கூட தில்லி வல்லாதிக்கம்தான் விலை குறிக்க முடியும் என்ற நிலையுள்ளது.

 1. மக்கள் நலன் கருதாமலும் ஆதாயக் கொள்ளையொன்றையே நோக்கமாகக் கொண்டும் நடைபெற்று வரும் முதலாளியப் பொருளுற்பத்தியால் தமிழகத்தின் சுற்றுச் சூழல் கெட்டழிந்து வருகிறது. உயிரினச் சூழலுக்குப் பேராபத்தான அணுமின் உலைகள், உழவு நிலங்களைப் பாழடிக்கும் விறால் பண்ணைகள், காற்றையும் நீரையும் நச்சுப்படுத்தும் ஆலைக் கழிவுகள், மண்ணின் மூச்சைத் திணறடிக்கும் நெகிழிக் குப்பைகள், கடல் வாழ் உயிரினச் சூழலைக் குலைத்திடும் நவீனத் தொழில் நுட்பங்கள்இந்தக் கேடுகள் எல்லாம் தமிழகத்தைச் சூழ்ந்து நின்று தாக்கி வருகின்றன.

 2. உலக வல்லாதிக்க வளர்ச்சியின் இன்றைய வடிவமாகிய உலகமயமாக்கம் என்னும் புதுக் காலனிய அடிமைச் சங்கிலியில் தமிழகமும் பிணைக்கப்பட்டுள்ளது. வல்லாதிக்கத்தின் உலகச் சந்தையில் தமிழகமும் முழுமையாக இணைக்கப்பட்டு விட்டதால் தமிழ் மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு மேட்டுக்குடியினருக்கும் ஏற்றுமதித் தேவைகளுக்கும் பொருத்தமான பண்டங்களின் உற்பத்திக்கே முதன்மை தரப்படுகிறது. இதனால் உள்நாட்டுத் தொழில்கள் பெருமளவில் நலிவுற்று ஆலை மூடலும் ஆட்குறைப்பும் அன்றாட நிகழ்வுகளாகி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகிறார்கள். நவீனத் தொழில்நுட்பங்களோடு நடத்தப்பெறும் புதிய தொழில்களோ கோடிக்கணக்கில் முதலீடு செய்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றன. உலகமயமாக்கத்தால் ஊக்கம் பெறும் தனியார்மயமாக்கமும் தாராளமயமாக்கமும் கணினிமயமாக்கமும் சேர்ந்து உழைக்கும் மக்களின் சமூக நீதிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன.

 3. நமதினியத் தமிழ்த் தேசம் அரசியல் வகையிலும் அடிமை நாடாகவே இருந்து வருகிறது. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை, ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல், சட்டப் பேரவை, முதலமைச்சரும் அமைச்சரவையும்எல்லாம் நம் அடிமை நிலையை மறைக்கும் பட்டுத் திரைகளே தவிர வேறல்ல. உண்மையில் நமக்கு அரசுரிமை இல்லை. தமிழக அரசு என்பது அரசே அன்று. அது தில்லி வல்லாதிக்கத்தின் ஒரு கிளை அலுவலகமே! இதையுங் கூட தில்லி நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் மூடி விடலாம். தமிழக அரசுக்கோ சட்டப் பேரவைக்கோ எள் முனையளவும் இறையாண்மை கிடையாது.

தமிழகத்திற்கென்று தனி அரசமைப்பு எதுவும் இல்லை. தேசிய இனங்களை அடக்கியொடுக்கும் இந்திய அரசமைப்பிற்கு உட்பட்டே தமிழகமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த அடிமை நிலையை உறுதி செய்ய ஆளுநர் பதவியையும் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தையும் நீதித் துறையையும் தில்லி பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு சிலரை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பும் வாய்ப்பினால் இந்த அடிமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

 1. தமிழகத்திலிருந்து பல்வேறுவகையிலும் வரி என்ற பெயரில் தில்லி

வல்லாதிக்கம் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லை. தமிழகத்திலிருந்து

ஏற்றுமதி செயப்படும் பண்டங்களால் கிடைக்கும் அயற்செலாவணி முழுவதையும் தில்லியே பறித்துக் கொள்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

என்ற இலக்கணத்தின் படி தமிழக அரசு ஓர் அரசே அன்று என்பது

எளிதிற் புலப்படும். தமிழக ஆட்சியாளர்களைத் தில்லி அரசின்

தண்டல்காரர்களாகவே கருதலாம்.

 1. தில்லி வல்லாதிக்க அரசானது, இறுதியாகப் பார்க்குமிடத்து,

உலகளாவிய பன்னாட்டு மூலதனத்துடன் கூட்டாக இருக்கும் இந்தியப்

பெருமுதலாளிகள், குறிப்பாக மார்வாரி-குசராத்தி சேட்டுகள்,

பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனியச் சக்திகள், இந்தி ஆதிக்கச் சக்திகள், பெருநிலக்கிழார்கள் ஆகியோரின் நலன் காப்பதாக உள்ளது.

 1. பாரதப் பண்பாடு என்ற பெயரால் பார்ப்பனியப் பண்பாடும்,

நவநாகரிகம் என்ற பெயரால் மேற்கத்தியப் பண்பாடும்

குறள்நெறி வழிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டை ஒடுக்கி நம் சமூகத்தைச்

சீரழித்து வருகின்றன. சமூக நலனுக்கும் மாந்த நேயத்திற்கும் மாறாகப் பேராசையையும் தனிமனித ஆதாய வெறியையும் உசுப்பிவிடும் நுகர்வியப் பண்பாடு எல்லா வழிகளிலும் வளர்க்கப்படுகிறது.

தமிழர்களின் மரபு வழிப்பட்ட கலை, அறிவியல், மருத்துவம்

உள்ளிட்ட அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழகத்தில் வெகுமக்களுக்கான ஊடகங்கள் – அரசு சார்பானவை என்றாலும் தனியார் சார்பானவை என்றாலும்- பெரும்பாலும் அயர்ப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கே வழியமைத்துக் கொடுத்து வருகின்றன.

 1. தமிழ்ச் சமூகத்தைப் பாழ் செய்யும் உட்பகையாக வர்ண -

சாதியமைப்பு இருந்து வருகிறது. தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இவ்வமைப்பு பெரும் தடையாக உள்ளது. இதுவே நம் தேசிய ஓர்மைக்கு உள்ளிருந்து எழும் மறுப்பாக உள்ளது.

பஞ்சமர்கள் என்றும் புறச் சாதியினர் என்றும் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான தீண்டாமையும் இழிவும்

வன்கொடுமைகளும் தொடர்கின்றன.

அட்டவணைச் சாதியினர் என்றும் அட்டவணைப் பழங்குடியினர்

என்றும் குறிக்கப் பெறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்குமான இட ஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு

ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அது இன்று வரை முழுமையாக நிறைவேறக் காணோம். மண்டல் குழுப் பரிந்துரைகளுக்குப் பிறகும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தில்லி அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கிட உருப்படியாக எதுவும் நடந்தேறவில்லை. இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான இந்தியத் தொழிநுட்பக் கழகம் (..டி), இந்திய மேலாண்மைக் கழகம் (..எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்றவற்றில் இட ஒதுக்கீடு எட்டிப் பார்க்கக் கூட வழியில்லை.

மாநில அரசாங்கப் பணிகளிளுங் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட

மக்களுக்கான இட ஒதுக்கீடு இன்றளவும் நிறைவு பெறவில்லை.

அவர்களுக்கு மொத்தம் 69% இடங்களை ஒதுக்கீடு செய்யும் முயற்சி

இந்திய வல்லாதிக்கம் ஏற்படுத்திய தடைகளால் ஈடேறவில்லை.

இது வரை செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டையெல்லாம் மீறி அரசுப்

பணிகளிலேயே – குறிப்பாக தில்லி அரசுப் பணிகளில் – வர்ண - சாதி

அமைப்பிற்குரிய குலத் தொழில் முறை வேறு வடிவில் மறுபிறப்பெடுத்துள்ளது என்றால், இட ஒதுக்கீடே இல்லாத தனியார் துறை பற்றிச் சொல்லவும் வேண்டமோ? பன்னாட்டு மூலதனத்திற்கும்

இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் சொந்தமாய்த் தமிழகத்தில் இயங்கக்

கூடிய தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் பார்ப்பன மற்றும் உயர் சாதி ஆதிக்கக் கூடாரங்களாகவே உள்ளன.

தமிழ்ச் சமுகத்தின் உளவுத் துறையிலும் தொழில் துறையிலும் உற்பத்தி முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வர்ண- சாதிக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் வந்து விடவில்லை.

பிரபுத்துவத்திற்கு மட்டுமல்லாமல் முதலாளித்துவத்திற்கும் கூட

தகவமைந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆற்றல் வர்ண-

சாதியமைப்பிற்கு உள்ளது. உலகமயமாக்கத்தின் விளைவுகளுங் கூட

சாதி ஏற்றத் தாழ்வுகளை அதிகப்படுத்தவும் உறுதிப்படுத்தவுமே

பயன்பட்டு வருகின்றன.

 1. சமுதாயத்தில் சரிபாதியாகவுள்ள பெண்கள் சமவுரிமையின்றி

ஆணாதிக்கத்தால் அழுத்தப்பட்டுள்ளனர். வீட்டுக்குள்ளேயும்

வெளியேயும் வயல்களிலும் ஆலைகளிலும் கல்விக் கூடங்களிலும் பணியிடங்களிலும் ஊடகங்களிலும் பொதுமேடைகளிலும்….

எங்கெங்கும் பெண்கள் இழிவிற்கும் பாகுபாட்டிற்கும் உள்ளாக்கப்படுகின்றனர். வரதட்சிணை, பெண் குழந்தைக் கொலை

போன்ற கொடுமைகள் அதிர்ச்சிக்குரிய முறையில் தொடர்கின்றன.

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவதற்கு

மாறாக பெண்களையே கொளுத்தும் கொடுமை முடிந்தபாடில்லை. வர்ண-சாதியமைப்பைக் கட்டிக் காக்கும் பார்ப்பனியமே பெண்ணடிமைத்தனத்தனத்திற்கும் அரணாக உள்ளது.

பெண்ணடிமைத்தனம் தனக்கேயுரிய காரணிகளை ஒருபுறம் கொண்டிருக்க, வர்ண-சாதியமைப்பிற்கும் இன்றியமையாத் தேவையாக

உள்ளது.

 1. இந்திய அரசு வடிவ அளவில் மதச் சார்பற்றதாக இருந்தபோதிலும்,

உள்ளடக்கத்தில் இந்துமதச் சார்பு கொண்டதாகவே செயல்படுகிறது.

எந்தக்கட்சி அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் நிர்வாகத்தில் பார்ப்பனிய மத பீடங்களின் செல்வாக்கு கோலோச்சியே வருகிறது.

சமயத் துறையிலான தமிழ்ச் சிந்தனை மரபுகள் புறந்தள்ளப்பட்டு இந்து மதப் போர்வையில் வைதிகச் சமய மரபுகளே பேணி வளர்க்கப்படுகின்றன. இசுலாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மைச் சமயத்தவரை அயலாராகக் காட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்து மத வெறியும், அதன் எதிர்வினையாகிய பிற மத வெறிப் போக்குகளும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு ஊறு செய்கின்றன.

 1. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றாலும் தமிழ்ச் சமூகத்தின்

ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் பெரும்பான்மை மக்களுக்குக் கல்விக்

கண் திறக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. இன்று அனைவருக்கும்

கல்வியென்பது சட்டக் கொள்கையாகவே ஏற்கப்பட்ட போதிலும் நடைமுறையில் கல்வி வாய்ப்பிலான ஏற்றத்தாழ்வு தொடரவே

செய்கிறது. கல்வியைக் கடைச் சரக்காக்குவதன் மூலமும் தமிழ் வழிக்

கல்வியைப் புறக்கணிப்பதன் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது.

உயர்நிலைக் கல்வி வரை வெவ்வேறு வகைப் பள்ளிகளில் வெவ்வேறு

கல்வி முறைகள் செயலாக்கப்பட்டு வருவது இந்த ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடே ஆகும். ஆங்கில வழிக் கல்வியென்பது கல்வித் துறையில் மேட்டுக்குடியினரின் ( பார்ப்பனர்கள் மற்றும் பணக்காரர்களின் ) மேலாதிக்கத்தை நிலைக்கச் செய்வதற்கான கருவியே ஆகும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அனைத்தும் தமிழில் எனும் நிலை வரவேண்டும். அந்நிலையை எய்த நாம் முன் வைக்கும் செயல் முழக்கம் : “அனைவருக்கும் கல்வி; அனைத்தும் தமிழில்”

 1. தமிழ்த் தேசம் வளர்ந்து சென்று தேசங்களின் அணிவரிசையில் தன்

பெருமைக்குரிய இடத்தை அடைவதற்குத் தில்லி வல்லாதிக்கமும்

சாதியக் கட்டமைப்பும் இருபெரும் தடைகளாகக் குறுக்கிட்டு நிற்கின்றன. இவ்விருவகை அதிக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பவை. தில்லி வல்லாதிக்கத்தின் சமூக அடித்தளமாக சாதியக் கட்டமைப்பும், சாதியமைப்பின் அரசியல் அரணாகத் தில்லி வல்லாதிக்கமும் அமைந்துள்ளன. இவ்விரு கேடுகளுக்கும் கருத்தியல் அடிப்படையாகப் பார்ப்பனியம் விளங்குகிறது. பார்ப்பனியத்தை உருவாக்கியதிலும் பார்ப்பனியத்தைக் கொண்டு ஆதாயம் பெறுவதிலும் முதற்பங்கு பார்ப்பனர்களைச் சாரும். பொதுவாகப் பார்ப்பனர்கள் இன்றளவும் தமிழினக் கோரிக்கைகளை மறுப்பதிலும் சமூகநீதிக்கான முயற்சிகளை எதர்ப்பதிலும் முன்னுக்கு நிற்பதைக் காணலாம்.

 1. வரலாற்று நோக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்துச் சமூக நீதிக்காக

நடைபெற்று வரும் போராட்டத்தின் இழை திருவள்ளுவர் தொடங்கி சித்தர்கள் வழியாக வள்ளலார் வரை நீண்டு வருகிறது. இந்தியத்

தேசியத்திற்கு மாற்றாகத் தமிழ்த் தேசியத்தையும் சாதியமைப்பிற்கு எதிராகச் சமூகநீதியையும் உள்ளடக்கமாகக் கொண்ட இயக்கங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் வெள்ளையர் ஆட்சி நடைபெற்றுக்

கொண்டிருந்த போதே பிறந்து வளரத் தொடங்கிவிட்டன.

 1. தந்தை பெரியார் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை

இயக்கத்தைத் தொடங்கிய நிகழ்ச்சியானது தமிழ்த் தேசிய இனம் ஒரு புறம் தன்னைத்தான் இனங்காண்பதற்கும் மறுபுறம் பார்ப்பன

மேலாதிக்கத்தையும் பார்ப்பனியக் கருத்தியலையும் எதிர்த்துச் சமூகநீதியை நிலை நாட்டுவதற்குமான போராட்டங்களின் தொடக்கத்தைக் குறித்தது. தமிழகத்தில் நடைபெற்ற முதல்

மொழிப்போரின் போது தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் பிறந்தது. தமிழ்த் தேசியத்திற்கான இந்த அடிப்படை முழக்கம் இன்றளவும் பொருந்தக் கூடியதே. அரசியல் விடுதலைக்கு முழக்கம்

தந்த திராவிடர் இயக்கம், அதனை அடைவதற்குப் பொருத்தமான அரசியல் இயக்கமாகத் தன்னை உருவமைத்துக் கொள்ளத் தவறியது.

பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களோ பதவி அரசியலின் ஈர்ப்பினால் திசைமாறிப் போய் விட்டனர். சமயச் சார்போ சமய ஒழிப்போ, இறைப்பற்றோ இறைமறுப்போ தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு நிபந்தனைகள் ஆகமாட்டா.

 1. இந்தியத் துணைக்கண்டத்தில் முறையான தொழிற்சங்கம்

முதன்முதலாக அமைக்கப்பட்டது நம் தமிழ்நாட்டில்தான். இங்கு

தொழிற்சங்கப் போராட்டங்களையும் உழவர் போராட்டங்களையும் முனைப்புடன் வழிநடத்திய பெருமை பெரும்பாலும் பொதுமை இயக்கத்தைச் சாரும். தேசிய இனச் சிக்கல் குறித்து மார்க்சிய-லெனினியம் தந்த சரியான புரிதல் இருந்த போதிலும் பொதுமை இயக்கத்தவரால் இந்தியத் தேசியக் கூட்டினை உடைத்து வெளிப்பட முடியாமற் போயிற்று. தமிழகத்தில், குறிப்பாகக் கீழத் தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய உழவுத் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியதில் செவ்வியக்கமே பெரும்பங்கு வகித்ததோடு, இதற்காக அளப்பரிய தியாகங்களும் செய்தது. கொடுஞ் சுரண்டலுக்கெதிரான இந்தப் போராட்டங்கள் உண்மையில் வர்ண-சாதி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களாகவும் அமைந்தன. எனினும் வர்ண-சாதி அமைப்பையும் அதை ஒழிப்பதற்கான வழிகளையும் பற்றிய சரியான புரிதல் இல்லாமற்போனதால் சாதியொழிப்பு நோக்கிய திசையில் முன்னேறிச் செல்ல முடியாமற்போனது.

 1. தமிழன் என்ற பெயரில் ஏடு நடத்திய அயோத்திதாசப் பண்டிதர்

தொடங்கி தமிழகத்தின் தலித்தியக்க முன்னோடிகள் பலரும் தமிழ்ப் பற்றும் சனநாயக உணர்வும் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இந்திய அரசியல் அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் எழுச்சி தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கத்திற்கு ஊக்கம் அளித்தது. தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தலித் இயக்கமும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது.

அதேபோது அவ்வியக்கத்தில் பெரும் பகுதியை இன்று வரை

பீடித்துள்ள இந்தியத் தேசிய மாயையும் சந்தர்ப்பவாத அரசியலும் சாதியொழிப்புப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன.

 1. நாம் தமிழர் இயக்கம், தமிழரசுக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி

போன்ற வெளிப்படையான தமிழ்த் தேசிய அமைப்புகள் பேரியக்கங்களாக வளரத் தவறி விட்ட போதிலும் தமிழ்த் தேசிய

நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைத்துப் போராடியவை ஆகும்.

இவையுங்கூட சந்தர்ப்பவாதப் பதவி அரசியலுக்கு இரையாகிச்

சிதைந்து போயின.

 1. தனித்தமிழ் இயக்கமானது அயல்மொழித் தாக்கத்திற்கெதிராகத்

தமிழ்மொழித் தூய்மையைக் காக்கும் போராட்டத்தில் சிறப்பு மிக்க பங்கினை வகித்துள்ளது. இந்த வரிசையில் தென்மொழி இயக்கம்

மொழித் தூய்மையோடு நில்லாமல் நாட்டு விடுதலைக்காகவும்

குரல் கொடுத்தது.

 1. தமிழ்ச் சமூகத்தில் மறுமலர்ச்சி காண்பதற்கான நீண்ட நெடிய போராட்டத்தின் கூறுகளாகவே மேற்சொன்ன இயக்கங்களைப் புரிந்து

கொண்டு அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியத்திற்கும் சமூகநீதிக்குமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்குள்ளது.

 1. கடந்த 1965 ஆம் ஆண்டில் தமிழக மாணவர்களும், மக்களும்

இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய மொழிப் போராட்டம் வரலாற்றுச்

சிறப்புமிக்க தமிழ்த் தேசிய எழுச்சியாகவே அமைந்தது. போராட்டத்

தலைமைக்குத் தெளிவான தேசிய இனப் பார்வை இல்லாமற் போனதும், வழிகாட்டிய அரசியல் தலைமையின் பதவி நாட்டமும் காரணமாய் அவ்வெழுச்சி வடிந்து அடங்கிப் போயிற்று.

 1. தமிழக மக்களின் போராட்ட அரசியலுக்குக் குறிப்பிடத்தக்கதோர்

எடுத்துக்காட்டாக திரு நாராயணசாமி(நாயுடு) தலைமையில் 1970 களில் நடைபெற்ற உழவர் போராட்டத்தைக் குறிப்பிடலாம். தமிழ்த்

தேசியம், சமூகநீதி என்ற உறுதியான கண்ணோட்டங்கள் இல்லாத நிலையில் விவசாய சங்கத் தலைவர்களால் இந்த உழவர் போராட்டத்தைச் சரியான திசையில் வளர்த்துச் செல்ல இயலவில்லை.

முடிவில் தேர்தல் மேனகைகளின் ஆட்டத்துக்கு மயங்கி அந்தத் தலைவர்களும் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலில் வீழ்ந்து முடிந்தார்கள்.

 1. தமிழக வரலாற்றில் சுவடு பதித்த பல்வேறு மக்கள் போராட்டங்களையும் – அவற்றின் வெற்றி தோல்விகளையெல்லாம்-

உள்வாங்கி உரியவாறு ஆக்கமும் ஊக்கமும் பெறுவது தமிழ்த் தேசியத்துக்கும் சமூகநீதிக்குமான போராட்டப் பாதைக்கு ஒளியூட்டும்.

<குறிக்கோள்கள்>

 1. சமூகநீதி என்பது சாதியத்திற்கு எதிரானது மட்டுமல்ல, முதலாளித்துவக் கொள்ளைச் சுரண்டலுக்கும் ஆணாதிக்கத்திற்கும் கூட எதிரானது. அது அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. அனைத்துத் துறைகளிலும் முழுமையான இடஒதுக்கீடு, அடிப்படை நிலச் சீர்திருத்தம், மக்கள் நலன் கருதி சுரண்டலைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திட்டமிட்ட தொழில் வளர்ச்சி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, பெண்களுக்கான சம வாய்ப்புகள் முதலான சமூக நலத் திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் இவற்றில் புறநிலை அக்கறை கொண்ட சமூகச் சக்திகளின் அரசதிகாரத்தை நிறுவியாக வேண்டும். ஆகவேதான் இது புரட்சிகர சமூகநீதி ஆகிறது.

 2. தமிழ்த் தேசம் அடிமைப்பட்டிருப்பதால் அந்த அடிமை நிலையை ஒழித்துத் தேசிய விடுதலை பெறாமல் புரட்சிகர சமூகநீதிக்கான அரசதிகாரத்தை நிறுவ முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசிய விடுதலையும் புரட்சிகர சமூகநீதியும் இடையுறவு கொண்டு நிற்கின்றன. இவை தமிழ்த் தேசத்துப் புரட்சிகர சனநாயகத்தின் இரட்டைக் கடமைகளாகும். ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்ற இரட்டைக் கடமைகளாகும்.

சாதி ஒழித்திடல் ஓன்று – நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவதில்லை.

 1. தமிழ்த் தேசியச் சமூகநீதிக் கருத்தியலின் துணைகொண்டு தமிழ்த் தேசியச் சமூகநீதிப் புரட்சியின் வாயிலாகத் தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசு அமைப்பதைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தன் குறிக்கோளாகப் பறைசாற்றுகிறது.

 2. சாதியத்தின் பொருண்மிய வேர்களும் அரசியல் அடிமரமும் வீழ்ந்த பிறகுதான் அதன் பண்பாட்டுக் கிளைகளும் இலைகளும் காய்ந்து மடிவது எளிதாகும் என்றாலும், அகமணமுறையைச் சாரமாய்க் கொண்ட சாதியப் பண்பாட்டுக்கெதிராக இப்போதிருந்தே போராட வேண்டும் எனத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நம்புகிறது.

 3. தாயக மீட்புக்காகத் தமிழீழ மக்கள் நடத்தி வரும் வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்பதைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தன் கடமையாகக் கருதுகிறது.

 4. இந்தியத் துணைக் கண்டத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் இனப் பாகுபாட்டிற்கும் இன்னலுக்கும் ஆளாகித் தவிக்கும் தமிழர்கள் தம் உரிமைக்காகவும் நீதிக்காகவும் நடத்தி வரும் போராட்டங்களைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆதரிக்கிறது.

 5. உலகெங்கும் தேசிய விடுதலைக்காகவும் சமூகநீதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் நடைபெற்று வரும் அனைத்துப் போராட்டங்களுடனும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஒருமைப்பாடு கொள்கிறது.

வழிமுறைகள்:

 1. தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்த மக்கள்திரள் போராட்டங்களே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அடிப்படை வழிமுறையாகும். தங்கள் நேரிய குறிக்கோளை அடைவதற்கான வரலாற்றுப் பாதையில் முன்னேறிச் செல்லும் போது குறுக்கிடும் தடைகளைக் கடந்து செல்வதற்கு எந்த வடிவத்திலும் போராடுகிற உரிமை மக்களுக்குண்டு என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உறுதியாய் நம்புகிறது. அதே போது மக்கள்திரள் போராட்டங்களைச் சீர்குலைக்கும் குடி பயங்கரவாதச் செயல்களைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மறுதலிக்கிறது. தமிழ்த் தேசியச் சமூகநீதிக் கோரிக்கைகளுக்காகத் தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் எழக்கூடிய முரண்பாடுகளில் இணக்கம் கண்டு தமிழ்த் தேசியச் சமூகநீதி ஆற்றல்களை ஒருங்கிணைக்கிற பெருங்கடமையை நிறைவேற்றக் கூடிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முன்முயற்சி எடுக்கும்.

 2. ஒத்தக் கருத்துடைய ஏனைய கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் ஆற்றல்களுடனும் சேர்ந்து தமிழ்த் தேசியச் சமூக நீதி நோக்கிய கூட்டியக்கங்கள் காணத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பாடுபடும். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

 1. தமிழ்த் தேசியச் சமூகநீதிக்கான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அறிவியல் அணுகுமுறை, கொள்கைப் பற்று, ஈகவுணர்வு, உழைப்பார்வம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட அரசியல் படையாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தன்னை அமைத்துக் கொள்ளும்.

லெனின் வழி

தொழிலாளி வர்க்கச் சனநாயகத்தின் தேசிய இன வேலைத் திட்டம் இதுதான்:

எந்த ஒரு தேசத்துக்கும் அல்லது எந்த ஒரு மொழிக்கும் எவ்விதச் சிறப்புரிமைகளும் கூடவே கூடாது; தேசங்களின் அரசியல் தன்தீர்வு, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்வது என்னும் சிக்கலுக்கு முழுக்க முழுக்கச் சுதந்திரமான சனநாயக வழிமுறைகள் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்.

தேசங்களின் தன்தீர்வு என்பது இந்தத் தேசங்கள் அயல் தேசிய அமைப்புகளிலிருந்து பிரிந்து சென்று சுதந்திர தேசிய அரசு அமைத்துக் கொள்வதையே குறிக்கும்…..”

தன்தீர்வு உரிமை என்பதற்குத் தனி அரசாக இருக்கும் உரிமை என்றல்லாமல் வேறெப்படிப் பொருள்விளக்கம் அளித்தாலும் தவறாகவே இருக்கும்….”

மார்க்சியர்களின் வேலைத் திட்டத்தில் தேசங்களின் தன்தீர்வு என்பதற்கு வரலாற்றுப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அரசியல் தன்தீர்வு, அரசு சுதந்திரம், தேசிய அரசு அமைத்தல் என்பதன்றி வேறெந்தப் பொருளும் இருக்க முடியாது.”

தன்தீர்வு உரிமையை , அதாவது பிரிந்து செல்வதற்கான உரிமையை ஆதரிப்பவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது – மணமுறிவு உரிமையை ஆதரிப்பவர்கள் குடும்ப உறவுகள் அழிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவதைப் போலவே முட்டாள்தனமும் வஞ்சனையுமாகும்.”

சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில், தேசிய ஒடுக்குமுறை நிலவும் சூழலில் தேசிய விடுதலைக் கடமைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்பதில் ஐயமில்லை.”

( தேசங்களின் தன்தீர்வு உரிமை நூலிலிருந்து. )

குறிப்பு: தன்தீர்வு = சுயநிர்ணயம். தன்தீர்வு உரிமை = சுயநிர்ணய உரிமை

பெரியார் மொழி

இந்திய யூனியன் அரசியல் சட்டத்தில், சட்டப்படியான கிளர்ச்சியின் மூலம் பிரிந்து கொள்ளப் போதியபடி சட்ட வசதியில்லை; எங்களை – தமிழர்களைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும்படியானதும் – தமிழ்நாட்டு மக்களில் 100க்கு 3வீத ஜனத்தொகை உள்ளதுமான பார்ப்பனர்கள் மத, சமுதாயத் துறையில் எங்களிடம் பெற்ற ஆதிக்கத்தை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பதாலும், தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கத்தில் பெரும் பங்கைக் கொண்டவர்களாக இருப்பதாலும் சட்ட சம்பந்தமான வழிகளையெல்லாம் அடைந்து விட்டார்கள். ஆனதால், நாங்கள் சட்ட சம்பந்தமான வழி மாத்திரமல்லாமல் வேறு எந்த விதமான வழி மூலமானாலும் பிரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.”

(விடுதலை தலையங்கம், 20-7-1955)

தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை தமிழன், தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத் தன்மையிலிருந்து, அடிமைக் குடியாய் இருப்பதிலிருந்து கடுகளவும் மாற்றமடைய முடியாது.”

(13-05-1960)

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன் வரவேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத் தமிழ்நாடு – எனது இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.”

( 17-09-1973 )

தமிழர் விடுதலைபப் போர் முழக்கம்!

சமூகநீதித் தமிழ்த் தேசம் !

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன


7 + 9 =

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>